Apr 30, 2011

அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா கேள்வி.கருணாநிதி பதில் என்ன?

 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் குற்றப்பத்திரிகையில், முதல்வர் கருணாநிதி குடும்பத்தினர் அனைவரது பெயர்களையும் சேர்க்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் கருணாநிதிக்கு அவர் 10 கேள்விகளை அடுக்கியுள்ளார்.

 ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கை

"உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை முன்னின்று விசாரித்து வரும் சி.பி.ஐ-யின் இரண்டாவது குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள தனது மகள் கனிமொழியை காக்கும் வகையில், தனக்கே உரிய பாணியில் குழப்பமூட்டும் கதைகளை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார் கருணாநிதி. 

இந்த ஊழலையே மறுத்துள்ளதோடு மட்டுமல்லாமல், இந்த ஊழல் இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் கற்பனையில் உருவான கட்டுக் கதை என்றும் குறை கூறியிருக்கிறார் கருணாநிதி. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நடைபெற்றுக் கொண்டிருக்கும் விசாரணை நடவடிக்கைகளை, திராவிட அரசியலுக்கு எதிரான மேலாதிக்க சக்திகளின் சதி என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார் கருணாநிதி.  

கருணாநிதியின் மகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் மோசமான செயல்பாட்டினை வெட்ட வெளிச்சமாக்கிக் கொண்டிருக்கும் ஊடகங்களை கடுமையாக சாடியிருக்கிறார் கருணாநிதி. தப்ப முடியாதபடி கடினமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் தருணத்தில், அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, மற்றவர்கள் மீது சேற்றை வாரி இறைப்பது கருணாநிதியின் வாடிக்கை! குறிப்பிட்ட எந்தப் பெயரும் சுட்டிக் காட்டப்படவில்லை. தனி மனிதர், தனிப்பட்ட கட்சி அல்லது அமைப்பின் பெயர்கள் குறி வைக்கப்படவில்லை. வெறும் பொதுவான தூற்றுதல் தான்.

ஆனால், 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது மிகப் பெரிய ஊழல். கருணாநிதி  மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த ஊழலில் முழுவதுமாக மூழ்கி இருப்பதால், இந்த ஊழலில் இருந்து ஒதுங்கி இருப்பது என்பது கருணாநிதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இயலாத காரியம் ஆகும்.


இந்த ஊழலில் அடங்கியுள்ள அப்பட்டமான உண்மைகளில் சிலவற்றை நாம் காண்போம்.

1) 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றிய முதல் செய்திகள் மற்றும் இந்த ஊழலில் கருணாநிதியின் நம்பிக்கைக்குரிய தளபதி ஆ.ராசாவுக்கு உள்ள பங்கு பற்றிய தகவல்கள் ஆகியவை எந்த எதிர் தரப்பு ஊடகங்களிலும் முதன் முதலாக வரவில்லை. மாறாக, கருணாநிதியின் பேரன்களுக்கு சொந்தமான தொலைக்காட்சியான சன் டி.வி-யில் தான் முதன் முதலில் ஒளிபரப்பப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், கருணாநிதியின் பேரன்களில் ஒருவர், 28.4.2011 அன்று நடைபெற்ற திமுக-வின் "உயர் மட்டக் குழு" கூட்டத்தில் ஊடகங்களை பொதுவாக கருணாநிதி தாக்கிய சமயத்தில் உடனிருந்தார் என்பது தான்.

2) ராசா மற்றும் இதர நபர்களுக்கு எதிரான வழக்குகள் எதிர்க்கட்சியினர் கூறும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிபிஐ-யினால் தாக்கல் செய்யப்படவில்லை. மாறாக, இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை தலைவரால் இந்திய நாடாளுமன்றத்தில் தகுந்த ஆவணங்களுடனும், வலுவான வாதங்களுடனும் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

3) அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கத்துடன், திமுக-வுக்கு எதிரான கட்சி ஆட்சி புரியும் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மத்திய புலனாய்வு துறை 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை தாக்கல் செய்யவில்லை. மாறாக, கருணாநிதி தலைமையிலான தி.மு.க. முக்கிய பங்காற்றுகின்ற, கருணாநிதியின் மகனும், பேரனும் மத்திய அமைச்சர்களாக அங்கம் வகிக்கின்ற மத்திய அரசின் அறிவுரையின் பேரில் தான் மத்திய புலனாய்வுத் துறை இந்த வழக்கினை தாக்கல் செய்திருக்கிறது.

