May 20, 2010

நம்மைச் சுற்றி வெவ்வேறு வடிவங்களில் ஆபத்துகள்

-------------------மழலை பாதுகாப்பு-----------------

நம்மைச் சுற்றி வெவ்வேறு வடிவங்களில் ஆபத்துகள் இருக்கின்றன. ஆனால், அதற்காக பயப்படத் தேவையில்லை. நாம் கொஞ்சம் கவனமாக இருந்தாலே எந்த ஆபத்தையும் தவிர்த்துவிடலாம். இங்கே பல்வேறு சந்தர்ப்பங்களில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்கிற குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. கவனமாகப் படித்து நினைவில் வைத்துக்கொள்ளவும். உன் நண்பர்களுக்கும் சொல்லவும்.

நடந்து செல்லும்போது

இரண்டுபுறமும் பார்த்துவிட்டுத்தான் சாலையைக் கடக்க வேண்டும்.

‘ஸீப்ரா கிராஸிங்’ எனப் படும்கறுப்பு|வெள்ளைக் கோடுகள்உள்ள இடத்தில்தான் சாலையைக் கடக்க வேண்டும். றீ போக்குவரத்துக் காவலரோ, பாதசாரிகளுக்கான பச்சை விளக்கோ அனுமதித்த பின்தான் சாலையைக் கடக்க வேண்டும்.

சுரங்கப்பாதைகள் இருந்தால், அவற்றைப் பயன்படுத்துவதே பாதுகாப்பு.

சாலையில் போடப்பட்டிருக்கும் தடுப்பு வேலிக்கு நடுவில் புகுந்தோ அல்லது அவற்றைத் தாண்டியோ செல்லக் கூடாது.

ரயில்வே தண்டவாளங்களைக் கடக்கும்போது இருபுறமும் கவனமாகப் பார்க்கவேண்டும். கேட் மூடியிருந்தால், திறக்கும்வரை காத்திருப்பதில் தவறில்லை.

சாலையில் கீழேயும் கவனித்துக்கொண்டுதான் செல்ல வேண்டும். எங்கேயாவது டிரெய்னேஜ் கிடங்குகள் திறந்திருந்து, அவற்றுள் தவறி விழுந்துவிட வாய்ப்பு உண்டல்லவா?

சைக்கிள் ஓட்டும்போது

சைக்கிளில் செல்லும்போது செல்போன் பயன்படுத்தக் கூடாது.

சைக்கிளின் பின்னால் அமர்ந்திருக்கும்போது புத்தகம் படித்துக்கொண்டு செல்லக்கூடாது.

‘என் நண்பன்தானே ஓட்டுகிறான்’ என்று அவனோடு பேசிக்கொண்டே சென்று, அவன் கவனத்தைக் கலைக்கக் கூடாது.

சைக்கிளை ஓட்டும்போது சிக்னலில் பச்சை விளக்கு எரிந்தால் செல்வது, சிவப்போ, மஞ்சளோ ஒளிர்ந்தால் நிறுத்தக் கோட்டுக்கு முன்பே நிற்பது போன்ற விதிகளை எப்போதும் மீறக் கூடாது.

சிக்னலுக்காக வாகனங்கள் காத்திருக்கும் போது, அவற்றின் இடையே புகுந்து செல்லக் கூடாது.

டிரஸ், புத்தகப் பை போன்றவை சக்கரத்தில் மாட்டிக்கொள்ளாது என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

போட்டி போட்டுக்கொண்டு ஓட்டுவது, பெரிய வாகனங்களை முந்த முயல்வது போன்றவை வேண்டாமே!

சாலைகளைக் கடக்கும்போது, நின்று நிதானித்துச் செயல்படுவது நல்லது.

18 வயது நிரம்பிய பிறகே சைக்கிளுக்கு அடுத்த கட்ட வாகனங்களை ஓட்டப் பழகவேண்டும். அவற்றை ஓட்டும்போதும் மேற்சொன்னவற்றைப் பின்பற்றுவது நல்லது.

