Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Jul 2, 2010

கருணாநிதியும் ஒரு போர்க் குற்றவாளி

கருணாநிதியும் ஒரு போர்க் குற்றவாளி அதிமுக செயலாளர் செல்வி.ஜெ.ஜெயலலிதா.  அறிக்கை

கடந்த வருடம் மே மாதத்தில் வன்னியில் நடைபெற்ற இறுதிச் சமரில், இடம்பெற்ற போர்க்குற்ற ஆதாரங்களின் சாட்சியங்களாக, யுத்தத்தில் ஈடுபட்டிருந்த  இராணுவச் சிப்பாய்களினால், கைத் தொலைபேசிகளில் பதிவு செய்யப்பட்ட படங்கள் மேலும் வெளியாகியுள்ளன. ஐ.நா.சபையினால்,  சிறிலங்காவின் போர்க்குற்ற ஆதாரங்கள் குறித்து  ஆராய்வதற்கு அனுசரணையாக நிபுணர்கள் குழுவை அமைத்துள்ள நிலையில்,  இந்த ஒரு  வாரத்தில் மட்டும் மேலும் இரு தொகுதி போர்க்குற்ற ஆதாரப் படங்கள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இறுதிப் போரின் போது  கொல்லப்பட்ட பெண் போராளிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு அவமதிக்கப்பட்டிருப்பது வெளியாகியுள்ள படங்களில் ஆதாரபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது இவ்வாறிருக்க,   அப்பாவி மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி அவர்களை கொலை செய்ய இலங்கை அரசுக்கு உதவி புரிந்திருக்கிறார் கருணாநிதி.  ராஜபக்ஷே சகோதரர்கள் மற்றும் இலங்கை ராணுவத்தில் பணிபுரியும் சிப்பாய்கள் எவ்வாறு போர்க் குற்றவாளிகள் என்று கருதப்படுகிறார்களோ, அதைப் போலவே தமிழக முதலமைச்சர்  கருணாநிதியும் ஒரு போர்க் குற்றவாளி தான் எனக் குற்றம் சாட்டியிருக்கின்றார் அதிமுக செயலாளர் செல்வி.ஜெ.ஜெயலலிதா.

இது தொடர்பாக அவர் இன்று{01.07.2010} வெளியிட்டுள்ள அறிக்கை.


இலங்கையில் நடந்து முடிந்த இருபத்தைந்து ஆண்டுகால உள்நாட்டுப் போரில் நடைபெற்ற உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களை ஆராய்வதற்காக, இந்தோனேசியாவின் முன்னாள் தலைமை வழக்குரைஞரின் தலைமையில் மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்  திரு. பான் கி மூன் நியமித்து இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளி வந்துள்ளது உண்மையிலேயே வரவேற்கத் தக்கது. இலங்கையில் வாழும் தமிழர்களை தமிழ்நாடு அரசும், அதன் முதலமைச்சருமான கருணாநிதியும் கைவிட்டுவிட்ட நிலையில்,  உலக அமைதி ஸ்தாபனமும், அதன் தலைவர் திரு. பான் கி மூன் அவர்களும் ஆதரவுக் கரம் நீட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை தலைவரின்  இந்த நடவடிக்கை, இலங்கையில் உள்ள தமிழ் இனமும், தமிழ் மக்களும் இன்னமும் அனைத்தையும் இழந்து விடவில்லை என்ற நம்பிக்கையை நமக்கு அளிக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் குழுவிற்கு விசா தருவதை இலங்கை அரசு மறுத்து வருகிறது.   இது இலங்கை அரசின் குற்ற உணர்வை வெளிப்படுத்துகிறது.  மஹிந்தா ராஜபக்ஷே அரசுக்கு மறைக்க எதுவுமில்லை என்றால், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் சுதந்திரமாக இலங்கைக்குள் வர அனுமதித்து, எங்கு வேண்டுமானாலும் செல்ல ஆட்சேபணை தெரிவிக்கக்கூடாது. பான் கி மூன் அவர்கள் அறிவித்துள்ள மூவர் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் இந்தோனேசியா, அமெரிக்கா மற்றும் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த சட்ட வல்லுநர்கள். இவர்கள் சுதந்திரமாக இலங்கைக்குள் புக அனுமதிக்கப்பட்டால், இந்த மேன்மை மிகுந்த குழு ராஜபக்ஷேவால் மறைக்கப்பட்ட அத்துமீறல்களை,   மனித உரிமை மீறல்களை, கொடுமைகளை வெளிக்கொணரும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், இந்தக் குழு, இலங்கையில் தங்களது சொந்த வியாபாரத்தை விருத்தி செய்யும் எண்ணத்துடன் தமிழகத்திலிருந்து சென்ற ஆளும் தி.மு.க-வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு அல்ல.

விடுதலைப்  புலிகளின் தலைமையை தீர்த்துக்கட்டியதை அடுத்து, 19.5.2009 அன்று இலங்கை உள்நாட்டுப் போர் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.  ஆனால், இதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பே, 27.4.2009 அன்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி ஒரு கபட நாடகத்தை நடத்தினார். காலை சிற்றுண்டியை வீட்டில் முடித்துவிட்டு கிளம்பிய கருணாநிதி, தலைமைச் செயலகம் செல்லும் வழியில், திடீரென்று அண்ணா நினைவிடம் அருகில் தன்னுடைய பிரயாணத்தை நிறுத்தி, இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான தாக்குதலை இலங்கை அரசு நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார்.  மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டிருப்பதாக தனக்கு தகவல் கிடைத்து இருக்கிறது என்று அறிவித்தார் கருணாநிதி.  கன ரக ஆயுதங்கள் இனி பயன்படுத்தப்பட மாட்டாது என்ற உறுதிமொழியையும் அவர் அளித்தார். பின்னர் “உண்ணாவிரதத்தை” நிறுத்திவிட்டு மதிய உணவிற்காக வீட்டிற்கு சென்றுவிட்டார் கருணாநிதி.

மக்கள் கருணாநிதியை நம்பினார்கள்.  தமிழக மக்கள் மட்டுமல்ல, இலங்கையில் உள்ள தமிழக மக்களும் நம்பினார்கள்.  ஏனெனில் கருணாநிதி தமிழக அரசின் முதலமைச்சர்,  86 வயதானவர், தமிழ் மொழி மற்றும் தமிழ் மக்களின் பாதுகாவலர் என்று தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொள்பவர்... எனவே, மக்கள் அவர் மீது ஏன் அவநம்பிக்கை கொள்ள வேண்டும்? துரதிர்ஷ்டவசமாக அப்பாவி இலங்கைத் தமிழர்கள் கருணாநிதியின் வார்த்தையை நம்பி போர் முடிந்துவிட்டது என்று நினைத்து பதுங்கு குழிகளிலிருந்து வெளியே வந்தனர்.  அப்போது வானத்தில் வட்டமிட்டிருந்த அதிவேக இலங்கை ஜெட் போர் விமானங்கள் கொத்துக் கொத்தாக குண்டு மழை பெய்தன.  இரண்டே நாட்களில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மாண்டனர்!

“நேரடியாக போர் நடவடிக்கைகளில் பங்கேற்காத, அப்பாவி மக்களுக்கு எதிராகவோ, அல்லது தனிப்பட்ட நபர்களுக்கு எதிராகவோ திட்டமிட்டு தாக்குதலை திருப்பிவிடும் செயல் போர்க் குற்றமாகும்" என சர்வதேச சட்டம் கூறுகிறது.  போர் நிறுத்தம் ஏற்படாத போது, போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதாக தெரிவித்து, நிராயுதபாணிகளாக, ஆதரவற்ற நிலையில் இருந்த அப்பாவி இலங்கைத் தமிழர்களை இலங்கை ராணுவத்திற்கு இரையாக்கியதன் மூலம், நேரடியாக போரில் பங்கேற்காத, அப்பாவி மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி அவர்களை கொலை செய்ய இலங்கை அரசுக்கு உதவி புரிந்திருக்கிறார் கருணாநிதி.  ராஜபக்ஷே சகோதரர்கள் மற்றும் இலங்கை ராணுவத்தில் பணிபுரியும் சிப்பாய்கள் எவ்வாறு போர்க் குற்றவாளிகள் என்று கருதப்படுகிறார்களோ, அதைப் போலவே கருணாநிதியும் ஒரு போர்க் குற்றவாளி தான்.

ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகள் குழு இலங்கை செல்லும் போது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த குழு ஐக்கிய நாடுகள் குழுவைச் சந்தித்து, கருணாநிதி ஒரு போர் குற்றவாளி என்று பிரகடனம் செய்யத் தேவையான ஆதாரங்களை அளிக்கும். இந்த மரண வியாபாரியின் சதிச் செயல்கள் காரணமாக போரில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான ஆத்மாக்களுக்கு குறைந்தபட்சம் இதையாவது நாம் செய்ய வேண்டும்; இதைத்தான் நம்மால் செய்ய முடியும் - எனத் தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய இடுகை 

1.உண்மை நிலை என்ன