Jul 31, 2012

முரட்டுபொண்டாட்டியும் சுருட்டுபாயும்.

ஈ.வெ.ரா.பெரியார் அவர்கள் தனது அரசியல் சொற்பொழிவில், அவ்வப்போது குட்டிக் கதைகள் சொல்வார். பாமர மக்களுக்கு விஷயத்தை எளிதில் புரிய வைக்க, அப்படி அவர் சொன்ன ஒரு குட்டிக் கதை தான் இந்த முரட்டுபொண்டாட்டியும் சுருட்டுபாயும் என்ற கதை இதோ:

காங்கிரசும், முஸ்லிம் லீக்கும் எதிர் எதிராக நிற்பதால், இந்தியா வந்த பிரிட்டிஷ் தூதுக் குழுவால், ஒரு பயனும் இல்லாமல் போய் விட்டது. இது எப்படி இருக்கிறது என்றால், ஒருவனுக்கு ஒரு மனைவி இருந்தாள். அவள், மகா முரட்டு சுபாவம் கொண்டவள். கணவன், அவளை பக்கத்தில் கொண்டு வந்து படுக்க வைக்க வேண்டுமானால், கையைப் பிடித்து இழுத்து வந்து தான், உட்கார வைக்க வேண்டும்.

இந்த நிலையில் உள்ள கணவனுக்கு, படுப்பதற்கு ஒரே ஒரு பாய்தான் உண்டு. அதுவும், சுருட்டைப் பாய். அது சுருட்டிக் கொண்டு, உருண்டையாய் சுற்றி வைத்த பாய் போல சுருண்டு இருக்கும். அதை விரிக்க வேண்டுமானால், ஒரு பக்கம் காலால் மிதித்து, இரண்டு கைகளாலும் விரித்துக் கொண்டு போய் உடனே உட்கார்ந்து அல்லது படுத்துக் கொள்ள வேண்டும். இந்த நிலையில், கணவன் என்ன செய்வான்?

பாயை விரிக்க ஆரம்பித்தால், மனைவி எட்டிப் போய் உட்கார்ந்து கொள்கிறாள்; மனைவியை இழுத்து வரப் போனால், பழையபடி பாய் சுருண்டு விடுகிறது. ஆகவே, இரவு முழுவதும், கணவன் பாயை விரிப்பதும், ஓடிப்போய் மனைவியை இழுப்பதும், அதற்குள் பாய் சுருண்டு விடுவதால், அதை விடுவிக்க ஆரம்பித்தவுடன், மனைவி ஓடிப்போவதையும் கண்டு, மீண்டும் அவளை இழுக்கப் போவதுமாக, நடமாடிக் கொண்டிருந்ததால், பொழுது விடிந்ததும், தன் முயற்சி பயனளிக்காது போகவே, அவன் வேலைக்குப் போய் விடுவது வழக்கம்.

அது போலவே காங்கிரசும், முஸ்லிம் லீக்கும், பிரிட்டிஷ் தூதுக் குழுவிற்கு முரட்டுப் பெண்டாட்டியும், சுருட்டுப் பாயுமாக இருந்து உருப்படியான விஷயம் எதுவும் நடைபெற முடியாமல் போனதால், விடிந்ததும் தூதுக்குழுவினர் ஊருக்கு கிளம்பிப் போய் விட்டனர்.
குடியரசு 27-8-46.

Jul 27, 2012

எம்.ஜி.ஆரை கட்டாயபடுத்திய கல்நெஞ்சக்காரர் ராஜீவ் காந்தி. புலமைப்பித்தன்


ராஜீவ் காந்தி திட்டமிட்டவாறே சென்னையில் கத்திப்பாரா அருகில் இந்தியா- இலங்கை ஒப்பந்தத்துக்கான பாராட்டு விழா நடந்தது.
அந்தப் பாராட்டு விழாவில் நாவலர் நெடுஞ்செழியன்தான் கலந்துகொள்வதாகஏற்பாடாகி இருந்தது. சுவரொட்டிகள் எல்லாம் தயாராக இருந்தன.ஆனால் புரட்சித் தலைவர் கட்டாயம் அந்த விழாவில் கலந்துகொள்ளவேண்டும்என்று வற்புறுத்தப்பட்டார். வேறு வழியில்லாமல் அவர் அந்த விழாவில்கலந்துகொண்டார்.

நடக்க இயலாமல் மேடையில் ஏறிச் சென்றார். புரட்சித் தலைவரது வலது கையைவீங்கிப் போய் வலி எடுத்திருந்த கையை
பலவந்தமாக, ‘பாரதப் பிரதமர்தூக்கிப் பிடித்தார். எனக்கு அந்தக் காட்சியைப் பார்த்தபோது இவ்வளவு கல்நெஞ்சக்கார மனிதனின்
பெயருக்குப் பின்னால் காந்தி என்று சேர்த்து வைத்திருக்கிறார்களே என்றகடுமையான கோபம்தான் வந்தது.

என்ன செய்ய... இந்தியத் துணைக் கண்டத்தின் சர்வஅதிகாரங்களையும் கையில் வைத்திருப்ப வராயிற்றே... மூன்றாம் தேதியும் மிகுதியான களைப்பில், வலியில் தலைவர் அமெரிக்கா செல்ல இயலவில்லை. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தன்னுடன் அந்த பாராட்டு விழாவில்
கலந்துகொள்ள வேண்டும் என்று இராஜீவ் நினைத்தது கூட ஒருவகையில் அவருக்குபாதுகாப்பு கருதித்தான் இருக்கவேண்டும்.

அதாவது நாளைக்கு இந்த இந்திய- இலங்கை ஒப்பந்தத்தால் விளையப்போகும்பழிக்கு இவரும் காரணமாக இருந்தார் என்று காட்டுவதற்காகக் கூட இருக்கலாம். நான்காம் தேதி மாலையில் கலைவாணர் அரங்கில் இசைப்பேரறிஞர் பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் இசை வெளியீட்டு விழா நடந்தது. தட்ட முடியாத நிலையில்தலைவர் அந்த நிகழ்வில் கலந்துகொண்டார். அப்போது கூட மிகுந்தசோர்வாகத்தான் இருந்தார்.
இருபத்து இரண்டு ஆண்டு காலம் நான் அவருக்கு நிழலாக இருந்து பழகிய நாட்களில்; பார்த்த நாட்களில் இப்படி நான் அவரை பார்த்ததே இல்லை.

கூட்டங்களுக்கு அவர் வரும்போது துள்ளிக் குதித்து ஓடிவருவாரே, இன்று ஏன்இப்படி என்று நான் துடிதுடித்துப் போயிருந்தேன். வெளியிலே வந்து காரிலே ஏறினார்.அமைச்சர்கள் பலரும் இடதுபுறமாக நின்றுகொண்டிருந்தார்கள். நான் அவர்கள் அருகே நின்றேன். என்னைப்பார்த்துவிட்டு கார் கண்ணாடியை இறக்கினார்.
என் கையைப் பிடித்து தன் நெஞ்சிலே வைத்துக் கொண்டு; என்னை ஒருவிதமானஅர்த்தத்தோடு பார்த்தார்.

‘‘நாளை நீங்கள் அமெரிக்கா செல்கிறீர்கள். காலையில் நான் குடும்பத்தோடுதோட்டத்துக்கு வருகிறேன். நாங்கள் பார்க்கவேண்டும்’’ என்றேன்.தலையை அசைத்து, பேச இயலாத நிலையிலும் வாங்கஎன்றார்.5 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நான், என் மனைவி, கோவையைச் சேர்ந்தஉறவினர் ஓர் அம்மையார் ஆகிய மூன்று பேரும் சென்றோம்.கூட்டத்தால் தோட்டம் நிரம்பி வழிந்தது.

நாவலர் உட்பட அமைச்சர்கள், தொழிலதிபர்கள், கழக முன்னணியினர் என்றுஏராளமானோர் திரண்டிருந்தார்கள். நாங்கள் சென்று சேர்ந்த ஒரு பத்து நிமிடத்தில், முதல் தளத்தில் இருந்ததலைவர், இன்டர்காம் வழியாக தனது உதவியாளர் சம்பத்திடம் தொடர்புகொண்டு,
யார் யார் வந்திருக்கிறார்கள்?’ என்று கேட்டார்.நாவலரில் தொடங்கி மற்ற அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பெயர்களை எல்லாம்
சொல்லிக் கொண்டே வந்தார். பத்தாவது பெயராக என் பெயரைச் சொன்னார்.

புலவர் தன் குடும்பத்தோடு வந்திருக்கிறார் என்று சம்பத் சொன்னார்.
உடனே அவர்களை மேலே அனுப்புஎன்றார் தலைவர்.
நாங்கள் மூவரும் மின்தூக்கி அருகே சென்றோம். எங்களோடு சேர்ந்து
இன்னொரு அமைச்சரும் வந்தார்.

அவரைப் பார்த்த மாணிக்கம், (தலைவருக்கு உதவியாக இருந்த தம்பி) நீங்கள்இப்போது வரவேண்டாம். அண்ணனை மட்டும்தான் வரச்சொல்லி இருக்கிறார்என்றுசொல்லிவிட்டு, எங்களை முதல் தளத்தில் தலைவரின் அறைக்கு அழைத்துச்சென்றார்.

சாதாரணமான ஒரு கட்டில், அதில் ஒரு படுக்கை. அவரைப் பார்த்தவுடன் நான்பதறி நின்றேன். என் மனைவியும், உடன் வந்த அம்மையாரும் சோபாவில்அமர்ந்தார்கள். நானும் சோபாவில் அமரப் போனேன். என்னைப் பிடித்துஇழுத்து தனது பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார் தலைவர்.அவர் கட்டிலில் சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்தார். அவரை ஒட்டி நான்உட்கார்ந்து-கொண்டேன்.

தொளதொளவென்று ஒரு பழைய சட்டை, கட்டம் போட்ட ஒரு லுங்கி. நான் அவரதுகையைப் பிடித்தேன். இரண்டு புறங்கைகளும் நீலம் பூத்து மிகப்பெரிய அளவில்வீங்கியிருந்தன. லுங்கியை விலக்கி பாதங்களைப் பார்த்தேன். பாதங்களும்மிகவும் வீங்கிப் போயிருந்தன.

நான் கைகளைப் பார்ப்பதையும், பாதங்களைப் பார்ப்பதையும் கவனித்துக்கொண்டே இருந்தார். சிற்றுண்டி சாப்பிட்டீர்களா?’ என்று கேட்டேன்.இல்லைஎன்று தலையை ஆட்டினார்.

மணி பத்துக்கும் மேலே ஆகிறது. இன்னும் சாப்பிடவில்லையா?’ என்றேன்.விரக்தியோடு கையால் சைகை காட்டினார். மாணிக்கத்தை நான் அழைத்து, இன்னும்ஏன் சிற்றுணவு தரவில்லை என்று சத்தம் போட்டேன்.


மாணிக்கத்தைப் பார்த்து தலைவர் கையை ஆட்டி வெளியே போகுமாறு சொன்னார்.என்னைத் தன் அருகே அழைத்து என் கையை அன்போடு பற்றிக் கொண்டு,‘நான் அமெரிக்கா சென்று திரும்பியதும் உங்களுக்கு ஏதாவது செய்கிறேன்என்று மிகவும் கஷ்டப்பட்டு சொன்னார்.

எனக்கு நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். என்னைப் பற்றி நீங்கள்
கவலைப்படாதீர்கள்! கோவையில் இருந்து அனாதையாக வந்த என்னை அன்போடுஆதரித்து ஆளாக்கி விட்டிருக்கிறீர்கள்.நான் எந்தக் குறையும் இல்லாமல்இருக்கிறேன்என்று நான் சொல்ல... இடைமறித்து,‘இல்லை. நான் ஏதாவது செய்யவேண்டும்என்றார்.
அப்படியானால் ஒன்று செய்யுங்கள்என்றேன்.என்ன?’ என்றார்.

நீங்கள் தைரியமாக நம்பிக்கையோடு அமெரிக்கா சென்று நலமோடு திரும்பிவாருங்கள்! அந்த உதவி ஒன்று மட்டும் எனக்குச் செய்யுங்கள். அதுபோதும்என்றேன்.
அதைக் கேட்ட அவர், குழந்தை போல அழத் தொடங்கிவிட்டார். என்னால்தாங்கமுடியவில்லை. நான் உறைந்துபோனேன். அவரது கண்களில் கண்ணீர் தாரைதாரையாய் வழிந்தது. நான் என் கைக்குட்டையால் அவரது கண்ணீரைத் துடைத்தேன்.


ஊர் உலகத்தில் இருக்கும் எத்தனையோ ஆயிரம் ஆயிரம் பேருக்கு, லட்சோபலட்சம் பேருக்கு நீங்கள் கண்ணீரைத் துடைத்திருக்கிறீர்கள். உங்கள்கண்ணில் இப்படி கண்ணீர் வரலாமா?’

எனது துக்கம் தொண்டையை அடைக்கத் தழுதழுத்த குரலில் கேட்டேன்.என் தோளோடு அவரை சேர்த்து தாங்கிக்கொண்டேன். என் மனைவியும், உடன்வந்த அம்மையாரும் இதைப் பார்த்து அழுதார்கள்.

அரசனிடம் ஆண்டி முறையிட்டு அழலாம்... இந்த ஆண்டியிடம் அந்த அரசன் அழுதானே..!அந்தக் கொடுமையை என் கண்களால் காண நேர்ந்ததே என்று இந்தக் கனம் வரை என்இதயம் சுடுகிறது. அதை நினைக்கும்போதெல்லாம் நிலைகுலைந்து போகிறேன்.


பஞ்சைப் பராரியாய் சென்னைக்கு ஓடிவந்த என்னை, பாட்டுக்கு மேல் பாட்டெழுதவைத்து பணத்துக்குமேல் பணம்... நான் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும்கொடுத்தார்.பதவிக்குமேல் பதவி, தன் மனதுக்குள் ரகசியமாக வைத்துக் கொண்டு பதவியில்
நியமித்துவிட்டு என்னிடம் தெரிவித்தார்.

நான் சண்டை போட்டேன்;அவர் சமாதானம் செய்தார். கொள்கை அடிப்படையில் நான் விடாப்பிடியாக இருந்து அவருக்கு தொடர்ந்துதொல்லை கொடுத்தேன். பலமுறை அவரை நெருக்கடிக்கு ஆளாக்கினேன். அத்தனையையும் அந்த மாமனிதர்தாங்கிக்கொண்டு என்னையும் விடாமல் தாங்கிப் பிடித்தார்.

என்னைப் பற்றி பல பேர் அவரிடம் புகார் செய்திருக்கிறார்கள். நான்
கூட்டங்களில் பேசிய பேச்சுக்களை சொல்லி எங்களைப் பிரிக்கப்
பார்த்திருக்கிறார்கள். புகார் சொல்லும்போதே, ‘யார், புலவர்தானே இப்படிப் பேசினார். அவர்எனக்காக இந்தக் கட்சியில் இருக்கிறார். நீங்கள் உங்கள் வேலையைப்பாருங்கள்என்று புகார் சொன்னவர்களிடமே கோபித்துக் கொண்டிருக்கிறார்.


எங்கேயோ அலைந்து வறுமையில் கிடந்த என்னை, காலம் அந்த கருணைத் தேவனின்கைகளில் அடைக்கலமாகக் கொடுத்து வைத்தது.என்னை மேலவையில் உயர்ந்த இடத்தில் உட்கார வைத்தார். நான் அவைக்குவரும்போது முதலமைச்சராக இருந்த அவரே எழுந்து நின்றார். ஒரு பஞ்சாலையில்துப்புரவுத் தொழிலாளியாக இருந்த நான், கற்பனையில் காண இயலாத உயரத்தை, பெருமையை எனக்கு என் தலைவன் வழங்கினான்.

அது என் மேலவைத் துணைத் தலைவர் பதவி முடிந்துபோயிருந்த நேரம்...தலைவர் மூகாம்பிகை கோயிலுக்கு இயக்குநர் சங்கர், அமைச்சர்கள்பொன்னையன், ஹண்டே ஆகியோருடன் பயணம் செய்துகொண்டிருக்கிறார்.பயணத்தில்,
இந்த பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவில்என்ற பாட்டை டேப்
ரெக்கார்டரில் போட்டுக் காட்டுகிறார்.

இந்தப் பாட்டை யார் எழுதியது சொல்லுங்கள்?’ என்று அவர்களைப் பார்த்து கேட்கிறார்.டைரக்டர் சார் நீங்க சொல்லாதீங்கஎன்றும் சொன்னார்.அமைச்சர்களுக்குத் தெரியவில்லை.

நம்ம புலவர் எழுதின பாட்டு. அவரை நான் மிக உயரமான இடத்தில்
உட்காரவைத்துப் பார்க்க ஆசைப்படுகிறேன். ஆனால் இயலவில்லை. நம்கட்டுப்பாட்டில் அவர் நிற்க மாட்டார். முரட்டுத் தனமானவர். ஆனால் கள்ளம்கபடம் -சூது- வாது அவருக்குத் தெரியாது. என் வாழ்நாளில் அவரைப்போல உண்மையானவிசுவாசியை நான் பார்க்கவில்லைஎன்று சொல்லியிருக்கிறார்.இதை, இயக்குநர் சங்கர் என்னிடம் சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டார்.

இயக்குனர் சங்கர் அவர்கள்தான் என்னை என் தலைவரிடம் சேர்த்தவர்.டிசம்பர் மாதம் 15-ம் தேதி வாக்கில் நான் தோட்டத்தில் தலைவரைச் சென்றுசந்தித்தேன். நீண்ட நேரம் பேச இயலாத நிலையில் என்னோடு பேசிக்கொண்டிருந்தார்.

பிறகு ‘22 ஆம் தேதி என்னை வந்து பாருங்கள்என்று சொல்லிவிட்டு,
சம்பத்தைப் பார்த்து, ‘புலவர் மட்டும் அன்று வரட்டும்என்றார்.
அன்று நான் அவரைப் பார்க்க இயலவில்லை. இனி எப்போதும் பார்க்க
இயலாமற்போகும் என்று எனக்கு எப்படித் தெரியும்?காலத்துக்குக்  கண்ணும் இல்லை, கருணை மனமும் இல்லை...எப்படிச் சொல்வேன்... எப்படிச் சொல்வேன்..?
நன்றி: புலவர் புலமைப்பித்தன் (தமிழக அரசியல்)

Jul 20, 2012

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை மிரட்டிய ராஜீவ்.அதிர வைக்கும் தகவல்கள்

இந்திய இலங்கை ஒப்பந்தம் என்கிற, தமிழர் நலனுக்காக செய்யப்பட்ட அந்த ஒப்பந்தத்தில் இராஜீவ் காந்தி மறைத்து வைத்திருந்தது தமிழர்களுக்கு எதிரான கொலைக் கருவியைத்தான்! ‘‘இப்போது இலங்கை இந்தியாவுக்கு எதிராகத் திரும்பிவிட்டதே; இலங்கை எதிராகத் திரும்பினால் கூட பரவாயில்லை. சீனாவுக்கு ஆதரவாகச் சேர்ந்துவிட்டது’’ என்று ஆற்றமாட்டாமல் அலறி நிற்கிறது இந்தியா.

அதற்கு முக்கியக் காரணம் திரிகோண மலைதான். அந்தத் திரிகோணமலைக்காகத்தான் இராஜீவ் காந்தி இந்திய இலங்கை ஒப்பந்தம் செய்துகொண்டார்.

ஜெயவர்த்தனேவுக்கு இராஜீவ் காந்தி எழுதிய ஆங்கிலக் கடிதம். அந்தக் கடிதத்தில் காணப்பட்ட நோக்கம் என்ன? அதில் அடங்கியுள்ள ரகசியம் என்ன? அந்தக் கடிதத்தில் காணப்படும் செய்திகளை நான் சுருக்கமாகக் குறிப்பிடுகிறேன்.

1. திரிகோணமலை அல்லது வேறு எந்த இலங்கைத் துறைமுகத்தையும் எந்த தேசத்தினுடைய இராணுவத் தளமாக, இந்தியாவின் நலனுக்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.
2. திரிகோணமலையில் உள்ள எண்ணெய் கிடங்குகளை இந்தியாவும், இலங்கையும் ஒன்றிணைந்து தம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவேண்டும்.
3. இலங்கை மற்ற நாடுகளுடன் சேர்ந்து அமைத்துள்ள ஒளிபரப்பு நிலையங்கள்... இலங்கையின் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மட்டுமே இருக்கவேண்டும். இராணுவப் பயன்பாட்டுக்கோ உளவுத்துறைப் பயன்பாட்டுக்கோ அமைக்கக் கூடாது.
4. இந்தியாவில் இருக்கும் இலங்கைக் குடிமக்கள் பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபடுவர்களையும், விடுதலை கோருபவர்களையும், பிரிவினைவாதம் பேசுபவர்களையும் இந்தியா நாடு கடத்தும்.
5. அத்தோடு நில்லாமல், இலங்கை இராணுவத்துக்கு இந்தியா பயிற்சி அளிப்பதோடு தேவைப்பட்ட ஆயுதங்களையும் வழங்கும்.