பஸ், வேன், ஆட்டோவில் செல்லும் போது

பள்ளி வாகனத் திலோ, பஸ்ஸிலோ செல்லும்போது படியில் உட்காரவோ, நிற்கவோ கூடாது.

பஸ் நின்றபிறகுதான் ஏறவேண்டும், இறங்கவேண்டும். ஓடும்போது அதில் ஏறவோ, இறங்கவோ முயற்சிக்கக் கூடாது.பஸ் மட்டுமல்ல… ஆட்டோ, ரிக்ஷா, ஸ்கூல் வேன் இவற்றில் பயணம் செய்யும்போதும் இதைப் பின்பற்றுவது நல்லது.

நண்பர்களாக ஆட்டோவில் சென்றால்மூன்று பேர் மட்டுமே ஒரு வாகனத்தில் செல்ல வேண்டும். வாகனம் பளுவைத் தாங்கமுடியாத நிலைக்குத் தள்ளக்கூடாது.

எந்த வாகனத்தில் சென்றாலும் உள்ளிருந்து வெளியே எட்டிப் பார்ப்பது, கை|கால்களை நீட்டுவது போன்ற செயல்களைச் செய்யக்கூடாது. எந்த வாகனத்திலும் விழும் நிலையில் அமரக்கூடாது. றீ புத்தகப் பையோ, உடைகளோ மற்ற வாகனங்களில் மாட்டி விடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஸ்கூல் வேனை விட்டு இறங்கியபின்அதன் குறுக்கே ஓடிக் கடக்காதீர்கள். வாகனம் போகும்வரை காத்திருந்து அதன்பின் கடப்பதே நல்லது.

கவனமாய் இருக்கணும்

தெருவில் யாராவது பின் தொடர்ந்து வந்தால், மிரட்டினால், கிண்டல் செய்தால், அசிங்கமாகப் பேசினால் பயப்படக் கூடாது. ஸ்கூலில் டீச்சரிடமும், வீட்டில் பெற்றோரிடமும் உடனே தெரியப் படுத்துங்கள். அவசரம் என்றால் தயங்காமல் 1098-க்கு போன் செய்து உதவி கேளுங்கள் (கடைசி பெட்டிச் செய்தியைப் பார்க்கவும்).

சாக்லெட், பிஸ்கட், ஐஸ்க்ரீம், பொம்மை என்று வெளியில் யார் என்ன பொருள் கொடுத்தாலும் அதை வாங்கக்கூடாது.

ஸ்கூலில் க்ளாஸ்மேட்டோ, சீனியரோ எல்லோரிடமும் நட்போடு பழகுங்கள். அதே சமயம் யாராவது உங்களை எதற்காகவாவது வற்புறுத் தினாலோ மிரட்டினாலோ உடனே டீச்சரிடம் சொல் லுங்கள்.

நீண்டநேரம் முழங்கால் போடச் செய்வது, கடுமையாக அடிப்பது, அசிங்கமாக திட்டுவது போன்ற காரியங்களில் ஆசிரியரே ஈடுபட்டால் கூட, பயந்துபோய் மறைக்க வேண்டாம். இதனால் பிரச்னை தீராது. அம்மா, அப்பாவிடம் சொன்னால் அந்த ஆசிரியரிடம் பேசிபிரச்னையை சரிசெய்வார்கள். அல்லது வேறு பள்ளியில் உங்களை சேர்த்துவிடுவார்கள்.

வெளியே நீங்கள் செல்கிற இடத்தில் அது தெரிந்த நபரோ, புது நபரோ, உங்களைத் தவறான நோக்கத்தில் தொட்டாலோ, தடவினாலோ, கட்டிப்பிடித்தாலோ, முத்தம் கொடுத்தாலோ மறைக்காமல் பெற்றோரிடம் சொல்லுங்கள். தவறாக எது நடந்தாலும் அதை முதல் தடவையிலேயே தெரியப்படுத்துங்கள். ரொம்ப இக்கட்டான நிலையில் மாட்டிக் கொண்டால் 1098-ல் உதவி கேளுங்கள்.

தினமும் ஸ்கூலில் நடக்கிற எல்லா விஷயங்களையும் அம்மாவிடமோ அப்பாவிடமோ ஒன்றுவிடாமல் சொல்லிப் பழகுங்கள். உங்களுக்குப் பள்ளியில் ஏதாவது பிரச்னை இருக்கிறதா என்ற விஷயம் நீங்கள் சொன்னால்தானே பெற்றோருக்குத் தெரியும்… பயம், தயக்கம் இல்லாமல் பகிர்ந்துகொள்ளப் பழக வேண்டும்.

உங்கள் ஸ்கூலில், காற்றும் வெளிச்சமும் நிறைந்த பாதுகாப்பான கட்டடம், விளையாட்டு மைதானம், சுத்தமான குடிநீர், டாய்லெட், குப்பையில்லாத சுற்றுச்சூழல் இவை இருக்க வேண்டியது அவசியம். இவற்றில் எதில் குறையிருந்தாலும் பெற்றோரிடம் சொல்லி, பள்ளியில் பேசச் சொல்லுங்கள். தவிர, ஃபேன் லொட லொட என்று சுற்றினாலோ டேபிள் \ சேர் உடைந்திருந்தாலோ உடனே மாற்றச் சொல்லிக் கேளுங்கள்.

நிறைய மார்க் வாங்க வேண்டியது அவசியம்தான். அதற்காக முயற்சி எடுத்துப் படிக்கலாம். ஆனால், மார்க் குறைந்துவிட்டால் மனம் சோர்ந்துவிடக் கூடாது. டீச்சர் திட்டினாலோ, சக மாணவர்கள் கிண்டலடித்தாலோ அவமானமாக உணராதீர்கள்.

உங்கள் ஃப்ரெண்ட்ஸ் யாராவது திடீரென யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்தாலோ, தனியாக அழுதுகொண்டிருந்தாலோ, செத்துப் போவதை பற்றி பேசினாலோ தாமதிக்காமல் டீச்சரிடம் சொல்லுங்கள்.

எந்த பிரச்னையாக இருந்தாலும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டுமே தவிர தற்கொலை முயற்சியில் இறங்குவது முட்டாள்தனம். இவ்வுலகத்தில் படித்து சாதித்த மேதைகளைப் போலவே படிக்காமல் சாதித்த மேதைகளும் உண்டு, அதனால் மார்க் குறைவதற்கெல்லாம் மனம் தளரக் கூடாது. சரியா?

ஆபத்து ஏற்பட்டால்

மின்சாரக் கசிவினால் உண்டான தீயை அணைக்க தண்ணீரை ஊற்றக் கூடாது. மணலைக் கொட்ட வேண்டும்.

யாரைத் தேடியும் எதற்காகவும் ஒருபோதும் தீ எரிகிற பகுதிக்கு உள்ளே செல்ல வேண்டாம்.

தீ விபத்து ஏற்பட்டால் யார் பேச்சையும் கேட்காமல், யாருக்காகவும் காத்திருக்காமல் முதலில் வெளியே ஓடி வாருங்கள். முதியவர்கள், ஊனமுற்றவர்கள், குழந்தைகள் தீயில் மாட்டிக்கொண்டிருந்தால் பெரியவர்களிடம் தகவல் சொல்லுங்கள். தீப்பற்றி எரியும்போது, ஸ்கூல் பேக், பொம்மை, புது டிரஸ் எதையும் எடுக்கக் கூடாது. பொருள் போனால் போகிறது, உயிர்தான் முக்கியம். எந்த இக்கட்டிலிருந்தும் முதலில் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.

தீப்பிடித்த நேரத்தில் லிஃப்ட்டைப் பயன்படுத்த வேண்டாம். லிஃப்ட் பாதியில் நின்றுவிட்டாலோ, கதவைத் திறக்க முடியாமல் போனாலோ பிரச்னையாகிவிடும்.

