ஈழப்போரில் ஈழ தேசமே இடுகாடாக, சுடுகாடாக மாறிப்போன பின்னரும்...
தெற்கே இருந்து வரும் தென்றலில் பிணவாடை வீசிவருகிற நேரத்திலும்...
அந்தத் துன்பமும் துயரமும் உண்மையான தமிழர்களின் உள்ளத்தை விட்டு நீங்காத நிலையில்...
இந்த நாக்குமாறி மனிதர், வாக்குமாறி மனிதர் அன்று அவர்களுக்காக இரண்டு சொட்டு கண்ணீர் வடிக்காமல் இருந்துவிட்டு...
இன்று தமிழ் ஈழம் பற்றிப் பேசுகிறார்!
இது... அன்று நடந்த கோரக் கொலையை விடக்கொடூரமானது!
வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்கிறார். மத்திய அரசு இதற்கு துணை நிற்கவேண்டும் என்கிறார். இவரது மூளையில் விஷப் புழுக்கள் ஊறிக் கொண்டிருக்கின்றன.
என்ன வாக்கெடுப்பு நடத்துவது?
எந்த மக்களை வைத்து வாக்கெடுப்பு நடத்துவது?
லட்சக் கணக்கில் இறந்தவர்களை எழுந்துவந்து வாக்குப் போடச் சொல்வதா?
உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் புலம்பெயர்ந்து போய்; நலம் இழந்துபோய்; அலைந்து திரிந்துகொண்டிருக்கிறார்களே... அவர்களை எல்லாம் ஈழத்துக்கு அழைத்துவந்து வாக்கெடுப்பில் கலந்துகொள்ளச் சொல்வதா?
என்ன வாக்கெடுப்பு நடத்துவது?
'தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு' - இப்போது கண்டுபிடித்திருக்கிறார் இந்த அரசியல் மேதை; தமிழறிஞர்; தமிழர்களின் காவல் தெய்வம்!
முன்னர் எப்போதாவது தமிழ் ஈழம்தான் தீர்வு என்று பேசியிருக்கிறாரா?
பத்திரிகையாளர்கள் பலமுறை கேட்டிருக்கிறார்கள்...
'தமிழ் ஈழத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?' என்று!
இவர் பதில் சொல்லியிருக்கிறார்.
'தமிழ் ஈழம் கிடைத்தால் சந்தோஷப்படுவேன்'
இந்த குழப்பவாதிக்கு - குறுக்குப் புத்தி கொண்ட மனிதனுக்கு ஒன்று ஆதரிக்கிறேன்... ஆதரிக்க மாட்டேன் என்று ஏன் சொல்லத் தெரியவில்லை?
ஏன் சொல்லவில்லை?
இவர் எந்தக் கொள்கையும் இல்லாதவர்!
ஈழத்தில் தமிழ் ஈழ விடுதலைக்காக வாக்கெடுப்பு நடந்ததில்லையா?
1977-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ் ஈழ விடுதலை என்கிற தீர்மானத்தை, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தனது தேர்தல் அறிக்கையில் முன் வைத்து தேர்தலில் போட்டியிட்டது.
தமிழ் ஈழ விடுதலையை தேர்தல் அறிக்கையில் முன்வைத்து போட்டியிட்ட அந்த கட்சி போட்டியிட்ட எல்லா இடங்களிலும் வெற்றி பெற்றது! ஈழத் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக ஒரே அணியில் நின்று, சிந்தாமல் சிதறாமல், தமிழ் ஈழ விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்தார்கள் என்கிற வரலாறு...
தமிழர்களின் வரலாற்றுப் பிழையாக வந்த இந்த மனிதருக்கு எப்படித் தெரியாமல் போனது? தனித் தமிழ் ஈழத் தீர்மானத்தின் அடிப்படையில் ஒட்டுமொத்த வெற்றியைப் பெற்று இலங்கை நாடாளுமன்றத்துக்கு, இவர் மிகவும் நேசித்ததாகச் சொல்கிறாரே, அந்த அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் போன்றவர்கள் உறுப்பினர்களாக வந்தார்கள்.
அந்த நேரத்தில் நாடாளுமன்றத்தில் ஒரு சிங்கள வெறியன், தமிழ் ஈழ விடுதலை கோரி உள்ளே வந்திருக்கிற அமிர்தலிங்கத்தை என்ன செய்யவெண்டும் என்று பேசினான் தெரியுமா?
''தமிழ் ஈழ விடுதலை பற்றிப் பேசுகிற அர்மிதலிங்கத்தை இரண்டு உறுதியான நீண்ட மூங்கிலில் இரண்டு கால்களையும் கட்டித் தலைகீழாகத் தொங்கவிடவேண்டும்
தொங்கவிட்ட பின்னாலே இணைத்துக் கட்டப்பட்டிருக்கிற இரண்டு மூங்கில்களின் கட்டுக்களை அறுத்துவிடவேண்டும்! அப்படி அறுத்துவிட்டு அமிர்தலிங்கத்தை இரண்டு கூறுகளாக பிளக்கவேண்டும்''
-என்று கூச்சலிட்டான்!
ஒட்டு மொத்தத் தமிழ் ஈழ விடுதலைக்கான ஆதரவை மக்களின் வாக்குரிமைச் சீட்டில் பெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி எதை
அங்கே சாதிக்க முடிந்தது?
இன்று வாக்கெடுப்பு நடத்தி எதை சாதிக்க வேண்டும் என்கிறார் கருணாநிதி?
வாக்கெடுப்பு நடத்திவிட்டால் தமிழ் ஈழ விடுதலை பெற்றுவிட முடியும் என்று இவரது செத்துப்போன மனசாட்சி புத்துயிர் பெற்று வந்து போதனை செய்திருக்கிறதா?
வாக்கெடுப்பு நடத்துவதற்கு இவர் தாங்கிப் பிடித்திருக்கும் மன்மோகன் என்னும் எந்திர மனிதன் ஆட்சி செய்யும் மத்திய அரசு முன்வருமா? மத்திய அரசை ஒப்புக் கொள்ளச் செய்யும் உறுதி, வலிமை இவருக்கு இருக்கிறதா?
எது நடக்காதோ... அதை தேர்ந்தெடுத்துப் பேசுவது, குதர்க்கம் செய்வது, குறுக்குச் சால் ஓட்டுவது, அடுத்துக் கெடுப்பது...
எல்லாமே இந்த திருக்குவளை மனிதரின் திருக்கல்யாண குணங்கள்..
நன்றி: புலமைப்பித்தன்