Apr 30, 2011

அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா கேள்வி.கருணாநிதி பதில் என்ன?

 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் குற்றப்பத்திரிகையில், முதல்வர் கருணாநிதி குடும்பத்தினர் அனைவரது பெயர்களையும் சேர்க்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் கருணாநிதிக்கு அவர் 10 கேள்விகளை அடுக்கியுள்ளார்.

 ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கை

"உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை முன்னின்று விசாரித்து வரும் சி.பி.ஐ-யின் இரண்டாவது குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள தனது மகள் கனிமொழியை காக்கும் வகையில், தனக்கே உரிய பாணியில் குழப்பமூட்டும் கதைகளை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார் கருணாநிதி. 

இந்த ஊழலையே மறுத்துள்ளதோடு மட்டுமல்லாமல், இந்த ஊழல் இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் கற்பனையில் உருவான கட்டுக் கதை என்றும் குறை கூறியிருக்கிறார் கருணாநிதி. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நடைபெற்றுக் கொண்டிருக்கும் விசாரணை நடவடிக்கைகளை, திராவிட அரசியலுக்கு எதிரான மேலாதிக்க சக்திகளின் சதி என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார் கருணாநிதி.  

கருணாநிதியின் மகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் மோசமான செயல்பாட்டினை வெட்ட வெளிச்சமாக்கிக் கொண்டிருக்கும் ஊடகங்களை கடுமையாக சாடியிருக்கிறார் கருணாநிதி. தப்ப முடியாதபடி கடினமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் தருணத்தில், அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, மற்றவர்கள் மீது சேற்றை வாரி இறைப்பது கருணாநிதியின் வாடிக்கை! குறிப்பிட்ட எந்தப் பெயரும் சுட்டிக் காட்டப்படவில்லை. தனி மனிதர், தனிப்பட்ட கட்சி அல்லது அமைப்பின் பெயர்கள் குறி வைக்கப்படவில்லை. வெறும் பொதுவான தூற்றுதல் தான்.

ஆனால், 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது மிகப் பெரிய ஊழல். கருணாநிதி  மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த ஊழலில் முழுவதுமாக மூழ்கி இருப்பதால், இந்த ஊழலில் இருந்து ஒதுங்கி இருப்பது என்பது கருணாநிதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இயலாத காரியம் ஆகும்.


இந்த ஊழலில் அடங்கியுள்ள அப்பட்டமான உண்மைகளில் சிலவற்றை நாம் காண்போம்.

1) 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றிய முதல் செய்திகள் மற்றும் இந்த ஊழலில் கருணாநிதியின் நம்பிக்கைக்குரிய தளபதி ஆ.ராசாவுக்கு உள்ள பங்கு பற்றிய தகவல்கள் ஆகியவை எந்த எதிர் தரப்பு ஊடகங்களிலும் முதன் முதலாக வரவில்லை. மாறாக, கருணாநிதியின் பேரன்களுக்கு சொந்தமான தொலைக்காட்சியான சன் டி.வி-யில் தான் முதன் முதலில் ஒளிபரப்பப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், கருணாநிதியின் பேரன்களில் ஒருவர், 28.4.2011 அன்று நடைபெற்ற திமுக-வின் "உயர் மட்டக் குழு" கூட்டத்தில் ஊடகங்களை பொதுவாக கருணாநிதி தாக்கிய சமயத்தில் உடனிருந்தார் என்பது தான்.

2) ராசா மற்றும் இதர நபர்களுக்கு எதிரான வழக்குகள் எதிர்க்கட்சியினர் கூறும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிபிஐ-யினால் தாக்கல் செய்யப்படவில்லை. மாறாக, இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை தலைவரால் இந்திய நாடாளுமன்றத்தில் தகுந்த ஆவணங்களுடனும், வலுவான வாதங்களுடனும் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

3) அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கத்துடன், திமுக-வுக்கு எதிரான கட்சி ஆட்சி புரியும் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மத்திய புலனாய்வு துறை 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை தாக்கல் செய்யவில்லை. மாறாக, கருணாநிதி தலைமையிலான தி.மு.க. முக்கிய பங்காற்றுகின்ற, கருணாநிதியின் மகனும், பேரனும் மத்திய அமைச்சர்களாக அங்கம் வகிக்கின்ற மத்திய அரசின் அறிவுரையின் பேரில் தான் மத்திய புலனாய்வுத் துறை இந்த வழக்கினை தாக்கல் செய்திருக்கிறது.