இராஜீவ் காந்தியின் இரட்டை வேடத்தில் இந்த வேடமும் ஒன்று! இந்த விஷமமான ஒப்பந்தத்தை 1987ம் ஆண்டு தம்பி பிரபாகரன் கண்டித்து அறிக்கை விட்டார். நானும் அதைக் கண்டித்து அறிக்கை விட்டேன். எங்கள் இருவரின் அறிக்கைகளும் 1987 ஆகஸ்டு மாதம் 3 ஆம் தேதி மாலை முரசு இதழில் வெளிவந்தன. தம்பியின் அறிக்கை இரண்டாம் பக்கமும், எனது அறிக்கை மூன்றாம் பக்கமும் வெளிவந்தன.

இந்த அறிக்கைகளை நாங்கள் அனுப்பி வைத்தது ஆகஸ்டு முதல் தேதி. வெளியானதோ மூன்றாம் தேதி. அதற்கிடையில் 2-ம் தேதி இந்திய இலங்கை ஒப்பந்தம் செய்துகொண்டதற்காக இராஜீவுக்கு பாராட்டு விழா நாடகம் சென்னையில் நடந்தது.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வலுக்கட்டாயமாக அந்த விழாவில் பங்கேற்க நிர்பந்திக்கப்பட்டார்.

அந்த ஒப்பந்தத்தை மனதளவில் புரட்சித் தலைவர் ஒப்புக்கொள்ளவில்லை. புரட்சித் தலைவரைச் சந்தித்து இந்த ஒப்பந்தம் பற்றிச் சொன்னபோது, பேச இயலாத நிலையிலும் அதற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தத்தை எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொள்வதாக இருந்தால் மட்டுமே அவர் முதலமைச்சராகத் தொடரலாம். அவர் இயங்க முடியாத நிலையில் இருப்பதால், வேறு யாரேனும் ஒருவரை அந்தப் பதவிக்கு நியமித்துவிட்டு எம்.ஜி.ஆர். பதவியிலிருந்து விலகிக்கொள்ளட்டும் என்று அறிவுறுத்தப்பட்டார்.

இது அறிவுரை அல்ல... டெல்லி ஏகாதிபத்தியதின் ஆணை! அந்த மாமனிதர் மரணத்தை நோக்கி வேகவேகமாக நடைபோட்டுக் கொண்டிருந்த நேரம். என் ஆருயிர் தலைவர் தன் வாழ்நாட்களை எண்ணிக் கொண்டிருந்த நேரம். எதையும் செய்ய இயலாத கையறு நிலை.

நினைத்ததை முடிக்கும் என் நேசத் தலைவனுக்கு நேர்ந்த கதியை நினைத்து இன்றும் நான் நெஞ்சு நொறுங்கிவிடுகிறேன். 1987 ஜூலை மாதம் 31- ம் நாள் மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட இருந்தவரை... போகக் கூடாது என்று டெல்லி கட்டளை இட்டது.

ஆகஸ்டு இரண்டாம் தேதி பாராட்டு விழாவில் கலந்துகொண்டுவிட்டுதான் அமெரிக்கா செல்லவேண்டும் என்று. கைகளும் கால்களும் வீங்கிப் போய் பேசவும் திறனற்று இருந்த என் காவிய நாயகனை அமெரிக்கா செல்லாமல் கட்டிப்போட்டார் இராஜீவ் காந்தி.

ஜூலை 31 ம் தேதி தோட்டத்தில் இருந்து மாலை 5 மணி அளவில் விமான நிலையத்துக்கு புறப்பட்டு, செயின்ட் தாமஸ் மவுன்ட் வந்துகொண்டிருந்தவரை, ‘அமெரிக்கா செல்லக் கூடாது’ என்று டெல்லி தடுத்துவிடவே... தோட்டத்துக்கு திரும்பிப் போகிறார்.

நான் ஆகஸ்டு 3-ம் தேதி இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்கு எதிராக விட்ட அறிக்கைக்கு எதிர் வினையாக... என் அரசவைக் கவிஞர் பதவியைத் தலைவர் மனமில்லாமல் நெருக்கடிக்காக பறிக்க நேர்ந்தது.ஆகஸ்டு நான்காம் தேதியோடு என் அரசவைக் கவிஞர் பதவி முடிந்துபோனது. பதவிக்காக எந்தக் காலத்திலும் நான் என் கொள்கையை, இலட்சியத்தை விட்டுக் கொடுத்ததில்லை.

ஒரு நாற்காலிக்காக ஒன்றரை லட்சம் தமிழ் உறவுகளை கொன்று குவிக்கத் துணை நின்ற துரோகச் சாதியைச் சேர்ந்தவன் அல்ல நான். திரிகோணமலையை மனதிலே வைத்து இந்தியாவின் பாதுகாப்பு நலனுக்கான மட்டும் செய்துகொண்ட ஒப்பந்தம் ஒருவகையில் ஈழத் தமிழர்களுக்கான அடிமை ஒப்பந்தமாகத்தான் இருந்தது.
புலவர் புலமைப்பித்தன் (தமிழக அரசியல்)

Jul 8, 2012

இந்தியக் குடியரசுக்கு “தேசிய மொழி” கிடையாது.

இந்தியக் குடியரசுக்கு “தேசிய மொழி” கிடையாது.

இந்திய அரசியலமைப்புச் சட்டமும், பிற சட்டங்களும் தேசிய மொழி என்று ஒன்றை வரையறுக்க வில்லை. அலுவல் மொழிகள் மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன. தேசிய அளவில் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி அலுவல் மொழியாகவும், ஆங்கிலம் கூடுதல் அலுவல் மொழியாகவும் உள்ளன. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் தத்தமது அலுவல் மொழிகளை தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றுள்ளன. இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மொழிகள் சில நேரங்களில் தவறுதலாக “தேசிய மொழிகள்” என்றும் வழங்கப்படுகின்றன. இது தேசிய மொழி அரசாணை படி தவறான ஒன்றாகும்.

முன்ஷி-அய்யங்கார் உடன்பாடு அல்லது முன்ஷி-அய்யங்கார் வாய்ப்பாடு (Munshi-Ayyangar Formula) இந்திய ஆட்சிமொழிக் கொள்கையை வரையறுத்த ஒரு ஒப்பந்தமாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியமுதலாம் நாடாளுமன்றத்தில் இந்தி ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், இரு தரப்பினரும் தங்கள் கொள்கைகளை சிறிது விட்டு கொடுத்து சமரசம் செய்து கொண்டனர்.கே. எம். முன்ஷி – கோபாலசாமி அய்யங்கார் ஆகியோரால் வடிவமைக்கப் பட்ட இவ்வொப்பந்தத்தால் இந்தியும்ஆங்கிலமும் இந்தியக் குடியரசின் ஆட்சி மொழிகளாயின.

முன்ஷி-அய்யங்கார் உடன்பாட்டின்படி அரசியலமைப்புச் சட்டத்தின் பதினேழாவது பிரிவு இயற்றப் பட்டது. இந்தியக் குடியரசுக்கு தனியாக தேசிய மொழி எதுவும் குறிப்பிடப் படவில்லை. மாறாக ஆட்சி/அலுவல் மொழிகள்மட்டுமே வரையறுக்கப் பட்டன. புதிய ஆட்சி மொழிக் கொள்கையின் முக்கிய அம்சங்கள்
இந்தியாவின் அலுவல்மொழிகள் (official languages of the Indian Union) அலுவல் பணிகளுக்கு முதன்மையாகஇந்தியும் கூடுதலாக ஆங்கிலமும் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் மாநிலங்கள் தங்களுடைய அலுவல் பணிகளுக்கான மொழியை தாங்களே சட்டமாக்கிக் கொள்ளலாம்.

இந்திய அரசியலமைப்போ அல்லது எந்தவொரு இந்தியச் சட்டமோ தேசிய மொழி என்று எதனையும் வரையறுக்கவில்லை.

மத்திய, அலுவல் மொழிகள்
இந்தி • ஆங்கிலம்.

மாநில அலுவல் மொழிகள்
• தமிழ் •அசாமியம் • வங்காளம் • போடோயம் • சட்டிஸ்காரி • தோக்ரியம் • ஆங்கிலம் • காரோ •குஜராத்தியம் • இந்தி • கன்னடம் • கசுமீரியம் • காசி • கொக்பொரோக் • கொங்கணியம் •மைத்திலியம் • மலையாளம் • மணிப்புரியம் • மராத்தி • மிசோ • நேபாளியம் • ஒரியம் .• பஞ்சாபியம் • சமஸ்கிருதம் • சந்தாளியம் • சிந்தி • தெலுங்கு • உருது • மராத்தி....

நன்றி !மு.கா.ச. ஓம் பிரகாஷ்.