Dec 24, 2011

அந்த அதிசயம்தான் எம்.ஜி.ஆர்.!

                                    இருந்தாலும் மறைந்தாலும் பேர்சொல்லவேண்டும்.
                                              இவர் போல யார் என்று ஊர்சொல்லவேண்டும்.

 முதல்வராக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள்முதல் அவர் அமரராகும் வரை…அந்த 11 ஆண்டுகளில் 1 சென்ட் நிலமோ அல்லது வீடோ..இந்தத் தமிழ்நாட்டிலோ, வேறெந்த மாநிலத்திலோ அவர் வாங்கியது கிடையாது. 

அதேசமயம் திரையுலகில் இருந்தபோது தான் சம்பாதித்த சொத்துக்களை மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் நலனுக்கும், கட்சிக்கும் என தமிழக மக்களிடமே திருப்பிக் கொடுத்து லட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் அவர்போல இடம் பிடித்தவர் வேறு யாரும் கிடையாது. ஏனெனில் தான் சம்பாதித்த மாபெரும் சொத்து மக்கள் செல்வாக்கு என்பதைத்தான் அவர் மதித்தார், அதில் துளிகூட கீறல் விழாமல் கடைசிவரை காத்தார்.

இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம்…எம்.ஜி.ஆருடன் காரில் செல்கிறேன். சாலையில் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் ’’தலைவா வாழ்க! எம்.ஜி.ஆர். வாழ்க’’ என்று கோஷமிடுகிறார்கள். இதைப் பார்த்த எம்.ஜி.ஆர். என்னிடம் ‘’எல்லாருமே எம்,ஜி,ஆர், வாழ்க’ன்னுதானே வாழ்த்தறாங்க. ஒருத்தர்கூட ‘முதலமைச்சர் வாழ்க’ன்னு சொல்லலை. ஏன் தெரியுமா?’’ என்று கேட்டார். 


‘’ உங்க மூன்றெழுத்துப் பெயர்தான் அவங்களுக்கு மந்திரம் மாதிரி. அதனாலதான்’’ என்றேன். ‘’அதுமட்டுமல்ல, முதலமைச்சர் வாழ்கன்னு சொன்னா அது பதவியை வாழ்த்தற மாதிரி, எம்.ஜி.ஆர். வாழ்கன்னு சொன்னாதான் அவங்களுக்கு என்னை வாழ்த்தற திருப்தி. இதுதான் நான் சம்பாதிச்ச சொத்து. இதைத்தான் நான் பத்திரமா காப்பாத்தியாகணும்!’ என்றார்’. இறுதிவரை சொன்னது போலவே நின்றார்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் சென்னை வருகை தந்தபோது முதல்வர் எம்.ஜி.ஆரை கோட்டையில் சந்தித்தார். இருவரும் உற்சாகமாக உரையாடினார்கள். சந்திப்பு முடிந்து இளவரசரை ஆளுநர் மாளிகைக்கு திரும்ப அழைத்து வருகிறேன். அப்போது சார்லஸ் என்னிடம் ‘’எம்.ஜி.ஆரின் பின்னணி என்ன? இவர் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவரா?’’ என்று வியப்போடு விசாரிக்கிறார். நான் அவரது குடும்பப்பின்னணி பற்றி விவரித்தேன். 


ஆனாலும் ஆச்சரியம் விலகாமல் சார்லஸ் சொன்னார்: ‘’ஒருவேளை போன பிறவியில் இவர் அரசராக இருந்திருக்கலாம்!’’. அப்படியே நான் மெய்சிலிர்த்துப் போய்விட்டேன். தமிழக மக்கள் மட்டுமல்ல…உலகையே ஆண்ட அரச குடும்பத்தின் இளவரசர்கூட, நம் எம்.ஜி.ஆரைப் பார்த்து ‘அரசர்’ என்று வியக்கிறாரே…அந்த அதிசயம்தான் எம்.ஜி.ஆர்.!  
 சு. திருநாவுக்கரசர் ( முன்னாள் அமைச்சர் )

1 comment:

Gobinath said...

M.G.R.... M.G.Rதான். என்றும் சிறந்த தலைவர். சிறந்த நடிகர். சிறந்த மனிதர்.