Dec 6, 2010

தமிழக தேர்தல்வெற்றி யாருக்கு ஜூ.வி.சர்வே

ஜூ.வி. நிருபர்கள் 80 பேர் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் புகுந்து... புறப்பட்டு, 3,525 பேரிடம் எடுத்த சர்வே . அதில் பங்குபெற்ற வாக்காளர்கள்  சர்வே டீமிடம் வெளிப்படுத்திய மனநிலையின் தொகுப்பு இங்கே!

பொதுவாக மீடியாக்களில் அலசப்படும் டெக்னிக்கலான விவகாரங்கள் நகர்ப்புறங்களில் பேசப்படும் அளவுக்கு கிராமங்களைச் சென்றடைவது இல்லை. ஸ்பெக்ட்ரம் ஊழல் இதற்கு விதிவிலக்கு! "மொத்தம்  1.76 லட்சம் கோடியாமே..? இதுக்கு எத்தனை சைபர் போடுவாங்க?" என்று கேட்டு மலைத்தார்கள். "ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன என்று முழுசாக விளங்கிக்கொள்ள முடியாத சில வாக்காளர்கள்கூட, 'அருணாசலம்’ படத்துல ரஜினி அடுக்கி வெச்சிருக்கிற மாதிரிதான் இதையும் அடுக்கி வெச்சிருப்பாங்களா?’ என்று கேட்டார்கள்!


வயதில் முதிய கிராமத்து வாக்காளர்கள் மத்தியில் தி.மு.க. அளித்து வரும் 'இலவசம்' உள்ளிட்ட நலத் திட்டங்களில் பிடிப்பு இருக்கிறது. அதே சமயம்,  ஆ.ராசா மீது தி.மு.க. தலைமையே முந்திக்கொண்டு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்ற ஆவேசம் தெரிந்தது. "கருணாநிதி எதுக்கு இப்பிடி கண்ணை மூடிக்கிட்டு அந்த ராசாவுக்கு சப்போர்ட் பண்ணுறாரு?" என்று கோபமாகவே கேட்கிறார்கள். அதனால்தான், 'தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி நீடித்தால், எங்கள் ஓட்டு அந்தக் கூட்டணிக்கே' என்று கூறிய பல கிராமத்து வாக்காளர்கள், "அடுத்த முதல்வராக யார் வர வேண்டும்?" என்ற கேள்வியில், 'ஜெயலலிதா பெயரை டிக் அடித்தார்கள்!


இன்னும் சிலருக்கு தி.மு.க-தான் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும், "கட்சியைக் கட்டுப்பாட்டுல வெச்சுக்கிற விஷயத்தில் கலைஞரைவிட ஜெயலலிதா கரெக்ட்டா இருப்பாங்க. இப்ப நடக்குற பல விஷயங்களைப் பார்த்தா, தி.மு.க. யாரோட கட்டுப்பாட்டுல இருக்குதுன்னே புரியலை..." என்று வருத்தத்தோடு கூறியதையும் கேட்க முடிந்தது. இவர்களும்கூட, 'அடுத்த முதல்வர் ஜெயலலிதா' என்று டிக் அடித்தனர்!


"தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தாலும், 'நாட்டாமை’ விஜயகாந்த் எடுக்கப்போகிற கூட்டணி முடிவில்தான் தீர்ப்பு ஊசலாடுகிறது. அவர் போயஸ் கார்டனில் சரண் அடைந்தால், தி.மு.க-வின் வெற்றிக்குப் பாதிப்பு வரும். 1996-2001 தி.மு.க. ஆட்சியை நல்ல ஆட்சி  என்றார்கள். 'தொடரட்டும் இந்தப் பொற்காலம்’ என்று எல்லாம் பாட்டுப் போட்டார்கள். என்னாச்சு... ஜெயலலிதா ஜெயிக்கலையா? காரணம், அந்த சமயம் ஜெயலலிதா போட்ட வலுவான கூட்டணி. அதே மாதிரி கூட்டணி இந்த முறையும் ஜெயலலிதாவுக்கு அமைந்தால், கருணாநிதி இதுவரை செய்த திட்டங்களை மக்கள் மறந்தாலும் ஆச்சர்யம் இல்லை!" என்று நுணுக்கமான அரசியல் பேசினார் கள் நகர்ப்புறத்து வாக்காளர்கள் சிலர்.பொதுமக்களின் மிக முக்கியமான பிரச்னைகள் என்று நாம் வரிசைப்படுத்தியவற்றில் விலை வாசியை பெரும்பாலானவர்கள் டிக் செய்தாலும், "மின்வெட்டு பத்தி இந்த சர்வேயில் கேட்கலியே...?" என்று நம்மிடமே திருப்பிக் கேட்டவர்கள் உண்டு. இருப்பினும், "மின்வெட்டைவிட விலைவாசிதான் இன்றைக்குக் குடும்பங்களின் நிம்மதியைக் குலைக்கும் முக்கியக் காரணி!" என்பதே பெரும்பாலோர் கருத்து.


"சார், வழக்கமா ஐயப்ப சீஸனில் நல்ல வியாபாரம் ஆகும். இந்தத் தடவை துணி விலை மூணு மடங்கு அதிகம். வியாபாரமே ஆகலை. நாங்க எப்படி வாழ?" என்றபோது, மதுரை  திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த துணிக்கடை  உரிமையாளர் ஒருவரின் கண் கலங்கியதைப் பார்க்க முடிந்தது.
இதிலிருந்து முரண்பட்ட பார்வையாக, "முதுமையின் காரணமாக வரும் தேர்தலில் மீண்டும் முதல்வர் வேட்பாளராக கருணாநிதி நிற்பாரா? அல்லது வேறு யாரையாவது முன் நிறுத்துவார்களா?" என்று சந்தேகம் எழுப்பிய சில வாக்காளர்கள், "கருணாநிதியே முதல்வர் வேட்பாளர்னாத்தான் என் ஓட்டு. இல்லாட்டி ஜெயலலிதாவுக்குதான்!" என்று சொன்னதையும் கேட்க முடிந்தது.

நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் விஜயகாந்த்துக்கு செல்வாக்கு கூடுதல்தான். "தொடர்ந்து இரண்டு எலெக்ஷனா தனியா நிற்கிறாரு. இந்தத் தடவையும் தனியா நின்னா ஏமாந்துடுவாரு..." என்று கூறிய இளைஞர்கள் பலர், "அவரு கூட்டணி போட்டா தப்பில்லை. அப்பவாச்சும் கொஞ்ச இடங்களைப் பிடிக்கலாம்!" என்று கரிசனம் காட்டினார்கள்.

"ஜெயலலிதாவுக்கு செல்வாக்கு பெரிய அளவில் கூடிவிடவில்லை. கடந்த 2001-2006 அ.தி.மு.க. ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கருணாநிதி செய்த அரசியலில் பாதியைக்கூட ஜெயலலிதா இப்போது செய்யவில்லை. அடிக்கடி கொடநாட்டுக்குப் போய் ஓய்வு எடுத்துக்கொள்வது, போயஸ் கார்டனில் உட்கார்ந்தபடியே அரசியல் செய்வது என்று இருந்தால் எப்படிப் பலன் கிடைக்கும்?" என்று சொன்னவர்கள்,  "காங்கிரஸ் கூட்டணிக்கு அவர் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறாது!" என்று ஆரூடம் சொன்னார்கள்.  அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கட்டண உயர்வுகள், அதிரடிச் சட்டங்கள் மறுபடி படையெடுக்கும் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியவர்களையும் பார்க்க முடிந்தது.


விவசாயிகள் தரப்பில் பெரும் அதிருப்தி தி.மு.க. மீது இருக்கிறது. "ரியல் எஸ்டேட் என்ற பெயரில் கரை வேட்டிகள் திரும்பிய பக்கமெல்லாம் நிலத்தை வளைக்கிறார்கள். விவசாய நிலங்கள் பிளாட் போட்டு விற்கப்படுகின்றன. நஷ்டத்தைப் பொறுத்துக்கொண்டு விவசாயத்தைத் தொடர நினைப்பவர்களைக்கூட, இந்த ரியல் எஸ்டேட் கரை வேட்டிகள் தங்கள் சுழலுக்குள் இழுத்துவிடுகின்றன!" என்று சொன்னார்கள் பல விவசாயிகள்.
"விவசாய வேலை செய்தவர்கள் எல்லாம் இன்னிக்கு மில்லில் மூட்டை தூக்கிக்கிட்டு இருக்காங்க. கலர் டி.வி., காஸ் அடுப்பு கொடுக்கிறது நல்ல விஷயம்தான். ஆனா, விளைநிலமே விரயமாகிக்கொண்டு இருக்கையில், இலவச டி.வி-யில் படம் பார்த்தால் வயிறு நிரம்பிவிடுமா?" என்று ஆதங்கத்தைக் கொட்டினார்கள்.

நாமக்கல் மாவட்டத்தின் சில பகுதிகளில் விசைத்தறித் தொழில் முடங்கி இருக்கிறது. அதனால் அந்தப் பகுதிகளில் ஊர் மக்களே கஞ்சித் தொட்டி ஆரம்பிக்கும் மனநிலையில் இருக்கிறார்கள். "அந்த அம்மா ஆட்சியில கரெக்டாக் கட்டணம் கூட்டினாங்க. ஆனா, இந்த ஆட்சியில எஸ்.எஃப்.எஸ்., எஸ்.எஸ்.எஸ்., டி.எஸ்.எஸ். அப்படின்னு புதுபுதுசா பஸ் விட்டு மறைமுகமாகப் பகல் கொள்ளை நடத்துறாங்க..." என்று திருச்செந்தூர் மக்கள் கொதித்தார்கள்.

"இலவச டி.வி. வழங்கியது சில இடங்களில் எதிர்மறையான கருத்தை ஏற்படுத்தி இருப்பதையும் காண முடிந்தது. "டி.வி. பொட்டி கொடுக்கிறதுக்குப் பதிலா ஆடு, கன்னு கொடுத்திருந்தா அதை வெச்சுப் பொழப்பைப் பார்க்கலாம்..." என்றும் சிலர் சொன்னார்கள்.


இதையெல்லாம் தாண்டி... வெற்றி தோல்வி பற்றி சொல்லும்போது, "கூட்டணியைப் பொறுத்துத்தான் முடிவெடுக்க முடியும்!" என்று பலரும் சொல்வதைப் பார்த்தால், காங்கிரஸ் மற்றும் தே.மு.தி.க. ஆகிய கட்சிகளின் கையில்தான் இரண்டு பெரிய கட்சிகளின் எதிர்காலம் அடங்கியிருப்பது தெளிவாகத் தெரிகிறது!
 நன்றி...
ஜூ.வி. டீம்.. ஜூனியர் விகடன் 05-டிசம்பர்-2010.

1 comment:

Anonymous said...

பாவம்! வயிற்று பிழைப்புக்கு ஜூவி இப்படி ஏதாவது ஒரு பரபரப்பான தலைப்பிட்டு காசு பார்க்கிறது! இதை விட அவர்கள்( விகடன் க்ரூப்ஸ்) விஜயகுமார் குடும்ப தொழில் செய்யலாம்!