May 20, 2010

நவக் கிரகங்களில் முதன்மைக் கிரகமான

நவகிரக கோயில்
நவக்கிரகக் கோவில்கள் - பகுதி ஒன்று!


நவக்கிரகக் கோவில்கள் அனைத்தும் தஞ்சை மாவட்டத்திலே உள்ளன.

ஏன் தஞ்சை மாவட்டத்திலேயே உள்ளன?

சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பெற்ற கோவில்கள் அவைகள். அதனால் தஞ்சை மாவட்டத்திலேயே அவைகள் இடம் பெற்றுள்ளன. சோழ மன்னர்கள் காலத்தில் குடந்தையில் (தற்போதைய கும்பகோணம்) நிறைய ஜோதிட விற்பன்னர்கள் (experts) இருந்ததாகவும், அவர்களின் ஆலோசனைப்படியும், ஆகம விதிகளின் படியும், மன்னர்கள் கோவில்களை அமைத்ததாக வரலாறு.

நூறுக்கணக்கான ஆண்டுகளாக, பல லட்சக்கணக்கான மக்கள் சென்று வந்ததாலும், பல லட்சம் முறைகள் கோள்களுக்கான மந்திரங்கள் உரக்க ஒலிக்கப்பெற்றதாலும், அக்கோவில்களுக்கு, ஒரு சக்தி உள்ளது.

அசட்டுக் கேள்விகளைத் தவிர்த்து, நம்பிக்கையோடு அத்தலங்களுக்குச் சென்று அங்கே உறையும் கிரகங்களை வழிபட்டு வாருங்கள், உங்கள் துன்பங்கள் நீங்கும். வாழ்க்கையில் மாறுதல்கள் உண்டாகும். மறுமலர்ச்சி உண்டாகும்!

சூரியனார் கோவில்

நவக் கிரகங்களில் முதன்மைக் கிரகமான சூரியனுக்கான கோவில்

குலோத்துங்க சோழனால், 1100ஆம் ஆண்டு கட்டப்பெற்றது.

கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில், திருமங்கலக்குடி என்னும் கிராமத்தின் அருகில் உள்ளது.

ஸ்தல மூர்த்தியின் பெயர் ஸ்ரீசூரியநாராயணமூர்த்தி. உடன் ஸ்ரீஉஷா தேவியும், ஸ்ரீபிரத்யுஷ தேவியும் உள்ளார்கள். மற்ற எட்டு கிரகங்களும் சூரியனை நோக்கி இருக்கும் வண்ணம் அமையப்பெற்றுள்ளது.

கோவிலுக்குள் காசிவிஸ்வநாதருக்கும், விசாலாட்சி அம்மனுக்கும் கருவறைகள் உள்ளன. (அவர்கள் இல்லாமல் கோவில் ஏது?) கோள்தீர்த்த விநாயகருக்கும் கருவறை உள்ளது.

சூரிய பகவான், உடல்காரகன் (உடல் ஆரோக்கியத்திற்கு அதிபதி) வெற்றிக்கும், வளர்ச்சிக்கும் அதிபதி.

யார், யார் போகலாம்?

யார் வேண்டுமென்றாலும் போகலாம். போய் வரலாம். இறைவனையும், கோள்களையும் வணங்கக் கட்டுப்பாடுகள் எதுவுமில்லை.

ஜாதகத்தில் சூரியன் நீசமடைந்திருந்தாலும், சூரியனுடைய திசை நடைபெற்றாலும், அல்லது அடிக்கடி உடற்கோளாறுகள் ஏற்பட்டாலும், அவர்கள் தவறாமல் ஒருமுறையாவது போய் வரவேண்டும். அதுபோல கோச்சாரத்தில் ஜன்மச் சனி, அஷ்டமச்சனி நடைபெறும் காலங்களில் ஜாதகர் சென்று வரலாம். சனியின் தாக்கங்களைத் தாக்குப்பிடிக்கும் சக்தியை சூரியபகவான் கொடுப்பார்.

கோதுமை, செந்தாமரை மலர் (சிவப்புத் தாமரை மலர்) மற்றும் எருக்கம்பூ ஆகியவைகள் இங்கே பூஜைக்கு உகந்தவையாகும்

கோவிலின் கருவறையும், அர்த்தமண்டபமும், கருங்கற்களால் கட்டப்பெற்றதாகும். சூரியக் கதிர்கள் முழு வீச்சில் கோவிலுக்குள் வரும்படி கோவில் அமைந்திருப்பது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். மூன்று நிலைகளைக் கொண்ட கோபுரமும் உள்ளது.

சூர்ய புஷ்கரணி என்னும் ஸ்தல தீர்த்தமும் அருகில் உள்ளது. அதாவது ஊருணியும் உள்ளது. ராஜகோபுரத்தின் வடக்குப் பகுதியில் உள்ளது. பக்தர்கள் இங்கே புனித நீராடலாம்.

கோவிலின் பலிபீடத்திற்கு அருகே குதிரை வாகனமும் உள்ளது. அது சூரியனுக்கான வாகனம் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

இங்கே செல்பவர்கள் முதலில் கோள்தீர்த்த விநாயகரை முதலில் வணங்கிவிட்டுப் பிறகு சூரிய பகவானை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.

கோவிலின் விழாக்காலங்கள்

தை மாதம் சப்தமி திதி. ஆவணி மற்றும் கார்த்திகை மாதங்களில் முதல் ஞாயிற்றுக்கிழமை. விஜயதசமி ஆகிய தினங்களில் கோவில் விழாக்கோலத்துடன் இருக்கும்.

சூரியனுக்கு உகந்த நாள் ஞாயிற்றுக்கிழமை. ஆகவே அந்த தினத்தில் செல்வது சிறப்பாக இருக்கும். கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம் காலை 6:00 மணி முதல் 12:30 மணி வரை. மாலை 4:00 மணி முதல் 8:00 மணிவரை

கும்பகோணத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரம். மயிலாடுதுறையில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரம். பேருந்துகள் அதிக அளவில் உள்ளன.

நம்பிக்கை உள்ளவர்கள் சென்று வரலாம். நலன்களைப் பெற்று வரலாம்!
------------------------------------

No comments: