Feb 3, 2011

மக்களின் விருப்பம் நிறைவேறவே அதிமுக.வுடன் கூட்டணி. தே.மு.தி.க. அறிவிப்பு.


சேலத்தில் நடத்திய ‘உரிமை மீட்பு’ மாநாடு சக்ஸஸ் ஆன உற்சாகத்தில் தே.மு.தி.க. தரப்பு, அடுத்தகட்டமாக அ.தி.மு.க.வுடன் கூட்டணிப் பேச்சு வார்த்தை என்று அதிரடியாகப் பாயத் தயாராகிக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வருகின்றன. இந்தச் சூழலில் தி.மு.க. ஆட்சியை ஒழித்துக்கட்ட எங்கள் பங்களிப்பு தவிர்க்க முடியாதது" என்கிறார் தே.மு.தி.க. அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்.


 2006 மற்றும் 2009 தேர்தல்களில் கணிசமான வாக்குகளைப் பெற்ற தே.மு.தி.க., தி.மு.க. ஆட்சியை அகற்ற எந்த வகையில் யுக்திகளை வகுக்கிறது?
வரும் தேர்தலில் நாங்கள் 15 சதவிகிதம் வாக்குகளைப் பெற முடியும் என்று நம்புகிறோம். இதைப் பலப்படுத்தி தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கொண்டு வருவதே எங்கள் நோக்கம். எனவேதான் எதிர்க்கட்சிகளோடு கூட்டணி சேர்வோம் என்று கேப்டன் விஜயகாந்த் அறிவித்திருக்கிறார். தமிழகத்தின் முக்கிய சக்தியான எங்கள் உதவியின்றி தி.மு.க. ஆட்சியை விரட்ட முடியாது."

தி.மு.க.வுடன், அ.தி.மு.க.வையும் சேர்த்துத்தான் நீங்கள் விமர்சித்து வளர்ந்தீர்கள். இந்த நிலையில் அ.தி.மு.க. வுடன் கூட்டணி என்பது உங்கள் செல்வாக்கில் சரிவு ஏற்படுத்தாதா?
இந்த இரு கட்சிகளுக்கும் மாற்றுக் கட்சியாக வளர்ந்திருக்கிறோம் என்பதே யதார்த்த நிலை. ஆனால், தற்போது மற்ற எந்தக் கட்சிகளும் இயங்க முடியாதபடி தி.மு.க.வின் எதேச்சதிகாரம் பரவியிருக்கிறது. முதலில், தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும். அதன்பின்தான் கண்ணியமான சுதந்திர சூழலில் அரசியல் நடத்த முடியும். ஒட்டுமொத்த ஜனநாயகத்துக்கே ஆபத்து என்ற நிலையில், தி.மு.க.வை வீழ்த்த மற்ற எதிர்க்கட்சிகளோடு சேர்ந்து களமிறங்குவது அவசியம். தமிழ்நாட்டு மக்களும், எங்களிடம் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். இதனால் எந்த வகையிலும் தே.மு.தி.க. செல்வாக்கு சரியாது. ஏனென்றால் மக்களின் விருப்பத்தைத்தான் நிறைவேற்ற முயற்சி செய்கிறோம். தி.மு.க.வை அகற்றுவது என்பது முன்னுரிமையாக இருப்பதால் வேறு எந்த சிந்தனையும் தற்போது இல்லை."

கூட்டணி சேர வேண்டும் என்பதுதான் உங்கள் தொண்டர்களின் விருப்பமா?
சேலம் மாநாட்டில் தொண்டர்களிடம் கேப்டன் விஜயகாந்த் நேரடியாக, ‘கூட்டணி சேர வேண்டுமா?’ என்று கேட்டதற்கு ‘ஆமாம்’ என்றுதான் 99 சதவிகிதத் தொண்டர்கள் குரல்கொடுத்தார்கள். எனவே, கொடி பிடிக்கும் தொண்டர்களே முடிவெடுத்திருக்கிறார்கள்."

தி.மு.க. கூட்டணியிலிருந்து காங்கிரஸ் பிரிந்து வந்துவிடும் என்று எதிர்பார்த்தீர்களா?
நாங்கள் காங்கிரஸுக்காகக் காத்திருக்கவில்லை. அதனுடன் கூட்டமைக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அலைவரிசை ஊழலில் தி.மு.க.வும் காங்கிரஸும் ஒருவரையொருவர் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று."

கூட்டணி என்ற முயற்சியில் இறங்கி விட்டீர்கள். அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கும் பட்சத்தில் வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கு கேட்பீர்களா?
இன்னமும் கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் தொடங்கவில்லை. பேச்சு வார்த்தை நடக்கும்போதுதான் இத்தகைய விஷயங்கள் விவாதிக்கப்படும்."

அலைவரிசை ஊழல் கிராம அளவில் பேசப்படுகிறதா?
சாதாரண படிக்காத மக்கள் கூட அலைவரிசை ஊழல் குறித்துத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இதற்காக கலைஞருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். காரணம், அவர் கொடுத்த இலவச வண்ணத் தொலைக்காட்சிதான் இந்த தி.மு.க. - காங்கிரஸ் ஊழலை எல்லா மக்களுக்கும் கொண்டு சேர்த்திருக்கிறது. தி.மு.க. மீது ஏற்கெனவே ஊழல் முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அலைவரிசை ஊழல் எல்லாவற்றுக்கும் சிகரமாக, இமாலய ஊழலாக அமைந்து விட்டது. எனவே, தி.மு.க. ஊழல் செய்திருக்கிறது என்றால், மக்கள் உடனடியாக நம்புவார்கள். தி.மு.க. விவகாரத்தை எப்படித் திசை திருப்பினாலும் மக்கள் அதை இந்தத் தேர்தலில் தண்டித்தே தீருவார்கள்."

தே.மு.தி.க.வைத் தனித்து நிற்கவைக்க தி.மு.க. தரப்பு முயற்சிப்பதாகச் செய்திகளும் வருகின்றனவே?
தி.மு.க. வெற்றி பெற தர்மத்துக்கு விரோதமான அனைத்து யுக்திகளையும் அக்கட்சியினர் மேற் கொள்வார்கள். எதிர்க் கட்சிகள்தான் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை."

அரசின் இலவசத் திட்டங்கள், மற்றும் அதிகாரம் - பணபலம் காரணமாக ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்று ஆளும்கட்சி நம்புகிறதே?
இது மட்டுமா? தங்களுக்கேற்ற வகையில் செயல்பட ஊடகத் துறையிலும் ஆதிக்கம் செலுத்துகிறது தி.மு.க. அதிகாரமும், பணபலமும்தான் தி.மு.க.- காங்கிரஸின் பலம். அதை எதிர்த்துப் போராட வேண்டிய கட்டாயம் எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும் இல்லையேல் தி.மு.க. வின் சூழ்ச்சிகள் வெற்றி பெற்றுவிடும்."

எந்தச் சூழலிலும் தனித்து நிற்கும் முயற்சியில் தே.மு. தி.க. இறங்காது என்று சொல்ல முடியுமா?
நல்லதே நடக்கும் என்று நம்புகிறோம் நாங்கள்."

நன்றி:  கல்கி

No comments: