Jan 29, 2012

நன்றி கொன்றவனாகவே விரும்புகிறேன்-தமிழருவி மணியன்.


அன்பிற்கும் மதிப்பிற்கும் என்றும் உரிய ஐயா கலைஞர் அவர்களுக்கு...
வணங்கி மகிழ்கிறேன். உங்களுக்கு நான் வரைந்த இரண்டு கடிதங்களை ‘முரசொலி’ இதழின் பக்கத்தில் வெளியிட்டு ‘நன்றி’ மறந்த என்னை நயத்தகு நாகரிகத்துடன் ‘வாழ்த்தி’ இருக்கிறீர்கள்.

‘நான் கேட்காமலே எனக்கு மாநிலத் திட்டக் குழு உறுப்பினர் பதவியும், பாரதி விருதும் மனமுவந்து அளித்து என்னைத் தாங்கள் பெருமைப்படுத்தியதையும், வீடற்ற எனக்கு வீட்டு வசதி வாரியத்தில் குறைந்த வாடகையில் ஒரு வீடு கொடுத்து என் பொருளாதாரச் சுமையைக் குறைத்ததையும் என் இறுதிநாள் வரை நன்றியுடன் நினைத்து தங்கள் அன்பைப் போற்றுவேன்’ என்று உங்களுக்குத் தீட்டிய கடிதத்தில் நான் குறிப்பிட்டு இருந்தது முற்றிலும் உண்மை.

ஆனால், ஒருவர் செய்த உதவியை நெஞ்சில் நிறுத்தி, அவர் பின்னாளில் செய்து முடித்த தவறுகள் அனைத்துக்கும் உடந்தையாக இருப்பது தான் நன்றியின் நல் அடையாளம் என்று நீங்கள் நினைத்தால், அந்த நன்றியை நான் செலுத்தத் தவறியது உண்மைதான். அந்த வகையில் நன்றி கொன்றவனாகவே நீடிக்க விரும்புகிறேன்.

ஆயிரக்கணக்கில் அரிய புத்தகங்களை கவனத்துடன் சேர்த்து வைத்திருக்கும் நான், அவற்றை ஒழுங்காகப் பராமரித்துப் பாதுகாக்கவும் சாகும் வரை நிலையாக ஓர் இடத்தில் தங்கி வாழவும் வீட்டு வசதி வாரியத்தில் குறைந்த வாடகையில் வீடு ஒதுக்கித் தரும்படி உங்களிடம் விண்ணப்பித்தது உண்மை. நீங்களும் அன்புடன் என் கோரிக்கையை நிறைவேற்றியதும் உண்மை.

ஆனால், ஈழ மக்களின் ஆழ்ந்த நம்பிக்கைக்கு எதிராகவும், இந்திய அரசின் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும் நீங்கள் நாற்காலி மனிதராய் மெளனத் தவம் இருந்தபோது, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும், திட்டக் குழு உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகி, உங்களையும், காங்கிரஸையும் விமர்சிக்க நான் எழுதுகோல் ஏந்தியதும், வாடகைக்கு வழங்கிய வீட்டில் இருந்து என்னை வெளியேற்றி வீதியில் நிறுத்த முனைந்தது உங்களது பெருந்தன்மை!

முல்லை-பெரியாறு, காவிரி நீர்ப் பிரச்னையில்கூட இவ்வளவு தீவிரத்தை நீங்கள் காட்டியது இல்லை.

ஒரு சாதாரண வாடகைதாரரை வெளியேற்றும் வழக்கில் ஆதி முதல் அந்தம் வரை மாநில அரசின் அடிஷனல் அட்வகேட் ஜெனரலை நிறுத்தி வாதாடச் செய்து பழிவாங்கும் படலத்தில் புதிய வரலாறு படைத்தீர்கள்.

நீதியரசர் மாண்புமிகு சந்துரு அவர்கள் நியாயத்தின் நிறம் அறிந்து எனக்கு ஆதரவாக வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடும் செய்தீர்கள்.

மதுரை வீதியில் பட்டப்பகலில் சொந்தக் கட்சிக்காரரான தா.கிருஷ்ணன் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மேல்முறையீடு செய்யாத நீங்கள், வீடற்ற ஓர் எளியவனை வீதியில் நிறுத்த இறுதி வரை களம் இறங்கினீர்கள்.

ஜனநாயகத்தின் உயிர்நாடியான கருத்து சுதந்திரத்துக்கு நீங்கள் நிர்ணயித்த வரையறை நன்றிக்குரியதுதான்.

இன்றும் அந்த வழக்கு நீதிமன்றத்தில்தான் இருக்கிறது. உங்கள் ஆட்சியின் தவறுகளுக்கு எதிராக, எழுத்திலும் பேச்சிலும் கருத்துப்போர் நிகழ்த்திய நான் அந்த வீட்டைக் காப்பாற்றிக்கொள்ள மனுப்போட்டு நிற்கவில்லை. அது என் வாழ்க்கை முறையும் இல்லை. 

 நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி நான் யாரையும் ‘திட்டுபவன்’ இல்லை. தமிழாய்ந்த உங்களுக்கு வசைபாடுபவனுக்கும், தவறுகளைத் தறுக்கண் ஆண்மையுடன் விமர்சிப்பவனுக்கும் இடையிலுள்ள வேற்றுமை விளங்காமற் போனது எனக்கு வியப்பைத் தருகிறது.

கலைஞரே... இப்போது ஓய்வாக அமர்ந்து சிந்திப்பதற்கு உங்களுக்குக் காலத்தின் கருணையால் நிறைய நேரம் வாய்த்திருக்கிறது. பதவி நாற்காலியின் மீதிருந்த பற்றினால் ஈழப் பிரச்னையில் நீங்கள் நடந்துகொண்ட விதம் நியாயமா என்று யோசியுங்கள். அலைக்கற்றை ஊழலில் ஈடுபட்டு உங்களைச் சார்ந்தவர்கள் கழகத்தின் மீது என்றும் நீங்காத களங்கச் சேற்றைப் பூசியது சரிதானா என்று சிந்தியுங்கள்.

உங்கள் குடும்ப அரசியலால் நேற்று ஆட்சியும் இன்று கட்சியும் நிலைகுலைந்தது எந்த வகையில் ஏற்கத்தக்கது என்று ஆய்ந்து பாருங்கள்.

உங்கள் ஆற்றலில் அணுவளவும் இல்லாத, கழகத்தை வளர்க்க உங்களைப் போல் கடும் உழைப்பைத் தராத, வாசக ஞானமும் சமுதாயப் பொறுப்பு உணர்வும் சிறிதும் இல்லாத மிகச்சாதாரண மனிதர்கள் உங்களுக்குத் துதிபாடி, உங்கள் கொற்றக் குடை நிழலில் இடம் பெற்ற ஒரே காரணத்தால், கடந்த ஐந்து ஆண்டுகளில் அடித்த கொள்கைகளின் அளவைக் கணக்கிட்டுப் பாருங்கள். உங்கள் வீழ்ச்சிக்கான காரணங்கள் அப்போது புரியும்.

‘தேவைக்கு மேல் பொருளும், திறமைக்கு மேல் புகழும் கிடைத்து விட்டால், பார்வையில் படுவதெல்லாம் சாதாரணமானதாகத்தான் தோன்றும் கூட்டம் கூட்டுவதிலும், கூவி அழுவதிலுமே களத்தின் விடுதலை அடங்கிக்கிடப்பதாக நீங்கள் முடிவு கட்டிவிட்டீர்கள். நீங்கள் நூலேணி கட்டி ஆகாயம் போக முயன்றீர்கள்.

பெரியார் மண்ணில் மொழிப் போர்த் தியாகிகளுக்கு வீர வணக்கம் செய்வதற்கு நீங்கள் குஷ்புவை நியமித்திருப்பதைப் பார்க்கும்போது, அன்று முதல் இன்று வரை உங்கள் அணுகுமுறையில் மாற்றமே நிகழவில்லை என்பது புரிகிறது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்து, முகவரியே இல்லாத திருக்குவளை என்னும் சாதாரண கிராமச் சூழலில் வளர்ந்து, ஏழ்மையின் பிடியில் உழன்று, தன் முயற்சியாலும் ஆற்றலாலும், உழைப்பாலும், தமிழன்னை உறவாலும் புகழின் சிகரத்தை எட்டிய உங்கள் சாதனை என்றும் என் ஆராதனைக்கு உரியவை. 

உங்கள் சந்தர்ப்பவாத சாகசங்களும், சொல் ஒன்று செயல் ஒன்றாக நீங்கள் நடத்தி வரும் அரசியல் நாடகங்களும், எண்ணற்ற தொண்டர்களின் வியர்வை நீரில் விருட்சமாக வளர்ந்த கழகத்தை உங்கள் குடும்பச் சொத்தாக மாற்றிவிட்ட சுயநலமும், ஊழலைத் தமிழினத்தின் பொதுப் புத்தியாக்கிவிட்ட உங்கள் அறம் பிறழ்ந்த அரசியலும் என்றும் என் நேர்மையான விமர்சனத்துக்கு உரியவை.

Jan 25, 2012

எப்படித்தான் இப்படி மாறி மாறி பேச முடிகிறதோ இந்த அரசியல்வாதிகளால்.



“தி.மு.க. ஆட்சியில் இல்லாததன் பலனை மக்கள் இப்போது அனுபவிக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில் இல்லாத சூழ்நிலையில், வாக்களித்தவர்கள் எல்லாம் தவறு செய்துவிட்டோம் என்பதை வெளியே சொல்ல முடியாமல் வெட்கப்படுவதை நாம் காண்கிறோம்” என்றும் பேசி புல்லரிக்க வைத்துவிட்டார்  கருணாநிதி.

வாக்களித்தவர்கள் எல்லாம் தவறு செய்துவிட்டோம் என்று வெளியே சொல்ல முடியாமல் வெட்கப்படுகிறார்களாம். உண்மையில் வெட்கப்பட வேண்டியவர் யார்? தி.மு.க.வுக்கு ஏன் வாக்களிக்கவில்லை. அதை குறித்து கருணாநிதி என்றாவது சிந்தித்திருந்தால், வெட்கப்பட்டிருக்க மாட்டார். பல பேரை வெட்டி சாய்த்திருப்பார். நாடே இருளில் மூழ்கிக் கொண்டிருந்த போது ஆற்காட்டாரே மின் துறைக்கு மந்திரியாக நீட்டிக்க விட்டது ஏன்?

நாடே காறி துப்பிய ஸ்பெக்ட்ரம் ராசாவை தூக்கி தூக்கி கொஞ்சியது ஏன்?


40 ஆண்டுகளாக குடியிருந்த மக்களை குப்பையில் தூக்கி வீசி, அந்த நிலத்தை ஆக்கிரமித்த வீரபாண்டி ஆறுமுகத்தை பார்த்து பம்மியது ஏன்?

ஆள் கடத்தல், அடிதடி என்று குடித்துவிட்டு நடுரோட்டில் ரகளை செய்த ஈரோடு ராஜாவை மீண்டும் கட்டியணைத்தது ஏன்?

தென் மண்டலத்தில் பொட்டு சுரேஷ் போட்ட ஆட்டத்தை விட, அவருக்கு கால் அமுக்கி விட்ட அமைச்சர்களை பற்றி சொல்லும் போது, மெளனகுருவாக இருந்தது யார்?

தனக்கே தெரியாமல், தனது துணைவியார் ராசாத்தி, மகள் கனிமொழிக்காக மந்திரி பதவி கேட்டு பேரம் பேசியதும், வோல்டாஸ் நிலத்தை அபகரித்ததையும் கண்டும் காணாமலும் இருந்தது யார்?

கலைஞர் டிவிக்கு 214 கோடி ரூபாய் கடன் வந்த விவகாரத்தை இன்று வரை சொல்ல முடியாமல் தவிப்பது ஏன்? அந்த கடன் பற்றி சி.பி.ஐ. விசாரிக்கிறது என்றதுமே, அக்கடன் தொகை எப்படி செலுத்தப்பட்டது என்ற விவரத்தை சொல்ல முடியவில்லையே ஏன்?

சாராய வியாபாரியும் லாட்டரி வியாபாரியும் கொடுத்த பணத்துக்கு கதை வசனம் எழுதிக் கொண்டு, நாட்டு மக்களை கண்டும் காணாமாலும் இருந்தது யார்?

சினிமா துறையையே தனது குடும்பம் காலில் போட்டு நசுக்கிக் கொண்டிருந்ததை கண்டு, அகமகிழ்ந்தவர் யார்?

இலங்கைத் தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட போது, 300 கோடியில் செம்மொழி மாநாடு நடத்தியது யார்?

இலங்கைத் தமிழர்களுக்கு ஏன் உதவ முடியவில்லை என்று கேட்டால், “ஒரு அடிமை... இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்” என்று கேட்டது யார்?

-இப்படியெல்லாம் தி.மு.க. ஆட்சியில் நடந்ததே என்று ஒரு நாளாவது வெட்கப்பட்டிருந்தால்.... இந்த ஆட்சி போயிருக்குமா? அட... எப்படித்தான் இப்படி மாறி மாறி பேச முடிகிறதோ இந்த அரசியல்வாதிகளால்.

Jan 22, 2012

எங்கிருந்தாலும் வாழ்க கருணாநிதியின் வஞ்சப்புகழ்ச்சி.

