Nov 13, 2012

தங்கமே தங்கம்...தங்கம் வாங்க போறீங்களா..?!

நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்குமிகச் சரியாகவே பட்டது. அவர் சொன்னது இதுதான். வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்ததோடு "சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான
தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது" என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்! 


வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்! இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்க கூடாது என்று முழங்கிஅவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்!
 
நண்பரின் ஆதங்கம் இதுதான். ' சேதாரம் என்ற பெயரில் நகைக் கடைகளில் பெருங் கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை? என்பதே அவரது நியாயமான கேள்வி"
 
அவரது குமுறல் மிக நீதியானதே என்பதுதான் எனது வாதமும். 16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங்கொள்ளையடிக்கிறார்கள் நகைக் கடை முதலாளிகள். இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் "ஒன்பதாயிரம் ரூபாய்" தெண்டம் அழ வேண்டும். ஏறக்குறைய 16 சதவீதம்? "எதற்காக இந்த தெண்டம்? 
 
பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்?" எந்த அதிமேதாவியும் இது வரை கேள்வி கேட்டதில்லை. அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித்தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள். போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை' கூல்' பண்ணுவார்கள். இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள். அதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலேயே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது...
சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு...
உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும். 
 
என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா? பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும்தானே வாங்க வேண்டும்? செய்கூலி கேட்பது நியாயம்தான். 16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்?
 
 இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை? பலசரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை?
 
 எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்? அவர்களிடம் வழிப்பறி செய்வதை விட மோசமான செயல் அல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது? 
 
பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான்? ஒரு நகைக் கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான்? 
 
மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில். கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது. இது போன்ற  கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும்...அல்லது திருத்தப் பட வேண்டும். 
விரைவில்இம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்...!
அதுவும் உங்களால் தான் முடியும்...

நன்றி :- Subra Maniyan & Muruganjapan Japanmurugan..facebook.