'' ராஜ்ய சபா எம்.பி-யான கனிமொழியை''மாநாட்டு நிகழ்வுகளில் இந்த அளவுக்கு கனிமொழி பிரதானப்படுத்தப்பட்டது சரியா?'' என்ற ஆதங்கமான கேள்விகளும் கட்சியின் அடுத்த கட்டத் தலைவர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது.
ஆய்வரங்க நிகழ்வுகளில் கருணாநிதி பற்றி சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள்கூட யாரையும் நெருட வில்லை.
மகள் கனிமொழி பற்றியும் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டதில்... தமிழறிஞர்களுக்கு முகச்சுளிப்பு!
'கலைஞரின் பேசும் கலை வளர்ப்போம்', 'தொல்காப்பிய பூங்கா', 'கலைஞர் உரைத் திறன்', 'கலைஞரின் சிலப்பதிகாரத்தில் நாடகக் கூறுகள்', 'கருணாநிதி கடிதங்களில் இலக்கிய ஆளுமை', 'கருணாநிதியின் சிலப்பதிகார நாடகம்' போன்ற தலைப்புகளில் சுமார் 20 ஆய்வுக் கட்டுரைகள் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டன.
கனிமொழி பற்றி மூன்று தலைப்புகளில்! அந்தக் கட்டுரைகளின் பொருளடக்கமும் சரி... சமர்ப்பித்தவர்களின் விஷயஞானமும் சரி... அந்த அரங்கத்திலேயே காற்று இறங்கிப் போனது இன்னும் சோகம்!
'கவிஞர் கனிமொழியின் கவிதைகளில் பெண் மன உணர்வுச் சித்திரிப்பு' என்ற தலைப்பில் வெ.கலைச்செல்வி என்பவர் ஓர் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார்.
'கனிமொழியும் கவிதை மொழியும்' என்ற தலைப்பில் பெ.பகவத்கீதா என்பவர் இன்னொரு கட்டுரையைப் படித்தார். இந்த இரு ஆய்வுகளையும் மையமாக வைத்து, அந்த அரங்கில் நடந்த விவாதங்கள் ..
குமாரபாளையம் அரசுக் கல்வியியல் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகஇருக்கும் வெ.கலைச்செல்வி என்பவர், கனிமொழியின் 'கருவறை வாசனை' புத்தகத்தைச் சுட்டிக்காட்டி, 'பெண் அடிமைக்கு எதிராக கனிமொழி குரல் கொடுத்து இருக்கிறார்!' எனச் சொல்ல... அதை வைத்தே விவாதம் விறுவிறுப்பாகத் துவங்கியது. இந்த அரங்கத்துக்குள் அங்கீகரிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட கேள்வியாளர்கள் மொத்தமே 10 பேர்தான் அமர்ந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் எழுந்து, 'கனிமொழி எத்தனை கவிதைத் தொகுப்புகள் எழுதி இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா?' என முதல் கேள்வியைப் போட்டார். இதற்கு பதில் சொல்ல முடியாமல் கொஞ்சம் நேரம் தயங்கி, எதையோ யோசித்த போஸில் நின்றார் கலைச்செல்வி. கேள்வி கேட்டவரே கனிமொழி எழுதிய மூன்று புத்தங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, ''அவர் எழுதிய புத்தகங்களின் பெயர்களைக்கூடத் தெரிந்துகொள்ளாமல் எப்படி ஆய்வுக் கட்டுரை எழுதினீர்கள்?' என்று மடக்கினார். ''நான் 'கருவறை வாசனை' பற்றி மட்டும்தான் ஆய்வு செய்தேன்!' என்று சமாளித்தார் கலைச்செல்வி. இதில் சமாதானம் அடையாத கேள்வியாளர், 'ஆய்வு என்பது சம்பந்தப்பட்டவருடைய எல்லா எழுத்துகளையும் படித்துவிட்டு அவற்றில் இருந்து நீங்கள் அறிந்துகொண்டதாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, பொத்தாம் பொதுவான கட்டுரையாக இருக்கக்கூடாது!' எனச் சொல்ல, கலைச்செல்வியின் முகம் இருண்டது.'எங்கள் கல்லூரியின் பாடத் திட்டத்தில் 'கருவறை வாசனை' உள்ளது. அதனால், அதை மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொண்டேன்!' என்று சொன்னார்.
