Mar 27, 2012

கனிமொழி புதிய மனு ரகசியம். ராசாவுக்கு தெரிந்தே நடக்கிறதா?


டில்லி ஹைகோர்ட்டில் வெள்ளிக்கிழமை  கனிமொழி எம்.பி. தாக்கல் செய்துள்ள மனு சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வேறு சிலருக்கு, “ஓஹோ.. இவர்கள் இந்த ட்ராக்கில் போகிறார்களா?” என்று விஷயத்தை புரிய வைத்திருக்கிறது. அவர்மீது குற்றம்சாட்டப்பட்டு, ஏற்கனவே நடந்துவரும் 2ஜி-ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாகவே நேற்றைய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

“இந்த வழக்கில் எனக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாததால், வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்” என்பதே கனிமொழி மனுவின் மெயின் கான்ஸெப்ட். இதை சப்போர்ட் பண்ணுவதற்காக இரு விஷயங்கள் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ன.

முதலாவது, தொலைத்தொடர்பு அமைச்சில் 2ஜி-ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடாக நடந்திருந்தால்கூட, அதை கனிமொழியால் செய்திருக்க முடியாது. காரணம், கனிமொழி வெறும் ராஜ்யசபா எம்.பி. மட்டுமே. தொலைத்தொடர்பு அமைச்சராகவோ, அல்லது அந்தத் துறையில் முடிவு எடுக்கும் அதிகாரமுடைய உயரதிகாரியாகவோ இருக்கவில்லை.

இரண்டாவது, கலைஞர் டி.வி.க்கு இந்த விவகாரத்தில், தொடர்பு உள்ளதோ, இல்லையோ, வேறு விஷயம். அது எப்படியிருந்தாலும், கலைஞர் டிவியில் கனிமொழி பங்குதாரராக மட்டுமே இருக்கிறார். நிர்வாக முடிவுகளில் அவர் தலையிட்டது கிடையாது.

“இந்த இரு விஷயங்களையும் வைத்து, 2ஜி-ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும்” என்று முடிக்கப்பட்டுள்ளது கனிமொழி தாக்கல் செய்துள்ள மனு.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்ட கனிமொழி, டெல்லி திகார் சிறையில் 6 மாதங்கள் அடைக்கப்பட்டு இருந்தார். அவருக்கு கடந்தாண்டு நவம்பரில் ஜாமீன் வழங்கப்பட்டது. சி.பி.ஐ. அவர் மீது பதிவு செய்துள்ள வழக்கு, “ஸ்பெக்ட்ரம் முறைகேடு சதித் திட்டத்தில் இவரும் ஈடுபட்டார்” என்பதுதான். சதி செய்யும் அளவுக்கு எந்த அதிகாரத்தையும் பெற்றிராத ஒருவரால் எப்படி சதி செய்திருக்க முடியும்? என்பதே இந்த மனு டில்லி ஹைகோர்ட்டில் எழுப்பியுள்ள கேள்வி.
கனிமொழியின் பெயர் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகைகளில் இடம்பெற்று, அவர் கைது செய்யப்பட்டு, 6 மாதங்கள் சிறையில் இருந்த பின்னரும், இந்த ஃபிரெஷ்-ஸ்டார்ட் சாத்தியமா?

இந்த விவகாரங்களில் நல்ல பரிச்சயம் உள்ளவர்களை விசாரித்தபோது, “சி.பி.ஐ. மனது வைத்தால் சாத்தியம்தான்” என்கிறார்கள்.
“தற்போது சி.பி.ஐ. தொடர்ந்துள்ள வழக்கின் மெயின் ஃபிரேமை மாற்றாமல் விட்டாலே, அது கனிமொழிக்கு சாதகமாக அமையும்” என்கிறார்கள் அவர்கள். தற்போதுள்ள மெயின் ஃபிரேம், சதி செய்தல், அரசு பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தி பொருளாதாரக் குற்றம் புரிதல், அரசுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தல் என்ற பில்லர்களில் உள்ளது.

அந்த மூன்று குற்றச்சாட்டுகளுக்கும், அரசு அதிகாரம் அல்லது, பதவி கையில் இருக்க வேண்டும். அல்லது, அதிகாரத்தை பயன்படுத்தி மற்றொருவரால் பெறப்பட்ட பணம், நேரடியாக வந்து சேர்ந்திருக்க வேண்டும் என்கிறது இந்திய குற்றவியல் சட்டம்.

அதை வைத்துக்கொண்டுதான், கனிமொழியின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சரி. இப்படியொரு ரூட் இருந்தால், அதை முதலிலேயே செய்திருப்பார்களே? எதற்காக 6 மாதங்கள் கனிமொழியை சிறையில் வைத்திருக்க வேண்டும்? அங்குதான் உள்ளது, இந்த வழக்கில் உள்ள மற்றொரு சூட்சுமம்.
இவர்கள் இந்த ரூட்டில் போக தீர்மானித்தால், அது மற்றொரு தரப்பை பலவீனப்படுத்தும். அந்தத் தரப்பு, ஆ.ராசா!

கனிமொழியின் தற்போதைய மனு விசாரணைக்கு வரும்போது, அதில் இவர்கள் தாக்கல் செய்யப்போகும் அபிடஃபிட், மற்றும் வக்கீல்களின் வாதங்களில், “குற்றம் நடக்கவே இல்லை” என்ற வாதம் இருக்க முடியாது. “குற்றம் நடந்திருந்தாலும், அதில் இவருக்கு (கனிமொழிக்கு) தொடர்பு கிடையாது” என்ற வகையில்தான் அபிடஃபிட் தயாராகும்.

ஆ.ராசாவின் கோ-அக்யூஸ்ட் என்ற நிலையில் உள்ள கனிமொழி தரப்பால் மேற்கொள்ளப்படும் இந்த மூவ், ராசாவின் கேஸை பலவீனப்படுத்தி, அவருக்கு தண்டனை பெற்றுக் கொடுத்து விடலாம்.

ராசாவின் சம்மதத்துடன்தான் கனிமொழியின் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கும் என்று எடுத்துக் கொள்ளலாம். இதற்கு ராசா ஏன் சம்தித்தார் என்று அவரிடம்தான் கேட்க வேண்டும்.

No comments: