Feb 24, 2013

கருணாநிதிஈழத்தமிழர்பற்றிப்பேசுவது ‘சாத்தான்வேதம்ஓதுவது’சாத்தான் வேதம் ஓதுவதுஎன்ற பழமொழியை இனி தமிழில் இருந்து நீக்கிவிடலாம். ஏனெனில் அதற்கு பதிலாக புதுமொழி ஒன்று கிடைத்துள்ளது. அது இது தான்:‘கருணாநிதி ஈழத் தமிழர் பற்றிப் பேசுவது

துள்ளத் துடிக்க ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டபோது... கூட்டம் கூட்டமாக காடுகளுக்கு, ஆறுகளுக்குள் அவர்கள் சொந்த நாட்டுக்குள்ளேயே அகதிகளாக அலைந்தபோது... தமிழ்நாட்டுக்குத் தெற்கே மரண ஓலம் உரக்கக் கேட்டபோது...டான்ஸ் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த இந்த கருணாநிதி...

இன்று, ஒவ்வொரு நாளும் தன் கைப்பட ஈழத் தமிழர்களுக்காக கதறுவதையும், அறிக்கை விடுவதையும் பார்க்கும்போது உலகத்திலே உள்ள அத்தனை பச்சை துரோகங்களையும் தேடி எடுத்து திரட்டி ஓர் உருவம் செய்தால் அதுகூட கருணாநிதிக்கு ஈடாக முடியாது என்று தோன்றுகிறது.

கேவலம்... வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக மீண்டும் ஈழத் தமிழர் பிரச்னையை கையிலெடுத்து தனக்கென்று ஒரு கூட்டம் இருக்கிறது, அதனிடம் நாம் இதுபற்றி பேசிக் கொண்டே இருக்கலாம் என்று நினைத்து கருணாநிதி உளறிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது தமிழ்நாட்டுத் தமிழனுக்கே பற்றிக்கொண்டு வருகிறதே, ஈழத் தமிழனுக்கு எப்படி இருக்கும்?

இன்று தமிழ் ஈழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிஞ்சு மகன் பாலச்சந்திரனை சிங்கள ராணுவம் கொலை செய்த படத்தைப் பார்த்துவிட்டு பதறுகிறார் கருணாநிதி. வெளிச்சத்துக்கு வந்திருக்கும் போக்குற்றங்கள் என்று முரசொலியில் பிடில் வாசித்துக்கொண்டிருக்கிறார்.
பூனை கண்ணை மூடிக்கொண்டிருந்தால் உலகம் இருட்டாகிவிடும் என்று நினைத்துக் கொள்ளுமாம். அதுபோல ஆட்சியில் முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்திருந்தபோது ஈழத் தமிழர் ரத்தம் சொட்டச் சொட்ட கூட்டம் கூட்டமாக ஓடிக் கொண்டிருக்கும் வீடியோ தமிழகம் முழுக்க விநியோகிக்கப்பட்டதே...

அப்போது கருணாநிதிக்கு எல்லாமுமாக இருந்த உளவுத்துறையின் தலைவர் ஜாபர் சேட் அதையெல்லாம் கருணாநிதியிடம் காட்டவில்லையா?
அவர் காட்டினாலும் காட்டாவிட்டாலும் கருணாநிதி அன்று பார்த்ததெல்லாம்... மானாட மயிலாட வீடியோக்களைத்தானே!‘நமீதா இந்த உடை உடுத்தினால் இன்னும் கவர்ச்சியாக இருக்கும்... நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ப்ரீத்தி போனவாரம் போட்ட உடை மாதிரி இருக்கிறதே?’ என்பது மாதிரி நுணுக்கான கலைத் திருத்தங்களை செய்துகொண்ருந்த கருணாநிதிக்கு ஈழத்து போர் வீடியோக்களைப் பார்க எப்படி நேரம் கிடைத்திருக்கும்?

இப்போது, வெளிச்சத்துக்கு வந்திருக்கிறதாம் போர்க்குற்றங்கள். அட... என்ன ஒரு கிழ நரித்தனம். புலவர் புலமைப்பித்தன் சொல்லுவார் ஒரு கட்டுரையில், ‘கருணாநிதியின் மூளையில் விஷப் புழுக்கள் புழுத்து நெளிந்துகொண்டிருக்கின்றனஎன்று.அந்த விஷப் புழுக்கள்தான் ஒவ்வொரு நாளும் வரிவடிவம் எடுத்து முரசொலியில்அறிக்கைகளாகவும், வார்த்தை வடிவம் எடுத்து  அவர் வாயில் வார்த்தைகளாகவும் வெளிவருகின்றன.

ஈழத்துத் தாய் பார்வதி அம்மாள் சென்னைக்கு வரும்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதிக்கு அது தெரியாதாம். பார்வதியம்மாளை வர முடியாமல் செய்தவரை வைகோ மறந்துவிட்டாரா என்று இரு தினங்களுக்கு முன்பு முரசொலியில் முழங்கி இருந்தார் கருணாநிதி.

அன்று மலேசியாவிலிருந்து சென்னைக்கு, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பார்வதியம்மாள் வருவதை தெரிந்துக் கொள்ள முடியாத நிலையில், தமிழ்நாட்டின் முதல்வராக, அதுவும் ஐந்து முறை முதல்வராக இருந்தவருக்கு தெரியவில்லையாம்.கோபாலபுரம் இல்லத்தில் ஒருவேளை குஷ்புவோடு, கட்சியின் வளர்ச்சி குறித்து பேசிக் கொண்டிருந்ததால் கருணாநிதிக்குத் தெரியாமல் போயிருக்கலாம்!

இப்போது என்ன சொல்கிறார்? ஜெயலலிதா 2003-லேயே மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில்தான் பார்வதி அம்மாவை தமிழகத்துக்கு அனுமதிக்கவில்லையாம். ஏன் நீங்கள் முதல்வராக இருந்த ஐந்து வருடங்களில்... நீங்கள் மத்திய அரசோடு ஒட்டி உறவாடிக்கொண்டிருந்த  எட்டு வருடங்களில்... விமானம் பிடித்து டெல்லி போய் இலாகா பிடித்து வாங்கத் தெரியும்... அதில் ஆயிரம் கோடி லட்சம் கோடி என்று ஊழல் பண்ணத் தெரியும்! ஆனால், பார்வதி அம்மாளை தமிழகத்துக்குள் அனுமதிக்க வழிகள் என்ன என்று தெரியாதா உங்களுக்கு?

உலகத் தமிழர்களுக்கு எல்லாம் நீ மட்டும் தான் தலைவன் என்று நம்பச் செய்தாயே...நீ என்ன செய்தாய்?பார்வதியம்மாள் யாருக்காவது பயந்து, குடும்பத்துடன் சுகபோகமாக வாழவா அவர் ஆசைப்பட்டார். அவரது சிகிச்சைக்காகவே தமிழகம் ஓடிவந்தார். அதுவும் இலங்கையில் அவருக்காக ஒரு குடும்பச் சொந்தம் கூட அவரை வைத்து சிகிச்சை செய்ய முடியாத நிலையில், அவர் இங்கே வந்தார்.

அவர் வந்து, சென்னை விமான நிலையத்தில் ஸ்டெச்சரில் படுத்தபடியாக இருந்தார். அவரை விமான நிலையத்தை விட்டுக் கூட வெளியே வர முடியாத படி வைக்க உத்தரவிட்டிருந்தால் என்ன?

ஒரு உயிருக்காக, எங்கோ செல்ல வேண்டிய பயணியை, விசா இல்லாமல், சென்னை விமான நிலையத்தில் இறக்கி, அவருக்கு அப்பல்லோவில் சிகிச்சை அளித்த செய்தியை நீங்கள் படிக்கவில்லையா?

அது போலவாவது, பார்வதியம்மாளுக்கு சிகிச்சை அளிக்க, முதல்வர் என்ற முறையில் சிறப்பு அதிகாரத்தை செயல்படுத்த முடிந்ததா உங்களால்?
அவரை அப்படியே மலேசியாவுக்கு அனுப்பி வைத்துவிட்டு, அவர் அங்கிருந்து இலங்கைக்கு சென்ற பிறகு, ஓர் கபட நாடகத்தை அரங்கேற்றினீர்களே...
இது வரை உலகத்தில் எந்த அரசியல் தலைவனும் செய்யாத செய்ய முடியாத செயல் அல்லவா அது?

நடந்த சம்பவத்துக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பார்வதியம்மாள் கைப்பட கடிதம் எழுதி, இப்படிக்கு உங்கள் உடன்பிறப்பு என்ற கடிதத்தை வெளியிட்டு மகிழ்ந்தீர்களே?
பார்வதியம்மாள் என்ன தி.நகர் தி.மு.க. கிளையின் செயலாளரா என்று வைகோ கூட கேட்டாரே ஞாபகம் வருகிறதா?

அதற்கு என்ன பதில் சொல்ல முடிந்தது உங்களால்?
தமிழர்கள் எல்லாரும் மூளையை கழற்றி கடலில் வீசிவிட்ட தறுதலைகள் என்று நினைத்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் அறிக்கைகளும், பேட்டிகளும் கொடுக்கிறீர்களே... உங்களுக்கு வெட்கமாகவே இல்லையா?

2008 செப்டம்பரிலிருந்து ஈழத் தமிழர்கள் மீதான போர் உச்சம் பெற்று 2009 மே மாதம் எல்லாம் முடிந்துபோகும் வரையில் இப்போது  மாதிரி வீர வசனங்கள் பேசினீர்களா?
ராஜபக்சே கோபப்படாமல் பேசவேண்டும் என்று புத்தி சொன்ன சிங்களன்தானே நீங்கள்?
பிரபாகரன் பிடிபட்டால் அவரை போரஸ் புருஷோத்தமன் மாதிரி நடத்தவேண்டும் என்று சொன்ன டெல்லிக்காரன்தானே நீங்கள்...

இப்போது  ஒப்பாரி வைக்கிறீர்களே... பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் படங்களைப் பார்த்து! இது எப்போது நடந்தது?

கட்டிய மனைவியையும், துணைக்கு வந்த துணைவியையும் கூட்டிக் கொண்டு அண்ணா நினைவிடத்தை உண்ணாவிரதம் என்ற பேராலே அசிங்கப்படுத்திக் கொண்டிருந்தீர்களே... ‘மழை விட்டாலும் தூவானம் விடாதே  என்று போரையும் மழையையும் ஒப்பிட்டு அருவெறுக்கத்தக்க வசனம் பேசிக் கொண்டிருந்தீர்களே... அப்போதுதானே அந்த பச்சிளம் பாலகன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

எல்லார் கண் முன்பாகவும் சோனியாவோடு சேர்ந்து, பிரணாப்பின் கை பிடித்து, ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்துவிட்டு...

இப்போது போர்க்குற்றம், டெசோ மீட்டிங், தூதர்கள் சந்திப்பு, அறிக்கை, பேட்டி என்று  நாடகம் நடத்தும்... மஞ்சள் துண்டு போர்த்தியிருக்கும் துரோக மலையே....
கோபாலபுரம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கண்ணாடி எதிரே நின்று கறுப்புக் கண்ணாடியைக் கழற்றிவிட்டுப் பாருங்கள்!

அந்த கண்ணாடி காரித்துப்பியிருக்கும் யாருக்கும் தெரியாமலேயே..!
பார்வதியம்மாளின் புதைகுழி கூட கைக்கொட்டி சிரித்துக் கொண்டிருக்கிறது- இப்படி ஒரு மனிதன் தமிழன் என்று இன்னும் சொல்லிக் கொண்டிருக்கிறானே என்று!
நன்றி: தமிழ்லீடர்.