May 19, 2011

கருணாநிதிக்காக மட்டும் அல்ல... ஜெ.ஜெ.வுக்கும் தான்.


ருணாநிதி கவிழப்போகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். தலை குப்புறக் கவிழ்வார் என்பதை ஜெயலலிதா உட்பட யாருமே எதிர்பார்க்கவில்லை!

எதிர்க் கட்சி என்ற பிரதான பாத்திரத்தைக்கூட இழந்து, மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது தி.மு.க. எந்த எதிர் பார்ப்புகளும் அற்ற லட்சக்கணக்கான தொண்டர்களையும்... மாநிலத்தை ஆளும் மகத்தான பொறுப்பினையும் அண்ணா தூக்கிக் கொடுத்துவிட்டுப் போனார். மே 13-ம் தேதி தமிழக சட்டசபைக்கான முடிவுகள் வரும்போது, அறிவாலயத்து வாசலில் நின்ற அண்ணா, வெறும் கட்டாந்தரையைத்தான் பார்க்க முடிந்தது. ராணுவத்தின் துப்பாக்கி மிரட்டல்களுக்கு மத்தியில் - எமர்ஜென்ஸி நேரத்தில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டபோதுகூட கூடினான் தொண்டன். ஆனால், மே 13 அவனே தலைமையையும் தலைமைக் கழகத்தையும் புறக்கணித்தான். அறிவாலய வளாகத்துக்கு உள்ளேயே நின்று சிலர், கருணாநிதியின் மகள் கனிமொழியையும் ஆ.ராசாவையும் விமர்சித்தனர்! அறிவாலயத்துக்கே வர முடியாமல் கோபாலபுரத்தில் முடங்கிப்போய் இருந்தார் கருணாநிதி. ''எனக்கு நல்ல ஓய்வு கொடுத்து இருக்கிறார்கள்!'' - இந்த ஒற்றை வரியை மட்டுமே கருணாநிதியால் உச்சரிக்க முடிந்தது.

இந்தத் தோல்வியை அவர் முன் கூட்டியே உணர்ந்து இருப்பார். உணராத வராக இருந்தால், இத்தனை ஆண்டு அரசியல் வாழ்க்கையே அர்த்தமற்றதாகி இருக்கும். இளமைக் காலம் முதலே கருணா நிதியைப் பார்த்து வரும் பேராசிரியர் அன்பழகன் வந்தார், ''என்ன பேராசிரியரே! சந்தேகமா இருக்குன்னு நான் சொன்னேன்... பார்த்தீங்கள்ல... அதுதான் நடந்திருக்கு!'' என்று கருணாநிதி சொன்னார். இத்தனை ஆண்டுகளாகப் பேசாத அன்பழகன், அன்றும் பேசவில்லை. தொழிற்சங்கத் தலைவர் செ.குப்புசாமி உள்பட, பலரும் வாய்விட்டுக் கதறி அழுதனர். கருணாநிதியும் மனசுக்குள் அழுதிருப்பார். இந்தத் தோல்வி முழுக்க முழுக்க அவரால்தான் வந்தது!

எல்லா மனிதனுக்கும் முதலில் இருக்க வேண்டியது குற்ற உணர்ச்சி! தான் செய்யும் தவறுகளை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் தேவை இல்லை. தன் மனதளவிலாவது ஒப்புக்கொள்ள வேண்டுவதுதான் குற்ற உணர்ச்சி. கடந்த ஐந்து ஆண்டுகளாக கருணாநிதி, தவறு களைப் பகிரங்கமாகச் செய்தார்.

அதைக் குற்ற உணர்வு இல்லாமல் நியாயப்படுத்தினார். துளி வருத்தமும் அவரது வார்த்தைகளில் இல்லை. விமர்சனங்கள் குறித்துக் கவலையே படவில்லை.  மன்னராட்சிகளில்கூட லேசான கிண்டலால் உணர்த்த 'கோமாளிகள்இருந்தார்கள். ஆனால், இன்று மந்திரிகளே... தந்திரிகளாக மாறி கருணாநிதியின் ஜாடிக்கு ஏற்ற மூடிகளாக உருமாறிப்போனார்கள். இவர்கள் அனைவருமே வெளி யதார்த்தங்களை மறைத்து, திரை மறைவில் தி.மு.க-வைக் கொண்டுபோய் நிறுத்தினார்கள். கட்சியில், ஆட்சியில், கருணாநிதி வீட்டில் நடந்தது எதுவுமே தொண்டனுக்குத் தெரியாது. 'எனக்கு எதுவும் தெரியாதுஎன்று கருணாநிதியும் சொல்ல முடியாது.

விலைவாசி, மின்சாரம் இரண்டால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இங்கு எழுதி யாருக்கும் தெரிய வேண்டிய நிலை இல்லை. ஆனால், இவை இரண்டையும் ஒரு பிரச்னையாகவே கருணாநிதி நினைக்கவில்லை என்பதுதான் வேதனைக்கு உரியது. கோடிகளைக் கொட்டி கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துவதற்காக... ஐந்து நாள் கூத்துக்காக... 1008 கலந்துரையாடல் கூட்டங்களை நடத்திய கருணாநிதி, 'விலைவாசி இப்படி அநியாயமாகப் போய்க்கொண்டு இருக்கிறதே... என்ன செய்யலாம்?’ என்று விவாதிக்கவே இல்லை. மின் தட்டுப்பாடு குறித்து, ஒரே ஒரு முறை விவாதித்ததாக நினைவு.

 ஒரு முதலமைச்சர் தீர்க்க வேண்டிய பிரச்னையாக இவை இரண்டையும் கருணாநிதி நினைக்கவே இல்லை. கேட்டால், ஆந்திரா, கர்நாடகா விலைவாசியை வாசிப்பார். மேற்கு வங்கத்தில் மின்சாரம் இல்லை, எல்லோருமே இருட்டில்தான் இருக்கிறார்கள் என்பார். விலைவாசியைக் குறைக்க முடியவில்லையே, தடை இல்லாமல் மின்சாரம் தர முடியவில்லையே என்ற ஆதங்கம் அவரது குரலில் இருந்து வெளிப்படவே இல்லை. 'இதெல்லாம் என் வேலை இல்லைஎன்று முகத்தைத் திருப்பிக்கொண்டு, பாராட்டு விழாக்களில் திளைத்தார்.

கருணாநிதி, முதல்வர். அவரது மகன் ஸ்டாலின், துணை முதல்வர். மூத்த மகன் அழகிரி, மத்திய அமைச்சர். பேரன் தயாநிதி மாறனும் மத்திய அமைச்சர். மகள் கனிமொழி, மாநிலங்களவை உறுப்பினர். பேத்தி கயல்விழி, கட்சிப் பொறுப்பில் இருக்கிறார். பேத்தி எழிலரசி, செம்மொழி மாநாட்டில் வீணை வாசிக்கிறார். திரைத் துறையில் சன் டி.வி-யின் சாம்ராஜ்யத்தைத் தொடர்ந்து, அழகிரி மகனும் ஸ்டாலின் மகனும் வந்தார்கள். அக்காள் மகன் அமிர்தம் கலைஞர் டி.வி. மூலமாக வருகிறார். தேர்தல் தொகுதிப் பொறுப்பாளர்களாக மகன் தமிழரசுவும், மகள் செல்வியும் என கருணாநிதியின் குடும்பம் அரசியலில், தொழில் துறையில், சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் கதையை எத்தனையோ முறை எழுதி ஆகிவிட்டது.

கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கருணாநிதி குடும்பத்தினர் மேடையில் அமர்ந்தபடி பார்க்க... தமிழறிஞர்கள் உட்கார இடம் இல்லாமல் நின்றபடி தவிக்கும் அளவுக்குக் குடும்ப ஆதிக்கம் தூள் கிளப்பியது. இது எங்கே வந்து நிற்கிறது தெரியுமா... 

கருணாநிதியின் அக்கா மகன் சொர்ணத்தின் பேத்தி மதுரம், 12-ம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றதைப் பாராட்டிப் புகழும் படம் 'முரசொலியில் கால் பக்கத்தில் பிரசுரமாகி இருக்கிறது. தேர்தல் முடிவுகள் வருவதற்கு முந்தைய நாள் இது. அதாவது, குடும்பத்தின் குதூகலத்துக்காகவே கருணாநிதி இயங்கலாம். நல்ல குடும்பத் தலைவரின் பொறுப்பும் அதுதான். ஆனால் கட்சியை, ஆட்சியை, முரசொலியையும் பலியிடுகிறோமே என்ற குற்ற உணர்ச்சி கருணாநிதிக்கு இல்லை. குடும்ப ஆதிக்கம் குறித்துக் குறை சொல்லும்போது எல்லாம், 'என்ன செய்ய... எனக்குக் குடும்பம் இருக்கிறதே!என்றார் கருணாநிதி. 'கத்தி இருக்கிறது வெட்டுகிறேன், துப்பாக்கி இருக்கிறது சுடுவேன்என்று யாராவது சொன்னால் ஏற்க முடியுமா?

தனக்கு இயற்கையாக அமைந்த வாதத் திறமையையும் தமிழ் வளத்தையும், சுயநலனுக்காக மட்டுமே என்று சுருக்கினார். இது தொடர்பான கருணாநிதியின் வாக்குமூலங்கள்... புகைப்படங்கள்... விழாக்கள் அனைத்துமே தமிழக மக்கள் மத்தியில் வெறுப்பை விதைத்தன.

இந்தச் சூழ்நிலையில்தான் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு பூதாகாரமாகக் கிளம்பியது. 'ஆ.ராசா குற்றமற்றவர்... அவர் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடம் இல்லைஎன்ற கருணாநிதியே... அவரை ராஜினாமா செய்யச் சொன்னார். ராசா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட பிறகும், அவரை நியாயப்படுத்தி தீர்மானம் போட்டார். 

காமன் வெல்த் ஊழலில் சிக்கிய கல்மாடியை, 'போஃபர்ஸ் கறை படிந்த காங்கிரஸ்கூட கட்சியைவிட்டு நீக்கியது. ஆனால், ராசாவை கருணாநிதி நீக்கவும் இல்லை. கொள்கை பரப்புச் செயலாளர் பதவியைப் பறிக்கவும் இல்லை. 

அரசியல் புரோக்கர் நீரா ராடியாவுடன், தனது துணைவி ராஜாத்தியும் மகள் கனிமொழியும் பேசியது குறித்தும் கருணாநிதி கவலைப்படவில்லை. அவரது பெயரால் உருவாக்கப்பட்ட டி.வி-யே ஸ்பெக்ட்ரம் ஊழலின் லஞ்சப் பணத்தால் வந்தது என்று சி.பி.ஐ. சொன்னபோதும் வாய் திறக்கவில்லை. மனைவி தயாளு அம்மாளை அறிவாலயத்துக்கு உள்ளேயே வந்து சி.பி.ஐ. விசாரிக்கிறது. மகள் கனிமொழி, 'கஸ்டடி குற்றவாளியாக நித்தமும் பாட்டியாலா நீதிமன்றத்தில் நின்றுகொண்டு இருக்கிறார்.

இது எதுபற்றியும் கருணாநிதிக்குக் குற்ற உணர்ச்சி வரவே இல்லை. 'சி.பி.ஐ. ரெய்டு நடத்துகிறதே!என்று கேட்டால், 'இது வழக்கமானதுதானே!என்கிறார் கருணாநிதி. தமிழ்நாட்டில் எல்லார் வீட்டுக்கும் பேப்பர் பையன் வந்து போவதுபோல், சி.பி.ஐ. வந்து போகிறதா என்ன? அறிவாலயத்தின் மேல் தளத்தில் சி.பி.ஐ. இருக்க... தரைத் தளத்தில் கருணாநிதி - காங்கிரஸுடன் மன சஞ்சலம் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்க முடியுமானால், அது அதிர்ச்சிக்கு உரியது!

இவை அனைத்துக்கும் மேலாக, ஈழத் தமிழர் பிரச்னை! 2008 நவம்பர் மாதம் சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தி, தங்கள் கட்சி எம்.பி-க்கள் பதவி விலகப்போகிறார்கள் என்று அறிவித்தது முதல்... இன்றைக்கு வரை கருணாநிதி நித்தமும் நிகழ்த்திக் காட்டிய நாடகங்களின் பின்னணியில் லட்சக்கணக்கான மனித உயிர்கள் பலியானதுதான் மிச்சம்.

 தன்னுடைய அரசியல் அபிலாஷைகளுக்காக... தனக்கு 'தமிழினத் தலைவர்என்ற அங்கீகாரம் எதனால் கிடைத்ததோ, அந்தக் கொள்கையையே காவு கொடுக்க கருணாநிதி தயாரானார். கொத்துக் கொத்தாகச் செத்தது குறைந்து... தனித் தனியாகப் பலரும் மரணித்தபோது, 'மழைவிட்டாலும் தூவானம் விடாது அல்லவாஎன்று கருணாநிதி சொன்னதைப்போன்ற கல் நெஞ்ச வாக்குமூலம் உலகச் சர்வாதிகாரிகளின் வரிசையில் பொறிக்கத்தக்கது.

போர்க் குற்றவாளியாக ஐ.நா. இன்று சொல்லும் ராஜபக்ஷேவைக் கோபப்படுத்துவது மாதிரி எதுவும் பேசக் கூடாது என்று கேட்டுக்கொண்டார் கருணாநிதி. அரசியல் அதிகாரப் பதவி ஒரு மனிதரை இப்படி எல்லாமா மாற்றிவிடும் என்று சந்தேகப்படத்தக்க வார்த்தைகள் இவை.

இவை அனைத்தும் சேர்ந்துதான் தமிழக வாக்காளனின் மனசாட்சியைத் தட்டி எழுப்பி இருக்கிறது.

'உதவாது இனி தாமதம்என்று வாக்கு இயந்திரத்தில் அழுந்தக் குத்தி இருக்கிறார்கள்.

தனி நாடு கோரிக்கையைக் கைவிடும்போது, 'வேட்டுக்களால் தீர்மானிக்க முடியாததை, ஓட்டுக்களால் செய்ய முடியும்என்றார் அண்ணா. பாதை தவறிய தம்பியைப் பதம் பார்த்து இருக்கிறது ஓட்டு.

பொதுவாகவே, வீழ்ந்துபட்டவர்களை விமர்சிப்பது தவறானதுதான். ஆனால், வீழ்த்தப்பட்ட காரணங்களை உணர்ந்து சொல்வது தேவையானது.

 இது கருணாநிதிக்காக மட்டும் அல்ல... ஜெயலலிதாவுக்கும் சேர்த்து எழுதப்பட்ட கட்டுரை!
நன்றி..ஆனந்தவிகடன்.25.05.2011

3 comments:

bsatheeshme said...

கருணாநிதி இலங்கை தமிழர் விஷயத்தில் நாடகம் ஆடினார் அதனால் ஓட்டு விழவில்லை என்பது சரி....
இந்த நாடகத்தை அமைதியாக பார்த்த ஒரே காரணத்துக்காக ஜெயலலிதா இன்று முதல்வர் பதவிக்கு வந்துள்ளார்....
வந்தவுடன் இலங்கை பிரச்சனை ஒரு "international issue" இதில் தற்போதைய தமிழக முதல்வர் பங்கு மிக சிறியது என்று மழுப்ப பார்ப்பது என்ன கொடுமை....

shiva said...

You all should know one thing that in a globalised economy controlling of prices is not in the hands of Govt..On the other hand in country like India the whole responsibility fells on thew central govt.Prices are very high in other states like Asam,Kerala,West bengal.Hos did congress won in all these states.Power cut is seen in all the atates in India.if the govt tries to commence a coal power plant anywhere immediately there is protest everywhere saying it is damaging the environment.So what is the solution.Why the cost of living went up??? the farmers stopped doing agriculture,educate their kids and send them abroad to make more money.So the inflation rises and the production is low.So it is obvious that the prices goes up.So donot try to study and go abroad and do jobs to make money.Increase the production and the prices comes down.

K. hariharan said...

All people in Tamil Nadu should wake up atleast after this. they have been taken for ride (that too on a roller coaster) for last five decades. It has become worse than Orissa, Bihar and other backward states of India. We have to look at Gujarat under Narendra Modi( does any one know about his family or family members), or Nitish Kumar who has turned around Bihar which was under sorry state of affairs under Lalu Prasad and Rabri's family rule. History tries to teach us a lot but we just ignore warnings. Let's Hope Jaya too understands this and gives good administration and revive Tamil prestige.