Sep 23, 2012

பி.ஜே.பி-யின் உலக மகாப்பித்தலாட்டம்.வைகோவின் சாஞ்சி போராட்டம்


ராஜபக்ஷேவுக்கு எதிராக தமிழ்நாட்டு வீதிகளில் மட்டும் கறுப்புக்கொடி காட்டி, கண்டனம் தெரிவித்த தமிழ் ஈழ ஆதரவாளர்கள், இப்போது ராஜபக்ஷே செல்லும் இடம் எல்லாம் தங்களது எதிர்ப்பைக் காட்டத் தொடங்கி விட்டனர்!
ஜூ.வி.யில் இன்று வெளியாகி இருக்கும் வைகோவின் போராட்டம் பற்றிய விரிவான தகவல் இங்கே.
 
நாங்கள் இந்தியப் பிரஜையா... இல்லையா?

மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சிக்கு வந்து புத்தர் கல்வி மையத்தைத் திறக்கப்போகிறார் இலங்கை அதிபர் ராஜபக்ஷே என்ற தகவல் கிடைத்த உடனேயே, 'அவருக்கு அங்கேயே போய் எங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்போம்’ என்று வைகோ அறிவித்தார். உடனே, ம.பி. மாநிலத்தை ஆளும் பி.ஜே.பி. முதல்அமைச்சர் சிவராஜ்சிங் சௌகான், வைகோவுக்கு எழுதிய கடிதத்தில், 'போராட்டத்துக்கு அனுமதி இல்லை’ என்றார். 'தடையை மீறிப் போராட்டம் நடத்த வருவோம்’ என்று வைகோவும் அறிவித்தார். அவ ரைச் சமாதானப்படுத்த சுஷ்மா சுவராஜ் போனில் பேசியதாகவும், ஆனால் பேசுவதற்கு வைகோ மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
 

இந்தநிலையில், கடந்த 17-ம் தேதி மாலை, சென்னைக் கடற்கரையில் பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் இருந்து ம.தி.மு.க-வினர் புறப்பட்டனர் சாஞ்சியை நோக்கி. 21 பேருந்துகளில் சுமார் 1,000 பேர் சென்றனர். 'ராஜபக்ஷேவே வெளியே போ! இந்திய அரசே... கொலைகாரனை அனுமதிக்காதே’ என்று முழக்கமிட்டனர். ''புத்தக் கல்வி மையம் அடிக்கல் நாட்டுவதற்கு ராஜபக்ஷேதான் கிடைத்தாரா? காந்தி சிலைக்கு மாலை போட கோட்சேவா? இலங்கையில் 2,076 இந்துமதக் கோயில்களை ராஜபக்ஷே இடித்துள்ளார். இந்து மதத்தைப் போற்றும் பாரதிய ஜனதா... ஒரு மத வெறியனையா வரவேற்கிறது? எங்கள் மக்களைக் கொன்ற கொலைகாரன் நாங்கள் வாழும் நாட்டுக்கே வருகிறான். நாங்கள் இந்த நாட்டு மக்களா இல்லையா என்று நீங்களே முடிவு செய்யுங்கள்'' என்று ஆவேசமாகப் பேசிவிட்டுக் கிளம்பினார் வைகோ!

சரத்பவார் செல்வாக்கில் ராஜமரியாதை!

19-ம் தேதி அதிகாலை நாக்பூர் வந்தடைந்தது மறுமலர்ச்சிப் பேருந்துகள். சரத் பவார் கட்சியான தேசியவாத காங்கிரஸின் நாக்பூர் தலைவர் அஜய் பாட்டில், வைகோவை வரவேற்றார். அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவிய திக்சா பூமிக்குச் சென்று அம்பேத்கர் சிலைக்கும் புத்தர் சிலைக்கும் வைகோ உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

மகாராஷ்டிரா காவல் துறை பலத்த பாதுகாப்பு கொடுத்தது. ஆனால், மத்தியப் பிர தேச உளவுத்துறை போலீஸ் இங்கேயே வந்து, தனது கண்காணிப்பைத் தொடங்கியது. 'தேவை இல்லாமல் இங்கே வராதீர்கள்’ என்று அவர்களை மகாராஷ்டிரா போலீஸ் எஸ்.பி. எச்சரிக்கை செய்தார். ஆனாலும், மகாராஷ்டிரா மாநில எல்லை வரை நாக்பூர் தேசியவாத காங்கிரஸின் தலைவரும் சரத்பவாரின் உறவினருமான அஜய் பாட்டில் ஆதரவாளர்கள் வந்தனர். ''இதோடு எங்களது எல்லை முடிந்து விட்டது...'' என்று வழியனுப்பிச் சென்றனர்.

எல்லையில் காத்திருந்த படைகள்!

மத்தியப் பிரதேச எல்லையில் சன்டவாரா மாவட்ட ஆட்சியரோடு நின்றுகொண்டிருந்தது போலீஸ். 'உள்ளே நுழையக் கூடாது’ என்று அவர்கள் சொல்ல... 'அமைதியான வழியில் கறுப்புக்கொடி காட்டத்தான் நான் வந்துள்ளேன். இது, ஜனநாயக உரிமை. இந்தியாவின் எந்த மாநிலத்துக்குள்ளும் நாங்கள் செல்வதற்கு உரிமை உண்டு’ என்று வைகோ சொன்னார். அதை அவர்கள் ஏற்கவில்லை. 'இங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. எனவே நீங்கள் செல்ல முடியாது’ என்றார்கள். அதற்குள் ரோடு ரோலர், வஜ்ரா, டிராக்டர் வண்டிகளை சாலையில் கொண்டுவந்து நிறுத்தினர். அதோடு, 2,000 போலீஸார் அழைத்து வரப்பட்டனர்.

மகாராஷ்டிராவை ஒட்டிய எல்லைப் பகுதியில் வைகோ தரப்பும் மத்தியப் பிரதேச எல்லைப் பகுதியில் அந்த மாநிலப் போலீஸ் படையும் எதிரெதிராக நின்றது. 19-ம் தேதி மதியம் 3.30 மணி அளவில் இந்த அறவழிப் போராட்டம் தொடங் கியது. மத்தியப் பிரதேச அரசு, இளையராஜா என்ற துணை ஆட்சியரை (ஈரோட்டைச் சேர்ந்தவர்) சமாதானம் செய்ய அனுப்பியது. பூங்கொத்து கொடுத்து வரவேற்பு கொடுத்தவர், 'இதற்கு மேல் உங்களை அனுமதிக்க முடியாது’ என்றார். ஆனால், அவர் சொன்ன சமாதானத்தை வைகோ ஏற்கவில்லை. அதற்குள் இருட்ட ஆரம்பித்தது. அந்தப் பகுதியில் சாலையோர விளக்குகள் எதுவும் எரியவில்லை. உடனடியாக புதிய விளக்குகள் மாட்டப்பட்டன.

விருந்தினர் மாளிகைக்குப் போக மாட்டேன்!

ம.பி. போலீஸிடம், ''ராஜபக்ஷே வர இருக்கும் சாஞ்சிக்குச் சென்று கறுப்புக்கொடி காட்டத் திட்டமிட்டோம். இதைக் குறிப்பிட்டு நான் முதலமைச்சர் சௌகானுக்குக் கடிதம் எழுதினேன். அவர் எனக்கு எழுதிய பதிலில் 'ஆசிய கண்டத்தில் சமாதானத்தை வளர்க்கத்தான் அவரை இங்கே அழைத்து வருகிறோம்’ என்று சொல்லி இருந் தார். என்னைத் தொடர்பு கொண்ட போபால் போலீஸ் கமிஷனர் விஜய் யாதவ். 'உங்களுக்குப் போபாலில் போராட்டம் செய்ய ஒழுங்கு செய்துள்ளோம். ஆனால், சாஞ்சியில் அனுமதிக்க முடியாது’ என்று கூறினார். ஆனால் இப்போது, என்னை 350 கி.மீட்டருக்கு முன்னரே தடுத்து நிறுத்தி உள்ளீர்கள். இது, பி.ஜே.பி-யின் உலக மகாப்பித்தலாட்டம். நாங்கள் ஆயுதம் ஏந்திப் போராடவில்லை. பலாத்காரத்தைப் பயன்படுத்தி என்னைக் கைது செய்ய நினைத் தால், செய்து பாருங்கள். துப்பாக்கியையும் லத்தி யையும் காட்டி எங்களைப் பயமுறுத்த முடியாது'' என்று உணர்ச்சிகரமாகப் பேசினார் வைகோ. ஆனாலும், ''உங்களை இதற்கு மேல் அனுமதிக்க முடியாது'' என்பதையே போலீஸார் திரும்பத் திரும்பச் சொன்னார்கள்.
 

''நீங்கள் இங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்குங்கள். உங்களை நாங்கள் கைது செய்யவில்லை'' என்று போலீஸ் சொன்னதையும் வைகோ ஏற்க வில்லை. ''நான் மத்தியப் பிரதேசத்துக்கு உங்களது விருந்தாளியாகத் தங்குவதற்கு வரவில்லை. போராட் டம் நடத்த வந்துள்ளேன். எனவே, உங்களோடு எந்த சமாதானமும் கிடையாது'' என்று வைகோ சொன்னார்.

தோள் கொடுத்த மக்கள்!

