Dec 17, 2010

ஸ்பெக்ட்ரம் ராஜாவின் பினாமி சாதிக். பரபரப்பு தகவல்கள்

ஆ.ராசா.சாதிக்.

 இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் விவகாரமாக கருதப்படும், "2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு விவகாரத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, அரசியல் தரகர் நிரா ராடியா ஆகியோருக்கு அடுத்தபடியாக பரபரப்பாக பேசப்படுவது, "கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ்' நிறுவனத்தின் எம்.டி., சாதிக் தான். அவரது பெயரில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்களும், நிறுவனங்களும் உள்ளன. தற்போது 500 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியாக உள்ளார் சாதிக். கரூர் மாவட்ட பள்ளபட்டியில் இருந்து, 20 ஆண்டுகளுக்கு முன் தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்துக்கு தன் சகோதரர்களுடன் பிழைப்பு தேடி வந்துள்ளார் சாதிக். பெரம்பலூர் வந்த சாதிக், முதலில், கிடைத்த வேலைகளை செய்து வந்தார். அதன்பின், சைக்கிளில் ஊர், ஊராக சென்று தவணை முறையில் துணி வியாபாரம் செய்து வந்தார். அந்த வியாபாரத்தில் கண்ட வளர்ச்சியின் மூலம், எலக்ட்ரானிக் பொருட்களை தவணை முறையில் விற்பனை செய்யும் தொழிலுக்கு மாறினார்; தொடர்ந்து, வீட்டு புரோக்கராக மாறினார்.

கடந்த 1995ம் ஆண்டு தான், முன்னாள் அமைச்சரும், தாட்கோ சேர்மனுமாக இருந்த அ.தி.மு.க., பிரமுகர் வரகூர் அருணாச்சலத்தின் நட்பு சாதிக்குக்கு கிடைத்துள்ளது. அவரிடம் சாதிக் நெருக்கமாக இருந்த காலகட்டத்தில், ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில், வக்கீலாக இருந்த தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா அடிக்கடி வரகூர் அருணாச்சலத்தை சந்தித்துள்ளார். அப்போது சாதிக்கை, ராஜாவுக்கு, வரகூர் அருணாச்சலம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே நெருக்கமான நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் சாதிக், சிறிய அளவில் நிலம் வாங்கித்தரும் புரோக்கராக இருந்துள்ளார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், 1999ம் ஆண்டு ராஜா எம்.பி., ஆனவுடன் மிகவும் நெருக்கமான சாதிக், தன்னுடைய பெயரில் ரியஸ் எஸ்டேட் பிசினஸ் செய்ய அலுவலகங்களை மாநிலம் முழுவதும் துவக்கியுள்ளார். அதன்மூலம் பெரிய அளவில் வளர்ச்சி இல்லை என்றாலும், சிறிய அளவில் நிலங்களை வாங்கி விற்பனை செய்து கொண்டிருந்தார்.


அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், 2004ம் ஆண்டு ராஜா மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சராக பொறுப்பேற்றார். அப்போது தான் சாதிக், "கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ்' என்ற நிறுவனத்தை துவக்கியுள்ளார். அந்த நிறுவனம் ஒரு லட்ச ரூபாய் முதலீட்டில் மட்டுமே துவக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் எம்.டி.,யாக சாதிக்கும், ராஜாவின் குடும்பத்தினர் சிலர் இயக்குனர்களாகவும் இருக்கின்றனர். "கிரீன்ஹவுஸ்' நிறுவனம் துவங்கிய ஒரே ஆண்டில் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் பார்த்ததாக கணக்கு காட்டியுள்ளது. கடந்த 2007-08ம் ஆண்டுகளில், "கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ்' நிறுவனம் அபார வளர்ச்சியை பெற்றுள்ளது. இந்த காலகட்டத்தில் தான், "2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடும் நடந்துள்ளது. தற்போது ராஜாவின் பினாமியாக இருக்கும் சாதிக்கின் சொத்து மதிப்பு 500 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது சமீபத்தில் நடந்த சி.பி.ஐ., சோதனையில் தெரியவந்துள்ளது.

பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூருக்கு பிழைப்பு தேடிவந்த ஒருவர், 20 ஆண்டுகளில் 500 கோடி ரூபாய்க்கு அதிபதியாகியுள்ளது, தமிழக மக்களிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி:தினமலர்

======================================================================
எக்ஸ்ட்ரா பிட்டிங்:
*************************

பெருமாளுக்கு மட்டுமா பூ? பொதுமக்களான தமிழர்களுக்கும் தான்.
வாழ்க! பெரியாரின் சுயமரியாதை!..

2 comments:

arasan said...

நல்ல பகிர்வு நண்பரே ....கடைசியில் நம்ம தான் இளிச்ச வாயனாகிபோனோம் ...

vignaani said...

ஆரம்பித்துவிட்டர்கள்: தினமலர் தலைமையில் பூணூல் கோஷ்டி; தாழ்த்தப்பட்ட குலத்தில் முளைத்த அன்பர் ராசாவின் திறமையில் வயிறு எறிந்த கும்பல் இப்போது சிறுபான்மை இனத்தவரான சாதிக் பாஷா பற்றி தூற்ற ஆரம்பித்து விட்டது. இன்னும் நூறாண்டுகள் நாம் பெரியாரின் நாமத்தை பாடினால் இவர்கள் வாய் அடைப்பர் என்று நம்புவோம்.