உள் மனதில் விஷமாக ஊடுருவிப் பரவும் கூச்சத்தை எப்படி எதிர்கொள்வது? பதில் சொல்கிறார் மனநல மருத்துவர் செந்தில்வேலன். ''கரூர் அருகே கிராமத்தில் இருந்து நகரத்துக்குச் சென்று பொறியியல் படிப்பு முடித்தவன் அவன். செமஸ்டர் தேர்வுகளில் 90 சதவிகித மதிப்பெண்கள் எடுத்தவன். நல்ல திறமைசாலி. பெரிய அளவில் பிரகாசிப்பான் என்று அவனது நண்பர்கள் கனவோடு இருந்தார்கள். ஆனால், அவனால் ஒரு சின்ன வேலைக்குக்கூடச் செல்ல முடியவில்லை. ஏனெனில், நேர்முகத் தேர்வுகளில் கேள்வி கேட்டாலே டென்ஷனாகிவிடுவான். பதில் தெரியும். ஆனால், சொல்லத் தெரியாது. அல்லது சொல்ல வராது. ஒரு வார்த்தை பேசுவதற்குள் வியர்த்து வெலவெலத்துவிடுவான். இதனால் நேர்முகத் தேர்வுகளுக்குச் செல்வதையே தவிர்க்க ஆரம்பித்தான். கடைசியில், அருகில் இருந்த ஒரு பொறியியல் கல்லூரியில் 3,000 ரூபாய் சம்பளத்துக்கு லேப் அசிஸ்டென்டாக வேலைக்குச் சேர்ந்தான். அவனுடைய தகுதிக்கு லெக்சரர் ஆகியிருக்கலாம். இருந்தாலும் மாணவர்களைப் பார்த்து பாடம் நடத்தப் பயம். அவனுடைய நண்பர்கள் அவனை என்னிடம் அழைத்து வந்தார்கள். தொடர் பயிற்சி, மருந்து, மாத்திரைகள் மூலம் அவனைக் குணமாக்கினேன். இப்போது அவன் சென்னையில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளர். இவரைப்போல உலகத்தில் மொத்த மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேர் கூச்சம், பயம், தயக்கத்தில் சிக்கித் தவிக்கிறார்கள். உங்களுக்கு எவ்வளவு திறமை இருந்தாலும், கூச்சம் உங்களை இரண்டுபடி கீழே இறக்கி விட்டுவிடும். உடல், சூழல் என இரண்டு காரணங்களால் அதீத கூச்ச உணர்வு ஏற்படுகிறது. மூளையில் செரட்டோனின் (serotonin) என்ற ரசாயனம் குறையும்போது தானாகவே பயம், பதற்றம், குற்றஉணர்சி, தாழ்வுமனப்பான்மை, தயக்கம்
போன்ற உணர்ச்சிகள் உருவாகும். இதை மாற்றுவதற்கான சூழ்நிலை இல்லையென்றால், கூச்சம் நம் குணமாகவே மாறிவிடும். இதைத்தான் கூச்ச சுபாவம், பயந்த சுபாவம் என்று சொல்கிறோம்.
பெற்றோரின் அதிகப்படியான பாதுகாப்பும், அக்கறை யும் ஒருவனுக்கு கூச்ச உணர்வை ஏற்படுத்திவிடும். பெற்றோர்கள் ஒருவனை எதற்கெடுத்தாலும் 'தப்பு', 'இது குற்றம்' என்று அடக்கிவைக்கும்போது, அவனுக்கு மன தைரியம் இல்லாமல் போய்விடுகிறது. மகனையோ, மகளையோ எந்தக் காரியத்தையும் செய்யவிடாமல் தடுத்து, பெற்றோர்களே செய்து முடிப்பது ஆபத்தான வளர்ப்பு முறையாகும். இதனால், எந்தக் காரியத்தையும் துணிச்ச லாகச் செய்யும் தைரியம் அவர்களுக்குள் வளராமலேயே போய்விடும். பொருட்களைப் பேரம் பேசி வாங்க முடியாது. சாலையைக் கடக்கத் தெரியாமல் தடுமாறு வார்கள். இந்தச் சூழ்நிலையில் 18-19 வயதில் கல்லூரிக்குச் செல்லும்போது, பெற்றோர் இல்லாமல் எதையும் சந்திக்கப் பயப்படுவார்கள். 'எதிரில் இருப்பவர் நம்மைவிடச் சிறந்தவர்' என்கிற எண்ணம் எழுந்து, தாழ்வு மனப்பான்மை வந்துவிடும். தன்னம்பிக்கையே இருக்காது. யாரையும் சந்திக்க, எதிர்கொள்ளப் பயப்படுவார்கள். பெரும்பாலும் சந்திப்புகளைத் தவிர்ப்பார்கள். இவர்களை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று, சிகிச்சை கொடுத்துச் சரி செய்ய வேண்டும்.
மனப் பதற்ற நோய்கள் இருந்தாலும் இந்தப் பிரச்னை கள் வரும். மனப் பதற்ற நோய்களில் சோஷியல் ஃபோபியா என்பதும் ஒன்று. அதாவது, சமூக சூழ்நிலைகளைக் கண்டு அதீதமாகப் பயப்படுவது. இந்த ஃபோபியா வந்தவர்களால் மேடையில் ஏறிப் பேச முடியாது. மேடையில் ஏறியதுமே நெஞ்சு அடித்துக்கொள்ளும். கை கால் நடுங்கும். தொண்டை வறண்டுவிடும். வியர்த்துக் கொட்டும். இதே ஆட்களை யாரும் இல்லாத அறையில் பேசச் சொன்னால், அற்புதமாகப் பேசுவார்கள். இன்னும் சிலர், அருகில் ஆட்கள் இருக்கும்போது எதையுமே செய்ய மாட்டார்கள். யாராவது அருகில் இருந்தால் சிலரால் சாப்பிடக்கூட முடியாது. பப்ளிக் டாய்லெட்டில் நான்கைந்து பேர் யூரின் போய்க்கொண்டு இருந்தால், இவர்கள் கூச்சப்பட்டு வெளியேறிவிடுவார்கள்.
பயிற்சிகள், மருந்துகள் மூலம் இந்தப் பாதிப்புகளை மாற்றிவிடலாம். கூச்ச சுபாவத்தைப் போக்க நிறைய பயிற்சிகள் எடுக்க வேண்டும். யாரையாவது சந்திக்கச் செல்வதற்கு முன், என்ன பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும், அவர் இப்படிப் பதில் சொன்னால், அடுத்து எப்படிப் பேச்சைக் கொண்டுசெல்வது? என்று உங்களுக் குள்ளேயே ரிகர்சல் செய்ய வேண்டும். திட்டமிட்டுச் செல்லும்போது, பயம், பதற்றம் வராது. அதேபோல யாரையும் சந்திக்கச் செல்லும்போதோ, மேடையில் ஏறும்போதோ, 'நமக்கு முன் இருப்பவர்கள் நம்மைப்போல் சராசரி மனிதர்கள்' என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். 'நாம் படித்திருக்கிறோம். நமக்கு இவ்வளவு திறமைகள் இருக்கின்றன. சமுதாயத்தில் நமக்கு ஒரு மதிப்பு உண்டு' என்று சுய மரியாதையை வரவழைத்துக்கொள்ளுங்கள். இப்படி தொடர்பயிற்சிகள் எடுக்கும்போது கூச்ச சுபாவம் காணாமல் போய்விடும். உதாரணமாக, திருமணத்தின்போது பெண்கள் அதிகம் கூச்சப்படுவார்கள். பிறகு, இரண்டு மூன்று மாதத்தில் புருஷனை 'வாடா, போடா' என்று செல்லமாக அழைப்பார்கள். அந்த அளவுக்குத் தைரியம் என்பது பழக்கத்தால் வருகிறது. நீங்களும் அப்படி மற்றவர்களோடு பேசிப் பழகுங்கள்.
மூளையில் ஏற்படும் செரட்டோனின் குறைவை மருந்துகள் மூலம் சரிப்படுத்திவிடலாம். ஒரு குறிப்பிட்ட காலம் வரை தொடர்ந்து மருந்துகள் எடுக்க வேண்டும். நன்றாகப் படிக்கும் மாணவர்கள் சிலர் கேள்விகேட்கும்போது பிரமாதமாகப் பதில் அளிப்பார்கள். பரீட்சையில் பாதி மதிப்பெண்கள்கூட வாங்க மாட்டார்கள். அவர்களுக்குத் தேர்வுத்தாளைக் கையில் வாங்கிவிட்டாலே பயம், பதற்றம் வந்துவிடும். கை, கால் வெடவெடத்து,வியர்த்துக் கொட்டும். படித்தது எல்லாம் மறந்துவிடும். இரண்டு கேள்விக்கு மட்டும் பதில் எழுதிவிட்டு ஓடி வந்துவிடுவார் கள். இதற்கு எக்ஸாம் ஃபோபியா என்று பெயர். இந்த மாதிரி பலருக்கு குறிப்பிட்ட துறையில் மட்டும் தயக்கம், கூச்சம் இருக்கும். இதையும் மருந்துகள் மூலம் குணப் படுத்தலாம். எக்ஸாம் ஃபோபியா உள்ள மாணவர்களுக்கு தேர்வு தினத்தன்று மட்டும் மருந்து கொடுத்துப் பயத்தைப் போக்க`ம். எந்தப் பயமும் இல்லாமல் தேர்வு எழுதி விட்டு வருவார்கள். ஸ்டேஜ் ஃபியர் இருப்பவர்களுக்கும் ஸ்டேஜ் பெர்ஃபார்மன்ஸ் செய்யும்போது மாத்திரை கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்த முடியும்.
ஒன்றே ஒன்றுதான்... கூச்சப்படுபவர்களால் தங்களின் அறிவுக்கும், திறமைக்கும் ஏற்ற வாழ்க்கையை அடைய முடியாது. கூச்சம், தயக்கம் எதுவும் இல்லாதவன்தான் வாழ்க்கையில் உயர்ந்த இடத்துக்குச் செல்ல முடியும்!''
எப்படி உங்கள் இஷ்டம்?
கூச்சத்தை உதறியெறிந்து சிகரம் தொட்ட சிலர்...
திக்குவாய் என்பதால் கூச்ச சுபாவம் உடையவனாக இருந்தான் அவன். ஆனால், அது அவனை எந்தவிதத்திலும் அமெரிக்க ஜனாதிபதியாகவோ, புகழ்பெற்ற கெட்டிஸ்பர்க் உரை நிகழ்த்துவதையோ தடுக்கவில்லை. கூச்ச சுபாவத்தை மீறி வந்ததால்தான் ஒரு ஆபிரகாம் லிங்கன் உதித்தார்!
ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் நடிக்க வேண்டும் என்பது அவனின் லட்சியம். ஆனால், அவனுடைய குரல் மோசமாக இருந்தது. ஆள் கோமாளி மாதிரி இருந்தான். இவை இரண்டும் அவனுக்கு கூச்ச உணர்வைக் கொடுத்தது. அந்தக் கூச்சத்தை தகர்த்து எறிந்து அவன் கண்டுபிடித்த சினிமாதான் இன்று உலகின் நம்பர் ஒன் பொழுதுபோக்கு. அவர் தாமஸ் ஆல்வா எடிசன்!
கூச்ச சுபாவமும் 'ஸ்டேஜ் ஃபியர்' காரணத்தாலும் அவளால் பியானோ வாசிக்க முடியவில்லை. ஆனால், அவள் புகழ்பெற்ற மர்ம நாவல்கள் எழுதி அகதா கிறிஸ்டியாக வளர்வதை அந்தக் கூச்சத்தால் தடை செய்ய முடியவில்லை!
இன்னும் பட்டியல்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், நீங்கள் விரும்பும் மாற்றமாக நீங்களே மாறாத வரையில் இவைகள் வெறும் வார்த்தைகள்தான்!
இன்னும் பட்டியல்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், நீங்கள் விரும்பும் மாற்றமாக நீங்களே மாறாத வரையில் இவைகள் வெறும் வார்த்தைகள்தான்!
Tweet | |||||
No comments:
Post a Comment