Apr 23, 2012

“நம்ப முடியாத மனிதர் கருப்பையா மூப்பனார்” கவிஞர் கண்ணதாசன்.


திராவிட முன்னேற்றக் கழக அமைச்சரவை நீக்கப் பட்டதை தொடர்ந்து காங்கிரஸ் இணைப்பு பிப்ரவரி மாதம் பூர்த்தி அடைந்தது.

பிப்ரவரி 15-ஆம் தேதியன்று கடற்கரையிலே பிரதம மந்திரி இந்திரா காந்தி, டி.கே.பருவா, பிரம்மானந்த ரெட்டி போன்றவர்கள் கலந்து கொண்டு திரு.கருப்பையா மூப்பனார் காங்கிரஸின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள்.

அப்படித் தேர்ந்து எடுக்கும்போது கீழே உட்கார்ந்திருந்த நான் சொன்னேன்: "Wrong Choice- தவறான தேர்வுஎன்று.

பக்கத்திலே உட்கார்ந்திருந்த ஏ.கே. சண்முக சுந்தரமும், பா.சிதம்பரமும் கேட்டார்கள்: எப்படிச் சொல்கிறீர்கள்என்று.

நம்ப முடியாத மனிதர் இந்தக் கருப்பையா மூப்பனார்என்றேன்.

"Anyhow he is undisputed - எப்படியானாலும் அவர் பிரச்னைக்கு அப்பாற்பட்ட ஒருவர்என்று அவர்கள் சொன்னார்கள்.

"Every tree and stone is undisputed - ஒட்டொரு மரமும் கல்லும் கூடத்தான் பிரச்னைக்குஅப்பாற்பட்டதாக அமைதியாக இருக்கிறது.

ஒரு மனிதன் செயலாற்றக்கூடிய சக்தி உடையவனாக இருந்தால், அவன் disputed ஆகத்தான் - பிரச்னைக்கு உரியவனாகத்தான் - இருக்க முடியுமே தவிர, undisputed ஆக,பிரச்னைக்கு அப்பாற்பட்டவனாக இருக்க முடியாது. காந்திக்கே விரோதி இருந்தான். கடவுளுக்கே இருக்கிறார்கள். கடவுளே disputed. Disputed என்று வரும்பொழுதுதான் ஒரு மனிதன் செயலாற்றிக் கொண்டிருக்கிறான் என்று புரிந்து கொள்ள முடியும். செயலாற்றாமல் தூங்கி வழிகின்ற ஒருவனைத்தான் undisputed என்று சொல்ல முடியும். இந்த மனிதர் செயலற்றவர். அதே நேரத்தில் இந்த மனிதர் நம்ப முடியாதவர்என்று நான் கூறினேன்.

எப்படிஎன்று பழையபடியும் என்னிடம் கேட்டார்கள்.

பொய் நிறையச் சொல்கிறார்என்று நான் சொன்னேன்.

விளக்கம் சொல்லவில்லை.

கருப்பையா மூப்பனாரைப் பற்றி எனக்கு எப்படி இந்த அபிப்பிராயம் விழுந்தது என்பதை நான் இதில் சொல்லி விடுவது முறையாகும் என்று கருதுகிறேன்.

இணைப்புக்கான பூர்வாங்க வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போது, ஸ்வாகத் ஹோட்டலிலே ஏராளமான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போது, ஸ்வாகத் ஹோட்டலிலே ஏராளமான காங்கிரஸ்காரர்கள் தங்கியிருந்தார்கள். அது, யார் தலைவர் என்பது தெரியாமல் இருந்த காலம்.

திருமதி மரகதம் சந்திரசேகர் அவர்கள் ஒரு நாள் வந்து, மேலே கருப்பையா மூப்பனாரைப் பார்த்துவிட்டுக் கீழே இறங்கிப் போய்க் கொண்டிருக்கிறார். அவர்கள் பார்த்ததையும், கீழே போய்க் கொண்டிருப்பதையும் நான் பார்த்துவிட்டு நான் மேலே போகிறேன்.

மேலே போய் மூப்பனாரைப் பார்த்து, ‘என்ன, மரகதம் உங்களைப் பார்த்தார்களா?’ என்று கேட்கிறேன்.

அவர் உடனே, “மரகதமா? அவர்கள் டெல்லியிலல்லவா இருக்கிறார்கள்! இங்கே வந்திருக்கிறார்களா?” என்று என்னிடம் கேட்டார்.

அப்பொழுதே நான் முடிவு கட்டினேன், “இந்த மனிதனைவிட ஒரு அண்டப்புளுகன் உலகத்திலேயே இருக்க முடியாதுஎன்று.

பொய் சொல்வது என்றால் அது உடனேயே பொய் என்று தெரிகிற மாதிரி சொல்லக் கூடாது என்பது கூடத் தெரியாத ஒரு மடத்தனமாக பொய்யை, அவர், அன்று சொன்னார்.

நான் தொடர்ந்து விளைவுகளைப் பார்த்தப்போது அந்த ஓராண்டுக் காலத்திற்குள்ளாகவே இந்த மனிதர் பொய்யர் மட்டுமல்ல, யோக்கியமானவரும் அல்ல, என்று முடிவு கட்ட வேண்டிய நிலைக்கு நான் வந்தேன்.

ஆனால் காங்கிரஸினுடைய வளர்ச்சி என்பது தமிழகத்தில் இல்லை என்பதை ஒப்புக் கொண்டாக வேண்டும். காரணம், நல்ல தலைமை அமையவில்லை என்பது மட்டுமல்ல, ஒழுங்கான வேலையும் நடக்க முடியாமல் போயிற்று.
நன்றி
கவிஞர் கண்ணதாசன் எழுதிய  நான் பார்த்த அரசியல் 

No comments: