May 20, 2012

கண்டி புத்தனின் பல்லிலும் ரத்தக் கறை.


இங்கே அரியணையில் 
இருக்கும்இவர்களும் 
அங்கே அரியணையில் 
இருக்கும் அவர்களும்
அரசியல் தீர்வு - என்று
ஒரே சமயத்தில்
வாய் திறக்கிறார்கள்...
 

குப்பென்று அடிக்கிறது
பிணநாற்றம்.

உயிரோடு மனிதரைப்
புதைத்த இடத்தில்
நாற்காலி போட்டு
அமர வேண்டுமாம்!
பறப்பதற்கு எதற்கு
பறவைக்கு இருக்கை?
அதற்காகத் தானே
இருக்கிறது இறக்கை!


மனித நீதிகளை மறுதலித்துவிட்டு
5000 கிலோமீட்டருக்கு
ஏவுகணை அனுப்பி
அங்கேயாவது இருக்கிறதா
காந்தியம் என்று
தேடிக்கொண்டிருக்கிறது
பாழாய்ப்போன பாரதம்.


ஒன்றரை லட்சத்தைக்
கொன்று குவித்த மண்ணில்
ஐம்பதாயிரத்துக்கு
வீடு கட்டித் தருவார்களாம்
கேடுகெட்டவர்கள்.
எல்லா வீடுகளிலும்
பிராத்தல் ஹவுஸ் - என்று
போர்டு மாட்டி,
புத்தபிக்குகளை மட்டுமே
அனுமதித்தாலென்ன

 

இரு நாடுகளுக்கு இடையே
நடந்தால்தான் போர்

என்றுபோதிக்கிறது
ஒருபாதிக் கிறுக்கு.
 

அண்ணனும் தம்பியும்
அடித்துக்கொண்டதை
பாரதப் போர் - என்கிறது
அதேசாதிக் கிறுக்கு.


மலேஷியாவில் அடிக்கிறார்களாம்..
இலங்கையில் அடிக்கிறார்களாம்..
இனி அடிவாங்கக் கூடாதாம்..
திருப்பி அடிக்க வேண்டுமாம்..
ஆறாம் அறிவு
நமக்கில்லை என்கிற
மூல ரகசியத்தைப் 

புரிந்துகொண்டு,
வசனங்கள் மூலம்
வசூல் புரட்சி செய்ய
முயற்சிக்கின்றன
சில முகமூடிகள்.
 

வசனங்கள் பேசாமல்
30 ஆண்டுகள் முன்
திருப்பி அடித்தவன்
ஹீரோ எனில்,
30 ஆண்டு கழித்து
வசனம் பேசுகிற நீ யார்? என்று
கேள்வி கேட்க வக்கில்லாமலேயே
வண்டி ஓட்டுகிறோம் நாம்.


மைல் கணக்குகளை
இந்தியா மறந்துவிடக் கூடாது.
ஜாலியன் வாலாபாக்
எங்களுக்கு 2000 மைல்.
முள்ளிவாய்க்கால்
எங்களுக்கு
இருபத்தாறு மைல்.
 

அங்கே
ஆயிரத்து சொச்சம்..
இங்கே ஒன்றரை லட்சம்.
மனக்கணக்கு மட்டுமில்லை...
இது பிணக்கணக்கு!
எதற்காக
அழவேண்டும் நாங்கள்?
இதற்காகவா.. அதற்காகவா?

ஜாலியன் வாலாபாக்குக்கு
நியாயம் வழங்க
22 ஆண்டானது
உத்தம்சிங்குக்கு.
முள்ளிவாய்க்கால் தீர்ப்பை
நாங்களே எழுத நேர்ந்தால்
அத்தனை ஆண்டுகள்
தேவைப்படாது.


தீர்ப்புகள் திருத்தி எழுதப்பட்டபின்
முள்ளிவாய்க்கால் திசை நோக்கி
யாத்திரைகள் தொடங்கும்.
அதைத் தவிர
வேறு எது
எங்களுக்கு
புனித மண்?

சிகப்புத் தோழர்கள்அங்கே யாரும்
கேட்கவில்லையாம்
ஈழம்....
 

பட்டுப்புடவையோடு
சுற்றுலா சென்றுவிட்டு
மகிந்தனுடன் விருந்துண்ட
குந்திதேவிகள்
இங்கே வந்து 
ஏப்பம் விடுகிறார்கள்.
 

சிவப்புத் துண்டு
மிருகத்தைத் தவிர
வேறெவரையாவது
தனிமையில் சந்திக்க
முயன்றதா
தாய்க்குலம்!
 

பூசா முகாமில் வதைக்கப்படும்
வீர மங்கைகளைப்
பார்த்தாரா இந்த பாரதமாதா?
சீரழிக்கப்பட்ட
சிறுமிகளையாவது சந்தித்தாரா?
யாரும் கேட்கவில்லை - என்று
யாரைக் கேட்டு அறிவிக்கிறாய் தாயே!

நேற்று ஒரு மாதிரியும்
இன்று ஒரு மாதிரியும்
பேசுவதில்லை.
 

சிங்கள ஓநாய்களுடன்
சேர்ந்து வாழவே
விருப்பமாம் தமிழருக்கு...
அங்கே யாரும்
ஈழத்துக்காகச் சாகவில்லையாம்..
சாதிக்கிறது சிகப்பு.
வேறெதற்காகச் செத்தார்களாம் -
10 சீட், 12 சீட்டுக்காகவா?
 

கோபாலபுரத்து ஆண்டைகளிடமும்
போயஸ் தோட்ட ஆண்டைகளிடமும்
10 சீட்டுக்காக பல்லிளித்துச் சாகும்
நந்திக்கிராமத்து சிகப்பு கிங்கரர்களின்
ஈறுகளிலெல்லாம் ரத்தக் கறை!

எங்கள் சொந்தங்கள்
போரிட்டுச் சிந்திய ரத்தத்தின் கறை!
 

இவர்கள் போதாதென்று
இருக்கவே இருக்கிறார்கள்
எப்போதும் போல் எம் கூடவே இருந்து
கழுத்தறுக்கும் அதிபயங்கரவாதிகள்.
ஈழம் காணாமல் சாகவேமாட்டார்களாம்..
இப்படியெல்லாம் பேசி பயமுறுத்துகிறார்கள்.
 

உருகி உருகி
அவர்கள் ஊளையிடத் தொடங்க,
வாய்க்குள்ளிருந்து வழிகிறது
எங்கள் சொந்தங்களின்
ரத்தம்.


சந்தடிசாக்கில்,
அப்பாவித் தமிழர் ஒருவர்கூட
ரத்தம் சிந்தவில்லை - என்று
சலங்கை கட்டி ஆடுகிறது இலங்கை.
பொறுப்புடன் நடத்தினார்களாம்
போ'ரை'...
 

'ரை' சொல்ல வாய்பிளக்கும்
மகிந்தனின் பற்களில் ரத்தக் க'றை'.


இருக்கிற சந்தேகம்
வலுக்கிறது எனக்கு...
கண்டிப்பாக ஒருநடை
கண்டிக்குப் போய்ப்
பார்த்தாக வேண்டும்...
புத்தனின் பல்லிலும்
இருக்கலாம்
ரத்தக் க'றை'


புகழேந்தி தங்கராஜ்

1 comment:

Samy said...

Arumaii. Real. Samy