ராஜபக்ஷேவுக்கு எதிராக தமிழ்நாட்டு வீதிகளில் மட்டும் கறுப்புக்கொடி காட்டி, கண்டனம் தெரிவித்த தமிழ் ஈழ ஆதரவாளர்கள், இப்போது ராஜபக்ஷே செல்லும் இடம் எல்லாம் தங்களது எதிர்ப்பைக் காட்டத் தொடங்கி விட்டனர்!
ஜூ.வி.யில் இன்று வெளியாகி இருக்கும் வைகோவின் போராட்டம் பற்றிய விரிவான தகவல் இங்கே.
நாங்கள் இந்தியப் பிரஜையா... இல்லையா?
மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சிக்கு வந்து புத்தர் கல்வி மையத்தைத் திறக்கப்போகிறார் இலங்கை அதிபர் ராஜபக்ஷே என்ற தகவல் கிடைத்த உடனேயே, 'அவருக்கு அங்கேயே போய் எங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்போம்’ என்று வைகோ அறிவித்தார். உடனே, ம.பி. மாநிலத்தை ஆளும் பி.ஜே.பி. முதல்அமைச்சர் சிவராஜ்சிங் சௌகான், வைகோவுக்கு எழுதிய கடிதத்தில், 'போராட்டத்துக்கு அனுமதி இல்லை’ என்றார். 'தடையை மீறிப் போராட்டம் நடத்த வருவோம்’ என்று வைகோவும் அறிவித்தார். அவ ரைச் சமாதானப்படுத்த சுஷ்மா சுவராஜ் போனில் பேசியதாகவும், ஆனால் பேசுவதற்கு வைகோ மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், கடந்த 17-ம் தேதி மாலை, சென்னைக் கடற்கரையில் பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் இருந்து ம.தி.மு.க-வினர் புறப்பட்டனர் சாஞ்சியை நோக்கி. 21 பேருந்துகளில் சுமார் 1,000 பேர் சென்றனர். 'ராஜபக்ஷேவே வெளியே போ! இந்திய அரசே... கொலைகாரனை அனுமதிக்காதே’ என்று முழக்கமிட்டனர். ''புத்தக் கல்வி மையம் அடிக்கல் நாட்டுவதற்கு ராஜபக்ஷேதான் கிடைத்தாரா? காந்தி சிலைக்கு மாலை போட கோட்சேவா? இலங்கையில் 2,076 இந்துமதக் கோயில்களை ராஜபக்ஷே இடித்துள்ளார். இந்து மதத்தைப் போற்றும் பாரதிய ஜனதா... ஒரு மத வெறியனையா வரவேற்கிறது? எங்கள் மக்களைக் கொன்ற கொலைகாரன் நாங்கள் வாழும் நாட்டுக்கே வருகிறான். நாங்கள் இந்த நாட்டு மக்களா இல்லையா என்று நீங்களே முடிவு செய்யுங்கள்'' என்று ஆவேசமாகப் பேசிவிட்டுக் கிளம்பினார் வைகோ!
சரத்பவார் செல்வாக்கில் ராஜமரியாதை!
19-ம் தேதி அதிகாலை நாக்பூர் வந்தடைந்தது மறுமலர்ச்சிப் பேருந்துகள். சரத் பவார் கட்சியான தேசியவாத காங்கிரஸின் நாக்பூர் தலைவர் அஜய் பாட்டில், வைகோவை வரவேற்றார். அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவிய திக்சா பூமிக்குச் சென்று அம்பேத்கர் சிலைக்கும் புத்தர் சிலைக்கும் வைகோ உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
மகாராஷ்டிரா காவல் துறை பலத்த பாதுகாப்பு கொடுத்தது. ஆனால், மத்தியப் பிர தேச உளவுத்துறை போலீஸ் இங்கேயே வந்து, தனது கண்காணிப்பைத் தொடங்கியது. 'தேவை இல்லாமல் இங்கே வராதீர்கள்’ என்று அவர்களை மகாராஷ்டிரா போலீஸ் எஸ்.பி. எச்சரிக்கை செய்தார். ஆனாலும், மகாராஷ்டிரா மாநில எல்லை வரை நாக்பூர் தேசியவாத காங்கிரஸின் தலைவரும் சரத்பவாரின் உறவினருமான அஜய் பாட்டில் ஆதரவாளர்கள் வந்தனர். ''இதோடு எங்களது எல்லை முடிந்து விட்டது...'' என்று வழியனுப்பிச் சென்றனர்.
எல்லையில் காத்திருந்த படைகள்!
மத்தியப் பிரதேச எல்லையில் சன்டவாரா மாவட்ட ஆட்சியரோடு நின்றுகொண்டிருந்தது போலீஸ். 'உள்ளே நுழையக் கூடாது’ என்று அவர்கள் சொல்ல... 'அமைதியான வழியில் கறுப்புக்கொடி காட்டத்தான் நான் வந்துள்ளேன். இது, ஜனநாயக உரிமை. இந்தியாவின் எந்த மாநிலத்துக்குள்ளும் நாங்கள் செல்வதற்கு உரிமை உண்டு’ என்று வைகோ சொன்னார். அதை அவர்கள் ஏற்கவில்லை. 'இங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. எனவே நீங்கள் செல்ல முடியாது’ என்றார்கள். அதற்குள் ரோடு ரோலர், வஜ்ரா, டிராக்டர் வண்டிகளை சாலையில் கொண்டுவந்து நிறுத்தினர். அதோடு, 2,000 போலீஸார் அழைத்து வரப்பட்டனர்.