தீ பரவினால் பதற்றமடையாமல் உடனே அங்கிருந்து விலக வேண்டும். அங்குமிங்கும் ஓடி நெரிசலை உண்டாக்காமல் முறையாக அந்த இடத்தை விட்டுப் போகவேண்டும்.

புகையில் சிக்கிக்கொண்டால், தரையில் மண்டியிட்டு சுவர் ஓரமாக வெளியேறுங்கள். ஈரத்துணியால் முகம், வாய் இரண்டையும் சேர்த்து மூடிக்கொண்டால் மூச்சுத் திணறல் ஏற்படாது.

உடையில் தீ பிடித்தால் மூன்று விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்… ஸ்டாப், ட்ராப் அண்ட் ரோல் (Stop, drop and roll) அங்குமிங்கும் ஓடாமல் கீழே படுத்து உருள வேண்டும். தீ அணைப்பதற்கான வழி இது. முடிந்தால் உடைகளை அப்புறப்படுத்துங்கள். தண்ணீரை உடலில் ஊற்றியோ போர்வையாலோ தீயை அணைக்கலாம். றீதீப்புண்களில் ஒட்டியுள்ள உடையைப் பிய்த்து அகற்ற வேண்டாம். மருத்துவரின் உதவியை நாடுவது நல்லது.

தீப்புண்ணில் எண்ணெய், ஆயின்ட்மெண்ட், இங்க் போன்றவற்றைக் கொட்டக் கூடாது. காயம்பட்ட இடத்தை மெல்லிய துணியால் மூடி மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

ஷாக் அடித்துவிட்டால், உடனே பவர் சப்ளையை நிறுத்துங்கள். மரக்கட்டை, ஈரமில்லாத போர்வை அல்லது கயிற்றைக் கொண்டு விடுவிக்கவும். பாதிக்கப்பட்டவர் மயக்கமடைந்தால், உடைகளைத் தளர்த்தி, தலையை முன்னும் பின்னுமாக அசைத்துவிடுங்கள். பாதிக்கப்பட்டவர் மூச்சுவிட இது உதவும்.

இந்த எண்களை மறக்காதீர்கள்

சின்னதாக ஒரு டெலிபோன் டைரி வாங்குங்கள். அதில் வீட்டு போன் நம்பர், முகவரியை எழுதி வையுங்கள். வீட்டில் போன் இல்லையெனில் பக்கத்து வீட்டுக்காரர்கள் அல்லது உறவினர் வீட்டு நம்பரை எழுதி வைக்கவும். இது தவிர, ஸ்கூல் போன் நம்பர், சைல்ட் ஹெல்ப் லைன் 1098, அவசரப் போலீஸ் நம்பர் 100, தீயணைப்புப் படை எண் 101 மாதிரியான முக்கியமான போன் நம்பர்களை குறித்து வையுங்கள். டைரியை தினமும் மறக்காமல் எடுத்துச் செல்லவும்.

பத்து ஒன்பது எட்டு (1098) – இந்த எண்ணை மறக்கவே கூடாது. இது சுட்டிகளுக்கான டெலிபோன் நம்பர். சைல்ட் ஹெல்ப் லைன் என்று பெயர். வீட்டிலோ வெளியிலோ பள்ளியிலோ எங்கு என்ன பிரச்னை வந்தாலும் உடனே இந்த எண்ணுக்கு டயல் செய்து உதவி கேட்கலாம்.

தீ விபத்து ஏற்பட்டாலோ… குழியில் விழுவது, லிஃப்டில் மாட்டிக்கொள்வது மாதிரியான உயிருக்கு ஆபத் தான நிலையில் யாராவது சிக்கிக்கொண்டாலோ உடனே தீயணைப்பு மற்றும் மீட்புப் படையை (101) தொடர்பு கொள் ளுங்கள். நீங்களே மாட்டிக்கொண்டால் பதற்றப்படாமல், அதிலிருந்து தப்பும் வழியை யோசியுங்கள்.

1 comment:

goma said...

காலத்துக்கு ஏற்ற அருமையான டிப்ஸ்