Jan 29, 2012

நன்றி கொன்றவனாகவே விரும்புகிறேன்-தமிழருவி மணியன்.


அன்பிற்கும் மதிப்பிற்கும் என்றும் உரிய ஐயா கலைஞர் அவர்களுக்கு...
வணங்கி மகிழ்கிறேன். உங்களுக்கு நான் வரைந்த இரண்டு கடிதங்களை முரசொலிஇதழின் பக்கத்தில் வெளியிட்டு நன்றிமறந்த என்னை நயத்தகு நாகரிகத்துடன் வாழ்த்திஇருக்கிறீர்கள்.

நான் கேட்காமலே எனக்கு மாநிலத் திட்டக் குழு உறுப்பினர் பதவியும், பாரதி விருதும் மனமுவந்து அளித்து என்னைத் தாங்கள் பெருமைப்படுத்தியதையும், வீடற்ற எனக்கு வீட்டு வசதி வாரியத்தில் குறைந்த வாடகையில் ஒரு வீடு கொடுத்து என் பொருளாதாரச் சுமையைக் குறைத்ததையும் என் இறுதிநாள் வரை நன்றியுடன் நினைத்து தங்கள் அன்பைப் போற்றுவேன்என்று உங்களுக்குத் தீட்டிய கடிதத்தில் நான் குறிப்பிட்டு இருந்தது முற்றிலும் உண்மை.

ஆனால், ஒருவர் செய்த உதவியை நெஞ்சில் நிறுத்தி, அவர் பின்னாளில் செய்து முடித்த தவறுகள் அனைத்துக்கும் உடந்தையாக இருப்பது தான் நன்றியின் நல் அடையாளம் என்று நீங்கள் நினைத்தால், அந்த நன்றியை நான் செலுத்தத் தவறியது உண்மைதான். அந்த வகையில் நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்.

ஆயிரக்கணக்கில் அரிய புத்தகங்களை கவனத்துடன் சேர்த்து வைத்திருக்கும் நான், அவற்றை ஒழுங்காகப் பராமரித்துப் பாதுகாக்கவும் சாகும் வரை நிலையாக ஓர் இடத்தில் தங்கி வாழவும் வீட்டு வசதி வாரியத்தில் குறைந்த வாடகையில் வீடு ஒதுக்கித் தரும்படி உங்களிடம் விண்ணப்பித்தது உண்மை. நீங்களும் அன்புடன் என் கோரிக்கையை நிறைவேற்றியதும் உண்மை.

ஆனால், ஈழ மக்களின் ஆழ்ந்த நம்பிக்கைக்கு எதிராகவும், இந்திய அரசின் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும் நீங்கள் நாற்காலி மனிதராய் மெளனத் தவம் இருந்தபோது, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும், திட்டக் குழு உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகி, உங்களையும், காங்கிரஸையும் விமர்சிக்க நான் எழுதுகோல் ஏந்தியதும், வாடகைக்கு வழங்கிய வீட்டில் இருந்து என்னை வெளியேற்றி வீதியில் நிறுத்த முனைந்தது உங்களது பெருந்தன்மை!

முல்லை-பெரியாறு, காவிரி நீர்ப் பிரச்னையில்கூட இவ்வளவு தீவிரத்தை நீங்கள் காட்டியது இல்லை.

ஒரு சாதாரண வாடகைதாரரை வெளியேற்றும் வழக்கில் ஆதி முதல் அந்தம் வரை மாநில அரசின் அடிஷனல் அட்வகேட் ஜெனரலை நிறுத்தி வாதாடச் செய்து பழிவாங்கும் படலத்தில் புதிய வரலாறு படைத்தீர்கள்.

நீதியரசர் மாண்புமிகு சந்துரு அவர்கள் நியாயத்தின் நிறம் அறிந்து எனக்கு ஆதரவாக வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடும் செய்தீர்கள்.

மதுரை வீதியில் பட்டப்பகலில் சொந்தக் கட்சிக்காரரான தா.கிருஷ்ணன் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மேல்முறையீடு செய்யாத நீங்கள், வீடற்ற ஓர் எளியவனை வீதியில் நிறுத்த இறுதி வரை களம் இறங்கினீர்கள்.

ஜனநாயகத்தின் உயிர்நாடியான கருத்து சுதந்திரத்துக்கு நீங்கள் நிர்ணயித்த வரையறை நன்றிக்குரியதுதான்.

இன்றும் அந்த வழக்கு நீதிமன்றத்தில்தான் இருக்கிறது. உங்கள் ஆட்சியின் தவறுகளுக்கு எதிராக, எழுத்திலும் பேச்சிலும் கருத்துப்போர் நிகழ்த்திய நான் அந்த வீட்டைக் காப்பாற்றிக்கொள்ள மனுப்போட்டு நிற்கவில்லை. அது என் வாழ்க்கை முறையும் இல்லை. 

 நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி நான் யாரையும் திட்டுபவன்இல்லை. தமிழாய்ந்த உங்களுக்கு வசைபாடுபவனுக்கும், தவறுகளைத் தறுக்கண் ஆண்மையுடன் விமர்சிப்பவனுக்கும் இடையிலுள்ள வேற்றுமை விளங்காமற் போனது எனக்கு வியப்பைத் தருகிறது.

கலைஞரே... இப்போது ஓய்வாக அமர்ந்து சிந்திப்பதற்கு உங்களுக்குக் காலத்தின் கருணையால் நிறைய நேரம் வாய்த்திருக்கிறது. பதவி நாற்காலியின் மீதிருந்த பற்றினால் ஈழப் பிரச்னையில் நீங்கள் நடந்துகொண்ட விதம் நியாயமா என்று யோசியுங்கள். அலைக்கற்றை ஊழலில் ஈடுபட்டு உங்களைச் சார்ந்தவர்கள் கழகத்தின் மீது என்றும் நீங்காத களங்கச் சேற்றைப் பூசியது சரிதானா என்று சிந்தியுங்கள்.

உங்கள் குடும்ப அரசியலால் நேற்று ஆட்சியும் இன்று கட்சியும் நிலைகுலைந்தது எந்த வகையில் ஏற்கத்தக்கது என்று ஆய்ந்து பாருங்கள்.

உங்கள் ஆற்றலில் அணுவளவும் இல்லாத, கழகத்தை வளர்க்க உங்களைப் போல் கடும் உழைப்பைத் தராத, வாசக ஞானமும் சமுதாயப் பொறுப்பு உணர்வும் சிறிதும் இல்லாத மிகச்சாதாரண மனிதர்கள் உங்களுக்குத் துதிபாடி, உங்கள் கொற்றக் குடை நிழலில் இடம் பெற்ற ஒரே காரணத்தால், கடந்த ஐந்து ஆண்டுகளில் அடித்த கொள்கைகளின் அளவைக் கணக்கிட்டுப் பாருங்கள். உங்கள் வீழ்ச்சிக்கான காரணங்கள் அப்போது புரியும்.

தேவைக்கு மேல் பொருளும், திறமைக்கு மேல் புகழும் கிடைத்து விட்டால், பார்வையில் படுவதெல்லாம் சாதாரணமானதாகத்தான் தோன்றும் கூட்டம் கூட்டுவதிலும், கூவி அழுவதிலுமே களத்தின் விடுதலை அடங்கிக்கிடப்பதாக நீங்கள் முடிவு கட்டிவிட்டீர்கள். நீங்கள் நூலேணி கட்டி ஆகாயம் போக முயன்றீர்கள்.

பெரியார் மண்ணில் மொழிப் போர்த் தியாகிகளுக்கு வீர வணக்கம் செய்வதற்கு நீங்கள் குஷ்புவை நியமித்திருப்பதைப் பார்க்கும்போது, அன்று முதல் இன்று வரை உங்கள் அணுகுமுறையில் மாற்றமே நிகழவில்லை என்பது புரிகிறது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்து, முகவரியே இல்லாத திருக்குவளை என்னும் சாதாரண கிராமச் சூழலில் வளர்ந்து, ஏழ்மையின் பிடியில் உழன்று, தன் முயற்சியாலும் ஆற்றலாலும், உழைப்பாலும், தமிழன்னை உறவாலும் புகழின் சிகரத்தை எட்டிய உங்கள் சாதனை என்றும் என் ஆராதனைக்கு உரியவை. 

உங்கள் சந்தர்ப்பவாத சாகசங்களும், சொல் ஒன்று செயல் ஒன்றாக நீங்கள் நடத்தி வரும் அரசியல் நாடகங்களும், எண்ணற்ற தொண்டர்களின் வியர்வை நீரில் விருட்சமாக வளர்ந்த கழகத்தை உங்கள் குடும்பச் சொத்தாக மாற்றிவிட்ட சுயநலமும், ஊழலைத் தமிழினத்தின் பொதுப் புத்தியாக்கிவிட்ட உங்கள் அறம் பிறழ்ந்த அரசியலும் என்றும் என் நேர்மையான விமர்சனத்துக்கு உரியவை.

2 comments:

Karikal@ன் - கரிகாலன் said...

வழமை போல மிகவும் அருமை.
பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே.

ராஜ நடராஜன் said...

வாய்மை உடையவனிடம் தமிழ்மகள் கொஞ்சி விளையாடுகிறாள்.

வாய் மை தேடுபவனுக்கும் தமிழன்னை வாரி வழங்கி விட்டாள்.