4) ஒரு வருடத்துக்கும் மேலாக தூங்கிக் கொண்டிருந்த இந்த ஊழல் வழக்கு தீங்கிழைக்கும் கும்பல் கூரை மேல் ஏறி நின்று கூக்குரலிட்டதன் காரணமாக முக்கியத்துவம் பெறவில்லை; உலகின் மிகப் பெரிய ஊழலுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில், மத்திய புலனாய்வுத் துறையால் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்த விசாரணையை உச்ச நீதிமன்றமே முடுக்கி விட்டதன் காரணமாகத் தான் இந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றது.

5) இந்த வழக்கில், சி.பி.ஐ. இதுவரை இரண்டு குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது.  இன்னும் நிறைய குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்ய இருப்பதாகவும் உறுதி அளித்துள்ளது.  இவையெல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவோ, செவி வழிச் செய்தி அல்லது நாகரிகமற்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலோ நடைபெறவில்லை. மாறாக, 80,000 பக்கங்கள் கொண்ட வலுவான ஆதாரங்களின், ஆவணங்களின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

6) இந்த வழக்கில் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்பட்டவர்கள் ஆ.ராசா மற்றும் கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் சிலர் மட்டுமல்ல. இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் செல்வாக்கு படைத்த தொழில் குழுமத்தைச் சேர்ந்த மேலாண்மை இயக்குநர்களும், தலைமை செயல் இயக்குநர்களும் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்கள். உண்மை நிலை இவ்வாறு இருக்கையில், இந்த ஊழலை மூடி மறைக்கும் விதமாக, "செல்வாக்கு படைத்த ஒரு குழுவினரின் அரசியல் சதுரங்க விளையாட்டு இது" என்று அபத்தமாக குற்றம் சுமத்துகிறார் கருணாநிதி!

நான் இப்பொழுது ஒரு சில கேள்விகளை கருணாநிதியிடம் கேட்க விரும்புகிறேன். கருணாநிதி அனுமதி அளித்திருந்தால், வாய்ப்பு கொடுத்திருந்தால், இந்தக் கேள்விகளை ஊடகங்களே அவரிடம் கேட்டிருக்கும் என்றும் நான் நம்புகிறேன்.

1) கம்பெனிகள் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள ஆவணங்களின்படி, கலைஞர் டி.வி. நிறுவனத்தில் தயாளு அம்மாளுக்கு 60 விழுக்காடு பங்குகள் உள்ளன என்பது தெரிகிறது. இந்த அளவு பங்கினை வைத்துக் கொள்வதற்கான நிதி ஆதாரம் குறித்த விவரங்கள் என்ன? இந்த டி.வி-யில் எவ்வளவு பணத்தை தயாளு அம்மாள் முதலீடு செய்தார்? இந்த டி.வி. சேனலில் இந்த அளவுக்கு முதலீடு செய்யும் அளவுக்கு தயாளு அம்மாளுக்கு நிதி எங்கிருந்து கிடைத்தது?

2) தனிப்பட்ட முறையில் தயாளு அம்மாள் இதில் பங்குதாரராக இருக்கிறாரா? அல்லது கருணாநிதி குடும்பத்தின் தன்னுடைய கிளையின் பிரதிநிதியாக செயல்படுகிறாரா?

3) 20 விழுக்காடு பங்குகளை வைத்திருக்கும் கனிமொழி இந்த டி.வி-யில் எவ்வளவு முதலீடு செய்தார்? இந்த அளவுக்கு முதலீடு செய்வதற்கு கனிமொழிக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது? தனிப்பட்ட முறையில் கனிமொழி இதில் பங்குதாரராக இருக்கிறாரா? அல்லது கருணாநிதி குடும்பத்தின் இரண்டாவது கிளையின் பிரதிநிதியாக செயல்படுகிறாரா?

4) கலைஞர் டி.வி-யில் இயக்குநராக இருக்க மத்திய உள்துறை அமைச்சரகம் அனுமதி தராததையடுத்தே, கனிமொழியால் அதில் இயக்குநராக நீடிக்க முடியவில்லை. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனியார் நிறுவனத்தில் இயக்குநராக இருப்பதற்கு எந்த சட்டமும் தடை விதிக்கவில்லை. இந்த சூழ்நிலையில், தொலைத் தொடர்பு நிறுவனத்துடன் கனிமொழி தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியதற்கான காரணங்கள் என்ன?

5) சர்ச்சைக்குரிய 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டின் பயனாளியான டி.பி. ரியால்டி குழுமத்திடம் இருந்து கலைஞர் டி.வி. 214 கோடி ரூபாயை பெற்றிருக்கிறது. இந்தப் பணப் பரிமாற்றம் ஒரு தடவை நடைபெறவில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் பல முறை நடைபெற்று இருக்கின்றது. இந்தப் பணம் ஏன் வாங்கப்பட்டது? ராசாவால் விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணாக 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கப்பட்டதற்கு பிரதிபலனாகத் தான் இந்தப் பணம் கலைஞர் டி.வி-க்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இல்லையெனில், சமீபத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் டி.வி-யில் இவ்வளவு பெரிய தொகையை மும்பையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் ஏன் முதலீடு செய்தது?

6) 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிபிஐ வழக்கு பதிவு செய்தவுடன், ராசாவை சிபிஐ விசாரிக்க தொடங்கியவுடன், டி.பி. ரியால்டிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை "உத்திரவாதமற்ற கடன்"ஆக மாற்றி அதனை உடனடியாக ஒப்படைப்பு செய்ய கலைஞர் டி.வி. ஏன் திடீர் முடிவு எடுத்தது?

7) திடீரென்று இந்தக் "கடனை வட்டியுடன்" திருப்பிக் கொடுக்கும் அளவுக்கு கலைஞர் டி.வி-க்கு பணம் எங்கிருந்து கிடைத்தது?

8) ஜெனிக்ஸ் எக்சிம் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற போர்வையில், தன்னுடன் நெருங்கி பழகியவர்களின் நிறுவனமான துபாயைச் சேர்ந்த இடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமம், டி.பி. ரியால்டி நிறுவனத்தால் ஊக்குவிக்கப்பட்ட ஸ்வான் டெலிகாம் குழுமத்தில் இடம் பெற்றதற்கு கருணாநிதியின் விளக்கம் என்ன?

9) கருணாநிதி குடும்ப உறுப்பினர்களுக்கும், கருணாநிதிக்கு நெருக்கமாக உள்ளவர்களுக்கும் இடையே நடைபெற்ற பணப் பரிமாற்றத்தில், ஊடகங்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட பரிமாணங்கள் எல்லாம் எங்கு இருக்கின்றன?

10) "கனிமொழி என் மகள் என்பதற்காக நான் ஆதரவளிக்கவில்லை; கனிமொழி தி.மு.க-வின் விசுவாசமிக்க உண்மையான தொண்டர் என்ற முறையில்" ஆதரவளிப்பதாகத் தெரிவித்து, கட்சியை இழிவுபடுத்த தனக்கு விருப்பம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார் கருணாநிதி! இறுதி மூச்சுவரை கட்சிக்காக உழைக்கக் கூடியவர்கள், கட்சிக்காக தங்கள் உயிரைக்கூட கொடுக்கத் தயாராக இருக்கும் தொண்டர்கள் இது போன்ற பிதற்றலை நம்புவார்கள் என்று கருணாநிதி எதிர்பார்க்கிறாரா?

ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்பது உண்மையாக நடந்த ஒன்று. ராசாவுக்கு இதில் நிச்சயம் தொடர்பு இருக்கிறது. கலைஞர் டி.வி. மற்றும் கருணாநிதி உட்பட, கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இதன் மூலம் பயனடைந்துள்ளனர். இங்கு மட்டுமல்லாமல், வரி ஏய்ப்பின் புகலிடமாக விளங்கும் வெளிநாட்டு வங்கிகளிலும் கருணாநிதி குடும்பத்தினர் பணத்தை குவித்து வைத்து இருக்கின்றனர்.

கனிமொழியை மட்டும் குற்றப்பத்திரிகையில் சேர்த்ததன் மூலம் சி.பி.ஐ. தன்னுடைய பணியை சரிவர செய்யவில்லை என்று நான் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.

இந்த ஊழலில் கருணாநிதி குடும்பத்தினர் அனைவருக்கும் தொடர்பு உண்டு. அனைவரும் பயனடைந்துள்ளனர். நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்றால், 2ஜி ஊழலில் தொடர்புடைய கருணாநிதி குடும்பத்தினர் அனைவரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற வேண்டும்," என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

Apr 28, 2011

தமிழினத் துரோகிகள் யார்?.

இலங்கை அரசு திட்டமிட்டு இனப்படுகொலை நடத்தி வருகிறது என்று 2009-ல் எல்லோரும் கூறியதைத்தான் இப்போது ஐக்கிய நாடுகள் குழு அறிக்கை உறுதிப்படுத்தி இருக்கிறது. அப்போது, இந்தியா எப்படி, இந்த இனப்படுகொலை குறித்து எல்லோரும் குரல் எழுப்பியபோதும் அமைதி காத்ததோ, அதே அமைதியை இப்போதும் கையாள்கிறது. 

இலங்கை அதிபர் ராஜபட்ச ஒரு போர்க் குற்றவாளி என்று தண்டிக்கப்படுவதற்கான அனைத்துக் காரணிகளும் இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இலங்கை அரசு இதுபற்றித் துளியும் கவலை கொள்ளவில்லை. மாறாக, முழு அறிக்கையை வெளியிட்டால் இலங்கையில் நடைபெற்றுவரும் தமிழர்களின் இணக்கமான வாழ்க்கைக்கான அரசின் முயற்சிகள் பாதிக்கப்படும் என்று எதிர்ப்புத் தெரிவிக்கிறது.நம் ஒற்றுமையைக் காட்டும் விதமாக மே முதல் தேதி ஐ.நா. அறிக்கைக்கு எதிரான விளக்கம் தருவதாக மே தின ஊர்வலம் அமையட்டும் என்று அறைகூவல் விடுகிறார் அதிபர் ராஜபட்ச.

இந்த அளவுக்கு இலங்கை எனும் சிறிய நாட்டுக்குத் தைரியம் இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் இந்தியா தரும் துணிவும், ஆதரவும்தான் என்றால் மிகையில்லை. துணையோடு அல்லது நெடுவழி போகேல் என்கிறது நீதிநூல். ராஜபட்சவின் வழித்துணை இந்தியா.இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் ஜெனீவா மாநாட்டில் தீர்மானம் கொண்டுவந்தால் அதை எதிர்ப்பதும், சர்வதேச நிதியத்தில் நிதிபெற்றுத் தருவதும் என எப்போதும் அன்பு காட்டி ஆதரவு தந்துகொண்டிருப்பது இந்தியாதான்.

இலங்கை நடத்திய தாக்குதல், போர்ப்பயிற்சி, ஆயுத சப்ளை, கண்ணிவெடி அகற்றம் என எல்லாவற்றிலும் இந்திய அரசின் நேரடியான - மறைமுகமான உதவிகள் இருந்துள்ளது என்கிற குற்றச்சாட்டுகள் மறுக்கப்படவே இல்லை.இந்த ஆதரவு தரும் மனவலிமையால், இப்போதும் எங்களை ஐ.நா. ஒரு போர்க் குற்றவாளியாகச் சித்திரிக்குமானால், இந்தியா தடுத்துக் காப்பாற்றும் என்று வெளிப்படையாக அந்நாட்டு உயர் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள் என்றால், இந்தியா குறித்து அவர்களது மதிப்பீடு என்னவாக இருக்கிறது என்பது வெளிப்படை.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் தாற்காலிக உறுப்பு நாடாக இந்தியா இடம்பெற்றிருக்கிறது. உறுப்பு நாடுகள் கேட்டுக்கொண்டால்தான், இலங்கையில் நடந்த மனிதஉரிமை மீறல் மற்றும் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டது தொடர்பாக ராஜபட்ச மீது சர்வதேச விசாரணை நடத்தப்படும் என்கிறார் ஐ.நா. சபை பொதுச் செயலர் பான் கீ மூன். இந்தியாவோ மவுனம் காக்கிறது. இந்திய அரசின் சார்பில் ஐ.நா. குழுவின் அறிக்கை பற்றி அதிகாரப்பூர்வமான கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

தமிழ்நாட்டிலிருந்து எதிர்க்கட்சியான அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா, இலங்கை அதிபர் ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்கிறார். தேமுதிக, பாமக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் என்று காங்கிரஸ் தவிர, ஏனைய கட்சிகள் அனைத்துமே ஐ.நா. குழுவின் அறிக்கையின்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குரலெழுப்பி இருக்கின்றன.

ஆனால், மத்திய அரசில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் முக்கிய அங்கமாக இருக்கும் தி.மு.க.வின் உயர்நிலைக் குழு கூடியது. விவாதித்தது. தமிழினத்தின்மீது தொடுக்கப்பட்ட மிகப்பெரிய இனப்படுகொலையை எதிர்த்துச் சிலிர்த்தெழ வேண்டிய இயக்கம், தயக்கத்துடன் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றித் தனது கடமையை முடித்துக் கொண்டுவிட்டது

ஐ.நா. குழு விசாரணை இன்னும் அதிகாரப்பூர்வமாக, முழுமையாக வெளியிடப்படவில்லை. நமது இந்திய அரசு இந்த அறிக்கை மீது எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற விவரமும் வரவில்லை'' என்று அதற்குக் காரணம் கூறியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி.

இலங்கைத் தமிழருக்காக இவர் நடத்திய 2 மணி நேர உண்ணாவிரதத்தை ஜெயலலிதா கபடநாடகம் என்று சொன்னதைத் தமிழருக்கு நினைவூட்டத் தவறாத முதல்வர், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ""இப்போதாகிலும் செயல்படுங்கள்'' என்று நினைவூட்டினாரா என்றால் இல்லை.

பிரதமரிடமும் சோனியாவிடம் நினைவூட்டுவதற்குத் தமிழினத்தைப் பாதிக்கும், தமிழனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சுட்டிக்காட்டும் ஐ.நா. குழு விசாரணையைவிடத் தனது குடும்பத்தினரைப் பாதிக்கக்கூடிய முக்கியமான விசாரணைகள் நடைபெற்று வருவதுகூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.

இந்திய அரசும், தன்னைத் தமிழினத் தலைவர் என்று அழைத்துப் பெருமை தட்டிக்கொள்ளும் முதல்வர் கருணாநிதி கூறுவதைப்போல, இன்னும் அறிக்கை முழுமையாக அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்று சொல்லக்கூடும். அதைவிட ஒருபடி மேலேபோய், போர்க் குற்றங்களில் விடுதலைப் புலிகளும் ஈடுபட்டனர், மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தினர் என்று ஐ.நா. அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, நடுநிலை வகிப்பதற்குக் காரணம் தேடக்கூடும்.

இந்த வாதங்களை இந்திய அரசு முன்வைக்கும்போது அதை மறுக்கவோ எதிர்க்கவோ துணிவில்லாத கூட்டணிக் கட்சியாக, தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்றும், தமிழர்களும் இந்தியர்கள்தான் என்றும் தமிழர் நலனைப் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே இந்தியாவின் ஒற்றுமையைப் பாதுகாக்க முடியும் என்றும் மத்திய அரசுக்கு உணர்த்தும் கட்சியாக இன்றைய தி.மு.க. தலைமை இல்லை என்பதுதான் தமிழினத்துக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பின்னடைவு.

தமிழர் குரல் தில்லியில் ஒலியிழந்து போனதற்குக் காரணம் தமிழினத்துக்காகக் குரல் கொடுக்க வேண்டியவர்கள் தங்கள் சுயநலத்துக்காகக் கைகட்டி, வாய்பொத்தி, தலைகுனிந்து நிற்பதால்தானே?

இலங்கை அதிபர் ராஜபட்ச மீது சர்வதேச விசாரணை வேண்டும் என்று களத்தில் இறங்கிப் போராட வேண்டிய நேரத்தில், இவர்கள் சம்பந்தப்பட்ட வேறு விசாரணை நடந்து கொண்டிருக்கிறதே,

இவர்கள் அதைப்பற்றித்தானே கவலைப்படுவார்கள்.இவர்களே குற்றவாளிகளாக இருக்கிறபோது யாரைப் போர்க் குற்றவாளியாக்குவதற்காகப் போராடுவது?

தமிழினத் துரோகி ராஜபட்ச அல்ல... 

தினமணி.

Apr 22, 2011

சர்வதேச நீதிமன்றத்தில் ராஜபக்ஷேவை நிறுத்தவேண்டும் -ஜெ.ஜெயலலிதா

இதுகுறித்து அ.தி.மு.க பொதுசெயலாளர் ஜெ.ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கை

இலங்கையில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை என்பதைத்தான் அண்மையில் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட கோரச்சம் பவம் நினைவூட்டுகிறது. இன்னும் சொல்லப்போனால், இந்தியர்கள், குறிப்பாக தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் கொடூர மனப்பான்மைக்கு உண்மையிலேயே ஆதாரம் தேவை என்றால் இலங்கை அதிகாரிகளின் சித்திரவதையால், அழுகிய நிலையில் சிதைந்து கிடந்த மீனவர்களின் சடலங்களே சாட்சி. 
இந்தியாவைச் சேர்ந்த தமிழர்கள் மீதே இதுபோன்ற கொடூரத் தாக்குதலை இலங்கை அரசு நடத்தியிருக்கும் நிலையில், யாருமே நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அனைத்துவிதமான மனித உரிமை மீறல் குற்றங்களுக்கும் ஆளாகியுள்ள இலங்கை அரசின் அடக்குமுறைக்கு அடிபணிந்து, இலங்கை தீவில் வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பாவித் தமிழர்களின் நிலைமை என்ன என்பதை கற்பனை செய்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான போர் உச்சகட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ம் தேதியன்று அருவருக்கத்தக்க கபட நாடகத்தை கருணாநிதி நடத்தினார். தன்னுடைய காலை உணவை முடித்துவிட்டு, இலங்கை போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி விட்டதாக அறிவித்தார் கருணாநிதி - உண்ணாவிரதம் தொடங்கிய 3 மணி நேரத்திற்குள், தமிழர்களுக்கு எதிரான ஆயுதத் தாக்குதலை இலங்கை நிறுத்திக் கொண்டுவிட்டதாக தம்மிடம் இலங்கை அரசு தெரிவித்தது என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார் - உடனே கருணாநிதி மதிய உணவுக்காக வீடு திரும்பிவிட்டார்.

ஓர் தமிழ் இளைஞரை துப்பாக்கியால் சுடுவதற்கு முன்பு, அவரை நிர்வாணமாக்கி, கண்களை மூடி கை, கால்களை கட்டி, காலால் எட்டி உதைத்து இலங்கை ராணுவத்தினர் பேரானந்தம் அடைந்த காட்சியை 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதியன்று 40 வினாடிகளுக்கு பிரிட்டீஷ் தொலைக்காட்சி ஒளிபரப்பி, உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த இளைஞரின் பிணம், இதே போன்று ஒன்பது சடலங்கள் இருந்த இடத்திற்கு உருட்டிவிடப்பட்டது - இந்த கொடூர காட்சிகளை பல இந்திய தொலைக்காட்சி சேனல்களும் ஒளிபரப்பியது.

இந்த கொடுஞ் செயலுக்கு எதிராக சர்வதேச அளவில் கூக்குரல் எழுப்பப்பட்டதோடு மட்டுமல்லாமல், இலங்கை அதிபர் மஹிந்தா ராஜபக்ஷே சர்வதேச நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, போர்க் குற்றத்திற்காக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், இந்திய அரசோ, தமிழக அரசோ இது குறித்து எதிர்ப்பையோ அல்லது வருத்தத்தையோ கூட தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாறாக, இலங்கை அதிபருடன் விருந்துண்டு மகிழ்வதற்காக, 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம், தன்னுடைய மகள் கனிமொழி உள்பட தி.மு.க. காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்தார் கருணாநிதி - பரிசுப் பொருட்களுடன் திரும்பிய நாடாளுமன்றக் குழுவினர் இலங்கையில் எல்லாமே நன்றாக இருக்கிறது என்றும், அங்குள்ள தமிழர்கள் குறைபட்டுக் கொள்ளும் அளவுக்கு புகார் ஒன்றுமில்லை என்றும் தெரிவித்தார்கள்.

என்னதான் கருணாநிதி நற்சான்றிதழ் கொடுத்தாலும், அங்குள்ள தமிழர்களின் நெஞ்சை உருக்கும் நிலையைக் கண்டு மனித உரிமை ஆர்வலர்கள், முற்போக்கு நாடுகளைச் சேர்ந்த அரசுகள், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை பொங்கி எழுந்தன.

தற்போது, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்-கீ-மூன் அனுப்பிய குழுவின் அறிக்கை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் இருந்து ஒரு சில பகுதிகளை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஐ.நா.குழுவால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நம்பத் தகுந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படின், சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டம் ஆகியவற்றிற்கு எதிரான ஆபத்து விளைவிக்கக் கூடிய அத்துமீறல்களை இலங்கை அரசாங்கம் நிகழ்த்தியுள்ளது வெட்ட வெளிச்சமாகும்.

இதில் சில குற்றங்கள் போர்க் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகும். 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கும், 2009-ம் ஆண்டு மே 19-ம் தேதிக்கும் இடையே, வன்னி பகுதிக்கு முன்னேறிய இலங்கை ராணுவம், மிகப் பெரிய அளவில் பரவலாக குண்டு மழை பொழிந்து, அப்பாவித் தமிழர்கள் மாண்டுபோவதற்கு காரணமாக இருந்தது 

 இதன்மூலம் வன்னி பகுதி மக்களுக்கு பலவிதமான தொந்தரவுகளை இலங்கை ராணுவம் கொடுத்தது - கிட்டத்தட்ட 3 லட்சத்து 30 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் குண்டு மழை பொழிவில் இருந்து தப்பிக்க முடியாத அளவுக்கு மிகக் குறுகிய பகுதிக்குள் சிக்கிக்கொண்டனர்.

ஊடகங்கள் மற்றும் போர் விமர்சகர்களை பயமுறுத்தும் வகையிலும், அவர்களுக்கு வாய்ப்பூட்டு போடும் வகையிலும் வெள்ளை வாகனங்களில் மக்களை கடத்துவது, மறைத்து வைப்பது உட்பட பல்வேறு அச்சுறுத்தல் நடவடிக்கைகளை இலங்கை அரசு கையாண்டது.

குண்டு மழைக்கு விலக்களிக்கப்பட்ட பொதுமக்கள் வாழும் தொடர்ச்சியான மூன்று இடங்களில் இலங்கை அரசு மிகப் பெரிய அளவில் குண்டு மழை பொழிந்திருக்கிறது. மருத்துவமனைகள் குறிவைத்து தொடர்ந்து தாக்கப்பட்டு இருக்கின்றன - வன்னிப் பகுதியில் உள்ள மருத்துவமனைகள் அனைத்தும் பீரங்கிகளால் தாக்கப்பட்டு இருக்கின்றன. மருத்துவமனைகள் இருக்கும் பகுதிகள் என்று இலங்கை அரசாங்கத்திற்கு நன்கு தெரிந்திருந்தும் சில மருத்துவமனைகள் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டிருக்கின்றன.

போர் பகுதியில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் செய்யக் கூடிய உதவிகளான மருத்துவ உதவி, உணவு ஆகியவற்றை இலங்கை அரசாங்கம் தடுத்து அவர்களை மேலும் துன்பத்திற்கு ஆளாக்கி இருக்கிறது. இதன்மூலம் போர் பகுதியில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கையை இலங்கை அரசு வேண்டுமென்றே குறைத்து மதிப்பீடு செய்தது.

2009-ம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை, மனித வர்க்கத்தின் படுகொலை நடந்த இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் அனாமதேயமாக செத்து மடிந்தனர்.

ஐக்கிய நாடுகள் சபை குழுவின் அறிக்கை மிகத் தெளிவாக உள்ளது. இலங்கை அரசாங்கத்தின் போர்க் குற்றங்களை பட்டியலிட்டதோடு மட்டுமல்லாமல், இலங்கை போர் முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறி, 2009-ம் ஆண்டு ஏப்ரல் 27-ம் தேதியன்று தனது மூன்று மணி நேர உண்ணாவிரத கபட நாடகத்தை கருணாநிதி முடித்துக் கொண்டதற்குப் பிறகும், 2009-ம் ஆண்டு மே மாதம் இறுதி வரை இனப் படுகொலைகள் நடந்துள்ளன என்று தெளிவாக இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்மூலம் தமிழினப் பாதுகாவலர் என்று தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் கருணாநிதியின் வேஷம் கலைக்கப்பட்டு இருக்கிறது. தமிழர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட, மனித குல வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட மிக மோசமான இனப் படுகொலைக்கு ஆதரவாகவும், உடந்தையாகவும், தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருந்த தமிழினத் துரோகி கருணாநிதி பகிரங்கமாக பொது மன்னிப்பு கோர வேண்டும் என்றுதான் தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ராஜபக்ஷே மற்றும் அவருடைய சகாக்களின் போர்க் குற்றங்களை விசாரிக்கும் வகையில், அவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன்பு நிறுத்த உடனடி நடவடிக்கைகளை தனது பங்குக்கு இந்திய அரசு எடுக்க வேண்டும்.

இல்லையெனில், அண்மையில் தமிழக வாக்காளர்கள் முன்பு இலங்கை குறித்து சோனியா காந்தி தெரிவித்த கருத்துகள் வாய்மையற்றவை என்றாகிவிடும். இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலையை நடத்தியது இந்திய அரசு தான் என்று அடிக்கடி கூறப்பட்டு வந்த குற்றச்சாட்டு உண்மை என்று நம்புவதற்கு வழி வகுக்கும்," என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

Apr 5, 2011

தமிழனை முட்டாள் ஆக்கும் ஸ்டாலின் தந்திரம்..

அம்மா தாயே காப்பாத்து.
"நாம் சாதனையை சொல்லி ஓட்டு கேட்கிறோம். பயன்பெற்ற மக்கள் ஆதரவு கொடுக்கிறார்கள். இதனால் ஜெயலலிதாவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது,'' துணைமுதல்வர் ஸ்டாலின் பேச்சு.

எது சாதனை? 

மின்சாரமென்றால் என்னவென்று கேட்கும் அளவிற்கு மக்களை அலையவிட்டதா சாதனை?.

ஈழத்தில் தமிழினமே அழிய காரணமான கொலைக்கார சோனியா காந்தியுடன் கூட்டு வைத்துக்கொண்டது சாதனையா?. 

தன் குடும்பம் மட்டுமே அரசு என தன் மகன்கள், மகள், வாரிசுகளை மட்டுமே பதவிகளை கொடுத்து தமிழ் நாட்டையே குட்டி சுவராக செய்தது  சாதனையா?.  

இலவசம் இலவசம் என சொல்லி ஓட்டு கேட்பதா சாதனை?

கலர் டிவி கொடுத்து அரசின் கடனை அதிகரித்தா சாதனை? 

காங்.சுக்கு 63 சீட்டு தர முடியாது என சொல்லி விட்டு பின்பு சோனியா கால்களில் மண்டி இட்டதா சாதனை? 

தன் சாதனையான மாபெரும் ரெண்டு லட்சம் கோடி ஊழல்(ஸ்பெக்ட்ரம் ஊழல்) செய்து தமிழனை அவமான படுத்தியது சாதனையா?  

மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடித்து இந்தியாவையே உலகின் முன் தலை குனிய வைத்தது  சாதனையா?. 

அதுவும்   இலவசம் இலவசம் என மக்களுக்கு பிச்சை போட்டதைப்போன்று  கூவி கூவி கூறி தற்பெருமை பட்டு கொள்ளும் இந்த ஊழல் மன்னனை என்னவென்று சொல்வது. 

தோல்வி பயம் யார் முகத்தில் தெரியுதுன்னு உங்க மூஞ்சிகளை பார்த்தாலே நல்லாவே தெரியுது. அப்பன் இப்பவே என்னடானா தோத்தாலும் உங்களை மறக்க மாட்டேன்னு மக்கள்  காலை பிடிச்சு கெஞ்சுறாரு. மூஞ்சிய சோகமா வச்சுகிட்டு ஓட்டுக்கு உருகிறாரு, தன் வினை தன்னை இப்போது தான் சுடுகிறது என்பதுபோல பாவம் அழுவாத குறையாய் மக்களின் முன்னே கபட நாடகம் நடிக்கிறாரு.

இது வரை நான் தோற்றுவிட்டால் உங்களை மறக்க மாட்டேன் என்று ஜெயலலிதா பேசவே இல்லையே? இது நாள் வரை உங்களுடையே தேர்தல் அறிக்கையை அவர் விமர்சிக்கவே இல்லையே?

நீங்க தானே அப்பனும்,மகனும்,மற்ற கூட்டணி தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை தினமும்,அதிமுக தேர்தல் அறிக்கையை விமர்சிக்கிறீர்கள்? 

ஜெயலலிதா  ஸ்ரீரங்கத்திற்கு ஒரே ஒரு முறை பிரசாரம் செய்துவிட்டு, தமிழ்நாடு முழுவதும் பிரசார சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார்,

நீங்கள் ஏன் இரண்டு நாளைக்கு ஒரு முறை கொளத்தூருக்கு விசிட் அடிக்கிறீர்கள் என்று  சொல்ல முடியுமா? 

அனைத்து பத்திரிக்கைக் கருத்து கணிப்புகளும் அதிமுக  கூட்டணிபெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளது, ஒரே ஒரு பத்திரிக்கை கூட திமுக வெற்றி பெரும் என்று குறிப்பிடவில்லையே? 

நீங்க தான் அது பொய்,இது பொய், யாரும் நம்பாதீர்கள் என்றுவாய்கிழிய கூப்பாடு போட்டீர்கள்.

இது வரையில் ஜெயலலிதா பிரசாரத்தில் ஒரு வாய்ப்பு கொடுங்கள்  எனக்கு என்று கெஞ்சவில்லையே?

நீங்கள் தானே கெஞ்சுகிறீர்கள்.திமுக,விற்குத் தான் உள்ளுக்குள் பயம் தாண்டவமாடுகிறதே தவிர 

அதிமுக.விற்கோ,ஜெயலலிதாவுக்கோ இல்லை.