மகாராஷ்டிராவை ஒட்டிய எல்லைப் பகுதியில் வைகோ தரப்பும் மத்தியப் பிரதேச எல்லைப் பகுதியில் அந்த மாநிலப் போலீஸ் படையும் எதிரெதிராக நின்றது. 19-ம் தேதி மதியம் 3.30 மணி அளவில் இந்த அறவழிப் போராட்டம் தொடங் கியது. மத்தியப் பிரதேச அரசு, இளையராஜா என்ற துணை ஆட்சியரை (ஈரோட்டைச் சேர்ந்தவர்) சமாதானம் செய்ய அனுப்பியது. பூங்கொத்து கொடுத்து வரவேற்பு கொடுத்தவர், 'இதற்கு மேல் உங்களை அனுமதிக்க முடியாது’ என்றார். ஆனால், அவர் சொன்ன சமாதானத்தை வைகோ ஏற்கவில்லை. அதற்குள் இருட்ட ஆரம்பித்தது. அந்தப் பகுதியில் சாலையோர விளக்குகள் எதுவும் எரியவில்லை. உடனடியாக புதிய விளக்குகள் மாட்டப்பட்டன.
விருந்தினர் மாளிகைக்குப் போக மாட்டேன்!
ம.பி. போலீஸிடம், ''ராஜபக்ஷே வர இருக்கும் சாஞ்சிக்குச் சென்று கறுப்புக்கொடி காட்டத் திட்டமிட்டோம். இதைக் குறிப்பிட்டு நான் முதலமைச்சர் சௌகானுக்குக் கடிதம் எழுதினேன். அவர் எனக்கு எழுதிய பதிலில் 'ஆசிய கண்டத்தில் சமாதானத்தை வளர்க்கத்தான் அவரை இங்கே அழைத்து வருகிறோம்’ என்று சொல்லி இருந் தார். என்னைத் தொடர்பு கொண்ட போபால் போலீஸ் கமிஷனர் விஜய் யாதவ். 'உங்களுக்குப் போபாலில் போராட்டம் செய்ய ஒழுங்கு செய்துள்ளோம். ஆனால், சாஞ்சியில் அனுமதிக்க முடியாது’ என்று கூறினார். ஆனால் இப்போது, என்னை 350 கி.மீட்டருக்கு முன்னரே தடுத்து நிறுத்தி உள்ளீர்கள். இது, பி.ஜே.பி-யின் உலக மகாப்பித்தலாட்டம். நாங்கள் ஆயுதம் ஏந்திப் போராடவில்லை. பலாத்காரத்தைப் பயன்படுத்தி என்னைக் கைது செய்ய நினைத் தால், செய்து பாருங்கள். துப்பாக்கியையும் லத்தி யையும் காட்டி எங்களைப் பயமுறுத்த முடியாது'' என்று உணர்ச்சிகரமாகப் பேசினார் வைகோ. ஆனாலும், ''உங்களை இதற்கு மேல் அனுமதிக்க முடியாது'' என்பதையே போலீஸார் திரும்பத் திரும்பச் சொன்னார்கள்.
''நீங்கள் இங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்குங்கள். உங்களை நாங்கள் கைது செய்யவில்லை'' என்று போலீஸ் சொன்னதையும் வைகோ ஏற்க வில்லை. ''நான் மத்தியப் பிரதேசத்துக்கு உங்களது விருந்தாளியாகத் தங்குவதற்கு வரவில்லை. போராட் டம் நடத்த வந்துள்ளேன். எனவே, உங்களோடு எந்த சமாதானமும் கிடையாது'' என்று வைகோ சொன்னார்.
தோள் கொடுத்த மக்கள்!
இந்த வாக்குவாதங்கள் நடந்த பட்சிசோலி பகுதியில் ஊர் மக்கள் கூட ஆரம்பித்தனர். அவர் களுக்கு இந்தியில் போராட்டக் காரணங்களை ம.தி.மு.க. தொண்டர்கள் விளக்கிச் சொன்னார்கள். வைகோ பேசியதையும் இந்தியில் மொழிபெயர்த்துச் சொன்னார்கள். ஈழப் பிரச்னை குறித்து இந்தியில் அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் தரப்பட்டன. இதேநிலை நீடிக்க... 19-ம் தேதி இரவு முழுக்க ரோட்டில் அனைவரும் படுத்துத் தூங்கினார்கள்.
20-ம் தேதி மாலை வரை வைகோ உள்ளிட்டவர்கள் 'தடையை மீறி கறுப்புக் கொடி காட்டியே தீருவது’ என்று விடாப்பிடியாக உட்கார்ந்து இருந்தனர்.
இலங்கைப் பிரச்னை மாநிலம் கடந்து மக்கள் கவனத்தை ஈர்க்கும் விஷயமாக மாற இந்தப் போராட்டம் காரணமாகி விட்டது!
Tweet | |||||