இந்த வாக்குவாதங்கள் நடந்த பட்சிசோலி பகுதியில் ஊர் மக்கள் கூட ஆரம்பித்தனர். அவர் களுக்கு இந்தியில் போராட்டக் காரணங்களை ம.தி.மு.க. தொண்டர்கள் விளக்கிச் சொன்னார்கள். வைகோ பேசியதையும் இந்தியில் மொழிபெயர்த்துச் சொன்னார்கள். ஈழப் பிரச்னை குறித்து இந்தியில் அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் தரப்பட்டன. இதேநிலை நீடிக்க... 19-ம் தேதி இரவு முழுக்க ரோட்டில் அனைவரும் படுத்துத் தூங்கினார்கள்.

20-ம் தேதி மாலை வரை வைகோ உள்ளிட்டவர்கள் 'தடையை மீறி கறுப்புக் கொடி காட்டியே தீருவது’ என்று விடாப்பிடியாக உட்கார்ந்து இருந்தனர்.

இலங்கைப் பிரச்னை மாநிலம் கடந்து மக்கள் கவனத்தை ஈர்க்கும் விஷயமாக மாற இந்தப் போராட்டம் காரணமாகி விட்டது!

Sep 5, 2012

தமிழீழத்திற்கு எதிராகராஜிவ் காந்தி, மு.கருணாநிதி கூட்டுச்சதி அம்பலம்.

1991-ம் ஆண்டில் இலங்கையின் குடியரசுத் தலைவராக பிரேமதாசா பதவியேற்றபோது இலங்கையில் இருந்து இந்தியப் படைகள் வெளியேற வேண்டுமென வற்புறுத்தத் தொடங்கினார். இதன் அடிப்படையில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தார். பிரேமதாசாவுடன் புலிகள் பேச்சுவார்த்தை தொடங்கினால், உலக அளவில் தன் மரியாதை அடியோடு போய்விடும் என ராஜீவ்காந்தி பதைபதைத்தார். இதை எப்படியும் தடுக்க வேண்டும் என துடிதுடித்தார்.

பிரேமதாசாவுடன் புலிகள் பேச்சுவார்த்தை நடத்தாமல் இருந்தால், அவர்களுக்குத் தேவையான சலக உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக அவர் கூறினார். புலிகளிடம் கூறி அவர்களை ஒப்புக்கொள்ளவைக்கும் பொறுப்பை அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியிடம் ஒப்படைத்தார்.

கருணாநிதியின் அழைப்பை ஏற்று புலிகளின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் சென்னைக்கு வந்து அவரைச் சந்தித்துப் பேசினார். அப்போதுகூட பிரதமர் வி.பி.சிங் தனக்கு முழு அதிகாரம் அளித்திருப்பதைப் பயன்படுத்திப் பிரச்னையை சுமுகமாகத் தீர்த்திருக்கலாம். ஆனால், புலிகளுக்கு எதிரான உள்ளம் படைத்த அவருக்கு அவ்வாறு செய்ய விருப்பம் இல்லை. 

மாறாக, வரதராசப் பெருமாள் தலைமையில் உள்ள வடகிழக்கு மாகாண அரசில் சரிபாதி இடங்களை புலிகளுக்குப் பெற்றுத் தருவதாகவும் இதை ஏற்றுக்கொண்டால் இந்திய அரசின் உதவியும் கிடைக்கும் என கூறினார். மக்களிடம் செல்லாக்காசாய்ப் போன வரதராசப்பெருமாள் அரசில் அங்கம் வகிக்க பாலசிங்கம் மறுத்தார். 'மீண்டும் ஒரு தேர்தல் நடத்தப்படுமானால் புலிகள் பங்கேற்கத் தயார்’ என்றார். தான் விரித்த வலையில் புலிகள் சிக்காததன் விளைவாக கருணாநிதி இந்தப் பிரச்னையில் தன்னால் முடிந்ததைச் செய்தாகி விட்டது எனக் கூறி ஒதுங்கிக்கொண்டார்.

தொடர்ந்து, புலிகளுக்கு எதிரான காழ்ப்புஉணர்ச்சி அவரிடம் இருந்து மறையவில்லை. தமிழீழத்தில் படு காயமடைந்த போராளிகளை தமிழகம் கொண்டுவந்து தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை அளிப்பது குறித்து முதல்வர் கருணாநிதிக்குத் தெரிவித்து அவரின் சம்மதத்தைப் பெற்ற பிறகே போராளிகள் தமிழ்நாடு வந்தனர். ஆனால், சிகிச்சை பெற்றுவந்த அந்தப் போராளிகளை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தார் கருணாநிதி.

