1984 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 15-ம் நாள், நான் அரசவைக் கவிஞராக பதவி ஏற்கும் விழா திருச்சியில் நிகழ்ந்தது.
எத்தனை எத்தனையோ கசப்புக்களையும் வெறுப்புகளையும் அவருக்கு நான் ஏற்படுத்தியிருந்தாலும்... அதையெல்லாம் அந்த வள்ளல் மனம் எண்ணிப்பார்க்கவில்லை. எனக்கு அரசவைக் கவிஞர் பதவி கொடுத்துப் பாராட்டு விழாவை... என் உயிரோடு கலந்த அண்ணாவின் பிறந்தநாள் விழாவோடு சேர்த்து நடத்தினார்.
நான் அந்தப் பதவியை ஏற்றுக்கொண்டபோது என் மனம் என்னை உறுத்தியது; என்னை மிகவும் வருத்தியது! இந்த மனிதனுக்கு நாம் எத்தனை தொல்லைகளை செய்திருக்கிறோம்! ஆனால் இந்த மனிதன் எனக்குப் பெரும் பதவியை அல்லவா கொடுக்கிறார்! ஒரு கவிஞனுக்கு அரசவைக் கவிஞர் பதவி என்பதைக் காட்டிலும் அதிகபட்சப் பெருமை என்ன இருக்கிறது!
இவரை நாம் வேதனைப்படுத்தியதற்காக நம்மை வெட்கப்படச் செய்கிறாரா என்று கூட நான் நினைத்துக் கொண்டேன். அதனால் நான் அந்தப் பதவி ஏற்பு விழாவில், என் ஏற்புரையில் ஒரு நீண்ட கவிதை படித்தேன். அதில் ஒரு சில வரிகளை மட்டும் நான் இங்கு குறிப்பிடுகிறேன்!
கரைதனை மீறிய காட்டாற்று வெள்ளமாய்
ஒருசில நாட்கள் ஓடியும் இருக்கிறேன்...
கட்டி அணைத்த இவனது கையைச்
சுட்ட தீயாய் நானிருந்திருக்கிறேன்...
காயம் செய்ததைக் கருதாமல் எனக்கு
நியாயம் செய்யவே நினைக்கிறான்...
பல்பட்ட இடத்தில் பால்மட்டும் சுரக்கும்
அன்னை இதயம் அவனது இதயம்...
இந்தக் கவிதை வரிகளை நான் படித்தபோது, இலட்சக் கணக்கில் கூடியிருந்த கூட்டம் கைதட்டிஆரவாரம் செய்து இன்னொரு முறை படியுங்கள் என்று ஆணையிட்டது. நான் மீண்டும் படித்தேன்.
கண்ணிமைக்காது அவர் என்னையே கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது நெஞ்சம் கரைந்துவிட்டது என்பதை நான் கண்டுகொண்டேன். அவரது நெஞ்சம் கரைந்துபோனது; அவர் என் மீது வைத்த நேசம் நிறைந்துபோனது. கசப்பும் வெறுப்பும் காணாமல் போயின.
அந்த மன்னவர் என் கழுத்தில் டாலரோடு கூடிய தங்கச் சங்கிலி அணிவித்தார், தகுதியுரை படித்தளித்தார்.
தலைவருக்கு நான் பாட்டாடை போர்த்தியதற்குப் பதிலாக எனக்கு அவர் பட்டாடை போர்த்தினார், பாராட்டிப் பேசினார். அன்று நடந்த அந்த விழாக் கோலம், இன்றும் என் கண்ணையும் நெஞ்சையும் விட்டு விழாக் கோலமாக நிற்கிறது!
ஆனால் விழா நடத்தியவரோ கடற்கரை மண்ணில் விழுந்துபோனார்.
ஆற்றுவாரும் இல்லாமல், தேற்றுவாரும் இல்லாமல் இன்று நான் அழுகின்றேன். அந்த அண்ணன் இருக்கும் இடம் நோக்கி கைகூப்பித் தொழுகிறேன்.
தலைவர்- தம்பி -நான் தொடரில் புலமைப்பித்தன்
தொடர்புடைய இடுகைகள்
Tweet | |||||
1 comment:
'பல் பட்ட இடத்தில் பால் சுரக்கும் இதயம்" அருமையான உவமானம் இதயக்கனிக்கு ஏற்ற வரிகள்.
Post a Comment