4) ஒரு வருடத்துக்கும் மேலாக தூங்கிக் கொண்டிருந்த இந்த ஊழல் வழக்கு தீங்கிழைக்கும் கும்பல் கூரை மேல் ஏறி நின்று கூக்குரலிட்டதன் காரணமாக முக்கியத்துவம் பெறவில்லை; உலகின் மிகப் பெரிய ஊழலுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில், மத்திய புலனாய்வுத் துறையால் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்த விசாரணையை உச்ச நீதிமன்றமே முடுக்கி விட்டதன் காரணமாகத் தான் இந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றது.

5) இந்த வழக்கில், சி.பி.ஐ. இதுவரை இரண்டு குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது.  இன்னும் நிறைய குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்ய இருப்பதாகவும் உறுதி அளித்துள்ளது.  இவையெல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவோ, செவி வழிச் செய்தி அல்லது நாகரிகமற்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலோ நடைபெறவில்லை. மாறாக, 80,000 பக்கங்கள் கொண்ட வலுவான ஆதாரங்களின், ஆவணங்களின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

6) இந்த வழக்கில் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்பட்டவர்கள் ஆ.ராசா மற்றும் கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் சிலர் மட்டுமல்ல. இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் செல்வாக்கு படைத்த தொழில் குழுமத்தைச் சேர்ந்த மேலாண்மை இயக்குநர்களும், தலைமை செயல் இயக்குநர்களும் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்கள். உண்மை நிலை இவ்வாறு இருக்கையில், இந்த ஊழலை மூடி மறைக்கும் விதமாக, "செல்வாக்கு படைத்த ஒரு குழுவினரின் அரசியல் சதுரங்க விளையாட்டு இது" என்று அபத்தமாக குற்றம் சுமத்துகிறார் கருணாநிதி!

நான் இப்பொழுது ஒரு சில கேள்விகளை கருணாநிதியிடம் கேட்க விரும்புகிறேன். கருணாநிதி அனுமதி அளித்திருந்தால், வாய்ப்பு கொடுத்திருந்தால், இந்தக் கேள்விகளை ஊடகங்களே அவரிடம் கேட்டிருக்கும் என்றும் நான் நம்புகிறேன்.

1) கம்பெனிகள் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள ஆவணங்களின்படி, கலைஞர் டி.வி. நிறுவனத்தில் தயாளு அம்மாளுக்கு 60 விழுக்காடு பங்குகள் உள்ளன என்பது தெரிகிறது. இந்த அளவு பங்கினை வைத்துக் கொள்வதற்கான நிதி ஆதாரம் குறித்த விவரங்கள் என்ன? இந்த டி.வி-யில் எவ்வளவு பணத்தை தயாளு அம்மாள் முதலீடு செய்தார்? இந்த டி.வி. சேனலில் இந்த அளவுக்கு முதலீடு செய்யும் அளவுக்கு தயாளு அம்மாளுக்கு நிதி எங்கிருந்து கிடைத்தது?

2) தனிப்பட்ட முறையில் தயாளு அம்மாள் இதில் பங்குதாரராக இருக்கிறாரா? அல்லது கருணாநிதி குடும்பத்தின் தன்னுடைய கிளையின் பிரதிநிதியாக செயல்படுகிறாரா?

3) 20 விழுக்காடு பங்குகளை வைத்திருக்கும் கனிமொழி இந்த டி.வி-யில் எவ்வளவு முதலீடு செய்தார்? இந்த அளவுக்கு முதலீடு செய்வதற்கு கனிமொழிக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது? தனிப்பட்ட முறையில் கனிமொழி இதில் பங்குதாரராக இருக்கிறாரா? அல்லது கருணாநிதி குடும்பத்தின் இரண்டாவது கிளையின் பிரதிநிதியாக செயல்படுகிறாரா?

4) கலைஞர் டி.வி-யில் இயக்குநராக இருக்க மத்திய உள்துறை அமைச்சரகம் அனுமதி தராததையடுத்தே, கனிமொழியால் அதில் இயக்குநராக நீடிக்க முடியவில்லை. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனியார் நிறுவனத்தில் இயக்குநராக இருப்பதற்கு எந்த சட்டமும் தடை விதிக்கவில்லை. இந்த சூழ்நிலையில், தொலைத் தொடர்பு நிறுவனத்துடன் கனிமொழி தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியதற்கான காரணங்கள் என்ன?

5) சர்ச்சைக்குரிய 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டின் பயனாளியான டி.பி. ரியால்டி குழுமத்திடம் இருந்து கலைஞர் டி.வி. 214 கோடி ரூபாயை பெற்றிருக்கிறது. இந்தப் பணப் பரிமாற்றம் ஒரு தடவை நடைபெறவில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் பல முறை நடைபெற்று இருக்கின்றது. இந்தப் பணம் ஏன் வாங்கப்பட்டது? ராசாவால் விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணாக 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கப்பட்டதற்கு பிரதிபலனாகத் தான் இந்தப் பணம் கலைஞர் டி.வி-க்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இல்லையெனில், சமீபத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் டி.வி-யில் இவ்வளவு பெரிய தொகையை மும்பையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் ஏன் முதலீடு செய்தது?

6) 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிபிஐ வழக்கு பதிவு செய்தவுடன், ராசாவை சிபிஐ விசாரிக்க தொடங்கியவுடன், டி.பி. ரியால்டிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை "உத்திரவாதமற்ற கடன்"ஆக மாற்றி அதனை உடனடியாக ஒப்படைப்பு செய்ய கலைஞர் டி.வி. ஏன் திடீர் முடிவு எடுத்தது?

7) திடீரென்று இந்தக் "கடனை வட்டியுடன்" திருப்பிக் கொடுக்கும் அளவுக்கு கலைஞர் டி.வி-க்கு பணம் எங்கிருந்து கிடைத்தது?

8) ஜெனிக்ஸ் எக்சிம் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற போர்வையில், தன்னுடன் நெருங்கி பழகியவர்களின் நிறுவனமான துபாயைச் சேர்ந்த இடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமம், டி.பி. ரியால்டி நிறுவனத்தால் ஊக்குவிக்கப்பட்ட ஸ்வான் டெலிகாம் குழுமத்தில் இடம் பெற்றதற்கு கருணாநிதியின் விளக்கம் என்ன?

9) கருணாநிதி குடும்ப உறுப்பினர்களுக்கும், கருணாநிதிக்கு நெருக்கமாக உள்ளவர்களுக்கும் இடையே நடைபெற்ற பணப் பரிமாற்றத்தில், ஊடகங்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட பரிமாணங்கள் எல்லாம் எங்கு இருக்கின்றன?

10) "கனிமொழி என் மகள் என்பதற்காக நான் ஆதரவளிக்கவில்லை; கனிமொழி தி.மு.க-வின் விசுவாசமிக்க உண்மையான தொண்டர் என்ற முறையில்" ஆதரவளிப்பதாகத் தெரிவித்து, கட்சியை இழிவுபடுத்த தனக்கு விருப்பம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார் கருணாநிதி! இறுதி மூச்சுவரை கட்சிக்காக உழைக்கக் கூடியவர்கள், கட்சிக்காக தங்கள் உயிரைக்கூட கொடுக்கத் தயாராக இருக்கும் தொண்டர்கள் இது போன்ற பிதற்றலை நம்புவார்கள் என்று கருணாநிதி எதிர்பார்க்கிறாரா?

ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்பது உண்மையாக நடந்த ஒன்று. ராசாவுக்கு இதில் நிச்சயம் தொடர்பு இருக்கிறது. கலைஞர் டி.வி. மற்றும் கருணாநிதி உட்பட, கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இதன் மூலம் பயனடைந்துள்ளனர். இங்கு மட்டுமல்லாமல், வரி ஏய்ப்பின் புகலிடமாக விளங்கும் வெளிநாட்டு வங்கிகளிலும் கருணாநிதி குடும்பத்தினர் பணத்தை குவித்து வைத்து இருக்கின்றனர்.

கனிமொழியை மட்டும் குற்றப்பத்திரிகையில் சேர்த்ததன் மூலம் சி.பி.ஐ. தன்னுடைய பணியை சரிவர செய்யவில்லை என்று நான் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.

இந்த ஊழலில் கருணாநிதி குடும்பத்தினர் அனைவருக்கும் தொடர்பு உண்டு. அனைவரும் பயனடைந்துள்ளனர். நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்றால், 2ஜி ஊழலில் தொடர்புடைய கருணாநிதி குடும்பத்தினர் அனைவரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற வேண்டும்," என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

No comments: