Jun 5, 2010

புரட்சி தலைவருக்கும், நடிகவேளுக்கும்


புரட்சி தலைவருக்கும், நடிகவேளுக்கும் உண்டான பகையும், 'படார் படார்'னு புல்லட்டா வெடிச்ச கதையும் தமிழ்நாட்டு வரலாற்றில் என்னிக்கும் அழியாதது. 1967-ம் வருஷம் ஜனவரி 12-ம் தேதி எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்டார் எம்.ஆர்.ராதா. கொஞ்ச நேரத்தில் தன்னையும் சுட்டுக்கிட்டார்.


'என்ன பிரச்னை... இரண்டு பேரும் பிழைப்பாங்களா?'அப்படின்னு தமிழ்நாடே தவிச்சுது. புத்திக்குள்ள பூரான் புகுந்த மாதிரி பத்திரிகைக்காரங்களும் பின்னணி புரியாமப் புலம்பித் தவிச்சாங்க. ட்ரீட்மென்ட் சமயத்தில் லேசா கண்ணு முழிச்ச எம்.ஆர்.ராதா, 'எம்.ஜி.ஆர்.தான் ஃபர்ஸ்ட் என்னை சுட்டார். தற்காப்புக் காகத்தான் நான் அவரை திருப்பிச் சுட்டேன்' அப்படின்னு சொன்னதாகக் கூட தகவல் பரவியது. எம்.ஜி.ஆர். சைடிலிருந்து எந்தத் தகவலும் இல்லை.                                                                                                                                                                                                    போலீஸ்தான்,
'எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரைச் சுட்டார். அப்புறம் தன்னையே சுட்டுக்கிட்டார்' அப்படின்னு மட்டும் சொன்னது.
இரண்டு பேர் உயிருக்கும் ஆபத்து இல்லைன்னு டாக்டர்கள் சொன்னாங்க. எம்.ஜி.ஆரோட தொண் டையில சிக்கியிருந்த புல்லட்டை அங்கிருந்து அகற்றினால் அவர் உயிருக்கு ஆபத்துன்னு சொல்லிட்டாங்க. எம்.ஆர்.ராதா தலையில் பாய்ஞ்சிருந்த புல்லட்டை ரிமூவ் பண்ணிட்டாங்க.
எல்லாத்தையும் தாண்டி எல்லார் மனசையும் குடைஞ்ச இன்னொரு கேள்வி

உண்டு. 'இவ்வளவு பக்கத்தில் ரிவால்வரை வெச்சி சுட்டும், சுட்டுக்கிட்டும் இரண்டு உயிர்களும் பிழைச்சது எப்படி?' இந்த ஆச்சர்யம் எம்.ஜி.ஆருக்கே கூட இருந்ததாம். தடய அறிவியல் துறைக்கு மட்டும்தான் அதுக்குப் பின்னாடி இருந்த மகா மர்மம் தெரியும்! பிறகு எம்.ஜி.ஆருக்கும் தெரிய வந்தபோது இயற்கைக்கு தன்னோட ஆயுள் மீது இருந்த அன்பைப் புரிஞ்சிக்கிட்டு நெகிழ்ந்து போனாராம்.
  


எம்.ஜி.ஆர். தமிழக முதல்வரா முடிசூடி, அரசியலிலும் அசைக்க முடியாத உச்சத்தில் இருந்தபோதும் அவர் கழுத்தில் அந்த புல்லட் தூங்கிக்கிட்டே இருந்தது.
வெகுகாலத்துக்கு பிறகு எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பர் ஒருத்தர் அந்த புல்லட்டைப் பத்தின உண்மையைச் சொன்னபோது நான் மொத்தமா பிரமிச்சுப் போனேன். அவர் சொன்னது இதுதான் -
''எம்.ஜி.ஆருக்கும் இதே சந்தேகம் இருந்தது... அதனால்தான் ஆட்சிக்கு வந்தவுடனேயே, தடய அறிவியல் துறையில் இருந்த பிரபல நிபுணரைக் கூப்பிட்டு தான் உயிர் பிழைத்த அதிசயம் பற்றி விசாரித்தார். நிபுணர் சொன்ன கதை கற்பனைக்கும் எட்டாத விநோதம்!
     

     எம்.ஆர்.ராதா சுடுறதுக்கு பல வருஷங்களுக்கு முன்னாடி சென்னை அண்ணா சாலையில் இருந்த ஒரு கடையில்தான் அந்த ரிவால்வரை ( வெப்ளி - ஸகாட் .38 இஞ்ச்) வாங்கியிருக்காரு. அதே கடையில் எம்.ஜி.ஆரும் அதே மாடல் ரிவால்வரை வாங்கியிருக்காரு.
       
         எம்.ஆர்.ராதா வாங்கிய ரிவால்வரோடு நிறைய தோட்டாக்களும் கொடுத்தாங்க. அதை ஒரு டப்பாவில் போட்டு மூடி மேஜையின் இழுப்பறைக்குள் வெச்சிருந்தார் எம்.ஆர்.ராதா. வேறு விஷயங்களை எடுக்கவும் வைக்கவும் அந்த இழுப்பறையைத் திறந்து திறந்து அவர் மூடும்போதெல்லாம் புல்லட்டுகள் ஒண்ணோட ஒண்ணு மோதிக்கிட்டே இருந்துருக்கு. டப்பாக்குள்ளே மோதி மோதியே புல்லட்டுகளின் முனைகளின் பிடிப்பு தளர்ந்துவிட்டதாம். அப்படிப்பட்ட புல்லட்டுகளைத்தான் ரிவால்வருல நிரப்பி சுட்டாரு எம்.ஆர்.ராதா. சீறிக்கிட்டு கழுத்தை துளைச்சிருக்க வேண்டிய புல்லட் சவசவத்துப் போய் எம்.ஜி.ஆர். கழுத்தில் பட்டு அங்கேயே தங்கியிருச்சாம். எம்.ஆர்.ராதா தன்னைச் சுட்டுக்கிட்டப்பவும் அவர் உயிருக்கு ஆபத்து வராமல் போக இதுவே காரணம்!'' அப்படின்னு சொல்லிச் சிரிச்சாரு எம்.ஜி.ஆரின் அந்த நெருங்கிய நண்பர்.
     

இதோட விஷயம் நிக்கலை... பிற்பாடு எம்.ஜி.ஆர். உடல்நலம் சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் படுத்தப்ப, 'இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு' அப்படின்னு தெருவுக்கு தெரு உருக்கமா பாடல் இசைத்து மக்கள் கதறிக்கிட்டிருந்த சமயத்தில்... ஜப்பான் டாக்டர் கானு என்பவர் ட்ரீட்மென்ட் கொடுத்தாரு. 'மேகனடோ தெரபி ட்ரீட்மென்ட்' கொடுக்க வேண்டிய கட்டாயம் வந்தது. அப்போது 'எம்.ஜி.ஆரின் கழுத்தில் தங்கியிருப்பது இரும்பால் ஆன புல்லட்டாக இருந்தால் இந்த ட்ரீட்மென்ட் சமயத்தில் வேறு பாதிப்புகள் உண்டாகலாம்' அப்படின்னு சொன்னாரு கானு.
           
          எம்.ஜி.ஆர். யோசனைப்படி அந்த தடய அறிவியல் துறை நிபுணர்கிட்டயே கேட்டாங்க. அந்த நிபுணரும், 'அவர் கழுத்தில் இருப்பது காரீயம் என்ற உலோகத்தால் ஆன புல்லட்தான். இரும்பு கிடையாது' என்று சொன்னபிறகே தைரியமா ட்ரீட்மென்ட்டை ஆரம்பிச்சாங்க. ட்ரீட்மென்ட்டுக்கு முன்னாடி எம்.ஜி.ஆரும் அந்த நிபுணரைத் தொடர்பு கொண்டு, 'என்னப்பா... சுட்டப்ப எல்லா ஆராய்ச்சியும் செஞ்சது நீதானே? இப்ப சொன்னது சரிதானே?' அப்படின்னு உறுதிப்படுத்திக் கிட்டாராம்.
இப்படித்தான் எம்.ஜி.ஆர். உயிர் இரண்டாவது தடவையும் பிழைச்சது!
அந்த தடய அறிவி யல் துறை நிபுணர் யாருன் னுதானே கேட்கிறீங்க... ராஜீவ் காந்தி படுகொலையின்போது அதை செஞ்சது ஒரு மனித வெடிகுண்டுதான் அப்படின்னு மின்னல் வேகத்தில கண்டுபிடிச்சு சொன்ன அதே ஃபோரன்ஸிக் டாக்டர் சந்திரசேகரன்தான்!

                                                                     நன்றி ஜூனியர் விகடன்..

No comments: