May 20, 2010

ஜால்ரா, விடுதலை சிறுத்தைகள்-கி.வீரமணி காம்பினேஷன்.

இந்த வாரம் கண்ணில்பட்ட ஜால்ரா, விடுதலை சிறுத்தைகள்-கி.வீரமணி காம்பினேஷன்.
ஜால்ரா என்றால் ஜோடியாக-இரண்டு இருக்க வேண்டும். இந்த வாரம் கண்ணில்பட்ட ஜால்ரா, விடுதலை சிறுத்தைகள்-கி.வீரமணி காம்பினேஷன். (கி - என்பது கி கொடுத்தால் ஆடும் பொம்மை என்றும் பொருள் கொள்ளலாம் போல).
சில நாட்கள் முன்னாடி போடப்பட்ட பதிவு மக்களுக்கு நினைவிருக்கலாம். இந்தக் கடித்ததில் தமிழக அரசின் கோபுரச்சின்னம் மாற்றப்படலாம் என்ற செய்தி குறித்து எழுதியிருந்தேன். அது நடந்துவிடும் போல இருக்கு.தமிழக அரசு மதச்சார்பிண்மையை உறுதி செய்யும் விதமாக தமிழக அரசின் இலச்சிணையை மாற்ற வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தமிழக அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார். அதே போல புது சட்டமன்றத்தில் நடந்த கூட்டத்தொடரில் விடுதலைச் சிறுத்தைகள் ஏதோ தங்களுக்கு உதித்த ஐடியா போல இந்த கோரிக்கையை வைத்துள்ளார்கள். நிச்சயம் கலைஞர் நீங்க கேட்பது போல கேளுங்க நாங்க செய்வதைப் போல செய்கிறோம் என்று சொல்லியிருக்க 100% வாய்ப்பு உள்ளது. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் அரசு சின்னம் மதச் சார்பற்றதாக இருக்க வேண்டுமாம். இவ்வளவு வருஷம் கழித்து தமிழ்ப் புத்தாண்டு போல மேலும் ஒரு ஞானோதயம்.
ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயிலை எப்படிப் பார்க்கவேண்டுமோ அதே போலத்தான் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரமும். அதைக் கோயிலாகப் பார்ப்பதை விட்டுவிட்டு தமிழ சின்னமாகப் பார்ப்பது தான் சரி. கோயில்கள் உடனடியாக தமிழகத்தை உணர்த்தும். அந்தச் சின்னத்தில் அசோகரின் சிங்கச் சின்னமும், தேசியக்கொடியும் இருக்கிறது. பாவம் இது எல்லாம் அவர்கள் கண்ணுக்கு தெரிவதில்லை. கோயில்கள் எல்லாம் வரலாற்றுச் சின்னம், ஆனால் தன் பெயர் வரலாற்றில் வரவேண்டும்/ நிலைக்கவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக இப்படி எல்லாம் தோழமை கட்சிகளிடம் சொல்லிக்கொடுத்துப் பேச வைக்கிறார் முதல்வர்.

செம்மொழி மாநாடு வருகிறது அல்லவா? அதற்கு ஏதாவது செய்ய வேண்டாமா?
தமிழக அரசின் முத்திரையில் இருக்கும் கோபுரத்துக்கு பதிலாக அய்யன் திருவள்ளுவர் உருவத்தைப் பொறிக்கவேண்டும் என்பது இவர்களின் புதுக் கோரிக்கை. திருவள்ளுவரை யாரும் பார்த்தது கிடையாது, முன்பு பஸ்களிலும், பாலச்சந்தர் படத்திலும் உட்கார்ந்துக்கொண்டு இருந்தார். ஆனால் கன்னியாகுமரியில் நிற்க வைக்கப்பட்டுள்ளார். பாவம். ஏன் என்றால் அப்போதுதானே அவர் பெரிதாகத் தெரிவார்? கலைஞருக்கும் புகழ் கிடைக்கும்? வாழும் வள்ளுவன் புகழ் பெற நின்று கொண்டு எழுத வைக்கப்பட்ட வள்ளுவன் புகழ் வாழ்க!
சரி இரண்டு நாட்களுக்கு முன் பேசியதை பாருங்கள்


"...ஜெயலலிதா, தான் கணவராக வரிந்து கொண்ட, தான் தலைவராக வருவதற்கு காரணமாக இருந்த, சர்வாதிகாரத்துடன் கட்சியை நடத்த காரணமாக இருந்த எம்.ஜி.ஆர்., உடல் நலம் குன்றி இருந்த போது அவருக்காக பிரார்த்தனை செய்யாமல் அவரை பதவியில் இருந்து நீக்கி விட்டு, தன்னை அந்தப் பதவியில் அமர்த்தும் படி சொல்லும் அளவிற்கு பதிபக்தி இல்லாமல் இருந்தவர்.அன்பு போன்ற எம்.ஜி.ஆர்., மீது விசுவாசம் கொண்டவர்களுக்கு இப்போதாவது விழிப்புணர்வு வந்ததே என்ற வரையில் மகிழ்ச்சி".இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

இது 100வது குறள், இதனுடைய விளக்கம் "இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளைஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்" இது கருணாநிதி சொன்ன விளக்கம் தாம். சில மாதங்கள் முன்பு இவர் யாருடைய அறிக்கைக்கும் பதில் அறிக்கை விடமாட்டேன் என்று வசனம் பேசினார். இப்போது இப்படி ஒரு தரம் தாழ்ந்த பேச்சு. இந்த அழகில் இவர் திருவள்ளுவர் சின்னம் வைக்கப் பாடுபடுகிறார். நல்ல கூத்து.

சரி ஜெயலலிதா இப்படி செய்தார் என்றால் நீங்கள் என்ன செய்தீர்கள் ? தேர்தல் பிரசாரத்தில் எம்.ஜி.ஆர் போய் சேர்ந்துவிட்டார், ஆகவே எனக்கு வோட்டு போட்டு முதல்வர் ஆக்குங்கள், அப்படி ஒரு வேளை எம்.ஜி.ஆர் திரும்பி வந்தால் முதல்வர் பதவியை திரும்ப அவரிடமே கொடுத்துவிடுகிறேன் என்று வோட்டு கேட்டதை சுலபமாக மறந்துவிட்டீர்கள்.

85 வயதிலும் அண்ணா சொன்ன கடமை உணர்வுள்ள/ கண்ணியமான/கட்டுப்பாடான பேச்சு. பலே!


முரசொலி 9ஆம் தேதி வெளியிட்ட பட்டிக்காடும் பட்டணமும் என்ற பகுதியில்

பட்டிக்காடு:- "ஏன்தம்பி; தமிழக அரசின் முத்திரைச் சின்னத்தில் உள்ள கோபுரத்துக்குப் பதிலாக திருவள்ளுவர் உருவத்தைப் பொறிக்கலாம் - என்ற கோரிக்கை எப்படி?"

பட்டணம்:- "வரவேற்கத் தகுந்த நல்ல யோசனைதான். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியைச் சார்ந்த ஒருவர் - இதற்கான தீர்மானம் கொண்டுவந்து - எல்லாக் கட்சியினரும் ஒருமனதாய் நிறைவேற்றினால் சாத்தியமாகக்கூடிய கோரிக்கைதான்!"
என்கிறார்கள்.ஆனால் தமிழக அரசு அலுவலகங்களில் இந்த மாற்றதுக்கு முன்பே திருவள்ளுவர் சிலையைக்கொண்ட சின்னம் வந்துவிட்டது. (பார்க்க ஸ்டாலின் படம்).
எல்லாம் நல்லாவே நடக்கிறது, கடைசியில் "வாய்மையே வெல்லும்!"


மதசார்பற்ற அரசாக இருக்க வேண்டும் என்றால் இந்து அறநிலையத்துறை போல், கிருஸ்துவ அறநிலையத்துறை, முஸ்லிம் அறநிலையத்துறை என்ற இரண்டு புது துறைகளை புதிய சட்டமன்றத்தில் அறிவிக்கட்டும். வரலாற்று நிகழ்வாக இருக்கும் இதை செய்ய அவருக்கு மனமும் தைரியமும் கொடுக்க எல்லாம் வல்ல மதசார்பற்ற இறைவனைப் பிராத்திப்போம்.
***********************************************

No comments: