Jun 17, 2011

நீதிமன்றத்தில் ராசா - கனிமொழி நேரடி ரிப்போர்ட்.

தில்லி இந்தியா கேட் அருகிலுள்ள பாட்டியாலா நீதிமன்ற வளாகம். சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனியின் கோர்ட்டுக்கு வெளிப்புறம் உள்ள அறை. காக்கி போலீஸ்காரர்களும் கறுப்பு கோட் வழக்கறிஞர்களும் குறுக்கும் நெடுக்கும் நடக்கிறார்கள். வழக்குக்குத் தொடர்புடைய பொதுமக்கள், அறையில் இருக்கும் நாற்காலிகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். காற்றில் இந்தி மட்டும் கலந்திருக்கிறது. 

ஒரு தூணுக்குப் பக்கத்தில் சற்று மறைவாக அமர்ந்திருக்கிறார் கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள். முகத்தில் குடியேறிவிட்ட சோகம். அவ்வப்போது உத்தரத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரது உதவியாளரும் சென்னை 95வது வட்ட மாநகராட்சி கவுன்ஸிலருமான துரை, கையில் செல்ஃபோனுடன் பரபரப்பாகப் பேசிக் கொண்டே இருக்கிறார். இடையில் ராசாத்தியிடமும் செல்ஃபோனைக் கொடுக்கிறார். ஒன்றிரண்டு வார்த்தைகளுக்கு மேல் அவர் பேசுவதில்லை. உள்ளே கோர்ட் அறையில் கனிமொழி இருக்கிறார். கனிமொழிக்கு ஜாமீன் நழுவிப் போய்க் கொண்டே இருக்கும் நிலையில் வாரத்துக்கு மூன்று நாட்கள் சென்னையிலிருந்து தில்லி வந்து விடுகிறார் ராசாத்தி. காலை முதல் மாலை வரை கனிமொழியை திகார் ஜெயிலுக்கு அழைத்துப் போகும் வரை நீதிமன்றத்திலேயே இருக்கிறார்.

தில்லியில் திலக் சாலையிலுள்ள பாட்டியாலா நீதிமன்றக் கட்டடம், சுதந்திரத்துக்கு முன்பு பஞ்சாப் பாட்டியாலா அரசரின் மாளிகையாக இருந்தது. இங்கே மொத்தம் 27 மாவட்ட அளவிலான நீதிமன்றங்கள் இருக்கின்றன. அவற்றில் மூன்று சி.பி.ஐ. வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்கள். அதில் ஒன்றுதான் சைனியின் நீதிமன்றம். இரண்டாம் அலைவரிசை ஊழல் வழக்கு இங்கேதான் நடக்கிறது. பான் பராக் துப்பப்பட்ட சுவர்கள்; மற்றும் நெருக்கமான பாதைகளைக் கடந்து சைனியின் நீதிமன்றத்துக்குள் செல்ல வேண்டியிருக்கிறது. வெளியே முகத்தில் நெருப்பை அள்ளி விட்டாற்போல் காலை பத்து மணிக்கே அனல் வீசுகிறது. 

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 14 பேரும் காலை பத்து மணி அளவில் நீதிமன்றத்தின் பக்கவாட்டு வாசல் வழியாக, வளாகத்தில் இருக்கும் லாக்-அப் அறைக்கு அழைத்துக் கொண்டு வரப்படுகிறார்கள். பின்னர் பத்து நிமிடங்கள் கழித்து லாக்-அப் அறையிலிருந்து கோர்ட்டுக்குள் அழைத்து வரப்படுகிறார்கள்.

சரியாக பத்தரை மணிக்கு நீதிபதி சைனி கோர்ட்டில் வந்தமர்கிறார். யாரும்அமைதிஎன்று சொல்லாமலேயே கோர்ட் திடீர் அமைதியில் மூழ்கிவிடுகிறது. குளிர்சாதனம் செய்த கோர்ட் ஹால்; குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டில் ஆஜராகி விட்டார்களா என்பதை உறுதி செய்து கொண்டு அது தொடர்பான ரிகார்டுகளில் கையெழுத்திட்டு விட்டு, பின்னால் உள்ள தமது அறைக்குச் சென்று விடுகிறார் சைனி.

நின்று கொண்டிருக்கும் ராசா, கனிமொழி மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அமர்ந்து கொள்கிறார்கள். சி.பி.ஐ. தாக்கல் செய்த இரண்டு குற்றப் பத்திரிகைகளும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குக் கொடுக்கப்பட்டு விட்டன. அவர்கள் அதைத் தங்கள் வழக்கறிஞர்களுடன் அமர்ந்து பரிசீலனை செய்யவே இப்போதைய கால அவகாசம். அதே சமயம் நீதிபதியும், தம் அறையில் உட்கார்ந்து குற்றப் பத்திரிகையைக் கூர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். சிறிய கோர்ட் ஹால். அதில் குற்றம்சாட்டப்பட்ட 14 பேர்கள்; அவர்களுக்குப் பொறுப்பாக இருக்கும் காவலர்கள்,  

வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள். இப்படி கோர்ட் கலகலவென்று இருக்கிறது. வழக்கறிஞர்களோடு குற்றம்சாட்டப்பட்டவர்கள் கலந்தாலோசிக்கிறார்களோ இல்லையோ... தங்கள் மனைவி, குழந்தைகள் ஆகியோரோடு நேரத்தைச் செலவழிக்கிறார்கள். அவ்வப்போது அங்கே துக்கக் காட்சிகளும் அரங்கேறுகின்றன.

முதல் வரிசையில் கனிமொழி, பக்கத்தில் அவரது கணவர் அரவிந்தன், அவர் அம்மா, சரத்குமார் அவரது மனைவி ஆகியோர் அமர்ந்திருக்கிறார்கள். பூப்போட்ட நீல கலர் சுடிதாரில் இருக்கும் கனிமொழிக்கு காதில் எந்த நகையும் இல்லை. முதல் வரிசை பக்கவாட்டில் ராசா, ராசாத்தி அம்மாள் ஆகியோர் அமர்ந்திருக்கிறார்கள். அமைச்சராக இருந்தபோது பளபளப்பாக இருந்த ராசா முகம் சற்றே வாடித்தான் போயிருக்கிறது. ஆனால் பேச்சில் உற்சாகம் குறையவில்லை. கனிமொழியிடம் சிரித்தபடி ஜோக்கடித்துப் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால், அவர்கள் சிரிப்பும், பேச்சும் ராசாத்தி அம்மாள் முகத்தில் எந்த மாற்றத்தையும் உண்டாக்கவில்லை.
கழக உடன்பிறப்புகள் வருகிறார்கள். நாகர்கோயில் பாராளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன் ராசாத்திக்குத் துணையாக இருக்கிறார். சாக்லெட்டுகளும், ஐஸ்கிரீம்களும் தாராளமாக அறைக்குள் கொண்டு வரப்படுகின்றன. குற்றம்சாட்டப்பட்டவர்கள் செல்ஃபோனில் தாராளமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். காவலர்கள் அதையெல்லாம் கண்டுகொள்வதில்லை.

சிறிது நேரத்தில் அரவிந்தனும், அவர் அம்மாவும், எழுந்து சென்று விட கனிமொழியின் பக்கத்தில் வந்தமர்ந்து கனியுடன், தம் பேச்சுக் கச்சேரியைத் தொடர்கிறார் ராசா. உடன்பிறப்புகள் சிலர் அம்மா... ஜெயில் எப்படி?" என்று கனிமொழியிடம் கேட்க, கொசுக்கடிதான் தாங்க முடியலை" என்கிறார் சிரித்தபடி. தயாநிதி மாறன் தொலைபேசி இணைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு குறித்து தினமணி பத்திரிகையில் வந்த கட்டுரையை மிகவும் உன்னிப்பாக வாசிக்கிறார்கள் ராசாவும், கனிமொழியும். இந்த கோர்ட் எப்போதும் ஈயடித்துக் கொண்டிருக்கும். இந்த வழக்கு வந்த பின் கலகலவென்றிருக்கிறது" என்கிறார் அமர்ந்திருந்த தமிழக அரசின் உளவுப் பிரிவின் அதிகாரி ஒருவர்.

கோர்ட் ஹாலில் திடீரென்று ஒரு பரபரப்பு. தமது அறையிலிருந்து வந்து ஆசனத்தில் அமர்கிறார் நீதிபதி சைனி. குற்றம்சாட்டப்பட்டவர்கள் எழுந்து நிற்கிறார்கள். வழக்கறிஞர்கள் கும்பல் நீதிபதியைச் சூழ்ந்து கொள்கிறது. என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. ஐந்து நிமிடம்தான். உணவு இடைவேளைஎன்று சொல்லிவிட்டு, மீண்டும் அறைக்குள் சென்று விடுகிறார் நீதிபதி சைனி. சி.பி.ஐ. கொடுத்த சில பேப்பர்கள் தெளிவாகவே இல்லை. வேறு கொடுக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டோம்" என்று நம்மிடம் சொல்கிறார் கனிமொழியின் வழக்கறிஞர் பி.ஜி. பிரகாசம்.

சி.பி.ஐ. ஸ்பெஷல் கோர்ட் பத்தாம் தேதி வரைதானாம். அதற்குப் பின் கோடை விடுமுறையாம். ஜூலை ஒன்று முதல் வழக்கறிஞர் வாதம், சாட்சிகள் விசாரணை தொடங்குமாம். இதற்கிடையில் தில்லி உச்சநீதிமன்றம் ஒரு மாதம் கோடை விடுமுறையில் இருக்கிறது. இடையிலேயே, நீதிபதி கனிமொழிக்கு ஜாமீன் வழங்குவார் என்று நம்பிக்கையோடு எதிர்பார்த்தது கலைஞர் குடும்பம். ஆனால் ஏமாற்றம் தான்.

ராசா, கனிமொழி ஆகியோர் மீண்டும் கோர்ட் வளாகத்திலுள்ள லாக்-அப்புக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். உறவினர்கள் அங்கே போக முடியாது. இந்த வழக்கில் ஜெயிலில் இருப்பவர்கள் அனைவரும் மிக, மிக வசதியானவர்கள். வழக்கின் முடிவு எப்படி இருக்குமோ தெரியாது. சட்டம் வளையாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
 கௌசி.நன்றி.கல்கி.

1 comment:

# கவிதை வீதி # சௌந்தர் said...

இந்தப்படம் எப்பப்பா முடியும்...