இதுகுறித்து, பிரபாகரன் 19.3.1998-ம் ஆண்டு எனக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு வேதனையுடன் குறிப்பிட்டுள்​ளார்: 'எமது போராளிகளில் பலர் அதுவும் காயமடைந்து, ஊனமடைந்​தவர்கள் இன்னும் தமிழக சிறைகளுக்குள் அநியாயமாக அடைப்பட்டுக்கிடப்பது எமக்கு ஆழ்ந்த வேதனையைக் கொடுக்கிறது. 90-ல் கலைஞரின் காருண்யத்தை நம்பி அவரது வேண்டுகோளின் பேரில் அனுப்பப்பட்ட போராளிகள் தொடர்ந்தும் சிறைகளில் பூட்டி வைக்கப்பட்டிருப்பது மனிதாபிமானமற்ற அநீதியான செயல்.''

இதற்கு முன்பாக 23.7.1997 அன்று எனக்கு அவர் எழுதிய மற்றொரு கடிதத்தில், 'மருந்துப் பொருட்கள் எடுப்பதற்காக அங்கு வந்த எமது போராளிகள் பிடிபட்டு இதுவரை 50 லட்சம் வரையான பணம் தமிழ்நாட்டுப் போலீஸாரிடம் பிடிபட்டு உள்ளது. எமக்கிருக்கும் எவ்வளவோ பணக் கஷ்டத்தின் மத்தியிலும் மருந்துப் பொருட்கள் வாங்க அனுப்பிய பணம், தமிழ் தமிழ் என முழங்கும் கலைஞரின் ஆட்சியிலே பறிக்கப்படுவதுதான் வேதனையைத் தருகிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

'வீரம், ஆற்றல் உட்பட அனைத்திலும் யாருக்கும் சளைக் காதவர்களாக ஈழப் போராளிகள் இருந்தும் இறுதிப்போரில் தோல்வியுற்றனர். போரில் ஈடுபட்ட தலைவர்கள் பலரும் மடிந் தனர். இதற்குக் காரணம் ஈழப் போராளிகளிடையே ஒற்றுமை இல்லாததுதான்'' என 24.8.2012 அன்று சென்னையில் நடைபெற்றக் கூட்டத்தில் கூறியுள்ள கருணாநிதிதான் கடந்த காலத்தில் இப்படிச் செய்தவர்.

1987-க்குப் பிறகு, புலிகளைத் தவிர மற்ற இயக்கங்கள் ஒவ்வொன்றாக சிதறி விட்டன. சிங்கள அரசின் கைக்கூலிகளாக மாறிவிட்டன. சிங்கள அரசை எதிர்த்து இவர்கள் ஒருபோதும் போராடவில்லை. சிங்கள ராணுவத்துடன் இறுதிவரை போராடியவர்கள் விடுதலைப் புலிகள் மட்டுமே. அதை மறைத்து கருணாநிதி பேசி இருக்கிறார். 1990-ல் இருந்து 2008-ம் ஆண்டு வரை நடைபெற்ற அத்தனை போர்களிலும் புலிகள் வெற்றிவாகை சூடி இருக்கிறார்கள். 18 ஆண்டு காலமாக சிங்கள ராணுவத்துடன் நடைபெற்ற போர்கள் குறிப்பிடத்தக்கவை. யாராலும் வெல்லப்பட முடியாதது எனக் கருதப்பட்ட ஆனையிறவு ராணுவ முகாமை மூன்றே நாட்களில் அழித்து வெற்றிக்கொடி நாட்டியவர்கள் புலிகள்.

ஆனால், 2009 ஆண்டில் அவர்களின் தோல்விக்கு சகோதரச் சண்டை காரணம் அல்ல; மாறாக, இந்தியா, சீனா, பாகிஸ்தான் உட்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றுகூடி சிங்கள ராணுவத்துக்குத் தேவையான ராணுவ உதவி உட்பட சகல உதவிகளையும் செய்தன. இந்தியாவின் ஓய்வுபெற்ற தளபதியான லெப். ஜெனரல் சதீஷ் சந்திரா, சிங்கள ராணுவத்தின் ஆலோசகர் பொறுப்பை ஏற்றார். இந்தியக் கடற்படை இலங்கையைச் சுற்றிலும் நிறுத்தப்பட்டு புலிகளுக்கு ஆயுதம் ஏந்தி வந்த 13 கப்பல்களை மூழ்கடித்தது. இந்தக் காரணங்களினால்தான் புலிகள் வெற்றி பெற முடியவில்லை.

இந்த உண்மைகளை மறைத்து கருணாநிதி பேசுகிறார். சிங்கள அரசுக்கு எல்லா வகை ஆதரவும் அளித்த இந்திய அரசையும் அதற்குத் துணையாக நின்ற தனது செயலையும் மூடி மறைப்பதற்காக சகோதர யுத்தத்தால்தான் ஈழத்தில் அழிவு ஏற்பட்டதாக முழுப் பொய்யைக் கூசாமல் சொல்கிறார். என்னதான் இவர் உண்மைகளை மூடிமறைக்க முயற்சி செய்தாலும் அது, ஒருபோதும் வெற்றிபெறாது.