ஊரெல்லாம் உன் பேச்சுத்தானடி' என்று மீண்டும் ஊரெல்லாம் குஷ்பு!
அறிவாலயத்தில் அத்தனை கேமராக்களைப் பார்த்துப் பல காலம் ஆகிவிட்டது. குஷ்பு தி.மு.க-வில் இணைவதை 'நற்செய்தி' என்று வர்ணித்தார் கருணாநிதி. உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்ட குஷ்பு, சேர்ப்புக் கட்டணம் செலுத்த பணம் எடுத்து வர வில்லை. தன் பையில் பணம் தேடிய ஸ்டாலின், அமைச்சர் பூங்கோதையிடம் இருந்து பணம் வாங்கித் தந்தார். அன்பழகனின் முகத்தில்கூடச் சிரிப்பு தெறித்தது.
சட்டமன்றத்துக்குக்கூட வர முடியாமல் வீட்டில் முடங்கிக்கிடந்த ஆற்காட்டார், ஆர்வமாக எழுந்து நின்று சால்வை வாங்கினார். ஓர் அமைச்சர் இன்னொருவரைப் பார்த்து, 'என்ன, இன்னிக்கு பவுடர் அதிகமா இருக்கு' என்று கிண்டலடிக்கிறார். சென்னையில் இருந்த வட்டச் செயலாளர்கள் பலரும் உள்ளேன் ஐயா என்று ஆஜர். மகளிர் அணியினர் முகத்தில் அதீத உற்சாகம். மொத்தத்தில் குஷ்புவின் வருகையால், அறிவாலயம் கும்பாபிஷேக எஃபெக்டில் இருந்தது!
'தர்மத்தின் தலைவன்' படம் மூலம் தமிழில் அறிமுகமாகி, 'வருஷம் 16', 'சின்னத்தம்பி' படங் களினால் பிரபலமானவர் குஷ்பு. ரஜினி, கமல், என அத்தனை டாப் ஸ்டார்களோடும் ஜோடி சேர்ந்தார். கோயில் கட்டுவதில் தொடங்கி, இட்லிக்குப் பேர் வைப்பது வரை குஷ்பு புகழ்தான்.
பிரபுவுடன் காதலில் இருந்தார், இருவருக்கும் திருமணம் நடந்தது என்று பத்திரிகைகளின் அட்டைகளை நிறைத்தார். காதல், கல்யாண விஷயங்களை சிவாஜி குடும்பம் மறுத்தது. பிறகு அன்றைய முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துஆதரவு கேட்டார். ஜெயா டி.வி-யில் ஆரம்பித்ததுதான் ஜாக்பாட். சுமார் ஒன்பது ஆண்டுகளைக் கடந்து, சுமார் 398 வாரங்கள் ஒளிபரப்பாகின. கடந்த ஞாயிறு அன்று (16-ம் தேதி) ஜாக்பாட்டை நிறுத்தச் சொல்லிவிட்டார் ஜெ. 400-வது வாரமாக ஒளிபரப்ப எடுக்கப்பட்ட மெகா காட்சியும் ஜெயா டி.வி-யில் இனி வராது.
குஷ்பு என்றால் ஜெயா செல்லம் என்றுதான் அனைவருக்கும் தெரியும். ஆனால், 'திருமணத்துக்கு முன் பாதுகாப்புடன் உடலுறவு வைத்துக்கொள்வதில் தவறு இல்லை' என்று அவர் சொன்ன கருத்துக்காக பா.ம.க-வும் விடுதலைச் சிறுத்தைகளும் அவரது வீட்டுக்கு விளக்குமாற்று டன் போனபோது, தனக்கு ஆதர வாக ஜெயலலிதா இருப்பார் என்று நினைத்தார் குஷ்பு. அப்போது சிங்கப்பூரில் இருந்த குஷ்புவை அழைத்து, உடனடியாக சென்னைக்கு வந்து மன்னிப்பு கேட்கவைத்தார் முதல்வர் ஜெயலலிதா. அன்றைய மன்னிப்புக் காட்சிகள் ஜெயா டி.வி-யில் மட்டுமே வெளியாகின. இதை குஷ்பு கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. மேலும், அன்றைக்கு நடிகர் சங்கத் தலைவராக இருந்தவர் விஜயகாந்த். அவரிடமும் தனக்கான ஆதரவை குஷ்பு கேட்டார். 'சொன்னதற்கு முதலில் மன்னிப்புக் கேளுங்கள். அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்' என்றே விஜயகாந்த்தும் சொன்னார். ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகிய இருவரும் தன்னைக் கைவிட்டதால் விரக்தி அடைந்த குஷ்பு, தன்னைக் காப்பாற்றிக்கொள்ள தனிக் கட்சி ஆரம்பிக்க நினைத்தார். இது தொடர்பாகப் பல்வேறு தரப்புகளுடன் ஆலோசனை செய்தார். யாருமே தனிக் கட்சி ஆரம்பிப்பதை ஏற்கவில்லை. ஏதாவது ஒரு கட்சியுடன் சேர்ந்து கொள்ளவே ஆலோசனை சொன்னார்கள். இந்நிலையில், எதிர்பாராத திருப் பமாக கலைஞர் டி.வி. உதயமாகி 'நம்ம குடும்பம்' சீரியலில் ஐக்கியமானார். அது கழகக் குடும்பத்தில் அவரைக் கொண்டு போய்ச் சேர்த்தது!
காங்கிரஸா, தி.மு.க-வா என்ற குழப்பம் அவருக்குள் இருந்தாலும், குஷ்புவைக் கழகத்துக்குள் இணைத்தாக வேண்டும் என்று கருணாநிதி யோசிக்க ஆரம்பித்ததற்குக் காரணம், விஜயகாந்த்தின் வளர்ச்சி. விஜயகாந்த்தின் சினிமா கவர்ச்சியை குஷ்புவின் கவர்ச்சியால்தான் வீழ்த்த முடியும்' என்று கருணாநிதி யோசித்தார். இதுதான் கருணாநிதி 'கெமிஸ்ட்ரி'! மாநிலம் முழுவதும் பிரசாரம் போகக்கூடிய பிரபலத்தன்மை ஸ்டாலினுக்கு மட்டுமே இருக்கிறது. அவர் ஒருவரால் மட்டுமே பிரசாரக் களத்தைச் சமாளிக்க முடியாது. விஜயகாந்த் செல்லும் பிரசாரப் பாதைக்கு முன்போ அல்லது அவரைப் பின் தொடர்ந்தோ குஷ்புவின் ரதத்தைச் செலுத்துவது தி.மு.க-வின் திட்டம்.
ஜூன் 3-ம் தேதி தன்னுடைய பிறந்த தினத்தன்று தான் குஷ்புவைத் தி.மு.க-வில் இணைத்துக்கொள்ள கருணாநிதி திட்டமிட்டு இருந்தார். ஆனால், திடீரென்று மே 14-ம் தேதியே முந்திக்கொண்டதன் அவசரக் காரணம் கட்சிக்காரர்களுக்கே புரியவில்லை. தி.மு.க. கூட்டணிக் குள் ஐக்கியமாகத் தவித்துக்கொண்டு இருக்கும் பா.ம.க -வுக்கு, இதன் மூலமாகச் சில சமிக்ஞைகளை கருணாநிதி காட்டுவதாகவும் சொல்கிறார்கள். குஷ்புவைக் கண்டால் எட்டிக்காயாகக் கசப்பது டாக்டர் ராமதாஸூக்கும் திருமாவளவனுக்கும்தான். ராமதாஸ் தனது அணிக்குள் வருவதற்கு முன்னதாக குஷ்புவை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று கருணாநிதி நினைத்தாராம். பா.ம.க. தொடர்பாக தி.மு.க. இம்மாதம் 30-ம் தேதி முடிவெடுக்கப்போகிறது. கற்பு தொடர்பான கருத்தைப் பார்த்ததும் 'சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்' என்று காட்டமாகக் கர்ஜித்தவர் திருமா. இவர்கள் இருவரும், தேர்தல் பிரசாரத்துக்காக குஷ்புவின் தேதி கேட்டுக் காத்திருக்கப் போகிறார்கள்.
குஷ்புவின் வருகை தி.மு.க-வுக்கு எதிரான விஷயமாக மாறிவிடுமோ என்ற அச்சமும் உடன்பிறப்புக்கள் சிலருக்கு இருக்கிறது. திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறு இல்லை. அப்படி செக்ஸ் வைத்துக் கொள்ளாதவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள். ஓரினச் சேர்க்கைகூடச் சரியானதுதான் என்பது போன்ற கருத்துக்களைக்கொண்டவர் அவர். இன்றைக்கு குஷ்புவை முற்போக்கான கருத்துக்களுக்குச் சொந்தக் காரர் என்று அடையாளப்படுத்தும் கருணாநிதிகூட ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் வேறு மாதிரி கருத்தில் தான் இருந்தார். ''கற்பைக் கேலிக்குரியதா ஆக்கினா அது கேலிக்குரியதாகவே ஆகிடும். இந்தியாவுக்குன்னு ஒரு கலாசாரம் இருக்கு. தமிழ்நாட்டுக்குன்னு ஒரு கலாசாரம் இருக்கு. அந்தப் பண்பாடுகளை அழிக்கிற மாதிரி யாரும் இருக்கக் கூடாது' என்றவர் கருணாநிதி. காலமாற்றங்களில் அவரது சிந்தனைகளும் மாறியிருக்கின்றனவா, அல்லது கட்சிக்குள் இணைக்கிறோம் என்பதால், அங்கீகரித்து விட்டாரா என்பது தெரியவில்லை.
'
'எத்தனையோ கட்சிகள் இருந்தாலும், மக்களுக்காக, பெண்களுக்காகப் பாடுபடும் கட்சி தி.மு.க-தான். அதனால்தான் நான் சேர்ந்தேன்'' என்ற குஷ்புவை, ''காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாகச் சொன்னீர்களே?'' என்று ஒரு நிருபர் மடக்கினார். ''காங்கிரஸைப் பிடிக்கும் என்றேன். அதுதான் தி.மு.க-வுடன் கூட்டணியில் இருக் கிறதே'' என்ற சாமர்த்தியத்தை கருணாநிதி ரசித்தார்.
'உங்களைத் தொடர்ந்து நடிகை கள் பலரும் வருவார்களா?'' என்று கேட்டபோது, ''இதெல்லாம் என்னங்க கேள்வி?'' என்றார். ''தொடர்ந்து நடிப்பீர்களா?'' என்ற கேள்விக்கு, ''தலைவர் அனுமதித்தால்...'' என்ற டிரேட்மார்க் நடிகை பதிலைச் சொல்லாமல், ''அது என்னுடைய தொழில்'' என்று சொன்னார். 'தி.மு.க. மகளிர் அணி என்றாலே அந்தக் காலத்துல பொற்செல்வி இளமுருகு. இப்ப சற்குணபாண்டியன்னு வயதானவங்களா இருக்காங்க. குஷ்பு மாதிரியான இளமையானவரை நியமிப்பீர்களா?' என்று ஒரு நிருபர் கேட்க... அன்பழகனைப் பார்த்து கருணாநிதி சிரித்தார். குஷ்புவின் கன்னம் இன்னும் சிவந்தது. ''இந்தக் கேள்வியைக் கேட்டு இப்பவே கலகம் மூட்டப்பார்க்கிறீர்களா?'' என்று கருணாநிதி கலகலவெனச் சிரித்தார்.
நிம்மதியான கட்சிக்குள் நடிகைகளின் வருகை கலகமாகத்தான் முடிந்திருக்கிறது. கருணாநிதி இரண்டாம் முறை முதலமைச்சரானபோது, அவருக்கும் எம்.ஜி.ஆருக்கு மான நட்பு உடைந்தது ஜெயலலிதாவின் வருகையால்தான். தி.மு.க-வின் மதுரை மாநாட்டில் 'காவிரி தந்த கலைச் செல்வி' என்ற நாட்டிய நாடகத்தை ஜெயலலிதா நடத்த அனுமதி கேட்டார் எம்.ஜி.ஆர். மறுத்தார் கருணாநிதி. கண்ணீராலும் செந்நீராலும் வளர்த்த ஒரு கட்சியே உடைந்தது. மேலவைக்கு வெண்ணிற ஆடை நிர்மலாவைக் கொண்டுவர எம்.ஜி.ஆருக்குத் தடை போட்டார் கருணாநிதி. நூற்றாண்டுகள் கண்ட மேலவைக்கே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இன்று குஷ்பு மூலமாக அடுத்த கலகம் ஆரம்பமாகப்போகிறதா என்பது அடுத்து வரும் நாட்களில்தான் தெரியும்.
அதிகார மையங்களான ஸ்டாலின், அழகிரி, கனிமொழி மூவரும் ஏற்றுக்கொள்ளும் நபராக ஒருவர் நிச்சயம் இருக்க முடியாது. மூவரில் ஒருவருக்குப் பிடிக்காதென்றாலும், தாக்குப்பிடிப்பது சிரமம். குஷ்பு இணைகிறார் என்றதும் மகளிர் அணியின் முக்கியப் பிரமுகர்கள் அனைவரும் அறிவாலயத்துக்கு வந்திருக்க... கனிமொழி மட்டும் வரவில்லை. மேலும், அழகிரி அமெரிக்கா சென்ற மறுநாள் அவசர அவசரமாக குஷ்பு இணைக்கப்பட்டு இருப்பதன் பின்னணியையும் விவரம் அறிந்தவர்கள் அறிவார்கள்.
ஜெயலலிதாவுக்கு தி.மு.க-வில் அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்று எம்.ஜி.ஆர்.வாதாடிய போது, 'ஏ... அப்பா! இதை எல்லாம் திராவிட இயக்கம் தாங்காது!' என்று தான் சொன்னதாக கருணாநிதி சொன்னது உண்டு.
குஷ்புவை தி.மு.க தாங்குமா?
Tweet | |||||
No comments:
Post a Comment