Nov 1, 2010

என் தேசத்தின் குழந்தை மலர்களை காப்பாற்று இறைவா


கடந்த இரண்டு நாட்களாக அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது கோவை. பணத்துக்காக இரு பள்ளிக்குழந்தைகள் கடத்தப்பட்டு, இரக்கமற்ற கொடூரனால் கொலை செய்யப்பட்ட சம்பவம்,  அதிர வைத்துள்ளது. காலையில் உற்சாக ஊற்றாய் பள்ளி கிளம்பிய குழந்தைகளை இனி எப்போதும் காணப்போவதில்லை என, அவர்களின் தாய் கனவிலும் கூட நினைத்துப்பார்த்திருக்க மாட்டார்

பள்ளிக்கு வழக்கமாக செல்வதற்காக குழந்தைகள் காத்திருக்கின்றன. வழக்கம் போல் கார் வருகிறது; நீண்ட நாட்களாக வராத டிரைவர் வருகிறார். ஆனால், ஏற்கனவே நன்கு பழக்கமான டிரைவர் என்பதால், தம்பியுடன் வாகனத்தில் நுழைகிறாள் அச்சிறுமி.அதற்குப்பின் நடந்தது சோகசம்பவம். குழந்தைகள் கடத்தப்பட்டதை, மிக தாமதமாக உணரும் பெற்றோர், போலீசில் புகார் செய்கின்றனர். போலீஸ் சுறுசுறுப்பாக செயல்பட்டபோதும், நிலைமை கைமீறி விட்டது. கோவையில் இருந்து 70 கி.மீ., தூரத்தில் உள்ள உடுமலை அருகே பி.ஏ.பி., கால்வாயில் புத்தகப்பை மிதக்கிறது என்ற தகவல், விபரீதம் நிகழ்ந்திருப்பதை சுட்டிக்காட்டியது.போலீசாரின் வாகன சோதனையில் குற்றவாளி சிக்கினான்.


 "பணத்துக்காக கடத்தினேன். மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில், கால்வாய்க்குள் குழந்தைகளை தள்ளிவிட்டேன்' என "பகீர்' தகவலை அந்த கொடூரன் சொல்ல, அலறியடித்தபடி கால்வாயில் தேடியது போலீஸ். தள்ளிவிட்ட இடத்தில் இருந்து 70 கி.மீ., தூரத்தில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. இன்னொரு பிஞ்சின் உடல்,  பொள்ளாச்சி கெடிமேடு அருகே  மீட்கப்பட்டது.சம்பவம் அறிந்ததும், கோவை மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். முதல்நாள் சம்பவம் கேள்விப்பட்டதும், "பணத்துக்காக கடத்தியிருப்பர். குழந்தைகள் எப்படியும் மீட்கப்படும்' என்றுதான் எண்ணியிருந்தனர். அவர்களின் பெற்றோரைப்போலவே, கோவை மக்களும் பதைபதைத்துக் காத்திருந்தனர். ஆனால், நிதர்சனம் வேறாக இருந்தது. எவரது பிரார்த்தனையும் பலிக்கவில்லை.


சிறுமி முஸ்கின் சடலம் முன்னதாகவே மீட்கப்பட்டதால், நேற்று காலை முஸ்கினின் இறுதி ஊர்வலம் நடந்தது. முஸ்கின் மரணம் கோவை மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்ததால், இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். வழிநெடுக இருமருங்கிலும் மக்கள் திரண்டு நின்று கண்ணீருடன், முஸ்கின் சடலத்தை வழியனுப்பினர்.வாகனங்களில் சென்றவர்கள், அலுவலகம் சென்றவர்கள் என ஊர்வலம் சென்ற வழியில் இருந்த பொதுமக்கள், முஸ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். காலை 9 மணிக்கு துவங்கிய இறுதி ஊர்வலம், மதியம் 12.40 மணி வரை நடந்தது.கண்களில் கண்ணீர் திரள பொதுமக்கள் பங்கேற்ற காட்சி, காண்போரின் உள்ளத்தை உருக்குவதாக இருந்தது.

நேற்று காலை வரை முஸ்கின் சடலம் மட்டுமே கிடைத்திருந்தது. இதனால், உறவினர்கள் ரித்திக் உயிருடன் இருப்பதாகவே நம்பினர். "நிச்சயம் உயிருடன் வீடு திரும்புவான் ரித்திக்' என, உடைந்த குரலில் திரும்பத் திரும்ப கூறியபடி இருந்தனர்.குற்றவாளி மோகன்ராஜுக்கு எதிராக பொதுமக்கள் கொந்தளித்தனர். குற்றவாளியை தூக்கிலிட வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். "கோர்ட், வழக்கு என இழுத்தடிக்காமல் உடனடியாக தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும்' என, பொதுமக்கள் ஆவேசமாக கோஷமிட்டனர்.கொடுஞ்செயலுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பொதுமக்கள் ஏந்திச் சென்றனர். "கொலை செய்வதை தவிருங்கள்; என் குழந்தை எனக்கு வேண்டும்' என்ற வாசகம் அடங்கிய பதாகை பலரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.

தவறுகள் கொடுமையாக இருக்கும்போது தண்டனைகளும் கடுமையாக மற்றும் கொடுரமானதாக   இருக்கவேண்டும்...நமது நாட்டின் பழைய சட்டங்களை மாற்றி இன்றைய காலகட்டத்திற்கேற்ப குற்றங்களின் தன்மைகளை அறிந்து அதற்கேற்ப சட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும். கொடுரமான  குற்றம் செய்த அந்த பாவி்க்கு ‌பொதுமக்கள் முன்னிலையில் கொடுமையான கடுமையான தண்டனையை  வழங்க வேண்டும்.  இல்லாவிட்டால் இது போன்ற குற்றங்கள் தொடர்கதையாகி விடும்.

சமூகத்தில் ஒரு சிலரின் பணவரவு கோடிகளில் இருக்கும் போது, அது இல்லாத இன்னொருவர் பொறாமை மற்றும் பேராசையின் உச்சத்திற்குச் சென்று விடுவதால் எவ்வித குற்றம் புரிவதற்கும் தயாராகி விடுகின்றனர். இந்தப் பொருளாதார ஏற்றத் தாழ்வுக்கு விடிவு ஏற்படாத வரை இந்த மாதிரி கொடுமையான குற்ற செயல்கள் நடப்பதை அரசு மற்றும் அதிகார வர்க்கம் வேடிக்கைதான் பார்க்கமுடியும். பெற்றோருக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை. குழந்தைகளின் பெற்றோர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன்

.குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு ஆறுதல் மட்டுமே மருந்தாகிவிடாது. கடவுளால் மட்டுமே அவர்களுக்கு ஆறுதல் வழங்கமுடியும்.
நன்றி ..தினமலர் 


5 comments:

Anonymous said...

கண்ணீர் தடுக்கிறது கருத்திடமுடியவில்லை.

J.P Josephine Baba said...

உழக்காமல் பணம் சேர்க்க வேண்டும் ஆசையே இவ்விதம் செய்ய தூண்டுகின்றது. கொலைகாரனை உடன் தூக்கிலிட வேண்டும்!

J.P Josephine Baba said...

உழக்காமல் பணம் சேர்க்க வேண்டும் ஆசையே இவ்விதம் செய்ய தூண்டுகின்றது. கொலைகாரனை உடன் தூக்கிலிட வேண்டும்!

lcnathan said...

MUTHALIL ANTHA KODIYAVARKALIN AANN URUPPKKALAI VETTIVIDA VAENDUM. IRANNDU NAAL KAZHITHTHU , POTHUMAKKALIN MUNBU ,ANTHA KAAMAP PISAASUKALAI ,THOOKKIL PODAVAENDUM.

ESWARAN.A said...

கண்ணீரை மட்டுமல்ல இந்த பணத்தை மட்டுமே முன்னிறுத்தி,மனித மாண்பை பின்னுக்குத்தள்ளும் உலகமயப்பொருளாதாரம் தான் காரணம்..கொலையாளிகளை மாறுகால்,மாறுகை வாங்கி கண்களைத் தோண்டி எடுத்து விடவேண்டும்..