Apr 20, 2012

இந்திய நாடாளுமன்ற குழுவும் ஈழத் தமிழர்களின் அவல நிலையும்


போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் நேரிடையாகக் கலந்துரையாடவும், அவர்களது உள்ளக் குமுறலைக் கேட்டு அறியவும் வாய்ப்பு இல்லாமல் பயணத் திட்டம் அமைந்துள்ளது. 

விருந்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
இலங்கை அரசுக்குச் சாதகமான கருத்து இந்தியாவில் ஏற்படத் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் போன்று உள்ளது'' என்று இலங்கை செல்லும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் அதிமுக சார்பில் யாரும் இடம் பெறமாட்டார்கள் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஏப்ரல் 11-ஆம் தேதி அறிவித்ததன் காரணத்தை முதல்வர் ஜெயலலிதா கூறி இருந்தார்.

அதிமுக இத்தகைய கருத்து மாறுபாடு தெரிவித்தவுடனேயே இந்தப் பயணத் திட்டத்தை மாற்றி அமைத்து, பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் அதிக நேரம் செலவிடுவதற்கும், அதிபர் ராஜபக்‌ஷேவை நேருக்கு நேராக, பத்திரிகையாளர்கள் பார்வையாளர்கள் முன்னிலையில் கேள்வி கேட்பதற்கும் இந்திய அரசு வகை செய்திருக்க வேண்டும். 

அதிமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூடக் கோரவில்லை. அதிமுக வராவிட்டால் நல்லது என்கின்ற ரீதியில்தான் மத்திய அரசு செயல்பட்டது.

திமுகவும், அதிமுகவும்தான்  இலங்கைத் தமிழர் பிரச்னையில் முக்கிய முடிவுகளை மேற்கொள்ள வேண்டிய கட்சிகள். 

இவர்கள்தான் உண்மை நிலையை நேரில் கண்டுவந்து ஈழத் தமிழர்களின் சார்பில் மத்திய அரசின் முன் குரல் கொடுக்க வேண்டியவர்கள்.

மத்திய அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்திருக்குமேயானால், இந்தப் பயணக் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு முக்கிய கட்சிகளான அதிமுகவும், திமுகவும் இடம்பெறுவதை உறுதி செய்திருக்க வேண்டும். அதை அவர்களும் செய்யவில்லை.

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை இலங்கை அரசு வரவேற்றதன் காரணமே, ஐ.நா. சபையின் குழு எதுவும் இலங்கையைப் பார்வையிட வந்துவிடாமல் தடுப்பதற்காகத்தான். 

மனித உரிமைக் கழகத்தில் எங்களுக்கு எதிராக வாக்களித்த இந்தியாவே தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அனுப்பி எங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிவிட்டது என்று சொல்லிக் கொள்வதற்காகத்தான்.

அதிபர் ராஜபக்‌ஷே விரித்த ராஜதந்திர வலையில் மறுபடியும் விழுந்திருக்கிறது இந்திய அரசு என்பதுதான் உண்மை. 

திமுகவும், அதிமுகவும் இல்லாத குழு, பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் அவலத்தை பற்றிக் கேட்கப்போவதில்லை.

அப்படியானால் அவர்தம் துயரங்களை எப்படித்தான் அறிந்துகொள்வது?

பாரதி காட்டிய வழிதான்.

அவர் விம்மி விம்மி விம்மி அழும் குரல் கேட்டிருப்பாய் காற்றே.
துன்பக் கேணியிலே எங்கள் பெண்கள் அழுதசொல் மீட்டும் உரைப்பாயோ.

2 comments:

HOTLINKSIN தமிழ் திரட்டி said...

உங்கள் பதிவை பாரதியின் துயரம் தோய்ந்த வைர வரிகள் கொண்டு முடித்திருப்பது பதிவுக்கு இன்னும் சிறப்பு சேர்க்கிறது.

சத்தியா said...

அனைத்துதம் தமிழரும் அறிவர் இவர்களின் பயணத்தின் நோக்கத்தை. அவர்கள் கூலிக்கு மாரடிப்பவர்கள். உடனடியாக தமிழக அரசியல் வாதிகள் அனைவரும் ஒன்றினைந்து இந்திய மத்தியஅரசிற்கு அழுத்தம் கொடுத்திருந்தால் இந்த உல்லாசபயணம் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.இது தமிழரின் துயர் அறியும் பயணமல்ல. இந்திய அரசின் சரணடையும் பயணமே. ஏன் தமிழக முக்கிய அரசியல் கட்சிகள் ஒன்றினைந்து ஒரு குழுவை உருவாக்கி தமிழ் ஈழப் பகுதிகளுக்கு சென்று வர முடியாது? வெறும் வாயை மென்று கொண்டு தமது சுயநல அரசியலுக்கு பாதிக்கபட்ட ஈழத்தமிழரை இரையாக்காது உருப்படியாக ஏதாவது செய்ய முயலலாமே? தமிழர் என்ற இனத்தையே மத்திய அரசு கருவருக்ப்பார்க்கிறதா? மத்தி அரசிற்கு முண்டு கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் வெறும் சவாடல்களை விட்டுக் கொண்டிராது ஆக்கபூர்வமாக எதையாவது செய்ய முயலலாமே.