Apr 11, 2012

எவ்வளவு கோபக்காரர் பார்த்தீர்களா?புலமைப்பித்தன் பற்றி புரட்சித்தலைவர்.

நான் பெர்த்திலிருந்தபடி என் தலைவனுக்கு ஒரு கடிதம் எழுதினேன் என்று சொன்னேன் இல்லையா... அந்தக் கடிதத்தை தலைவர் படித்து விட்டு, ‘‘புலவர் எவ்வளவு கோபக்காரர் பார்த்தீர்களா?’’ என்று அருகிலிருந்தவர்களிடம் சொல்லிவிட்டு, அக்கடிதத்தை தனது ஜிப்பாவில் வைத்துக்கொண்டதாக பின்னர் தெரிந்துகொண்டேன்.

நான் சென்னையில் டிசம்பர் திங்களில் வந்து இறங்கினேன். வந்த பின்னால் என்னை வழியனுப்பக் கூட மனம் இல்லாமற்போன அந்த மனிதரை, என் மனம் நிறைந்து நிற்கும் மணாளனை, அன்புக் குணாளனை நான் சந்திக்கச் செல்ல வேண்டுமென்று நினைக்கவே இல்லை.

இவரை என்ன போய்ப் பார்ப்பது என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. நான் அவரைப் பார்க்கவும் இல்லை. ஒருநாள்... எந்த நாட்டு அதிபர் என்று நினைவில் இல்லை. ஓர் அதிபர் சென்னைக்கு வருகை தந்தார். மரபுப்படி நானும் சென்று அவரை வரவேற்க வேண்டும்.

கவர்னர், முதல்வர், மேலவைத் தலைவர், பேரவைத் தலைவர், மேலவைத் துணைத் தலைவர் (நான்), பேரவைத் துணைத் தலைவர், பிறகு அமைச்சர்கள் என்று அணிவகுத்து நின்று வரவேற்கவேண்டும். வரவேற்பில் நானும் கலந்து கொண்டேன். தலைவர் அந்த அதிபரிடம் ஒவ்வொருவரையாக அறிமுகம் செய்து-கொண்டே வந்தார். என் பக்கம் வந்ததும், சற்று திகைத்துப் போய் நின்றார். பிறகு சமாளித்துக் கொண்டு, ‘‘He is poet Pulamaipithan, Duputy chairman of Legilslative council'‘ என்று என்னை அறிமுகம் செய்தார். அந்த அதிபரும் நானும் கைகுலுக்கிக் கொண்டோம். வரவேற்பு வைபவம் முடிந்தது.

நான் என் காரில் ஏறுவதற்காகச் சென்றேன். என் பின்னால் இருந்து ஒரு கை தோளில் விழுந்தது. திரும்பிப் பார்த்தால் தலைவர். ‘எப்போது வந்தீர்கள்?’ என்றார். ‘நான்கைந்து நாட்களுக்கு முன்னர் வந்தேன்’ என்றேன். ‘ஏன் நீங்கள் வந்ததை என்னிடம் தெரிவிக்கவில்லை?’ என்றார். ‘போகும்போது நான் என்ன உங்களைப் பார்த்துச் சொல்லி விடைபெற்றுக் கொண்டா போனேன்?’ என்றேன்.

என் தோளைத் தட்டிச் சிரித்தபடி தாவி அணைத்தபடி அவரது காருக்கு அழைத்துச் சென்றார். நண்பர் ஹண்டே அவர்களையும், நண்பர் பொன்னையன் அவர்களையும் காரின் முன் இருக்கையில் அமரச்சொல்லிவிட்டு, பின் இருக்கையில் அவருக்குப் பக்கத்தில் என்னை உட்காரவைத்துக் கொண்டார்.

நான் மௌனமாகவே இருந்தேன். கார் இராமாபுரம் தோட்டத்தைச் சென்றடைந்தது. தரைத் தளத்தில் கூடத்தில் சென்று அமர்ந்தோம். சுடச்சுட மீன் வறுவல் ஒரு பெரிய தட்டில் கொண்டுவந்து வைத்தார்கள். என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே, ‘‘உம்... சாப்பிடுங்கள்’’ என்றார் தலைவர். நான் சாப்பிட்டேன்.

‘‘ஆமாம்.... தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் தொடக்க-விழாவில் என்ன கவிதை வாசித்தீர்கள்?’’ என்றார் தலைவர். நான், ‘‘சஞ்சயினை இழந்துவிட்ட...’’ என்று தொடங்கும் அந்தக் கவிதையை முழுவதுமாகச் சொன்னேன். ‘‘ஆமாம்... இதில் என்ன தவறு இருக்கிறது?’’ என்று அங்கிருந்த இருவரில் யாரையோ கேட்க நினைத்து என்னிடமே கேட்டார். ‘‘தவறு என்று எனக்குத் தண்டனை கொடுத்தவருக்குத்தானே தெரியும்? நீங்களே சொல்லுங்கள்’’ என்றேன் சற்று கோபமாக! அவர் சிரித்துக் கொண்டு, ‘‘சரி... அதையெல்லாம் மறந்துவிடுங்கள்’’ என்று என்னை சமாதானப்படுத்தினார்.

அது நடந்து முப்பத்தோரு ஆண்டு காலம் முடிந்துபோனது! எல்லாமே முடிந்துபோனது! இனி நான் சண்டை போட்டுக் கொள்ளத்தான் யார் இருக்கிறார்கள்... என்னை சமாதானப்படுத்தத்தான் யார் இருக்கிறார்கள்..? 
புலமைப்பித்தன்.

தொடர்புடைய இடுகைகள்

No comments: