May 3, 2012

மீண்டும் தமிழீழம் மலரும்' என்று கூறுவதற்கு கருணாநிதிக்குக் கூச்சமாக இல்லையா


இலங்கையில் தமிழீழம் தனித்ததொரு நாடாக அமைய மத்திய அரசு ஆதரவு தர வேண்டும் என்று திடீரென்று இன உணர்வு பீறிட்டுக் கிளம்பப் பெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்!

குதிரை ஓடிவிட்ட பிறகு லாயத்தைப் பூட்டுவதற்குப் பூட்டைத் தேடுகிறார் கருணாநிதி!
மூன்றாண்டுகளுக்கு முன்வரை போராடுவதற்கு ஒரு வலுவான போராளிகள் கூட்டம் இருந்தது. அப்போது பேசியிருக்க வேண்டும் இதை! அப்போது சகோதர யுத்தம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தவர்; தமிழீழம் சாத்தியமில்லை என்று பேசிக் கொண்டிருந்தவர்; இப்போது "ஈழம் எங்கள் தாகம்' என்று புறப்பட்டு விட்டார்!

அதை ஐ.நா.வுக்குக் கொண்டு செல்ல மத்திய அரசுக்கு விண்ணப்பம் போடுகிறார் கருணாநிதி! ஈழத்தை இந்த அளவுக்குச் சின்னாபின்னப்படுத்தியதே தானும் மத்திய அரசும்தான் என்பதை மூன்றாண்டுகளில் மக்கள் மறந்திருப்பார்கள் என்று கருதிக் கொண்டு!

யாருடைய தயவும் இல்லாமல் ஈழம் பல ஆண்டுகள் ஓர் "அறிவிக்கப்படாத' சுதந்திர நாடாகவே இருந்தது. வரி வசூல் நடந்தது; காவல் நிலையங்கள் செயல்பட்டன; நீதிமன்றங்கள் இயங்கின; சாலைகள் போடப்பட்டன!

ஐ.நா. அவையில் அது ஓர் உறுப்பு நாடாக இல்லை என்பதைத் தவிர வேறு எந்த நிலையிலும் அது குறைவுடையதாக இல்லை.

சிங்கள தேசியம் வாலைச் சுருட்டிக் கொண்டிருந்தது! பெரும்பான்மையான மக்களைச் சிறுபான்மை மக்கள் ஒரு கோட்டுக்கு இந்தப்புறம் வராதவாறு நிறுத்தி வைத்திருந்த வியப்பு உலக வரலாற்றில் முதன் முதலாக அரங்கேறியது! இவற்றையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாத சிங்கள இனவாதம் ஒரு நேரத்திற்காகக் காத்திருந்தது.

ஒரு பெரிய வரலாற்று வேடிக்கை என்னவென்றால், கருணாநிதி அரசும் மன்மோகன் அரசும் சிறுபான்மை அரசுகள்; ஒன்றை ஒன்று முட்டுக் கொடுத்துக் கொண்டு வாழ வேண்டிய நிலையில் இருந்தவை!

காங்கிரஸ் எப்போதுமே பெரிய அண்ணன்தான்! கருணாநிதி எப்போதுமே வாலைக் காலுக்குள் வைத்துக் கொண்டு தில்லி பீடத்திற்குப் பவ்வியமாக வாழ்ந்து பழக்கப்பட்டவர்தான்!

தமிழ் ரத்தத்தை மண்ணில் தெறிக்கச் செய்கிற மன்மோகன் அரசின் கூட்டணியில் தி.மு.க. இருக்காது என்று கருணாநிதி எகிறி இருந்தால், மத்திய அரசு கவிழும் நிலையும், அதன் எதிர்விளைவாகக் கருணாநிதி அரசு தமிழ்நாட்டில் கவிழும் நிலையும் ஏற்பட்டிருக்கும்! ஆனால் ஈழத்தில் போர் நின்றிருக்கும்!

ஈழம் "அறிவிக்கப்படாத' சுதந்திர நாடாகவே நீடித்திருக்கும்!

சுதந்திர நாடாக இருந்த ஈழத்தைச் சுடுகாடாக்கிவிட்டு, "மீண்டும் தமிழீழம் மலரும்' என்று எழுதுவதற்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் வேண்டும்?

இனி எதிலிருந்து தமிழீழத்தை மலரச் செய்வது? சாம்பலிலிருந்தா? சொல்லிப் பார்ப்பதற்குக் கூடக் கருணாநிதிக்குக் கூச்சமாக இல்லையா?

எந்த விடுதலை இயக்கமும் தன் இலக்கை இன்றோ, என்றோ அடையாமல் முற்றுப் பெறுவதென்பதே இல்லை! ஆனால் அதைச் சொல்லுகின்ற தகுதி அதை அழிப்பதற்குத் துணை போனவர்க்கு உண்டா என்பதே கேள்வி!
பழ.கருப்பையா.

1 comment:

சத்தியா said...

புலிகள் இயக்கம் என்பது பீனிக்ஸ் பறவை போன்றது. சாம்பலிலிருந்தும் மறுபடியும் எழுந்து வரும். அந்த நம்பிக்கை எம்மிடம் உள்ளது. ஆனால் இந்த வயதானவர் கூறுவதைத்தான் நம்பமுடியாதுள்ளது. அவரது கடந்த கால செயல்களை நினைத்து. இப்போது இவரது ஆதங்கம் அடுத்த தேர்தல். அதுவரை தமிழரை முட்டாளாக்கிக் கொண்டிருக்க நினைக்கின்றார்.