Nov 16, 2011

பெட்ரோல் விலை குறைப்பு காங்.அரசின் கயமைத்தனம்.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.22 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த 3ம் தேதி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் 1.82 ரூபாய் அதிகரிக்கப்பட்டது.இந்த ஏற்றப்பட்ட விலை தான், தற்போது குறைக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஏற்றப்பட்ட விலையை, எண்ணெய் நிறுவனங்கள் குறைத்தது இல்லை கடந்த 33 மாதங்களில் தற்போது தான், ஏற்றப்பட்ட பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளதாலும், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ஸ்திரத் தன்மையடைந்துள்ளதாலும், பெட்ரோல் விலைகுறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளன.

ஆனால் இது ஓர் அப்பட்டமான பொய். பெட்ரோல் விலையை குறைக்க கூறி பல அமைப்புகள், நுகர்வோர் அமைப்புகள், பொதுமக்கள்,எதிர்கட்சிகள் என பலரும் கேட்டபோது செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்த மத்திய காங்.அரசு இப்போ திடீரென குறைத்துள்ளது. இது மட்டுமா முந்தாநாள் பிரதமர் மன்மோகன் சிங், விமானத்தில் கொடுத்த பேட்டியில் கூட பெட்ரோல் விலையை குறைக்கமுடியாது என்று உறுதியாய் கூறினார்.ஆனால் அடுத்த நாளே பெட்ரோல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.           

காரணம்.1

பெட்ரோல் விலையை குறைக்கவில்லை எனில் தங்கள் ஆதரவு வாபஸ் என  மம்தாவின் திரிணமுல் போன்ற கூட்டணிக் கட்சிகள் காங்.அரசுக்கு கொடுத்த நெருக்கடியால் எங்கே பெட்ரோல் விலையை குறைக்கவில்லை எனில் தங்கள் ஆட்சியின் டவுசர் டர்ர்ர் ஆகிவிடுமோ என்ற பயமே இதற்கு காரணம்

காரணம்.2

சமீபத்தில் கேரளா ஹைகோர்ட் ஆயில் நிறுவனங்களின் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்ய சொன்னதும் எண்ணெய் நிறுவனங்களின் டிக்கியில் நெருப்பை வைத்தது போல அலற ஆரம்பித்தன. இதுவரை எண்ணெய் நிறுவனங்களும், ரிலையன்ஸ் நிறுவனங்களும் மக்களிடம் விலையை ஏற்றி அடித்த பகல் கொள்ளை உறுதியாகி விட்டதால் இவ்வளவு நாள் அடித்த கொள்ளை  எங்கே போனது, யாருக்கு போனது. இந்த மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் சொல்லவேண்டிய இக்கட்டில் எண்ணெய் நிறுவனங்கள் மாட்டிகொண்டுள்ளன.

இத்தனைக்கும் பிறகுதான் மீசையில் மண் ஒட்டவில்லை என சில பொய்யானான சில காரணங்களை கூறி நாடகம் போடுகிறது மத்திய காங்.அரசு.

Nov 7, 2011

கூடங்குளம் அணு மின் நிலையம் வரப்பிரசாதம்: அப்துல் கலாம்.

கூடங்குளம் அணு மின் நிலையம் சிறப்பானது, சிறந்த பாதுகாப்பு வசதிகளுடன் கூடியது, இது தமிழகத்திற்கு கிடைத்துள்ள வரப் பிரசாதம் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.

கூடங்குளத்தில் கட்டப்பட்டு வரும் அணு மின் நிலையத்தை நிரந்தரமாக மூடக்கோரி நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மீனவர்களும், சமூக ஆர்வலர்களும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் அச்சத்தை போக்க, மத்திய, மாநில அரசுகள் சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கூடங்குளத்தில் அணுசக்தி துறை அதிகாரிகள் மற்றும் அணு மின் கழக அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் பங்கேற்றார். பின்னர் அணு மின்நிலையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அவர் ஆய்வு செய்தார்.

இதனையடுத்து அணுமின்நிலையத்தை ஆதரிக்கும் 15 கிராம மக்களை அப்துல்கலாம் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அப்போது கலாம் கூறியதாவது:

கூடங்குளம் அணு மின் நிலையத்தை நான் சுற்றிப் பார்த்தேன். அங்குள்ள விஞ்ஞானிகளை சந்தித்துப் பேசினேன். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தேன். அதன் பின்னர் இது மிகச் சிறந்த அணு மின் நிலையம் என்பதை நான் உணர்ந்தேன். இந்த அணு மின் நிலையம் சிறப்பானது, 

முழுமையான பாதுகாப்பு வசதிகளுடன் கூடியது. இந்த அணு மின் நிலையத்தால் எந்தவித ஆபத்தும் இல்லை. கதிர்வீச்சுகள் வெளிப்படாத வகையில் இந்த உலை நவீன முறையில் கட்டப்பட்டுள்ளது. எனவே இந்த அணு உலை குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை.

ஆயிரம் ஆண்டு பழமையான நெல்லையப்பர் கோவிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை. அதேபோல் இந்த அணுமின்நிலையமும் பாதிக்கப்படாது. தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளாக மிகப்பெரிய அளவில் பூகம்பம் ஏற்பட்டதில்லை

கூடங்குளம் பூகம்ப பாதிப்பு பகுதி இரண்டின் கீழ் வருகிறது. எனவே இங்கு பூகம்பம் ஏற்பட வாய்ப்பு இல்லை. அதனால்தான் இங்கு அணுமின்நிலையம் கட்டப்பட்டது. அணு உலையானது 13.5 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளதால் சுனாமியினால் அணு உலைகள் பாதிக்க வாய்ப்பில்லை.

யாருடைய வற்புறுத்தலினாலும் இங்கு நான் வரவில்லை. நான் சமாதானத் தூதுவராகவும் வரவில்லை. அணு உலைக்கு எதிராக போராட்டத்தில் வெளிநாட்டு சதி இருப்பதாகவும் நான் சந்தேகிக்கவில்லை.

இந்தியாவின் வளர்ச்சிக்கு மின்சாரம் மிக மிக அவசியம். நம்மிடம் தற்போதுள்ள பாரம்பரிய மின் உற்பத்தித் திறன் மிகவும் குறைவாக இருப்பதால் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலுமே மின் பற்றாக்குறை நிலவுகிறது. 

நாட்டின் சீரிய, சிறந்த வளர்ச்சிக்கு மின்சாரம் மிக மிக அவசியம். அதற்கு அணு மின் சக்தி மிகவும் தேவை. ஒரு விஞ்ஞானியாக, தொழில்நுட்பவாதியாக அணு சக்தியை நான் ஆதரிக்கிறேன் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.

Nov 3, 2011

கனிமொழி ஜாமீன் மனு தள்ளுபடி செய்ததற்கான காரணங்கள்.

2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திமுக எம்.பி. கனிமொழி உள்பட 8 பேரின் ஜாமீன் மனுக்களையும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி இன்று தள்ளுபடி செய்தார்.

மேலும், கனிமொழி உள்ளிட்டோர் மீது சிபிஐ தொடர்ந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக வரும் 11-ம் தேதி முதல் விவாதம் நடைபெறும் என்று நீதிபதி அறிவித்தார்.

ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்ததற்கான காரணங்கள்...

கனிமொழி, சரத்குமார் உள்பட 8 பேரின் ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி சைனி, அம்மனுக்களை தள்ளுபடி செய்ததற்கான காரணங்களையும் அடுக்கினார். அதன் விவரம்:


 இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் கடுமையானவை. நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.

  சிபிஐ எதிர்ப்பு இல்லை என்பது சட்டத்தின் பார்வையில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.


  ஜாமீனில் விடுவிக்கப்பட வேண்டிய அளவுக்கு கரீம் மொரானியின் உடல்நிலை மிகுந்த மோசமில்லை.


  சமூகத்தில் மதிப்புமிக்க நிலையில் இருப்பதுடன், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருக்கிறார் கனிமொழி. எனவே, தாம் ஒரு பெண் என்பதால் சலுகை அளித்திட வேண்டும் என்ற நிலை அவருக்கு பொருந்தாது. அவர் எந்த விதத்தில் சிறுமைப்படுத்தப்படவில்லை.


 குற்றம்சாட்டப்பட்டவர்களின் உரிமைகள் முக்கியம் தான். ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் உரிமையும் அவற்றுக்கு சற்றும் குறைந்தது அல்ல.


இவ்வாறு நீதிபதி ஓ.பி.சைனி விளக்கம் அளித்தார்.