அடுத்து இன்னொரு கேள்வியாளர், 'கனிமொழி மட்டும்தான் பெண் விடுதலைக்குப் பாடுபட்டாரா? பெண் விடுதலைக்குப் பெரியார் ஆற்றிய பங்கு உங்களுக்குத் தெரியாதா? பாரதியாரும் பாரதிதாசனும் பெண்ணுரிமைக்காக எழுதியவர்கள்தானே? அவர்களின் பார்வையையும் கனிமொழியின் பார்வையையும் நீங்கள் ஒப்பிட்டுக் காட்டி இருந்தால் உங்கள் ஆய்வு மெச்சத்தக்கதாக இருந்திருக்குமே... அத்தகைய முயற்சிகள் எதுவும் உங்கள் ஆய்வில் இல்லையே...' என்றார். இந்தக் கேள்விக்கும் கலைச்செல்வியிடம் பதில் இல்லை. ஆனாலும் கேள்விகள் நின்றபாடில்லை!
அடுத்ததாக பூங்கொடி என்கிற பெண் எழுந்து, 'சுயக் கருத்துகளைச் சொல்வது கவிதை மொழி. பெண்மைக்கான விஷயங்களைச் சொல்வது பெண் மொழி. கனிமொழி தன் கவிதையில் சொல்லி இருப்பது பெண் மொழியா... கவிதைமொழியா? இதை எப்படி வேறுபடுத்தி இருக்கிறீர்கள்?' என்றபோது... கலைச்செல்வி அசந்துபோனார். ''கேள்வியை மீண்டும் ஒரு முறை சொல்ல முடியுமா?'' என்று சுரத்தே இல்லாமல் கேட்டார். மீண்டும் ஒருமுறை அதே கேள்வி கேட்கப்பட்டது. கொஞ்சம் நேரம் எங்கோ வெறித்துப் பார்த்துவிட்டு, ''கனிமொழியின் கவிதை மொழியை மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொண்டேன்!'' என்று பதில் சொன்னார் கலைச்செல்வி. உடனே பூங்கொடி முகத்தில் எந்த ரியாக்ஷனையும் காட்டிக்கொள்ளாமல் லேசாக உதட்டைப் பிதுக்கியபடி அரங்கத்தைவிட்டே எழுந்து போனார்!
அடுத்து பெ.பகவத் கீதா 'கனிமொழியும் கவிதைமொழியும்' என்கிற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை வைத்தார். இந்த ஆய்வுக்கும் சரமாரி கேள்விகள்! முதலில் எழுந்த ஒரு கேள்வியாளர், 'கருவறையின் வாசத்தை ஆண்கள் உணர்ந்தது இல்லையா? ஆண்களைப்பற்றியும் கனிமொழி எழுதி இருப்பது உங்களுக்குத் தெரியுமா? 'சிகரங்களில் உறைகிறது காலம்' என்ற புத்தகத்தில் தந்தையரைப் பற்றியும் அவர் பாடி இருக்கிறாரே..?' என்று அடுக்கிக்கொண்டே போனார் கேள்விகளை. பகவத்கீதா, 'நான் பெண்மை தொடர்பான விஷயத்தை மட்டுமே எடுத்துக்கொண்டேன். அவ்வளவுதான்!' என்றார். பழனிசாமி என்பவர் எழுந்து, 'உங்கள் ஆய்வுக் கட்டுரை முழுக்கப் பாராட்டு மழையாக அல்லவா இருக்கிறது. நடுநிலையான விமர்சனம் எதுவும் இல்லையே? கனிமொழியின் படைப்புகளில் இருக்கும் முரண்பாடுகள் பற்றி நீங்கள் எதையும் குறிப்பிடவில்லையே... ஏன்?' என ஒன்றுக்குள் ஒன்றாகப் பல கேள்விகளை அடுக்க, ' அதுபற்றி எல்லாம் ஆய்வு செய்யவில்லை!' என்று பகவத்கீதா பதில் சொன்னாரே பார்க்கலாம்.
இதைக் கேட்டு அரங்கமே ஒரு நிமிடம் அமைதி காக்க, 'ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிப்பதற்கும் அவையடக் கத்துக்கும் என்ன சம்பந்தம்? ஒன்றுமே புரியவில்லையே?'' என்று இன்னொரு கேள்வியாளர் அரங்கத்தின் அமைதியைக் கலைத்தார். தொடர்ந்து அவரே, ''எடுத்துக்கொண்ட பொருளைப் பற்றிய நன்மை - தீமையை அலசி ஆராய்ந்து சொல்வதுதான் ஆய்வுக் கட்டுரை! ஒருவரைப் பாராட்டி எழுதுவது ஆய்வுக் கட்டுரையே இல்லை. அதை வெறும் கட்டுரை என்றுதான் சொல்ல முடியும்!' என்று ஆவேசமாகக் குரல் எழுப்பினார். நல்ல வேளை இந்தக் கேள்விக்கு பகவத்கீதா பதில் சொல்ல அரங்கத் தலைவர் கனல்மைந்தன் அனுமதிக்கவில்லை. காரணம் நேரமின்மைதான்!
அரங்கத்தைவிட்டு வெளியே வந்த சில அறிஞர்கள் , கசப்போடு சில விஷயங்களைப் பேசினார்கள் -'ஆய்வுக் கட்டுரைகளை மாநாட்டில் சமர்ப்பிக்கத் தேர்வாவதே முதலில் எளிதான காரியம் அல்ல. எடுத்துக்கொண்ட தலைப்பை வைத்து, பல புத்தகங்களைப் படித்து ஆராய்ந்து, நடுநிலைமை மாறாமல், தனிமனிதப் பாராட்டுதல் இல்லாமல் உருவாக்கப்படுவதுதான் உண்மையான ஆய்வு. கனிமொழி என்ற தனிநபரைப் பாராட்டி மட்டும் மேம்போக்காக நுனிப் புல் மேய்ந்துவிட்டு இங்கே கட்டுரைகளைச் சமர்ப்பித்து இருப்பது அபத்தம். இந்த மாதிரி கட்டுரையின் மூலம் குறிப்பிட்ட தனிநபரைத் திருப்திப்படுத்தும் நோக்கம் மட்டுமே நிறைவேற முடியும். இப்படிப்பட்ட கட்டுரைகளை ஆய்வுக்குத் தேர்வு செய்வதையே மாநாட்டுக் குழுவினர் தவிர்த்திருக்க வேண்டும். ஆனால், ஆய்வரங்கம் வரைக்கும் இதுபோன்ற கட்டுரைகள் வந்திருக்கின்றன என்றால்... இவற்றைத் தேர்வு செய்த குழுவில் இருப்பவர்களும் இந்த புகழ்ச்சியை விரும்பி இருக்கிறார்கள் என்று அர்த்தம்'' என்றார்கள்
கனிமொழிக்கு கலைஞரின் வாரிசு என்பதைத் தவிர, மற்றவர்கள் அதற்காக அடிக்கும் உடுக்கை ஒலியைத்தவிர ஆற்றிய பங்கு வேறு ஏதேனும் இருப்பதாகத் தெரியவில்லை.. ஏதேனும் பெரிதாக தமிழாராய்ச்சி செய்திருக்கிறாரா.. டி. லிட் செய்திருக்கிறாரா.. ஏதும் இல்லை.. பெரிய தோட்டத்திலே பூத்த பூ என்ற அடையாளத்தோடு வலம் வருகிறார்.. ஆதிக்க சாம்ராஜ்யத்தில் தனக்கொரு பங்கு வேண்டும் என்று வந்து நின்றிருக்கும் பங்காளி.. கஷ்டப்பட்டு மாநாடு நன்றாக நடக்க வேண்டும் என தந்தைக்கு மகளாற்றும் உதவியாக இருந்தார் என்பதைத் தவிர வேறு என்ன செய்தார் நிலைகொள்வது என்பதற்கு என்பதை இந்த தேர்தலுக்கு அப்புறம் பார்க்க வேண்டும்.. திமுக ஜெயித்தால் இருப்பார்.. இல்லாவிடில் சிங்கப்பூர் விசா இருக்கவே இருக்கிறது...
அம்மா கலைச்செல்வி, பகவத் கீதா உங்க ஜால்ரா சத்ததுக்கு அளவே கிடையாதா? ஜால்ரா சத்தம் உலகம் பூரா எதிரொலிச்சிருக்கு, கொஞ்சம் பாத்து மெதுவா அடியுங்க''''.
Tweet | |||||