Dec 12, 2011

திருந்துவார்களா ரசிகர்கள் என்ற பெயரில் இருக்கும் பாமரத் தமிழர்கள்.

சிவாஜி ராவ் கெய்க்வாட் - கர்நாடகத்திலிருந்து பிழைப்புக்காக சென்னைக்குவந்த இந்தியப் பிரஜைகளுள் ஒருவர். 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் என்று தேசியளவில் மட்டுமின்றி தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ள நாடுகளிலும் ஜப்பான் போன்ற நாடுகளிலும் சினிமா ரசிகர்களை ஈர்க்கும் காந்தம்! பொதுவில் மனிதாபிமானமுள்ள ஆன்மீகவாதியாகவே தன்னைக் காட்டிக்கொண்டுள்ளார். இவர் நடித்து வெளியான 'எந்திரன்' படத்தில் சாதாரண காட்சிக்குக்கூட 'டூப்' வைத்து நடித்த டூப்பர் ஸ்டார்! நடிகர் ரஜினிகாந்த் நடிப்பிலும் சொல்லிக்கொள்ளும்படி சாதனை எதுவும் படைக்கவில்லை. நூற்றுக்கணக்கான சினிமா நடிகர்களுள் ஒருவரான ரஜினிகாந்துக்கு ஊடகங்கள் மிகையான முக்கியத்துவம் கொடுப்பது ஏனென்று விளங்கவில்லை.

தமிழகத்தை ஆட்சிசெய்த முதல்வர்களில் பலர் திரையுலகிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களே. தற்போதைய முதலமைச்சரும், எதிர்கட்சித்தலைவரும்கூட சினிமா பின்னணி கொண்டவர்கள்தான். பாட்சா படவெற்றிவிழாவில் ரஜினிகாந்த் பேசிய மேடைப்பேச்சை பரபரப்பாக்கி அப்போதைய ஆளுங்கட்சியான அதிமுக தொண்டர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் இடையே ஊடகங்கள் பகை வளர்த்தது ஒருபக்கம் என்றால், இவரும் தனது படங்களில் 'பஞ்ச் டயலாக்' என்ற பெயரில் ரசிகர்களை உசுப்பேற்றினார். இவரது வசனங்களை நம்பிய ரசிகர்கள் பலர் ரஜினி அரசியலுக்கு வந்து தங்கள் துயரங்களைத் தீர்த்து வைப்பார் என்று மனதார நம்பினர்.


சிலமாதங்களுக்கு முன்பு 'ராணா' படப்பிடிப்பின்போது உடல்நிலை பாதிப்படைந்ததால் சிங்கப்பூரில் சிகிச்சைக்குச் சென்றுவந்ததை பத்திரிக்கைகளும், சாட்டிலைட் தொலைக்காட்சிகளும் மணிக்கொருமுறை தலைப்புச் செய்திபோல் வெளியிட்டனர். உடல்நிலை பாதிக்கப்பட்ட எவரும் பூரண சுகமடைய விரும்புவது மனித இயல்பே என்றாலும் அவரைவிட கடுமையான நோயுற்றவர்களைக் கண்டுகொள்ளாத ஊடகங்கள் ரஜினிக்குக் கொடுத்த அசாதாரண விளம்பரங்களை அவரே விரும்பியிருக்க மாட்டார்.


அண்டை மாநிலமான கர்நாடகத்திலிருந்துவந்த கன்னடமொழி பேசுபவராக இருந்தபோதிலும் திரைப்படங்களில் மட்டும் தமிழர்களைப் போற்றும் புண்ணியவான் இவர். தமிழகத்திற்குக் கர்நாடகம் காவிரி தண்ணீரைத் தரமறுத்தை எதிர்க்கும் முகமாக தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தபோது, திரைத்துறையினரும் நெய்வேலியில் உண்ணா விரதம் இருந்து எதிர்ப்பைக் காட்டினர். கன்னடரான ரஜினிகாந்த் அப்போராட்டத்தில் கலந்து கொள்ளாததைத் தொடர்ந்து அவருக்கு எதிராக எதிர்ப்புக்குரல் எழுந்தவுடன், சென்னையில் தனியாக உண்ணாவிரதம் இருந்து ஒருதுளி வியர்வைக்கு ஒருபவுன் தங்கக்காசுகளாக தமிழகத்தில் நடித்துச் சேர்த்த பணத்தைக் கர்நாடகத்தில் முதலீடு செய்துள்ளதைக் காப்பாற்றபோட்ட நாடகமே அது என்பதை எந்த ஊடகமும் சொல்லவில்லை.


காவிரி பிரச்சினைக்கும் அனைத்து நதிநீர் பிரச்சினைக்கும் நதிகளை இணைத்து தேசிய மயமாக்க வேண்டுமென்று தனது பங்காக ஒரு கோடி ரூபாயைத் தானம் செய்தவர், தற்போதைய முல்லை பெரியாறு பிரச்சினை இருமாநில மக்களிடையேயான பிரச்சினையாக்கப்பட்டபோதிலும் வாய்திறக்காததன் மர்மம் என்னவோ? இந்தக்காலத்தில் ஒரு கோடி ரூபாயைக் வழங்க முன்வந்ததே பாராட்டப்பட வேண்டியதுதான் என்று சொல்பவர்கள், அரசுக்கு இவர் கொடுக்கவேண்டிய கோடிக்கணக்கான வருமான வரிபாக்கியை அறிவார்களோ என்னமோ?!


சென்னையிலும் தமிழகத்திலும் தாய்ப்பாலுக்கு வழியில்லாத குழந்தைகள் லட்சக்கணக்கிலிருக்கும்போது இவரது கட்அவுட் பிம்பங்களுக்குக் குடம்குடமாக இவரது ரசிகர்கள் பால் வார்த்ததை என்றேனும் கண்டித்துள்ளாரா? பஞ்ச் டயலாக்கை நம்பி அதிமுக, பாமகவினருடன் பகையாளிகளாகிப்போன இவரது கட்சிசார்பற்ற ரசிகர்களைப்பற்றி கவலைப்படாமல் "நான் யானையல்ல; குதிரை" என்று வசனம்பேசி அதிமுகவை மட்டும் சமாதானப்படுத்தியதன் பின்னணியில் ஆதிக்க சாதியினரின் சூழ்ச்சி இல்லாமலில்லை!


முன்பு முதல்வர் ஜெயலலிதாவைக் கன்னிமேரியாகச் சித்தரித்து போஸ்டர் ஒட்டியதையும், இந்துமத கடவுளர்கள் படங்களை வேறுநோக்கத்திற்காக சித்தரிப்பதையும் கண்டித்து குரலெழுப்பிய சங்பரிவாரங்கள், இன்று பிறந்தநாள் கண்ட ரஜினிகாந்திற்கு அவரது ரசிகர்கள் வெளியிட்ட சிவபெருமான் விளம்பரத்தை ரஜினி கண்டிக்காததற்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏனென்று பாமர ரசிகர்கள் விளங்கும்வரை, இவர்போன்ற சூப்பர் ஸ்டார்கள் தமிழனை அரசியலிலும் வாழ்க்கையிலும் ஆண்டுகொண்டுதான் இருப்பார்கள். இது தமிழனுக்குப் பிடித்த சாபக்கேடு!.

நன்றி
இந்நேரம்.காம்

3 comments:

நிவாஸ் said...

உண்மையை சொல்லாதீர்கள் வெக்கக்கேடு

ubaskaran said...

i think he never encouraged fan's craziness...he does n't meet them on his birth days.all the politicians go after him for support.even after his kidney problems his family wants to make money as soon as possible.as long as he remains popular brand,he can't take good sleep.his fans want punch dialogue.his family wants money.he wants rest something he can't afford to take.wat a poor soul!

M.Sathishkumar said...

Vekam ketavanunga