1980-ம் ஆண்டு... அண்ணா தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. பிறகு நடந்தத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மக்கள் திலகம் முதல்வராக வந்தார். அப்போது இந்தியப் பிரதமராக இந்திராகாந்தி இருந்தார். கருணாநிதியோடு இந்திரா காந்திக்கு அரசியல் நட்புறவு இருந்தது. ‘கூடா நட்பு’ தமிழ்நாட்டுக்குக் கேடாய் முடிந்தது. அதன் தொடர்ச்சியாக இந்திராகாந்திக்கும், தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருக்கும் ஒரு சுமூகமான சூழ்நிலை இல்லாமல் இருந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக இந்திரா காந்தியின் மன இறுக்கம் குறைந்து கொஞ்சம் நேசப் பார்வை அரும்பி இருந்தது. ஒரு பிரதமருக்கும் ஒரு மாநில முதல்வருக்கும் இடையே கசப்பும் வெறுப்பும் இருத்தல் நல்லதல்ல. அந்த வகையில், இருவருக்கும் இடையே இருந்த விரிசல் நீங்கி நட்புறவு மலரத் தொடங்கியிருந்தது.
இந்த நிலையில்...
1981 ஆம் ஆண்டு தமிழுக்கும் தமிழருக்கும் வாய்த்த தவப்பேறு புரட்சித் தலைவர் அவர்கள் தஞ்சையில் தமிழ் பல்கலைக்கழகம் உருவாக்கினார். அதன் தொடக்கவிழா 1981-ம் ஆண்டு ஜனவரி திங்கள் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
அதற்கு ஒரு பத்து நாட்களுக்கு முன்னர் ஈழத்தில் நம் உறவுகள் 58 பேர் சிங்கள இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்கள். அது என் நெஞ்சில் தீராத வேதனையை ஏற்படுத்தி இருந்தது!
தமிழ் பல்கலைக்கழகத் துவக்க விழாவின் காலை நிகழ்ச்சியாகக் கவியரங்கம்! எனக்குள் இருந்த ஆவேசம் என் கவிதையில் வெளிப்பட்டது. இந்திரா காந்தியைப் பார்த்து சொல்வதாக,
‘‘சஞ்சயினை இழந்துவிட்ட
புத்திர சோகச்
சஞ்சலத்தை உணர்ந்தவள் நீ
தவிக்கும் எங்கள்
பஞ்சைகளை பராரிகளை
ஏறெடுத்துப்
பார்க்காமல் இருப்பதென்ன
முறையா! அம்மா
கொஞ்சம் நீ மனது வைத்து
முறைத்துப் பார்த்தால்,
கொழும்புக்கு கொழுப்படங்கும்
இல்லை என்றால்...
‘வஞ்சனை நீ செய்கின்றாய்!’
என்று சொல்ல
வாய் மறுக்கும்; ஆயினும்
என் மனம் சொல்லாதா?’’
என்று என் நெஞ்சின் துயரத்தைக் கவிதையில் வெளிப்படுத்தினேன். கூடியிருந்த கூட்டம் அதைக் கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்றது.
இந்தச் செய்தியை, நான் கவிதையில் கொட்டிய கனலை புரட்சித் தலைவரிடம் ஓர் அமைச்சர், ‘பார்த்தீர்களா! இப்போதுதான் நமக்கும் மத்திய அரசுக்கும் இணக்கமான சூழல் உருவாகி வருகிறது. இந்திரா அம்மையாரிடம் ஒத்துப் போகும் சூழல் உருவாகி இருக்கிறது.
நம்ம புலவர், இந்திரா காந்தியைக் கண்டித்து இப்படிக் கவிதை படிக்கலாமா?’என்று என் மீது புகார்க் கடிதம் வாசித்தார். மக்கள் திலகத்துக்கு உண்மையிலேயே என் மீது கடுமையான கோபம்! அவரது கோபத்தில் நியாயம் இல்லை என்று நான் சொல்லமாட்டேன்! தலைவரிடம் என் நண்பர் ஒருவர் போட்டுக் கொடுத்த செய்தியை, அன்றைய சட்டப்பேரவைத் தலைவர் அண்ணன் இராசாராம் என்னிடம் சொல்லி, ‘ஏன் இப்படி எல்லாம் தலைவருக்கு நெருக்கடியை உருவாக்குகிறீர்கள்?’ என்று என்னைக் கடிந்துகொண்டார்.
நான் இரவு புறப்பட்டுச் சென்னை வந்து சேர்கிறேன். மறுநாள் காலை 6.30 மணி. தலைவரிடமிருந்து எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. எடுத்த எடுப்பிலேயே, ‘நீங்கள் இனிமேல் என் முகத்தில் விழிக்காதீர்கள்’ என்று மிகக் கடுமையான தொனியில் சொன்னார். ‘சரி, நான் உங்கள் முகத்தில் விழிக்கமாட்டேன்’ என்றேன்.
நான் சொல்லி முடிப்பதற்குள் தொலைபேசித் தொடர்பைத் துண்டித்துக் கொண்டார். பிறகு நான் அவரைத் தொடர்புகொள்ளவும் இல்லை. சட்டப்பேரவைக்கும் மேலவைக்கும் அவரும் வருவார்! நானும் மேலவைக்குச் சென்றுவருவேன்! நேருக்கு நேராகப் பார்க்க நேர்ந்தாலும் அவர் எதிரே வந்தாலும் நான் பார்க்காதது போல சென்றுவிடுவேன். அந்த வகையில், தலைவரின் சொல்லைத் தட்டாத தொண்டனாகத்தான் நடந்து கொண்டேன். இப்படி ஏழெட்டு மாதங்கள் கடந்துபோயின.
அதே 1981-ம் ஆண்டு... ஃபிஜி தீவில் காமன்வெல்த் மாநாடு(C.P.A. Conference) நடந்தது. அந்த மாநாட்டில் தமிழ்நாட்டின் சார்பில் சட்ட மேலவை துணைத்தலைவர் என்ற வகையில் நான் கலந்துகொள்ளவேண்டி இருந்தது. 1981-ம் ஆண்டு நவம்பர் மாத வாக்கில் நான் புறப்படவேண்டி இருந்தது. அதுவரையும் எங்களுக்குள்ளே இருந்த ஊடல் தணியாமல்தான் இருந்தது. நான் புறப்படும் நாள் மாலையில், அவருக்கு மாலைபோட்டு மரியாதை தெரிவித்துவிட்டு விடைபெற வேண்டியிருந்தது. அது தவிர்க்க இயலாதது.
அதே 1981-ம் ஆண்டு... ஃபிஜி தீவில் காமன்வெல்த் மாநாடு(C.P.A. Conference) நடந்தது. அந்த மாநாட்டில் தமிழ்நாட்டின் சார்பில் சட்ட மேலவை துணைத்தலைவர் என்ற வகையில் நான் கலந்துகொள்ளவேண்டி இருந்தது. 1981-ம் ஆண்டு நவம்பர் மாத வாக்கில் நான் புறப்படவேண்டி இருந்தது. அதுவரையும் எங்களுக்குள்ளே இருந்த ஊடல் தணியாமல்தான் இருந்தது. நான் புறப்படும் நாள் மாலையில், அவருக்கு மாலைபோட்டு மரியாதை தெரிவித்துவிட்டு விடைபெற வேண்டியிருந்தது. அது தவிர்க்க இயலாதது.
நான் குடும்பத்தாரோடும், என் நண்பர்கள் சிலரோடும் தோட்டத்துக்குப் போனேன். ஆனால், தலைவர் கீழே இறங்கி வரவில்லை. மிகப்பலர் அவரைக் காண்பதற்காகக் கூடியிருந்தார்கள். என்னைப் பார்ப்பதைத் தவிர்க்க நினைத்து அவர் யாரையும் சந்திக்கக் கீழே வரவில்லை.
நான் வாங்கிச் சென்ற மாலையை அங்கேயே வைத்துவிட்டு விமான நிலையத்துக்குப் புறப்பட்டுப் போனேன். என் மனைவிக்கும், என் மகள் கண்ணகி, என் மகன் புகழேந்தி ஆகியோருக்கும் தாங்க இயலாத மனவேதனை!
என்னை அவர் புறக்கணித்துப் பார்க்காமல் அனுப்பி வைத்ததால், அவர்களின் சோகம் நிரம்பிய முகங்கள் எனக்கு மிகுந்த துயரத்தை உருவாக்கியது. நான் அதுபற்றி பெரிதும் அலட்டிக் கொள்ளவில்லை. விமானம் ஏறி கோலாலம்பூர் சென்றேன். அங்கே மூன்று நாள் தங்கி இருந்தேன்.
அப்போது சிங்கப்பூரில் இருந்து ஒருவர் என்னோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு, ‘நீங்கள் எப்போது சிங்கப்பூர் வருகிறீர்கள்?’ என்றார்.
‘நீங்கள் யார்?’ என்றேன்.
‘அதைப் பிறகு தெரிந்துகொள்ளலாம். எப்போது வருகிறீர்கள்?’ என்றார்.
‘இன்றிரவு’ என்றேன். ‘Transit journey யா---?’ என்றார்.
‘ஆம்’ என்றேன். ‘அப்படியானால் நான் உங்களை சிங்கப்பூர் விமான நிலையத்தில் சந்திக்க வருகிறேன்’ என்று சொன்னவர் குறிப்பிடத்தக்க ஓர் இடத்தை எனக்குத் தெரிவித்தார். நான் அவர் சொன்ன இடத்துக்குச் சென்றேன். நான் வேட்டியும் சட்டையும் அணிந்திருந்ததால், அவர் என்னை மிக எளிதாக அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.
வேகமாக என்னை நெருங்கி வந்து... ‘You are Mr. Pulavar?’என்றார்.
'Yes' என்றேன். அவரது கையிலிருந்து 10,000 அமெரிக்க டாலரை என்னிடம் நீட்டினார்.
‘நீங்கள் யார்? எதற்காக இதை எனக்குத் தருகிறீர்கள்?’ என்று கேட்டேன்.
‘எல்லாம் நீங்கள் சிங்கப்பூருக்குத் திரும்பி வரும்போது சொல்கிறேன். தயவு செய்து இதை வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று வற்புறுத்தி என்னிடம் கொடுத்துவிட்டு சிரித்துக் கொண்டே விடைபெற்றார். அந்தப் பணம், எப்படி யாரால் இவர் மூலம் எனக்கு வந்தது என்பதைப் புரிந்துகொண்டேன். எனக்குள்ளே சிரித்துக் கொண்டே விமானத்தில் புறப்பட்டு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சென்றடைந்தேன்..
Tweet | |||||
1 comment:
எம்.ஜி.ஆர்...எம்.ஜி.ஆர் தான்...
Post a Comment