M.R.RADHA |
அவங்களாக் கொடுத்தா தொட்டுச் சேவிச்சிக்கிற அளவுக்குத்தான் கொடுக்கப் போறாங்க அதுக்கு மேலேயா கொடுக்கப் போறாங்க?ன்னு தோணுச்சி. அந்தச் சமயம் எனக்கென்னவோ அதிலேயே குளிச்சி எழுந்தா தேவலைன்னு பட்டுது. அக்கம் பக்கம் பார்த்து, யாருக்கும் தெரியாம அதிலே பாதியை வழிச்செடுத்து மடியிலே வைச்சுக் கட்டிக்கிட்டேன்,
என் போதாத காலம், உடனே அதைக் கவனிச்சிவிட்ட அர்ச்சகர்களிலே ஒருத்தர், ‘இங்கே வைச்ச சந்தனத்திலே பாதியை எவனோ திருடி எடுத்து வைச்சிக்கிட்டான்; இந்த இடத்தை விட்டு வெளியே போறதுக்கு முந்தி அவனைப் பிடிக்கனும். எல்லாக் கதவையும் சாத்துங்க!’ன்னி கத்த ஆரம்பிச்சிட்டார். ‘இது என்ன வம்பு?ன்னு நான் மெல்ல நழுவினேன்.
அதுக்குள்ளே எல்லாக் கதவையும் ஒண்ணொண்ணா சாத்த ஆரம்பிச்சிட்டாங்க. ’அகப்படுக்கிட்டா அவ்வளவுதான்’னு, ‘தப்பினோம், பிழைச்சொம்’னு தலைதெறிக்க மலையடிவாரத்துக்கு ஓட்டமும் நடையுமா வந்துட்டேன்...”
”சந்தனம்...?”
”விடுவேனா அது என் மடியிலேயே இருந்தது. ‘ஸ்ரீ பாதசாகரம்’னு அந்தக் கலவைச் சந்தனத்துக்குப் பேராம். பச்சை கற்பூரம். அத்தர், அது இதுன்னு என்னவெல்லாமோ அதிலே சேர்த்திருந்தாங்க. சுவாமி தரிசனம் செய்யறச்சே இந்தப் பக்தருங்க ’கோவிந்தா, கோவிந்தா!ன்னு ஓயாம, ஒழியாமச் சத்தம் போடறாங்க, இல்லையா? அதாலே பெருமாளுக்குத் தலையை வலிக்க ஆரம்பிச்சுடுமாம்.
அந்த வலியைப் போக்கறதுக்காக இந்தச் சந்தனத்தைக் கலந்து அவர் மேலே பூசுவாக்களாம். வாரத்துக்கு ஒரு நாள் அதை வழிச்சி எடுத்து, சின்னச் சின்னப் பொட்டலங்களாக் கட்டி, வேணுங்கிற பக்தர்களுக்கு விலைக்கு விற்பாங்களாம்...”
”திருப்பதி ‘ரேட்டிலே பார்த்தால் நீங்கள் எடுத்துக் கொண்டு வந்துவிட்ட சந்தனமே ஜந்நூறு, ஆயிரம் என்று விலை போயிருக்கும் போலிருக்கிறதே?’’
”யார் கண்டது போனாலும் போயிருக்கும் அதுக்குள்ளே அங்கே என்னைக் காணாத பொன்னுசாமிப் பிள்ளை சும்மா இருப்பாரா? ‘சந்தனத் திருடன் நானாத்தான் இருக்கும்’கிறதை அவர் எப்படியோ ஊகிச்சிக்கிட்டுக் கீழே வந்து ‘ஏண்டா, இப்படிக் கூடச் செய்யலாமா?ன்னார்.
‘நாமெல்லாம் காசு கொடுத்து வாங்கிக் கட்டுப்படியாகிற சமாசாரமா இது’ன்னு நான் அவர் மேலேயே கொஞ்சம் சந்தனத்தை எடுத்துப் பூசி. ‘எப்படி இருக்கு?ன்னு கேட்டேன். அது அவர் சூட்டைத் தணிக்கலேன்னாலும் என் சூட்டைக் கொஞ்சம் நாள் தணிச்சி வந்தது.
எல்லாம் தீர்ந்து அதை எடுத்து வைச்சிக்கிட்டு வந்த வேட்டியைச் சலவைக்குப் போட்டேன். ஒரு தடவையில்லே, பல தடவை போட்டேன். வேட்டி கிழியற வரையிலே அந்தச் சந்தன வாசனை போகவேயில்லே!”
”சந்தன வாசனையும் போகவில்லை; அதன் நினைவும் மனசை விட்டுப் போகவில்லை.
Tweet | |||||