Jul 11, 2010

அப்துல் கலாமின் ஆசை






கிராமங்களில் தரமான சிகிச்சை: இளம் மருத்துவர்களுக்கு கலாம் அறிவுரை



சென்னை, ஜுலை 11, 2010
கிராமப்புற மக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும் என்று இளம் மருத்துவர்களை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் 20-வது பட்டமளிப்புவிழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் சனிக்கிழமை நடந்தது.


முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் அப்துல் கலாம் பேசுகையில், "தற்போது அனைத்து விதமான நோய்களுக்கும் ஒரே மருத்துவ முறையில் சிகிச்சை அளித்தால்தான் நோய் குணமாகும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. அவ்வாறு ஒரே மருத்துவ முறையை பின்பற்றுவதற்குப் பதிலாக, குறிப்பிட்ட கால கட்டத்தில் ஒரு நோயாளிக்கு எந்த மருத்துவ முறையில் சிகிச்சை அளித்தால் அந்த நோயை முற்றிலும் குணமாக்க முடியும் என்பதை ஆராய வேண்டும்.


இந்த ஆய்வை மேற்கொள்ள வெவ்வேறு மருத்துவ முறைகளை கையாளும் மருத்துவர்கள் கொண்ட ஒரு குழுவை அமைக்கலாம்.
எஸ்.எல்.வி-3 ராக்கெட்டை விண்ணில் ஏவியபோது நானும், எனது குழுவினரும் மகிழ்ச்சி அடைந்தோம். அதன்பிறகு அக்னி ஏவுகணையை விண்ணில் செலுத்திய போதும், பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியபோதும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தோம்.

ஆனால், இவை எல்லாவற்றையும் விட எனக்கு பேரானந்தம், ஆத்ம திருப்தி தரக்கூடியது ஊனமுற்ற குழந்தைகளுக்கு குறைந்த எடையில் செயற்கை கால்கள் தயாரித்து கொடுத்ததுதானமுன்பு 4 கிலோ எடை கொண்ட செயற்கை கால்களைத்தான் ஊனமுற்ற குழந்தைகள் பயன்படுத்தி வந்தனர். அவற்றை மாட்டிக்கொண்டு அவர்கள் நடந்து செல்வது மிகவும் கஷ்டமாக இருக்கும். துயரமான அந்த காட்சியை நானே ஐதராபாத்தில் ஒரு மருத்துவமனையில் பார்த்திருக்கிறேன்.

4 கிலோவுக்கு பதிலாக நாங்கள் வெறும் 400 கிராம் எடையில் செயற்கை கால்களை தயாரித்துக்கொடுத்தோம். அந்த சாதனைதான் எனக்கு பேரானந்தம் தரக்கூடிய சாதனை.
இளம் மருத்துவர்களாகிய நீங்கள், இந்த சமுதாயத்திற்கு தொண்டாற்றிய மருத்துவர்களை முன்மாதிரியாகக் கொண்டு சேவை செய்திட வேண்டும். ஏழைகளுக்கு, குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும்," என்றார் அப்துல் கலாம்.