தமிழருவி மணியன்
“எங்கிருந்தாலும் வாழ்க” என்ற தலைப்பில் கருணாநிதி இன்றைய முரசொலியில் தமிழருவி மணியனுக்கு தான் செய்ததையெல்லாம்  பட்டியல் இட்டிருக்கிறார். ஆனால், அந்தப் பட்டியலில் தமிழருவி மணியனை வீட்டைவிட்டு காலிசெய் என்று விரட்ட முயற்சி செய்ததை மட்டும் ஏனோ எழுதாமல் மறந்துவிட்டார்.

2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாடு அரசு திட்டக்குழு உறுப்பினராக தமிழருவி மணியன் நியமிக்கப்பட்டார். அந்த நேரத்தில் கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோட்டில் இருக்கும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இவருக்கு வீடு ஒதுக்கப்பட்டது. திட்டக்குழு உறுப்பினர் என்ற அடிப்படையில் இல்லாமல் தமிழுக்காக,தமிழினத்துக்காக, தமிழருக்காக பாடுபடுபவர் என்ற எண்ணத்தில் பொதுப்பிரிவில் இவருக்கு வீடு ஒதுக்கப்பட்டது.

அப்படி வீட்டை ஒதுக்கித் தந்தவரே அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதிதான். ஏன் ஒதுக்கித் தந்தார் என்றால் ஒருவேளை மைனாரிட்டி தி.மு.க. அரசு, ஆட்சியிலிருந்து இறக்கப்படும் சூழல் வந்தாலும் தமிழருவி மணியனை வீட்டிலிருந்து காலி செய்ய உத்தரவு எதுவும் பிறப்பிக்கக் கூடாது என்ற எண்ணத்தில்தான் இந்த உத்தரவே பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் நடந்தது என்ன?

2008-ல்   இலங்கைத் தமிழர் பிரச்னை  உச்சகட்டமாக முற்றிவந்த நிலையில் தனது திட்டக்குழு பதவியை 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ராஜினாமா செய்தார்.

. “எங்கிருந்தாலும்  வாழ்க” என்று தத்துவ பேராசான் அறிஞர் அண்ணாவிடம் பயின்ற கலைஞர் என்ன செய்தார். இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக காங்கிரஸையும் ஆளும் தி.மு.க. அரசையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார், எழுதினார் என்பதற்காக அரசு குடியிருப்பில் வசித்து வந்த தமிழருவி மணியனை வீட்டை காலி செய்யும்படி உத்தரவிட்டது   தமிழக அரசு.

தமிழக அரசு பிரப்பித்த உத்தரவை எதிர்த்து கோர்ட்டுக்கு போனார் தமிழருவி மணியன். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்துரு “தமிழ் வாழ்க என்று ஊரெல்லாம், கட்டிடங்களிலெல்லாம் எழுதி வைத்தால் போதாது. தமிழ் அறிஞர்களை வாழவைத்தால்தான் தமிழ் வாழும்” என்று நெத்தியடியாக தீர்ப்பு சொன்னாரே. அதன் பிறகாவது கலைஞர் பேசாமல் இருந்தாரா? தமிழருவி மணியனை தொந்தரவு செய்யாமலும், நிந்திக்காமலும் இருப்பார் என்று எதிர்பார்த்தால் அது நம்முடைய முட்டாள்தனம்.

அவர் ஏதாவது செய்து தரும்படி என்றாவது கோபாலபுரத்தில் காத்துக்கிடந்தாரா?
அப்படி ஏதாவது தமிழருவி மணியன் கேட்டிருந்தால், அதை அப்படியே முரசொலியில் வெளியிட்டு அசிங்கப்படுத்தியும் மகிழ்ந்திருப்பார் கலைஞர். ஆனால், அப்படி அசிங்கப்பட தமிழருவி மணியன் என்றுமே தயாராக இருக்கவில்லை

Jan 17, 2012

இருந்தாலும்,மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்.இவர் போல(M.G.R.) யார் என்று ஊர் சொல்லவேண்டும்

இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 95-ஆவது பிறந்த நாள்.17.01.2012.

பூக்களுக்கும் புன்னகையை கற்றுத் தந்தவர்
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.
காலத்தை வென்றவன் நீ.
காவியமானவன் நீ.
வேதனை தீர்த்தவன் 
விழிகளில் நிறைந்தவன் 
வெற்றித்திருமகன் நீ.

இதயதெய்வம் எம்.ஜி.ஆர்.