Jun 30, 2011

ஐயோ! கொல்றாங்களே,கொல்றாங்களே.


புதிய தலைமைச் செயலக கட்டுமானம் குறித்து விசாரிக்க, தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைத்துள்ளதை கடுமையாக விமர்சித்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

ஒரு ஊழலை விசாரிக்க விசாரணை கமிசன் அமைத்ததற்கே இப்படின்னா இன்னும் நிறைய ஒன்றன் பின் ஒன்றாக வருமே ! தவறு நடந்திருப்பதால் தீர்ப்பு எப்படி வரும்னு முன் கூட்டியே அனுமானித்து அறிக்கை விட்டிருக்கிறார்.

நிச்சயம் அந்த தண்ணீர் டாங்க் சட்டமன்றம் இருநூறு கோடி ரூபாய் தான் இருக்கும், மீதம் உள்ள 1000 கோடி ரூபாயை ஸ்வாகா செய்துள்ளார்கள், அதனால் கருணாநிதி பதட்டமாக உள்ளார். இது மட்டுமா, விசாரணை கமிஷன் அமைத்தால், இன்னும் தோண்ட தோண்ட ஊழல்கள் வெளிவந்துகொண்டே இருக்கும். விசாரணை கமிஷன் என்றவுடன் பயம், நடுக்கம் வந்துவிட்டது போலும். அதனால் நிச்சயம் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது இவரின் பயத்திலிருந்து நிச்சயமாக நிரூபணம் ஆகிறது

யார் விசாரித்தால் என்ன..? உமது வசதிக்கெல்லாம் "வாங்கப்பட்ட" நீதி மான்களை கொண்டு விசாரிக்க சொல்ல முடியாது..! 450 கோடி பட்ஜெட்டில் உருவான கட்டிடம் என்றாலே யாரும் நம்ப தயாரில்லை என்கிறபோது..1200 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த மயான கட்டிடத்தை பற்றி விசாரித்தால் யார் இதனை கட்டி தருகின்றார்கள் என்கிற உண்மை தெரியும்..! எதற்காக இவர்கள் இவ்வளவு பணத்தை போட்டு கட்டி தர காரணம் என்ன என்கிற "ரகசியம்" ஊருக்கு தெரிய வேண்டாமா.?மடியில் கனம் உள்ளதால் தான் இந்த புலம்பல். 

குற்றமுள்ள நெஞ்சு நீதியைப் பார்த்து குறுகுறுக்கிறது. இப்போதே அலறல் துவங்கிவிட்டது.? கொல்றாங்களே கொல்றாங்களே இரண்டாம் பாகம் வரும்னு பயம்.

Jun 23, 2011

ஈழத் தமிழர்கள் துயர் தீரட்டும்.

ஈழ மக்களின் துயர் நீக்கும் வழி தென்படாத நிலையில், ஈழத்தில் நடந்த படுகொலைகளுக்காக ஈரமனம் கொண்ட இளைஞர்கள் மெரினாவில் அஞ்சலி செலுத்தத் தயாராகி வருகிறார்கள்!
'மே 17 இயக்கத்தின்உறுப்பினர்களில் ஒருவரான திருமுருகன் நம்மிடம் பேசினார். ''ஈழத்தில் நடந்த படுகொலைகள், இந்திய அரசின் துணை இல்லாமல் சிங்கள அரசாங்கம் மட்டுமே செய்தது அல்ல. அங்கே 'எத்தனை பேர் செத்தார்கள், எத்தனை பேர் முகாம்களில் இருக்கிறார்கள்என்ற விவரங்களை இன்னும் அரசு சொல்லவில்லை. 'சக தமிழனாக, தோழனாக ஈழத்தில் என்ன நடக்கிறது?’ என்கிற கேள்வியை ஒரு குடிமகனாக நான் முன் நின்று கேட்கும்போது, இந்த அரசாங்கம் என்னிடம் நேர்மையற்றதாக நடந்து கொள்கிறது. நான் ஏமாற்றப்பட்டதன் வலியை உணர்ந்து இந்த அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும். இது தனிப்பட்ட என்னுடைய கோபம் அல்ல. தமிழ் இனத்தின் கோபம். சுமார் 1,46,000 பேர் ஈழத்தில் கொல்லப்பட்டனர். இந்தப் பேரழிவை இந்திய அரசாங்கம் தட்டிக் கேட்கவே இல்லை. வியட்நாம் போரின்போது, அமெரிக்க மக்கள் எந்த அளவுக்கு வருந்தினார்களோ, அந்த மனிதநேயத்தின் அடிப்படையில்தான் நாங்கள் கேள்வி எழுப்புகிறோம்.
60 ஆண்டுகாலமாக நடக்கும் போராட்டத் தில், '1976-ம் ஆண்டு ஜனநாயக ரீதியாக தமிழீழம் தனி நாடாக அறிவிக்கப்பட வேண்டும்என்ற தீர்மானத்துக்கு நம்மில் எத்தனை பேர் ஆதரவு அளித்தோம்? தமிழீழம் மட்டுமே அல்ல... தமிழர் சார்ந்தும் கேள்விகள் எழுப்பப்படாமல் போனதன் விளைவே இந்தப் படுகொலைகள். டிசம்பர் 10, 2009-ல் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, 'ஈழத்தில் நடந்த இனப் படுகொலைஎன்ற வார்த்தைகளைச் சொன்னார். அந்த வார்த்தையை அவைக் குறிப்பில் இருந்து நீக்கினார்கள். இந்த அடிப்படையில் பார்த்தால், இலங்கை மேற்கொள்ளும் படுகொலைகளை இந்தியா ஊக்குவிக்கிறது என்பது தெரியும்.
14 முதல் 18 வயதுக்குட்பட்ட சுமார் 70,000 பெண்களை மட்டும் சிறைப் பிடித்து இருக்கிறார்கள். அத்தனை பேரையும் பலாத்காரம் செய்து கர்ப்பிணிகள் ஆக்கிவிட்டனர். போருக்குப் பிந்தைய படுகொலைகள், உலகத்தை உலுக்கி வருகின்றன. இப்படிச் சித்ரவதை களுக்கு உள்ளானவர்களின் ஆதரவுக்கான சர்வதேச தினமாக ஜூன் 26-ம் தேதியை அறிவித்து இருக்கிறது ஐ.நா.!
இன்று வரையிலும், 'போர்க் குற்றவாளிஎன்ற ஒரு பக்கத்தில் இருந்து மட்டுமே பேசுகிறோம். அடக்குமுறை களுக்கு உள்ளான, குற்றவாளிகளின் பிடியில் இருக்கும் மக்களை விடுவித்து, என்ன கோரிக்கைக்காக இத்தனை துயர்களை அடைந்தார்களோ, அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து வருகிற ஜூன் 26-ம் தேதி மெரினா, கண்ணகி சிலை அருகில் மெழுகுவத்தி அஞ்சலி செலுத்த இருக்கிறோம். தங்களைத் தமிழர்களாக உணர்பவர்கள் கலந்துகொள்ளும் முக்கிய நிகழ்வாக இது இருக்கும்!'' 
அந்த நாளில் உணர்வாளர்கள் அனைவரும் ஓர் இடத்தில் கூடி தங்களது அஞ்சலியையும் கோபத்தையும் பதிவு செய்ய இருக்கிறார்கள்.
மெழுகுவத்தி வெளிச்சத்தில் ஈழத் தமிழர்கள் துயர் தீரட்டும்!
நன்றி.ஜூனியர் விகடன்

Jun 17, 2011

நீதிமன்றத்தில் ராசா - கனிமொழி நேரடி ரிப்போர்ட்.

தில்லி இந்தியா கேட் அருகிலுள்ள பாட்டியாலா நீதிமன்ற வளாகம். சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனியின் கோர்ட்டுக்கு வெளிப்புறம் உள்ள அறை. காக்கி போலீஸ்காரர்களும் கறுப்பு கோட் வழக்கறிஞர்களும் குறுக்கும் நெடுக்கும் நடக்கிறார்கள். வழக்குக்குத் தொடர்புடைய பொதுமக்கள், அறையில் இருக்கும் நாற்காலிகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். காற்றில் இந்தி மட்டும் கலந்திருக்கிறது. 

ஒரு தூணுக்குப் பக்கத்தில் சற்று மறைவாக அமர்ந்திருக்கிறார் கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள். முகத்தில் குடியேறிவிட்ட சோகம். அவ்வப்போது உத்தரத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரது உதவியாளரும் சென்னை 95வது வட்ட மாநகராட்சி கவுன்ஸிலருமான துரை, கையில் செல்ஃபோனுடன் பரபரப்பாகப் பேசிக் கொண்டே இருக்கிறார். இடையில் ராசாத்தியிடமும் செல்ஃபோனைக் கொடுக்கிறார். ஒன்றிரண்டு வார்த்தைகளுக்கு மேல் அவர் பேசுவதில்லை. உள்ளே கோர்ட் அறையில் கனிமொழி இருக்கிறார். கனிமொழிக்கு ஜாமீன் நழுவிப் போய்க் கொண்டே இருக்கும் நிலையில் வாரத்துக்கு மூன்று நாட்கள் சென்னையிலிருந்து தில்லி வந்து விடுகிறார் ராசாத்தி. காலை முதல் மாலை வரை கனிமொழியை திகார் ஜெயிலுக்கு அழைத்துப் போகும் வரை நீதிமன்றத்திலேயே இருக்கிறார்.

தில்லியில் திலக் சாலையிலுள்ள பாட்டியாலா நீதிமன்றக் கட்டடம், சுதந்திரத்துக்கு முன்பு பஞ்சாப் பாட்டியாலா அரசரின் மாளிகையாக இருந்தது. இங்கே மொத்தம் 27 மாவட்ட அளவிலான நீதிமன்றங்கள் இருக்கின்றன. அவற்றில் மூன்று சி.பி.ஐ. வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்கள். அதில் ஒன்றுதான் சைனியின் நீதிமன்றம். இரண்டாம் அலைவரிசை ஊழல் வழக்கு இங்கேதான் நடக்கிறது. பான் பராக் துப்பப்பட்ட சுவர்கள்; மற்றும் நெருக்கமான பாதைகளைக் கடந்து சைனியின் நீதிமன்றத்துக்குள் செல்ல வேண்டியிருக்கிறது. வெளியே முகத்தில் நெருப்பை அள்ளி விட்டாற்போல் காலை பத்து மணிக்கே அனல் வீசுகிறது. 

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 14 பேரும் காலை பத்து மணி அளவில் நீதிமன்றத்தின் பக்கவாட்டு வாசல் வழியாக, வளாகத்தில் இருக்கும் லாக்-அப் அறைக்கு அழைத்துக் கொண்டு வரப்படுகிறார்கள். பின்னர் பத்து நிமிடங்கள் கழித்து லாக்-அப் அறையிலிருந்து கோர்ட்டுக்குள் அழைத்து வரப்படுகிறார்கள்.

சரியாக பத்தரை மணிக்கு நீதிபதி சைனி கோர்ட்டில் வந்தமர்கிறார். யாரும்அமைதிஎன்று சொல்லாமலேயே கோர்ட் திடீர் அமைதியில் மூழ்கிவிடுகிறது. குளிர்சாதனம் செய்த கோர்ட் ஹால்; குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டில் ஆஜராகி விட்டார்களா என்பதை உறுதி செய்து கொண்டு அது தொடர்பான ரிகார்டுகளில் கையெழுத்திட்டு விட்டு, பின்னால் உள்ள தமது அறைக்குச் சென்று விடுகிறார் சைனி.

நின்று கொண்டிருக்கும் ராசா, கனிமொழி மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அமர்ந்து கொள்கிறார்கள். சி.பி.ஐ. தாக்கல் செய்த இரண்டு குற்றப் பத்திரிகைகளும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குக் கொடுக்கப்பட்டு விட்டன. அவர்கள் அதைத் தங்கள் வழக்கறிஞர்களுடன் அமர்ந்து பரிசீலனை செய்யவே இப்போதைய கால அவகாசம். அதே சமயம் நீதிபதியும், தம் அறையில் உட்கார்ந்து குற்றப் பத்திரிகையைக் கூர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். சிறிய கோர்ட் ஹால். அதில் குற்றம்சாட்டப்பட்ட 14 பேர்கள்; அவர்களுக்குப் பொறுப்பாக இருக்கும் காவலர்கள்,  

வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள். இப்படி கோர்ட் கலகலவென்று இருக்கிறது. வழக்கறிஞர்களோடு குற்றம்சாட்டப்பட்டவர்கள் கலந்தாலோசிக்கிறார்களோ இல்லையோ... தங்கள் மனைவி, குழந்தைகள் ஆகியோரோடு நேரத்தைச் செலவழிக்கிறார்கள். அவ்வப்போது அங்கே துக்கக் காட்சிகளும் அரங்கேறுகின்றன.

முதல் வரிசையில் கனிமொழி, பக்கத்தில் அவரது கணவர் அரவிந்தன், அவர் அம்மா, சரத்குமார் அவரது மனைவி ஆகியோர் அமர்ந்திருக்கிறார்கள். பூப்போட்ட நீல கலர் சுடிதாரில் இருக்கும் கனிமொழிக்கு காதில் எந்த நகையும் இல்லை. முதல் வரிசை பக்கவாட்டில் ராசா, ராசாத்தி அம்மாள் ஆகியோர் அமர்ந்திருக்கிறார்கள். அமைச்சராக இருந்தபோது பளபளப்பாக இருந்த ராசா முகம் சற்றே வாடித்தான் போயிருக்கிறது. ஆனால் பேச்சில் உற்சாகம் குறையவில்லை. கனிமொழியிடம் சிரித்தபடி ஜோக்கடித்துப் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால், அவர்கள் சிரிப்பும், பேச்சும் ராசாத்தி அம்மாள் முகத்தில் எந்த மாற்றத்தையும் உண்டாக்கவில்லை.
கழக உடன்பிறப்புகள் வருகிறார்கள். நாகர்கோயில் பாராளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன் ராசாத்திக்குத் துணையாக இருக்கிறார். சாக்லெட்டுகளும், ஐஸ்கிரீம்களும் தாராளமாக அறைக்குள் கொண்டு வரப்படுகின்றன. குற்றம்சாட்டப்பட்டவர்கள் செல்ஃபோனில் தாராளமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். காவலர்கள் அதையெல்லாம் கண்டுகொள்வதில்லை.

சிறிது நேரத்தில் அரவிந்தனும், அவர் அம்மாவும், எழுந்து சென்று விட கனிமொழியின் பக்கத்தில் வந்தமர்ந்து கனியுடன், தம் பேச்சுக் கச்சேரியைத் தொடர்கிறார் ராசா. உடன்பிறப்புகள் சிலர் அம்மா... ஜெயில் எப்படி?" என்று கனிமொழியிடம் கேட்க, கொசுக்கடிதான் தாங்க முடியலை" என்கிறார் சிரித்தபடி. தயாநிதி மாறன் தொலைபேசி இணைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு குறித்து தினமணி பத்திரிகையில் வந்த கட்டுரையை மிகவும் உன்னிப்பாக வாசிக்கிறார்கள் ராசாவும், கனிமொழியும். இந்த கோர்ட் எப்போதும் ஈயடித்துக் கொண்டிருக்கும். இந்த வழக்கு வந்த பின் கலகலவென்றிருக்கிறது" என்கிறார் அமர்ந்திருந்த தமிழக அரசின் உளவுப் பிரிவின் அதிகாரி ஒருவர்.

கோர்ட் ஹாலில் திடீரென்று ஒரு பரபரப்பு. தமது அறையிலிருந்து வந்து ஆசனத்தில் அமர்கிறார் நீதிபதி சைனி. குற்றம்சாட்டப்பட்டவர்கள் எழுந்து நிற்கிறார்கள். வழக்கறிஞர்கள் கும்பல் நீதிபதியைச் சூழ்ந்து கொள்கிறது. என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. ஐந்து நிமிடம்தான். உணவு இடைவேளைஎன்று சொல்லிவிட்டு, மீண்டும் அறைக்குள் சென்று விடுகிறார் நீதிபதி சைனி. சி.பி.ஐ. கொடுத்த சில பேப்பர்கள் தெளிவாகவே இல்லை. வேறு கொடுக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டோம்" என்று நம்மிடம் சொல்கிறார் கனிமொழியின் வழக்கறிஞர் பி.ஜி. பிரகாசம்.

சி.பி.ஐ. ஸ்பெஷல் கோர்ட் பத்தாம் தேதி வரைதானாம். அதற்குப் பின் கோடை விடுமுறையாம். ஜூலை ஒன்று முதல் வழக்கறிஞர் வாதம், சாட்சிகள் விசாரணை தொடங்குமாம். இதற்கிடையில் தில்லி உச்சநீதிமன்றம் ஒரு மாதம் கோடை விடுமுறையில் இருக்கிறது. இடையிலேயே, நீதிபதி கனிமொழிக்கு ஜாமீன் வழங்குவார் என்று நம்பிக்கையோடு எதிர்பார்த்தது கலைஞர் குடும்பம். ஆனால் ஏமாற்றம் தான்.

ராசா, கனிமொழி ஆகியோர் மீண்டும் கோர்ட் வளாகத்திலுள்ள லாக்-அப்புக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். உறவினர்கள் அங்கே போக முடியாது. இந்த வழக்கில் ஜெயிலில் இருப்பவர்கள் அனைவரும் மிக, மிக வசதியானவர்கள். வழக்கின் முடிவு எப்படி இருக்குமோ தெரியாது. சட்டம் வளையாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
 கௌசி.நன்றி.கல்கி.

Jun 9, 2011

தயாநிதி மாறனை கைவிட்ட கருணாநிதி.

2ஜி அலைகற்றை ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை வலையில் சிக்கியுள்ள மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறனை திமுக தலைமை கைவிட்டு விட்டது. ‘தயாநிதி மாறனே சி.பி.ஐ. வழக்கை எதிர் கொள்வார்’ என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

திமுகவில் அதிக செல்வாக்கு உடையவர் யார் என்று தினகரன் நாளிதழில் கடந்த 2007ல் கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது. அதில் மு.க.ஸ்டாலினுக்கு அதிக செல்வாக்கு என்றும், அழகிரிக்கு மிகமிக குறைந்த அளவே  செல்வாக்கு உள்ளது என்றும் தகவல் வெளியானது. இதையடுத்து மாறன் சகோதரர்களுக்கும், திமுக தலைவர் கருணாநிதி இடையே பெரும் பிளவு ஏற்பட்டது. இதற்கிடையே மதுரையில் தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டு மூன்று அப்பாவி ஊழியர்கள் பலியான சம்பவமும் நடந்தது.  கருணாநிதியின் மூத்த மகனான அழகிரி, மாறன் சகோதரர்களை கடுமையாக எதிர்க்க தொடங்கினார். இதன் விளைவாக தயாநிதி மாறன் மத்திய தொலை தொடர்பு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அந்தப் பதவி, தற்போது திகார் சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆ.ராசாவுக்கு வழங்கப்பட்டது.

அதன் பின்னர் 2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது மாறன் சகோதரர்களும், ‘கருணாநிதி அண்ட் கோ’வும் ராசியாயினர். மாறன் சகோதரர்களை உச்சி முகந்த கருணாநிதி, ‘‘கண்கள் பனித்தன; இதயம் இனித்தது’’ என்று கவிதை நயம் சொட்ட சொட்ட வரவேற்றார். மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்ற தயாநிதி மாறன், ஜவுளித்துறை அமைச்சராகவும் ஆனார்.

எனினும் டெல்லியில் அவருக்கு முன்பு இருந்த முக்கியத்துவம் இல்லை. முதல் முறை எம்.பி.யாகி, தொலைத் தொடர்பு அமைச்சராகவும் இருந்தபோது, டெல்லியில் திமுக – காங்கிரஸ் இடையே உறவுப்பாலமாக தயாநிதி செயல்பட்டுக் கொண்டிருந்தார். ஆனால், இரண்டாவது முறை எம்.பி.யாகி ஜவுளித்துறை அமைச்சராக தற்போது இருக்கும் தயாநிதி மாறனை, டெல்லி காங்கிரஸ் தலைமையுடனான பேச்சுவார்த்தைகளில் திமுக தலைமை சேர்த்துக் கொள்வதில்லை. ஒதுக்கியே வைத்துள்ளது. திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலுவே திமுக சார்பில் காங்கிரஸ் தலைமையிடம் தொடர்ந்து பேசி வருகிறார்.

இந்நிலையில், ஆ.ராசாவுக்கு எதிராக தோண்டப்பட்ட 2ஜி குழியில் தயாநிதி மாறனே சிக்கி கொள்ளும் சூழல் ஏற்பட்டது. தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விஷயத்தில் ஏர்செல் நிறுவனத்துக்கு சாதகமாக நடந்து கொண்டதாக தயாநிதி மாறன் மீது புகார் எழுந்துள்ளது. மேலும், பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை அவர் தவறாகப் பயன்படுத்தியதாகவும் பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதற்கு தயாநிதி மாறன் மறுப்பும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 2ஜி விவாகாரம் தொடர்பாக தயாநிதி மாறனிடம் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த உள்ளது. மேலும், சி.பி.ஐ.யும் தயாநிதியிடம் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பா.ஜ. உள்ளிட்ட எதிர்கட்சிகள் தயாநிதி மாறனை பதவி விலக சொல்லி வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என பிரதமர் மன்மோகன் சிங்கும் தெரிவித்து விட்டார்.

இந்நிலையில், சென்னையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கருணாநிதி  அளித்த பேட்டி:

கேள்வி:- கனிமொழிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டால் அதை எப்படி ஏற்றுக் கொள்வீர்கள்?
பதில்:- அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.

கேள்வி:- தயாநிதி மாறன் மீது சி.பி.ஐ. விசாரணை தொடங்கும் என்று கூறியுள்ளதே?
பதில்:- தயாநிதி மாறனே அந்த வழக்கை சந்திப்பதாக சொல்லி இருக்கிறார். அதில் நான் என்ன சொல்வதற்கு இருக்கிறது.

இவ்வாறு கருணாநிதி கூறியிருப்பதன் மூலம் அவர் தயாநிதி மாறனை கைவிட்டு விட்டார் என்றே தெரிகிறது. மேலும், தில்லி திகார் சிறையில், ராசா, கனிமொழி, சரத்குமார் இருப்பதற்கு காரணமே மாறன் சகோதரர்கள்தான் என்ற எண்ணத்தில் திமுக தலைமை உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

Jun 5, 2011

தேர்தல் முடிவு மக்களின் யுக புரட்சி. பிரபஞ்சன்.


கருணாநிதி ஆட்சி ஏன் மறைய வேண்டும் என்பதற்க்கான காரணங்கள், அவரவர்க்கும் வேறு வேறாக இருந்தாலும், மாற்றம் தவிர்க்கக் கூடாதது என்ற ஒரு புள்ளியில் இணைந்திருந்தனர். கருணாநிதியின் இன்னுமொரு குடும்பச் சொத்தான, தி.மு.க., தோற்றது. தோற்றது என்ற சொல்லில், தோல்வியின் அசலான கனபரிமாணங்கள் அடங்கவில்லை. தமிழர்கள், தி.மு.க., வையும், அதன் உரிமையாளர்களையும், வங்கக் கடலுக்கு அப்புறம் தூக்கி எறிந்திருக்கின்றனர் என்று சொல்வது, உண்மையை நெருங்கிய சொல்லாக இருக்கும். 

ஆளும் கட்சிக்கு எதிராக ஓட்டளிக்கும் மனநிலையை நாம் அறிவோம். இந்த, தி.மு.க.,வுக்கு எதிரான ஓட்டளிப்பு, அம்மாதிரியான மனநிலையையும் தாண்டி, அடக்கி வைத்திருந்த அத்தனை ஆக்ரோஷத்தையும் திரட்டி, விரலுக்குக் கொண்டு வந்து, வெஞ்சினத்தோடு தங்கள் தீர்ப்பைத் திட்டவட்டமாக, அழியாத கல்வெட்டு போலப் பதிவு செய்திருக்கின்றனர். தமிழர்கள் பற்றி நாம் பெருமைப்பட, மேலும் ஒரு வரலாற்றுப் புரட்சியை, அவர்கள் பேசாமலேயே நிகழ்த்தியிருக்கின்றனர். வாழ்நாளில் இதுபோன்ற, ஒரு தீர்க்கமான தோல்வியைச் சந்தித்திராத கருணாநிதி, தோல்வியை ஏற்று என்ன சொல்லப் போகிறார் என்று எதிர்பார்த்தேன்.

ஒரு அசலான வீரன், தான் தோற்கடிக்கப்பட்ட போது, என்ன சொல்வான்? எப்படி நடந்து கொள்வான்? தன் எதிரியின் வீரத்தை வியப்பான். தன் தோல்வியை அடக்கமாக ஒப்புக் கொள்வான். இடத்தைக் கவுரவமாக எதிரிக்கு விட்டுக் கொடுப்பான். கருணாநிதி வீரர் இல்லை; எனக்குத் தெரியும். வீரர் அல்லாதவர் என்ன கூறுவர் என்று அறிய விரும்பினேன். கருணாநிதி சொன்னார்... "மக்கள் எனக்கு ஓய்வு கொடுத்திருக்கின்றனர்; அவர்கள் வாழ்க!' தமிழர்களுக்குச் சாபம் இட்டார் கருணாநிதி. வயிறு எரிந்து அவர்களை ஒழிந்து போகச் சொன்னார். "அவர்கள் வாழ்க' என்ற வார்த்தைகளில், அறியாமை மட்டுமல்ல, அகம்பாவம், ஆணவம், அதீத கோபம் எல்லாம் இருந்தன. 

தலைமைப் பொறுப்புக்குத் தகுதி இல்லாத தலைவர் என்பதை, கருணாநிதியே, வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இதே சூழ்நிலையில், 1967ம் ஆண்டு காமராஜர் இருந்தார். மாபெரும் தோல்வியை அவர், அப்போது சந்தித்தார். அப்போது, காமராஜரைச் சந்திக்கச் சென்ற தியாகி சத்தியமூர்த்தி மகனும், இலக்கியப் பதிப்பாளரும், பின்னர் ஸ்தாபன காங்கிரஸ் தலைவராக இருந்த லட்சுமி கிருஷ்ணமூர்த்தியிடம், காமராஜர் சொன்னார்... "எதுக்காக வருத்தப்படறேம்மா... முதல்வர் நாற்காலி என்ன நமக்கே சொந்தமா? மக்கள் நம்மை வேண்டாம்கிறாங்க; அதை ஏத்துக்குவோம். அதுதானே ஜனநாயகம். அதுக்குத்தானே வெள்ளைக்காரன்கிட்டே நாம போராடினோம். நம்ம தப்பைத் திருத்திக்கிடுவோம். அப்புறம் மக்கள்கிட்ட போவோம்...' என்றாராம். இது, லட்சுமி கிருஷ்ணமூர்த்தியே எங்களிடம் சொன்னது. காமராஜர் தலைவர்.


கருணாநிதியை, இறுகிய ஒருமைப்பாட்டோடு, தமிழ் மக்கள் தோற்கடித்தமைக்கு, பலரும், பல காரணங்களைக் கூறினர். மிக முக்கியமான காரணமாக, நான் கருதுவது இது: மனிதர்கள் எத்தனை ஏழ்மை நிலையிலும் இருக்கலாம்; பிறரை அண்டிப் பிழைக்கும் நிலைமையும் சிலருக்கு நேரலாம். தத்தம் தகுதிக்கும் கீழான காரியங்களைத் தவிர்க்க முடி யாமல் செய்ய நேரலாம். ஆனாலும், மனிதர்கள் சுயமரியாதை உள்ளவர்கள். 

ஒரு தொலைக்காட்சி பெட்டிக்கும், உண்ண முடியாத அரிசிக்கும், இலவசமாக வழங்கப்படும் பொருட்களுக்கும், தம்மை விற்றுக்கொள்ள அவர்கள் மறுத்து விட்டனர். தேர்தல் எனும் மிக முக்கியமான கட்டத்தில், மக்களிடம் மனிதப் பண்புகள் வெளிப்பட்டு மீண்டெழுந் தன. மக்கட்பண்பு என்பது, மான உணர்வின் வெளிப்பாடு. நீங்கள் விலை கொடுத்து வாங்கி, ஓட்டிக் கொண்டு போக, நாங்கள் நாய்க்குட்டியோ, ஆட்டுக்குட்டியோ அல்லர் என்று, அவர்கள் முடிவு எடுத்தனர். 

கருணாநிதியின் புறமுதுகைக் கண்டனர். தவிரவும், இலவசங்கள் எங்கிருந்து வந்தன? வானம் பொத்துக் கொண்டு, அவை விழவில்லை. தி.மு.க., தலை வர், தம் சொந்தப் பணத்தில் இருந்து அந்தப் பொருட்களை வாங்கி, "இலவசமாக' மக்களுக்குத் தரவில்லை. மக்கள் பணத்திலிருந்து பொருட்களை வாங்கி, மக்களுக்குத் தருவதற்குப் பெயர் இலவசமா?

மக்கள் தரிசனத்தோடு கூடிய, தம் காலத்துக்கும், எதிர்காலத்துக்கும் பொருந்தும் வளர்ச்சித் திட்டங்களை எதிர்பார்த்தனர். அன்பில்லாத இலவசம், மக்களுக்குப் புரிந்தது. இலவசங்களைப் பெற்றவர்கள், பதிலுக்கு ஓட்டைத் தருவர் என்று, கருணாநிதி எதிர்பார்த்திருந்ததும், மக்களுக்குப் புரிந்தது.


"எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே' என்று சொன்ன மலைக்கள்ளனுக்குப் புரிந்த உண்மை, மக்களுக்குப் புரியாதா என்ன? 

வரலாறு அறியாத அந்த ஊழல் மேகம் ஒன்று திரண்டு, கரிய மேகமாகவும், கூரிய வாளாகவும், அவர் வீட்டுக் கதவைத் தட்டிய போது, தரமற்றதும், தகுதி குறைந்ததுமான வார்த்தைகளை, கருணாநிதி சிதறத் தொடங்கினார். 

அதிகாரத் தரகரோடு, அவர் இல்லத்துப் பெண்கள் பேசியது, "வெறும் இரண்டு பெண்கள் பேசுகிற பேச்சு இது' என்றார். யார் வீட்டுப் பெண்கள், மத்திய அமைச்சர் பதவியில், யாரை நியமிப்பது என்று பேசுகின்றனர்? அவர் பெண் மீது விசாரணை அறிக்கை குற்றம் சுமத்தியது பற்றி, ஒரு பெண் நிருபர் கேள்வி எழுப்பினால், "உனக்கு இதயம் இல்லையா? நீயும் பெண்தானே?' என்கிறார். இதயம் இருப்பதன் அடையாளம், கேள்வி கேட்காமல் இருப்பது என்கிறார் கருணாநிதி அல்லது அவரது பெண்ணைப் பற்றி, இன்னொரு பெண் பேசக் கூடாது என்கிறாரா அவர்? ஒரு நிருபர், இதைக் கேட்காமல், வேறு எதைக் கேட்பார்?

ஈழத் துயரின் உச்சமான, முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு, முன்னும் பின்னும் கூட, முன்னாள் முதல்வர், தன் மேஜை மேல் இருக்கும் குண்டூசிகளைக் கூட நகர்த்த முயற்சிக்கவில் லை. அவமானங்களையும், புறக்கணிப்பையும் பொறுத்துக் கொண்டு, டில்லியில் அவர் இருந்த நாட்களில், பதவிகளைப் பெறப் போராடிக் கொண்டிருந்த அந்தக் கணங்களைக் காட்டிலும், தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள அவர் பட்டபாடு மிகப் பரிதாபகரமானது. 

மிகவும் நகைச்சுவையும், மிகப் புதுமையும் கொண்ட நாடகம் ஒன்றை, நிகழ்த்திக் காட்டினார் அவர். அதுவே, கடற்கரையில் காலை உணவுக்குப் பின் னும், மதிய உணவுக்கு முன்னும் அவர் மேற்கொண்ட, மூன்றே முக்கால் மணி நேர உண்ணாவிரதம். "ஈழம் கிடைத்து விட்டது...' என்று புறப்பட்டார். மக்கள் இதையும் மனதில் கொண் டனர். 

அவர் ஆட்சிக் காலத்தில், தமிழக மீனவர்கள் படுகொலை, இலங்கை ராணுவத்தால் தொடர்ந்து நடைபெற்றது. அதிகபட்ச எதிர்ப்பாக, பட்டுத் துணியில், சந்தனத்தில் தொட்டு எழுதி, புறாக்காலில் கட்டிக் கடிதம் அனுப்பினார் பிரதமருக்கு.


கருணாநிதியின் தி.மு.க.,வை தோற்கடிக்க, 100 காரணங்கள் மக்களுக்கு இருந்தன. விலைவாசி உயர்வு, கோவை, திருப்பூர், ஈரோடு தொழி லாளர்களின் பனியன் மற்றும்சாயத் தொழிற்சாலைப் பிரச்னை, சிறு தொழிற்சாலைகளைக் கொன்று விட்ட மின்வெட்டு, தமிழகக் கிராமங்களில் நிகழ்ந்த, நான்கு முதல், ஆறு மணி நேரம் நீண்ட மின்வெட்டுகள். 

எல்லாவற்றுக்கும் மேலே, இவர்கள் மீண்டும் வேண்டாம் என்று, மக்கள் வந்து சேர்ந்த இறுதி முடிவு. கருணாநிதிக்கு, இடதிலும், வலதிலும் நின்றிருந்த சிறுத்தைகளையும், பாட்டாளிகளையும் கூடத் தமிழக மக்களின் கசப்புணர்வு தொட்டுத் தோல்வியுறச் செய்தது. மூன்றாவது கட்சியோ, அணியோ இல்லாத தமிழகத்தில், இப்படித்தான் முடிவுகள் இருக்க முடியும். ஜெயலலிதாவுக்கு தி.மு.க., தோல்வியில் கற்பதற்கு நிறையவே இருக்கிறது. 
தினமலரில்,பிரபஞ்சன், எழுத்தாளர்.