May 20, 2010

12 ஜோடிகளுக்கு திருமண விழா

இவர்கள் இப்படித்தான்

ரசியல்வாதிகள் கும்பல் கும்பலாக நடத்தி வைக்கும் இலவச திரு மணங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், ஒரு கிராமமே ஒன்றுகூடி, 12 ஜோடிகளுக்கு திருமண விழாவை நடத்தி வைத்திருக்கிறது!
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் இருந்து நான்கு கிலோமீட்டர் உள்வாங்கி யிருக்கும் தொட்டியனூர் கிராமத்தில்தான் கடந்த வாரத்தில் இந்த திருமண விழா

நடந்திருக்கிறது. தொட்டி நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் மட்டுமே இங்கு வசிக்கிறார்களாம்.
ஊர் பெரியவரான சென்னப்பனை சந்தித்தோம். ''வேட்டையாடுறதும், விவசாய மும்தான் எங்களோட குலத்தொழில். ஆனா, இன்னிக்கு அது ரெண்டுமே சுத்தமா அழிஞ்சு போச்சுங்க. எங்க ஆளுங்க எல்லாம் கிடைக்குற வேலைக்கு போயிட்டு இருக்காங்க. மத்தவங்க மாதிரி எங்க சாதியில கல்யாணம் பண்ணிட முடியாது. கல்யாணம் பண்றதுக்காகவே ஊருக்கு வெளியே ரெண்டு ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டிருக்கோம். அந்த காட்டுலதான் 'பச்சை பந்தல்' (பச்சை தென்னங்கீற்றால் போடப்படும் பந்தல்) போட்டு கல்யாணம் நடத்துவோம். நல்ல நாள், கெட்ட நாள் எல்லாம் எங்களுக்கு கணக்கு கிடையாது.
வழக்கமா ஞாயித்துக் கிழமை ராத்திரி மாப்பிள்ளை யை அழைச்சுகிட்டு காட்டுக்குப்போய் சடங்கு நடத்துவோம். சடங்கு முடிஞ்சதும் மாப்பிள்ளையை மட்டும் தனியா காட்டுல விட்டுட்டு வந்துடுவோம். திங்கள்கிழமை ராத்திரி பொண்ணை அழைச்சுட்டு காட்டுக்குப் போவோம். செவ்வாய்கிழமை காத்தால கல்யாணம் நடக்கும். அன்னிக்கு ராத்திரி அங்கேயே ஆடு வெட்டி, சமையல் செஞ்சு விடிய விடிய சாப்பிடுவோம். புதன்கிழமை பொழுது விடியறதுக் குள்ள ஊருக்குள்ள வந்துடுவோம். இப்படி மூணு நாளு நடக்குற கல்யாணத்துக்கு ஏகப்பட்ட செலவாகுது.
அதனாலதான் இந்தத் தடவை ஊருல கல்யாணத் துக்கு ரெடியா இருக்குற வயசு பசங்களை எல்லாம் ஒண்ணு சேர்த்தோம். மொத்தம் 12 பசங்க இருந்தாங்க. அவனுங்க அத்தனை பேருக்கும் பொண்ணு பார்த்தோம். எங்க ஊருல சில பேருக்கு பொண்ணு இருந்தாங்க. சில பேருக்கு எங்க சாதியிலேயே வெளியில பொண்ணு புடிச்சோம். 12 வீட்டுக்காரங்களும் ஒண்ணுசேர்ந்து கல்யாணத்தை நடத்த முடிவு செஞ்சோம். கல்யாணத்துக்கு மட்டும் 40 ஆடு வெட்டுனோம். கிட்டத்தட்ட அஞ்சாயிரம் பேரு சாப்பிட்டிருப்பாங்க...'' என்று கணக்கு சொன்னார்.
புது மாப்பிள்ளை பொம்ம நாயக்கர் நம்மிடம், ''கொத்தனார் வேலைக்கு போனாதாங்க அன்னாடம் கஞ்சி குடிக்க முடியும். நாங்க எல்லாம் அஞ்சாவதோட சரி... பெருசா எதுவும் படிக்கல. இந்த வருமானத்தை வெச்சுகிட்டு தனியா எப்படி கல்யாணம் பண்ண முடியும்? அதான் இப்படி பண்ணிகிட்டோம். இப்பவும் ஒரு ஜோடிக்கு 30 ஆயிரம் வரைக்கும் செலவாகியிருக்கும். வறுமையில இருக்குற எங்களுக்கு இது பெரிய சமாசாரம்தாங்க...'' என்றார்.
தொட்டி நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் யாரும் ஜாக்கெட் அணிய மாட்டார்களாம். ஜாக்கெட் போடுவது அவர்களின் குல தெய்வமான பொம்மக்காவுக்கு ஆகாது என்று மூதாதையர்கள் சொல்லி வைத்துவிட்டுப் போனதை இன்னும் கடைப்பிடித்து வருகிறார்கள். அதுபற்றி, பொம்ம நாயக்கரின் மனைவியான பேபியிடம் பேசினோம். ''எங்க சாதியில பொம்பளை புள்ளைங்க அஞ்சாவதுக்கு மேல யாரும் படிச்சதே கிடையாதுங்க. ஏன்னா, அதுக்கு மேல படிக்குறதுன்னா வெளியூர் போகணும். வெளியூர் போனா ஜாக்கெட் போட்டுட்டு வரச் சொல்லுவாங்க. படிக்கிறதுக்காக எங்க ஊரு பழக்கத்தை மாத்திக்கிறதுக்கு விருப்பம் இல்லைங்க. அதனால யாரும் படிக்கிறது இல்ல. ஜாக்கெட் போடாம இருக்குறது எங்களுக்கு கூச்சமா தெரியல. எங்க ஊரு ஆம்பளைங்க யாரும் எங்களை தப்பாவும் பார்க்குறது இல்ல. இன்னிக்கு சினிமாவுல நடிக்கிற எத்தனையோ பேரு கேவலமா துணி போட்டுக்கிட்டு இருக்குதுங்க. நாங்க அதுக்கு எவ்வளவோ பரவாயில்லையே..!'' என்று 'பஞ்ச்' கொடுக்கிறார்.
புதுப் பெண்ணான அன்னபூரணி, ''துணிங்குறது உடம்பை மறைக்கிறதுக்குதான். நாங்க எங்க மானத்தை காப்பாத்திக்கிற அளவுக்கு உடம்பை மறைச்சுதான் இருக்கோம். அதுவே எங்களுக்கு போதும். எங்க ஊருலயே இன்னும் கொஞ்சம் பெரிய பள்ளிக்கூடம் எல்லாம் வந்துட்டா எங்களை மாதிரி பொண்ணுங்க ஜாக்கெட் போடாமலேயே, பள்ளிக்கூடத்துக்கு போய் படிச்சிட்டு வந்துடுவோம்!'' என்று கோரிக்கை வைத்தார்.
தொட்டியனூர் கிராமம் தாரமங்கலம் தொகுதியில் வருகிறது. தொகுதியின் எம்.எல்.ஏ-வான கண்ணையனிடம் பேசினோம். ''தொட்டியனூர்காரங்க நடத்துற கல்யாணத்துக்கு நானும் போயிருக்கேன். அதைப் பார்க்கிறப்ப நாமல்லாம் பண்ற துக்கு கல்யாணமான்னு தோணும். அந்தள வுக்கு பிரமாண்டமா பண்ணுவாங்க. அந்த ஊரு பொம்பளைங்களை நானும் ஜாக்கெட் போடச்சொல்லி எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன். அவங்க கேட்க மாட்டேங்குறாங்க. சரி, அவங்க பழக்க வழக்கம், கலாசாரம் அப்படி... அதில் நாம எப்படி வலுக்கட்டாயமா தலையிட முடியும், சொல்லுங்க..? நம்ம தமிழ்நாட்டுல எத்தனையோ கலாசாரம் இருக்குது. அதுல இதுவும் ஒண்ணா இருந்துட்டு போகட்டுமே..! அவங்க கிராமத்துக்கு என்ன கேட்டாலும் உடனடியாக போய் செஞ்சு கொடுத்துட்டுதான் இருக்கேன். அந்தக் கிராம மக்களோட வேலை வாய்ப்புக்கு ஏதாவது செய்ய முடியுமான்னு யோசிக்கிறேன்...'' என்றார்.
வெளியூரிலிருந்து வேறு சமுதாயத்தைச் சேர்ந்த - ஜாக்கெட் போட்ட - பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதற்காக இளைஞர் ஒருவரை ஊரைவிட்டே ஒதுக்கி வைத்த சம்பவங்களும் இந்தக் கிராமத் தில் அரங்கேறியிருக்கிறதாம்!

No comments: