Nov 13, 2012

தங்கமே தங்கம்...தங்கம் வாங்க போறீங்களா..?!

நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்குமிகச் சரியாகவே பட்டது. அவர் சொன்னது இதுதான். வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்ததோடு "சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான
தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது" என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்! 


வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்! இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்க கூடாது என்று முழங்கிஅவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்!
 
நண்பரின் ஆதங்கம் இதுதான். ' சேதாரம் என்ற பெயரில் நகைக் கடைகளில் பெருங் கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை? என்பதே அவரது நியாயமான கேள்வி"
 
அவரது குமுறல் மிக நீதியானதே என்பதுதான் எனது வாதமும். 16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங்கொள்ளையடிக்கிறார்கள் நகைக் கடை முதலாளிகள். இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் "ஒன்பதாயிரம் ரூபாய்" தெண்டம் அழ வேண்டும். ஏறக்குறைய 16 சதவீதம்? "எதற்காக இந்த தெண்டம்? 
 
பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்?" எந்த அதிமேதாவியும் இது வரை கேள்வி கேட்டதில்லை. அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித்தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள். போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை' கூல்' பண்ணுவார்கள். இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள். அதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலேயே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது...
சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு...
உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும். 
 
என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா? பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும்தானே வாங்க வேண்டும்? செய்கூலி கேட்பது நியாயம்தான். 16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்?
 
 இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை? பலசரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை?
 
 எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்? அவர்களிடம் வழிப்பறி செய்வதை விட மோசமான செயல் அல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது? 
 
பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான்? ஒரு நகைக் கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான்? 
 
மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில். கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது. இது போன்ற  கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும்...அல்லது திருத்தப் பட வேண்டும். 
விரைவில்இம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்...!
அதுவும் உங்களால் தான் முடியும்...

நன்றி :- Subra Maniyan & Muruganjapan Japanmurugan..facebook.

Oct 20, 2012

நேதாஜின் மர்ம மரணம் நேருவின் அரசியல் சூழ்ச்சி.


நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
 

எப்போதுமே மிதவாதத்துக்கும் தீவிரவாதத்துக்குமான ஆதரவில் இளைய சமுதாயம் இரண்டாவதில்தான்அதீத ஆர்வமும் ஆதரவும் கொண்டிருக்கும்.நேதாஜி என்ற பேரைக்கேட்டாலே இன்றளவும் இளைஞர் கூட்டம் எழுச்சியடைவதற்கான வரலாறு மிகப்பெரியது. 

பிரிட்டிஷார் இந்தியாவை அடிமைப்படுத்தியிருந்தபோது காந்தி ஒரு பக்கம் அஹிம்சைப் போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்தார். அதேப்போல நாடு முழுவதும் பலவிதமான குழுக்கள் ஆங்கிலேய அரசுக்கு எதிராக தீவிரவாதச் செயல்களிலும் ஈடுபட்டு வந்தனர்.
 


இந்தியாவில் முதன் முதலாக ஆங்கிலேயருக்கு எதிரான தீவிரவாதப்போராட்டத்தை இராணுவப்போராட்டமாக மாற்றியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்தான்.இன்றைய இந்திய இராணுவத்திற்கு அடித்தளமிட்டவரும் இவர்தான். 


சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய தலைவராக வந்திருக்கவேண்டிய நேதாஜி... உண்மையிலேயே என்ன ஆனார் என்று தெரியாமலேயே 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜப்பானில் நடந்த ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக அவருடைய வரலாறு முடிக்கப்பட்டதுதான் இன்று வரையிலும் சுதந்திர இந்தியாவின் தீராத மர்மங்களில் நேதாஜிக்கு முதலிடம் வழங்கியிருக்கிறது.
 

1945ம் வருடம் நேதாஜி ஜப்பானின் தாய்பே நகரில் நடந்த ஒரு விமான விபத்தில் இறந்ததாக அரசாங்கக்குறிப்புகள் மூடப்பட்டிருக்கின்றன. ஆனால் உண்மையில் அவர் அவ்வாறு இறக்கவில்லை. உண்மையில் அப்படியொரு விமான விபத்தே நடக்கவில்லை என்று அப்போதே செய்திகள் கசிந்திருக்கின்றன.

  1945ம் ஆண்டு நடைபெற்றுக்கொண்டிருந்த போரில் ஜப்பான் சரணடையும் முடிவை எடுத்த மூன்றாவது நாளில் நேதாஜி விமானவிபத்தில் இறந்ததாக வெளியிடப்பட்ட செய்தியே, ஆங்கிலோ-அமெரிக்க படைகளிடம் போர்க்கைதியாக சிக்காமலிருக்க நேதாஜியால் நடத்தப்பட்ட நாடகம்தான் என்றும் ஒரு தகவல் உலவுகிறது. நேதாஜி இறந்ததாக தகவல் வெளியான சமயத்தில் உண்மையில் அவர் ஜப்பானின் டோக்யோ நகரத்தின் வழியாக சோவியத் யூனியனுக்கு சென்று விட்டதாக தகவல் உண்டு.
 

இன்று வரையிலும் நேதாஜி விஷயத்தில் இந்திய மக்களுக்கு தெரியாமல் போன மர்மமாய் நீடிப்பதில் கீழ்க்காணும் விஷயங்கள் கவனிக்கப்படவேண்டியவை...
 

1) தாய்வானின் அதிகாரிகள் விமான விபத்து நடந்ததாகச் சொல்லப்பட்ட தேதியில் அப்படியொரு விபத்து நடந்ததாக எந்தவித ரெக்கார்டுகளும்இல்லை என்று மறுத்திருப்பது இந்திய அரசாங்கத்தால் பெரிதாகக் கண்டுகொள்ளப்படாமல் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
 

2) பிரிட்டிஷ் இண்டெலிஜென்சியின் ரகசியக்கோப்புகளில் பிரிட்டிஷ் பிரைம் மினிஸ்டர் கிளமெண்ட்ஸ் அட்லீ ‘’ போஸ் இப்போது எங்கிருக்கிறாரோஅங்கேயே இருக்கட்டும்’’ என்று முடிவெடுத்ததாக பதியப்பட்டிருக்கிறது. இது நடந்தது அக்டோபர் 1945ல். அப்படியென்றால் ஆகஸ்ட் 1945ல் போஸ் இறந்ததாகக் கூறப்பட்டது பொய்தானா?...
 

3) CIA எனப்படும் சென்ட்ரல் இண்டெலிஜென்ஸ் ஏஜென்சி 1950 வரையிலும் நேதாஜிக்கான தேடுதல் வேட்டையை தொடர்ந்திருக்கிறது. உண்மையிலேயே 1945லேயே நேதாஜி இறந்திருந்தால் 1950 வரையிலும் அவரைத்தேடியிருக்க வேண்டிய அவசியமென்ன?...
 

4) 1946ல் கம்யூனிஸ்ட் பார்ட்டியைச் சேர்ந்த கேலாச்சர் என்பவர் ஒரு பொதுமேடையிலேயே அப்போதைய இரீஷ் பிரசிடெண்ட் டி’வலேராவை டப்ளின் நகரில் நேதாஜியை வரவேற்றதாக விமர்சித்திருக்கிறார். டி’வலேராவும் இதற்கு மறுப்பேதும் தெரிவிக்காதது கவனித்தில் கொள்ளவேண்டிய முக்கிய அம்சம். அத்தோடு மட்டுமில்லாமல் 1946க்கு பிறகு இந்தியாவிற்கு வந்திருந்த டி’வலேரா பத்திரிக்கையாளர்களிடம் ‘’நான் இங்கே போஸை சந்திப்பேன் என்று எதிர்பார்த்து வந்தேன்’’ என்று தெரிவித்திருக்கிறார்!
 

5) பிரிட்டிஷ் இண்டெலிஜென்சின்ஒரு ரிப்போர்ட்டில் நேதாஜி எங்கிருக்கிறார் என்பது நேருவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அதனால்தான் அவர் வெளியுறவுத்துறையை மட்டும் தனது கட்டுப்பாட்டில்வைத்துக்கொண்டு விஜயலெட்சுமி பண்டிட்டை ரஷ்யாவுக்கான இந்தியத்தூதராக நியமித்திருக்கிறார் என்று குறிப்பெழுதப்பட்டிருப்பதாக ஒரு தகவலும் உண்டு.
 

6) ரஷ்யன் கம்யூனிஸ்ட் பார்ட்டியின் புரட்சியாளர் அபானி முகர்ஜீ என்பவரின் மகன் கோகா என்பவரை இந்தியத்தூதர் டாக்டர்.சத்யநாராயணா சின்ஹா சந்தித்தபோது, அவரிடத்தில் கோகா தனது தந்தையும் நேதாஜியும் சைபீரியாவில் சிறைக்கைதிகளாக பக்கத்து பக்கத்து அறைகளில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் அங்கே நேதாஜிக்கு சிறை ரெக்கார்டுகளில்‘கிளாசி மாலங்’ என்று பெயரிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதைவிட அதிர்ச்சிகரத்தகவல் என்னவென்றால் சிறையிலிருந்து நேதாஜி பலமுறை நேருவுக்கு தான் இந்தியாவுக்கு திரும்ப விரும்புவதாகவும், தன்னை மீட்பதற்கான ஏற்பாடுகளைச்செய்யுமாறும் கடிதம் எழுதியிருக்கிறார் என்பதுதான்!!!
 

7) 1946ல்தான், அதாவது நேதாஜி இறந்ததாகக் கூறப்பட்ட ஒரு வருடம் கழித்துதான் இந்திய அரசாங்கம் நேதாஜி இறந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை செய்திருக்கிறது.
 

8) நேதாஜியின் இறப்பு மர்மம் குறித்த விசாரணைக்கு இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி முகர்ஜி கமிஷனில் நிசாமுதீன் என்பவர் அளித்த வாக்குமூலத்தில்விபத்து நடந்ததாகக் கூறப்பட்ட விமானத்தில் கேப்டன் ஏக்ரம், லால்சிங் மற்றும் சில பெங்காளி வீரர்களும், மூன்று ஜப்பானியர்களும்மட்டுமே அதில் பயணித்ததாகவும்,நேதாஜி அதிலில்லை என்றும் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
 

9) விபத்து நடந்ததாகக் கூறப்பட்ட தேதியிலும், அதற்கு முன்னர் மற்றும் பின்னர் இருக்கும் பத்து நாட்களிலும் தாய்பேயில் அப்படி எந்தவொரு விமான விபத்தும் நடக்கவில்லை என்று கூறப்பட்டிருந்தநீதிபதி முகர்ஜி கமிஷனின் அறிக்கையை இந்திய அரசாங்கம் ஏன் நிராகரித்தது?...
 

10) நேதாஜி விமான விபத்தில் இறந்ததாக இந்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் இதுவரையிலும் அந்த விமான விபத்து பற்றிய புகைப்படங்களோ... இல்லை… அந்த விமான விபத்தில் இறந்தவர்களின் உடல்களைப்பற்றியதகவல்களோ ஏனில்லை?...
இதைப்போன்ற விடையில்லா கேள்விகள் போலவே நேதாஜியின் விஷயத்தில் நீடித்திருக்கும் மர்மத்திற்கு காரணம் நேருவே என்றும் ஒரு தகவல் உண்டு. 


சுதந்திரத்திற்கு பிறகான ஆட்சிக்கு குறிவைத்த நேருவுக்கு அக்காலத்தில் மிகப்பெரிய தலைவலியாய் தெரிந்தவர் அமோக மக்கள் ஆதரவு கொண்ட நேதாஜி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. நேதாஜியை நேருவே கடைசிவரை ரஷ்யாவிலேயே வீட்டுச்சிறையில் வைத்திருந்ததாகவும் சில தகவல்கள் உலவுகின்றன. 

நேதாஜி இந்தியாவுக்குள்1985 வரையிலும் ‘’பகவான்ஜி’’ என்ற பெயரில் உத்திரப்பிரதேசத்தில் ஒரு ஆன்மீகவாதியாய் வாழ்ந்ததாகவும் தகவலுண்டு.
 

எது எப்படியோ?... நேதாஜியின் இறப்பு இன்று வரையிலும் சர்ச்சைகள் விலகாத இந்தியாவின் டாப் மர்மமாகவே நீடித்திருக்கிறது...

எப்படி உலகம் முழுக்க இன்னமும் தீர்க்கப்படாத பல மர்மங்கள் விடையில்லா கேள்விகளுடன் உறங்குகிறதோ... அதேப்போல நம் இந்தியாவிலும் பல மர்மங்கள் உண்டு. எண்ணிலடங்கா மர்மங்கள் இருந்தாலும் இந்தத்தொகுப்பு டாப் லிஸ்ட் மட்டுமே...
இது முழுக்க முழுக்க(http://www.facebook.com/tamilkudimahan)
தொகுக்கப்பட்ட விஷயங்கள் மட்டுமேயொழிய
 எனது  தனிப்பட்ட கருத்துக்கள் எதுவும் இதிலில்லை.

Sep 23, 2012

பி.ஜே.பி-யின் உலக மகாப்பித்தலாட்டம்.வைகோவின் சாஞ்சி போராட்டம்


ராஜபக்ஷேவுக்கு எதிராக தமிழ்நாட்டு வீதிகளில் மட்டும் கறுப்புக்கொடி காட்டி, கண்டனம் தெரிவித்த தமிழ் ஈழ ஆதரவாளர்கள், இப்போது ராஜபக்ஷே செல்லும் இடம் எல்லாம் தங்களது எதிர்ப்பைக் காட்டத் தொடங்கி விட்டனர்!
ஜூ.வி.யில் இன்று வெளியாகி இருக்கும் வைகோவின் போராட்டம் பற்றிய விரிவான தகவல் இங்கே.
 
நாங்கள் இந்தியப் பிரஜையா... இல்லையா?

மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சிக்கு வந்து புத்தர் கல்வி மையத்தைத் திறக்கப்போகிறார் இலங்கை அதிபர் ராஜபக்ஷே என்ற தகவல் கிடைத்த உடனேயே, 'அவருக்கு அங்கேயே போய் எங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்போம்’ என்று வைகோ அறிவித்தார். உடனே, ம.பி. மாநிலத்தை ஆளும் பி.ஜே.பி. முதல்அமைச்சர் சிவராஜ்சிங் சௌகான், வைகோவுக்கு எழுதிய கடிதத்தில், 'போராட்டத்துக்கு அனுமதி இல்லை’ என்றார். 'தடையை மீறிப் போராட்டம் நடத்த வருவோம்’ என்று வைகோவும் அறிவித்தார். அவ ரைச் சமாதானப்படுத்த சுஷ்மா சுவராஜ் போனில் பேசியதாகவும், ஆனால் பேசுவதற்கு வைகோ மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
 

இந்தநிலையில், கடந்த 17-ம் தேதி மாலை, சென்னைக் கடற்கரையில் பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் இருந்து ம.தி.மு.க-வினர் புறப்பட்டனர் சாஞ்சியை நோக்கி. 21 பேருந்துகளில் சுமார் 1,000 பேர் சென்றனர். 'ராஜபக்ஷேவே வெளியே போ! இந்திய அரசே... கொலைகாரனை அனுமதிக்காதே’ என்று முழக்கமிட்டனர். ''புத்தக் கல்வி மையம் அடிக்கல் நாட்டுவதற்கு ராஜபக்ஷேதான் கிடைத்தாரா? காந்தி சிலைக்கு மாலை போட கோட்சேவா? இலங்கையில் 2,076 இந்துமதக் கோயில்களை ராஜபக்ஷே இடித்துள்ளார். இந்து மதத்தைப் போற்றும் பாரதிய ஜனதா... ஒரு மத வெறியனையா வரவேற்கிறது? எங்கள் மக்களைக் கொன்ற கொலைகாரன் நாங்கள் வாழும் நாட்டுக்கே வருகிறான். நாங்கள் இந்த நாட்டு மக்களா இல்லையா என்று நீங்களே முடிவு செய்யுங்கள்'' என்று ஆவேசமாகப் பேசிவிட்டுக் கிளம்பினார் வைகோ!

சரத்பவார் செல்வாக்கில் ராஜமரியாதை!

19-ம் தேதி அதிகாலை நாக்பூர் வந்தடைந்தது மறுமலர்ச்சிப் பேருந்துகள். சரத் பவார் கட்சியான தேசியவாத காங்கிரஸின் நாக்பூர் தலைவர் அஜய் பாட்டில், வைகோவை வரவேற்றார். அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவிய திக்சா பூமிக்குச் சென்று அம்பேத்கர் சிலைக்கும் புத்தர் சிலைக்கும் வைகோ உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

மகாராஷ்டிரா காவல் துறை பலத்த பாதுகாப்பு கொடுத்தது. ஆனால், மத்தியப் பிர தேச உளவுத்துறை போலீஸ் இங்கேயே வந்து, தனது கண்காணிப்பைத் தொடங்கியது. 'தேவை இல்லாமல் இங்கே வராதீர்கள்’ என்று அவர்களை மகாராஷ்டிரா போலீஸ் எஸ்.பி. எச்சரிக்கை செய்தார். ஆனாலும், மகாராஷ்டிரா மாநில எல்லை வரை நாக்பூர் தேசியவாத காங்கிரஸின் தலைவரும் சரத்பவாரின் உறவினருமான அஜய் பாட்டில் ஆதரவாளர்கள் வந்தனர். ''இதோடு எங்களது எல்லை முடிந்து விட்டது...'' என்று வழியனுப்பிச் சென்றனர்.

எல்லையில் காத்திருந்த படைகள்!

மத்தியப் பிரதேச எல்லையில் சன்டவாரா மாவட்ட ஆட்சியரோடு நின்றுகொண்டிருந்தது போலீஸ். 'உள்ளே நுழையக் கூடாது’ என்று அவர்கள் சொல்ல... 'அமைதியான வழியில் கறுப்புக்கொடி காட்டத்தான் நான் வந்துள்ளேன். இது, ஜனநாயக உரிமை. இந்தியாவின் எந்த மாநிலத்துக்குள்ளும் நாங்கள் செல்வதற்கு உரிமை உண்டு’ என்று வைகோ சொன்னார். அதை அவர்கள் ஏற்கவில்லை. 'இங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. எனவே நீங்கள் செல்ல முடியாது’ என்றார்கள். அதற்குள் ரோடு ரோலர், வஜ்ரா, டிராக்டர் வண்டிகளை சாலையில் கொண்டுவந்து நிறுத்தினர். அதோடு, 2,000 போலீஸார் அழைத்து வரப்பட்டனர்.

மகாராஷ்டிராவை ஒட்டிய எல்லைப் பகுதியில் வைகோ தரப்பும் மத்தியப் பிரதேச எல்லைப் பகுதியில் அந்த மாநிலப் போலீஸ் படையும் எதிரெதிராக நின்றது. 19-ம் தேதி மதியம் 3.30 மணி அளவில் இந்த அறவழிப் போராட்டம் தொடங் கியது. மத்தியப் பிரதேச அரசு, இளையராஜா என்ற துணை ஆட்சியரை (ஈரோட்டைச் சேர்ந்தவர்) சமாதானம் செய்ய அனுப்பியது. பூங்கொத்து கொடுத்து வரவேற்பு கொடுத்தவர், 'இதற்கு மேல் உங்களை அனுமதிக்க முடியாது’ என்றார். ஆனால், அவர் சொன்ன சமாதானத்தை வைகோ ஏற்கவில்லை. அதற்குள் இருட்ட ஆரம்பித்தது. அந்தப் பகுதியில் சாலையோர விளக்குகள் எதுவும் எரியவில்லை. உடனடியாக புதிய விளக்குகள் மாட்டப்பட்டன.

விருந்தினர் மாளிகைக்குப் போக மாட்டேன்!

ம.பி. போலீஸிடம், ''ராஜபக்ஷே வர இருக்கும் சாஞ்சிக்குச் சென்று கறுப்புக்கொடி காட்டத் திட்டமிட்டோம். இதைக் குறிப்பிட்டு நான் முதலமைச்சர் சௌகானுக்குக் கடிதம் எழுதினேன். அவர் எனக்கு எழுதிய பதிலில் 'ஆசிய கண்டத்தில் சமாதானத்தை வளர்க்கத்தான் அவரை இங்கே அழைத்து வருகிறோம்’ என்று சொல்லி இருந் தார். என்னைத் தொடர்பு கொண்ட போபால் போலீஸ் கமிஷனர் விஜய் யாதவ். 'உங்களுக்குப் போபாலில் போராட்டம் செய்ய ஒழுங்கு செய்துள்ளோம். ஆனால், சாஞ்சியில் அனுமதிக்க முடியாது’ என்று கூறினார். ஆனால் இப்போது, என்னை 350 கி.மீட்டருக்கு முன்னரே தடுத்து நிறுத்தி உள்ளீர்கள். இது, பி.ஜே.பி-யின் உலக மகாப்பித்தலாட்டம். நாங்கள் ஆயுதம் ஏந்திப் போராடவில்லை. பலாத்காரத்தைப் பயன்படுத்தி என்னைக் கைது செய்ய நினைத் தால், செய்து பாருங்கள். துப்பாக்கியையும் லத்தி யையும் காட்டி எங்களைப் பயமுறுத்த முடியாது'' என்று உணர்ச்சிகரமாகப் பேசினார் வைகோ. ஆனாலும், ''உங்களை இதற்கு மேல் அனுமதிக்க முடியாது'' என்பதையே போலீஸார் திரும்பத் திரும்பச் சொன்னார்கள்.
 

''நீங்கள் இங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்குங்கள். உங்களை நாங்கள் கைது செய்யவில்லை'' என்று போலீஸ் சொன்னதையும் வைகோ ஏற்க வில்லை. ''நான் மத்தியப் பிரதேசத்துக்கு உங்களது விருந்தாளியாகத் தங்குவதற்கு வரவில்லை. போராட் டம் நடத்த வந்துள்ளேன். எனவே, உங்களோடு எந்த சமாதானமும் கிடையாது'' என்று வைகோ சொன்னார்.

தோள் கொடுத்த மக்கள்!

இந்த வாக்குவாதங்கள் நடந்த பட்சிசோலி பகுதியில் ஊர் மக்கள் கூட ஆரம்பித்தனர். அவர் களுக்கு இந்தியில் போராட்டக் காரணங்களை ம.தி.மு.க. தொண்டர்கள் விளக்கிச் சொன்னார்கள். வைகோ பேசியதையும் இந்தியில் மொழிபெயர்த்துச் சொன்னார்கள். ஈழப் பிரச்னை குறித்து இந்தியில் அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் தரப்பட்டன. இதேநிலை நீடிக்க... 19-ம் தேதி இரவு முழுக்க ரோட்டில் அனைவரும் படுத்துத் தூங்கினார்கள்.

20-ம் தேதி மாலை வரை வைகோ உள்ளிட்டவர்கள் 'தடையை மீறி கறுப்புக் கொடி காட்டியே தீருவது’ என்று விடாப்பிடியாக உட்கார்ந்து இருந்தனர்.

இலங்கைப் பிரச்னை மாநிலம் கடந்து மக்கள் கவனத்தை ஈர்க்கும் விஷயமாக மாற இந்தப் போராட்டம் காரணமாகி விட்டது!

Sep 5, 2012

தமிழீழத்திற்கு எதிராகராஜிவ் காந்தி, மு.கருணாநிதி கூட்டுச்சதி அம்பலம்.

1991-ம் ஆண்டில் இலங்கையின் குடியரசுத் தலைவராக பிரேமதாசா பதவியேற்றபோது இலங்கையில் இருந்து இந்தியப் படைகள் வெளியேற வேண்டுமென வற்புறுத்தத் தொடங்கினார். இதன் அடிப்படையில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தார். பிரேமதாசாவுடன் புலிகள் பேச்சுவார்த்தை தொடங்கினால், உலக அளவில் தன் மரியாதை அடியோடு போய்விடும் என ராஜீவ்காந்தி பதைபதைத்தார். இதை எப்படியும் தடுக்க வேண்டும் என துடிதுடித்தார்.

பிரேமதாசாவுடன் புலிகள் பேச்சுவார்த்தை நடத்தாமல் இருந்தால், அவர்களுக்குத் தேவையான சலக உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக அவர் கூறினார். புலிகளிடம் கூறி அவர்களை ஒப்புக்கொள்ளவைக்கும் பொறுப்பை அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியிடம் ஒப்படைத்தார்.

கருணாநிதியின் அழைப்பை ஏற்று புலிகளின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் சென்னைக்கு வந்து அவரைச் சந்தித்துப் பேசினார். அப்போதுகூட பிரதமர் வி.பி.சிங் தனக்கு முழு அதிகாரம் அளித்திருப்பதைப் பயன்படுத்திப் பிரச்னையை சுமுகமாகத் தீர்த்திருக்கலாம். ஆனால், புலிகளுக்கு எதிரான உள்ளம் படைத்த அவருக்கு அவ்வாறு செய்ய விருப்பம் இல்லை. 

மாறாக, வரதராசப் பெருமாள் தலைமையில் உள்ள வடகிழக்கு மாகாண அரசில் சரிபாதி இடங்களை புலிகளுக்குப் பெற்றுத் தருவதாகவும் இதை ஏற்றுக்கொண்டால் இந்திய அரசின் உதவியும் கிடைக்கும் என கூறினார். மக்களிடம் செல்லாக்காசாய்ப் போன வரதராசப்பெருமாள் அரசில் அங்கம் வகிக்க பாலசிங்கம் மறுத்தார். 'மீண்டும் ஒரு தேர்தல் நடத்தப்படுமானால் புலிகள் பங்கேற்கத் தயார்’ என்றார். தான் விரித்த வலையில் புலிகள் சிக்காததன் விளைவாக கருணாநிதி இந்தப் பிரச்னையில் தன்னால் முடிந்ததைச் செய்தாகி விட்டது எனக் கூறி ஒதுங்கிக்கொண்டார்.

தொடர்ந்து, புலிகளுக்கு எதிரான காழ்ப்புஉணர்ச்சி அவரிடம் இருந்து மறையவில்லை. தமிழீழத்தில் படு காயமடைந்த போராளிகளை தமிழகம் கொண்டுவந்து தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை அளிப்பது குறித்து முதல்வர் கருணாநிதிக்குத் தெரிவித்து அவரின் சம்மதத்தைப் பெற்ற பிறகே போராளிகள் தமிழ்நாடு வந்தனர். ஆனால், சிகிச்சை பெற்றுவந்த அந்தப் போராளிகளை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தார் கருணாநிதி.

இதுகுறித்து, பிரபாகரன் 19.3.1998-ம் ஆண்டு எனக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு வேதனையுடன் குறிப்பிட்டுள்​ளார்: 'எமது போராளிகளில் பலர் அதுவும் காயமடைந்து, ஊனமடைந்​தவர்கள் இன்னும் தமிழக சிறைகளுக்குள் அநியாயமாக அடைப்பட்டுக்கிடப்பது எமக்கு ஆழ்ந்த வேதனையைக் கொடுக்கிறது. 90-ல் கலைஞரின் காருண்யத்தை நம்பி அவரது வேண்டுகோளின் பேரில் அனுப்பப்பட்ட போராளிகள் தொடர்ந்தும் சிறைகளில் பூட்டி வைக்கப்பட்டிருப்பது மனிதாபிமானமற்ற அநீதியான செயல்.''

இதற்கு முன்பாக 23.7.1997 அன்று எனக்கு அவர் எழுதிய மற்றொரு கடிதத்தில், 'மருந்துப் பொருட்கள் எடுப்பதற்காக அங்கு வந்த எமது போராளிகள் பிடிபட்டு இதுவரை 50 லட்சம் வரையான பணம் தமிழ்நாட்டுப் போலீஸாரிடம் பிடிபட்டு உள்ளது. எமக்கிருக்கும் எவ்வளவோ பணக் கஷ்டத்தின் மத்தியிலும் மருந்துப் பொருட்கள் வாங்க அனுப்பிய பணம், தமிழ் தமிழ் என முழங்கும் கலைஞரின் ஆட்சியிலே பறிக்கப்படுவதுதான் வேதனையைத் தருகிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

'வீரம், ஆற்றல் உட்பட அனைத்திலும் யாருக்கும் சளைக் காதவர்களாக ஈழப் போராளிகள் இருந்தும் இறுதிப்போரில் தோல்வியுற்றனர். போரில் ஈடுபட்ட தலைவர்கள் பலரும் மடிந் தனர். இதற்குக் காரணம் ஈழப் போராளிகளிடையே ஒற்றுமை இல்லாததுதான்'' என 24.8.2012 அன்று சென்னையில் நடைபெற்றக் கூட்டத்தில் கூறியுள்ள கருணாநிதிதான் கடந்த காலத்தில் இப்படிச் செய்தவர்.

1987-க்குப் பிறகு, புலிகளைத் தவிர மற்ற இயக்கங்கள் ஒவ்வொன்றாக சிதறி விட்டன. சிங்கள அரசின் கைக்கூலிகளாக மாறிவிட்டன. சிங்கள அரசை எதிர்த்து இவர்கள் ஒருபோதும் போராடவில்லை. சிங்கள ராணுவத்துடன் இறுதிவரை போராடியவர்கள் விடுதலைப் புலிகள் மட்டுமே. அதை மறைத்து கருணாநிதி பேசி இருக்கிறார். 1990-ல் இருந்து 2008-ம் ஆண்டு வரை நடைபெற்ற அத்தனை போர்களிலும் புலிகள் வெற்றிவாகை சூடி இருக்கிறார்கள். 18 ஆண்டு காலமாக சிங்கள ராணுவத்துடன் நடைபெற்ற போர்கள் குறிப்பிடத்தக்கவை. யாராலும் வெல்லப்பட முடியாதது எனக் கருதப்பட்ட ஆனையிறவு ராணுவ முகாமை மூன்றே நாட்களில் அழித்து வெற்றிக்கொடி நாட்டியவர்கள் புலிகள்.

ஆனால், 2009 ஆண்டில் அவர்களின் தோல்விக்கு சகோதரச் சண்டை காரணம் அல்ல; மாறாக, இந்தியா, சீனா, பாகிஸ்தான் உட்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றுகூடி சிங்கள ராணுவத்துக்குத் தேவையான ராணுவ உதவி உட்பட சகல உதவிகளையும் செய்தன. இந்தியாவின் ஓய்வுபெற்ற தளபதியான லெப். ஜெனரல் சதீஷ் சந்திரா, சிங்கள ராணுவத்தின் ஆலோசகர் பொறுப்பை ஏற்றார். இந்தியக் கடற்படை இலங்கையைச் சுற்றிலும் நிறுத்தப்பட்டு புலிகளுக்கு ஆயுதம் ஏந்தி வந்த 13 கப்பல்களை மூழ்கடித்தது. இந்தக் காரணங்களினால்தான் புலிகள் வெற்றி பெற முடியவில்லை.

இந்த உண்மைகளை மறைத்து கருணாநிதி பேசுகிறார். சிங்கள அரசுக்கு எல்லா வகை ஆதரவும் அளித்த இந்திய அரசையும் அதற்குத் துணையாக நின்ற தனது செயலையும் மூடி மறைப்பதற்காக சகோதர யுத்தத்தால்தான் ஈழத்தில் அழிவு ஏற்பட்டதாக முழுப் பொய்யைக் கூசாமல் சொல்கிறார். என்னதான் இவர் உண்மைகளை மூடிமறைக்க முயற்சி செய்தாலும் அது, ஒருபோதும் வெற்றிபெறாது.