Jul 24, 2011

ஆயுர்வேத வைத்திய அற்புதங்கள்.

சென்னை வருமான வரித் துறையில், ஒரு அதிகாரி எனக்கு நன்கு அறிமுகமானவர்... திடீரென அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. மாடி ஏறி, இறங்கினால் மூச்சிறைப்பு ஏற்படும்... உடல் அசதி எப்போதுமே காணப்படும்... அவ்வப்போது பிடித்து இழுப்பது போன்ற வலி நெஞ்சில் வரும்...  

சென்னையிலேயே மிகப் பிரபலமான மருத்துவமனையில் இவருக்கும், ஏ முதல் இசட் வரை அத்தனை பரிசோதனைகளையும் செய்து, ஒரு பெரிய தொகையைப் பார்த்த பின், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கிறது... அதற்கான நேரடி சிகிச்சைக்கு, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை - ஹீமோகுளோபின் அளவு சராசரிக்கு வரும் வரை - அது எத்தனை மாதமானாலும் மருத்துவமனைக்கு வர வேண்டும்... தவிர, மருந்து, மாத்திரைகள் சாப்பிட வேண்டும் என கூறி விட்டது.

நேரடி சிகிச்சைக்கு, இரண்டு வாரத்திற்கு ஒருமுறை 15 ஆயிரம் ரூபாய் சார்ஜ் செய்தனர். இரண்டு மாத சிகிச்சைக்கு பின்னும் உடல்நிலையில் பெரிய முன்னேற்றம் ஏதும் தெரியவில்லை. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு, 6.5 மில்லி கிராம் என்ற அளவிலேயே இருந்தது.

அதிகாரியின் உடல் நலக்குறைவு தொந்தரவை பொறுக்க
முடியாத பியூன், ஒரு நாள் அவரிடம் துணிந்து, "சார்... என் வீட்டு பக்கத்தில் ஒரு ஆயுர்வேத வைத்தியரு இருக்காரு... வயசானவரு, நல்ல அனுபவம் உள்ளவரு... எந்த நோயானாலும் குணப்படுத்தற கைராசி உள்ளவரு... அவர வந்து பாருங்க சார்...' எனக் கூறியுள்ளார்.
இதை கேட்ட அதிகாரி, "அட போங்க தம்பி... இவ்வளவு பெரிய ஆஸ்பத்திரியால - டாக்டர்களால குணப்படுத்த முடியாதத, ஒரு சாதாரண ஆயுர்வேத டாக்டரால எப்படி குணப்படுத்த முடியும்...' எனக் கூறி, அலட்சியம் செய்துள்ளார்.

பியூன் விடவேயில்லை... தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார். அவரின் வலியுறுத்தலுக்கும், அன்புக்கும் கட்டுப்பட்டு, அந்த வைத்தியரை சென்று சந்தித்திருக்கிறார். அதிகாரியின் நாடி பிடித்து பார்த்து, "நாட்டு நெல்லிக்காய் ஒன்றை எடுத்து, அதில் சிறு, சிறு துளைகளிட்டு, நல்ல தேனில் ஒரு இரவு ஊற வைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்... இரண்டே மாதத்தில் சரியாகி விடுவீர்கள்...' என்று வைத்தியர் கூறவும், அவநம்பிக்கையுடன் வெளியேறி இருக்கிறார் அதிகாரி.

அடுத்த முறை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரி செல்லும் போது, அலோபதி டாக்டரிடம், "நெல்லிக்காய் சாப்பிடலாமா?' என கேட்டு இருக்கிறார். "நாங்கள் அளிக்கும் சிகிச்சைக்கும், நெல்லிக்காய்க்கும் எந்த தொடர்பும் கிடையாது. நெல்லிக்காய் சாப்பிடுவதால் இந்த சிகிச்சைக்கு எந்த பாதிப்பும் இல்லை...' எனக் கூறவே, நெல்லிக்காய் சாப்பிட ஆரம்பித்திருக்கிறார் அதிகாரி.  

இரண்டு வாரம் இப்படி சாப்பிட்ட பின், அடுத்த சிகிச்சைக்காக ஆஸ்பத்திரி சென்ற போது, ஹீமோகுளோபின் அளவு, 6.5 மி.கி.,லிருந்து, 7.5 மி.கி., ஆக உயர்ந்திருப்பதை அறிந்து, டாக்டர்கள், தாங்கள் அளிக்கும் சிகிச்சையால் தான் இது நடந்திருப்பதாக கூற, அதிகாரிக்கோ நெல்லிக்காய் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

அடுத்த முறை சிகிச்சையின் போது ஹீமோகுளோபின் அளவு, 8.5 மி.கி., ஆக அதிகரித்து இருந்திருக்கிறது. இதற்கு அடுத்த முறை, 9.5 மி.கி., ஆகி இருக்கிறது. ஆஸ்பத்திரி செல்வதை நிறுத்தினார் அதிகாரி. நெல்லிக்காய் சிகிச்சையே சிறந்தது என்பதை உணர்ந்தார். இப்போது, 15 மி.கி., அளவு ஹீமோகுளோபின் உயர்ந்து விட்டது. மிகத் தெம்பாக இருக்கிறார். களைப்பு, மூச்சு வாங்கல், நெஞ்சு இழுப்பு ஆகிய அனைத்தும் ஓடிப் போய் விட்டது.இதை அவர் என்னிடம் கூறி, மிக சந்தோஷப்பட்டார். என் பியூனுக்கு ரொம்பவும் கடமைபட்டுள்ளதாக கூறி மனம் நெகிழ்ந்தார்.

இப்போதெல்லாம் நான் கூட அதே வைத்தியரிடம் தான் செல்கிறேன் என முடித்தார். வேறு இருவர், இரு வேறு சந்தர்ப்பங்களில் ஆயுர்வேதம், பரம்பரை வைத்தியம் பற்றி கூறியது அப்போது என் நினைவில் வந்தது. ஒருவரது மனைவி, "யூரினரி இன்பெக்ஷனால்' மிகுந்த தொல்லைக்குள்ளாகி இருக்கிறார். எட்டு மாதங்களாக அலோபதி சிகிச்சை மேற்கொண்டும் பலன் ஏதும் இல்லை. அவருக்கு ஆயுர்வேதம் பற்றி யாரோ சொல்ல, அந்த சிகிச்சையை எடுத்துள்ளார். அது: நெருஞ்சி முள்ளை தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்து, சூடு ஆறிய பின் பருக வேண்டும்... அவ்வளவே! என்ன ஆச்சரியம்... ஒரு வாரத்திலேயே பலன் தெரிய ஆரம்பித்துள்ளது. நான்காவது வாரம் நோய் தொந்தரவு போய் விட்டது. 

அடுத்து, ஒரு நண்பர் நடத்தி வரும் நிறுவனத்தில், உயர் அதிகாரியாக பணியாற்றுபவருக்கு முதுகு தண்டில் எல் 3, எல் 4 ஆகிய இடங்களில் ஓயாத வலி... நிற்க முடியாது, நடக்க முடியாது. காலையில் எழுந்த பின், ஒன்றரை மணி நேரம் பொறுத்து தான் எந்த வேலையும் செய்ய முடியும். "ஆபரேஷன் ஒன்றே இதற்கு தீர்வு...' என, அலோபதி மருத்துவத்தில் கூறி விட்டனர். ஆபரேஷனுக்கு பயந்து அவர் வலி நிவாரண மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு காலம் கடத்தி வந்தார்.

இதற்கிடையே மைசூரில் இருந்து, 40-50 கி.மீ., தூரத்தில் உள்ள கே.எஸ்.புரம் என்ற கிராமத்தில் பரம்பரை எலும்பு வைத்தியர் ஒருவர் இருப்பதை கேள்விப்பட்டு, அவரை காணச் சென்றுள்ளார். இவரது, "எக்ஸ்ரே'யை பார்த்த வைத்தியர், குப்புறப் படுக்கச் சொல்லி, தன் கால் முட்டியால் குறிப்பிட்ட இடத்தில் வைத்து அழுத்தி, அதே நேரத்தில் இடுப்பின் இரு பக்கங்களிலும் கை வைத்து, கீழ்பக்கமாக இழுக்க, "லொடக்' என்று ஒரு சப்தம் வந்திருக்கிறது.உடனேயே வலி குறைந்த உணர்வு ஏற்பட்டிருக்கிறது. பின்னர், 13 நாட்களுக்கு சூரணம் மற்றும் எண்ணை ஆகியவை கொடுத்து அனுப்பி இருக்கிறார். இப்போது, அந்த நண்பருக்கு முன் வருவது போன்ற வலியோ, படுக்கையில் இருந்து எழுந்த பின், ஒன்றரை மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலையோ இல்லை என்கிறார்.

ஆங்கில வைத்தியத்தில் இல்லாத பல சிகிச்சைகள், நம் நாட்டு வைத்திய முறைகளில் இருக்கின்றன. அவற்றை முறைப்படி பதிவு செய்யாமலும், பிறருக்கு கற்றுக் கொடுக்காமலும், ரகசியம் காத்ததாலும், சில ஆங்கில மருத்துவ முறைகள் உடனடி பலன் அளிப்பதாலும், நம் மக்களுக்கு நம் சிகிச்சை முறையின் அருமை, பெருமை தெரியாமல் போய் விட்டது. இனி, நம் சிகிச்சை முறையையும் நீங்கள் பரிசோதித்து பார்க்கலாமே!
நன்றி:தினமலர்.

No comments: