கோயில் என்றதும் மனதில் சில சித்திரங்கள் தோன்றுகின்றன. வானுயர்ந்த கோபுரத்தின் கம்பீரம், அகன்ற வாசல் கதவுகள். வெண்கலக் குமிழ் பதித்த படிகள். கோபுர வாசலில் நிற்கும் முகப்படாம் பூண்ட யானை. உள்ளே நடந்தால் செவியை நிறைக்கும் நாகஸ்வர மேளத்துடன் கூடிய மங்கள இசை. அபூர்வமான சிற்ப வேலைப்பாடு நிறைந்த தூண்கள். சுவர் ஓவியங்கள். அந்த ஓவியங்களைக்கூட உயிர்பெறச் செய்யும் ஓதுவாரின் தெய்விகக் குரல். கல் விளக்குகள். அதன் ஒளிர்விடும் சுடர்கள்.
பகலிலும் பாதி இருண்ட கர்ப்பக்கிரகம். தீப ஒளியில் காணும் தெய்வ உருவங்கள். அதன் சர்வ அலங்காரம். பூ வேலை. மனதை ஒருமுகப்படுத்தும் மணியோசை. கண்மூடிக் கைகூப்பித் தன்னை மறந்து நிற்கும் மனிதர்கள். அவர்களின் மெல்லிய உதட்டு அசைவுகள். அவரவர் பிரார்த்தனைகள். சூடம் எரியும் மணம். சந்தனம். விபூதி, குங்குமம் அல்லது துளசி தீர்த்தம். நீண்ட அமைதியான பிராகாரம். அங்கே அமர்ந்து ருசிமிக்க பிரசாதம் உண்டு, பிரச்னைகளைக் கடவுளிடம் ஒப்படைத்துவிட்டோம். இனி, நிம்மதியாக வீடு திரும்பலாம் என ஆசுவாசம்கொள்ளும் முகங்கள்.
கோயிலைவிட்டு வெளியேறும் மனிதன் முகத்தில் சாந்தமும் நிம்மதியும் ஒன்று கூடியிருக்கும். இதுதான் கோயில் குறித்த எனது கடந்த கால நினைவுகள். இந்தியாவின் பழமையான, முக்கிய, பெரும்பான்மையான கோயில்களுக்குச் சென்று இருக்கிறேன். வழிபாடுகள், பிரார்த்தனைகளைவிடவும் கோயில் சார்ந்த சிற்ப ஓவியக் கலைகள் மற்றும் இசை மீது எனக்கு அதிக ஆர்வம் உண்டு. அதற்காகத் தேடித் தேடிப் பார்த்துஇருக்கிறேன். சில கோயில்களை அதன் வடிவமைப்புக்காகவும் அங்கு நிரம்பியுள்ள நிசப்தத்துக்காகவும் தேடிப் போய் வருவேன்.
ஆனால், நடைமுறையில் தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில்கள் இப்படியா இருக்கின்றன. கோயில் வாசல்படியில் ஆரம்பித்து, வெளியேறும் வழி வரை நடைபெறும் வசூல்வேட்டைக்கு நிகராக வேறு எங்குமே காண முடியாது. கோயிலுக்குள் செல்லும்போது குற்றவாளிகூட மனத் தூய்மை பெறுவான் என்று சொல்வார்கள். இன்றோ, கோயிலுக்குச் சென்று நிம்மதியைத் தொலைத்து வந்த கதை தமிழகத்தில் பலருக்கும் நடந்திருக்கிறது. கோயில்களில் நடைபெறும் தரிசன முறைகேடுகள், கையூட்டுகள், அதிகார அத்துமீறல்கள் பட்டியலிட முடியாதவை.
ஏழை எளிய மக்கள் நிம்மதியும் சாந்தியும் தேடி வரும் கோயில்கள் ஏன் இப்படிக் கொள்ளை அடிக்கும் மையமாக மாறிப்போனது. காசை வாரி இறைத்தால் மட்டுமே கடவுளை அருகில் சென்று வணங்க முடியும் என்ற அவலத்தை ஏன் சகித்துக்கொண்டு இருக்கிறோம். 'கோயில், கொடியவர்களின் கூடாரமாகிவிடக் கூடாது' என்று கொதித்து எழுந்தான் 'பராசக்தி' படத்தில் குணசேகரன். ஆனால், இன்று தமிழகக் கோயில்களைப்போல பக்தர்களைத் துச்சமாக, அவமரியாதையாக நடத்தும் கோயில்கள் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.
பல லட்சம் பேர் கலந்துகொள்ளும் ஹரித்துவாரின் கும்பமேளாவில் ஓர் இடம்கூட அசுத்தமாக இல்லை. குப்பைகள், கழிவுகளைக் காண முடியாது. அவ்வளவு தூய்மை பராமரிக்கப்படுகிறது. தரிசனம் துவங்கி, சாப்பாடு, தங்கும் இடம் வரை அத்தனையும் இலவசம். ஆனால், தொடரும் தமிழகக் கோயில்களின் அவலத்தைப் போக்கும்படியாக ஏதாவது ஒரு கடவுளிடம் முறையிடவேண் டும் என்றால்கூட அதற்கும் நாம் காசு செலவழித்தே ஆக வேண்டிய துர்ப்பாக்கிய நிலைதான்.
தொடபுடைய இடுகை
நவக் கிரகங்களில் முதன்மைக் கிரகமான
தொடபுடைய இடுகை
நவக் கிரகங்களில் முதன்மைக் கிரகமான
Tweet | |||||
No comments:
Post a Comment