Apr 27, 2012

தி.மு.க.அமைச்சரவை ‘டிஸ்மிஸ்’ ஆகப் போகிறது கவிஞர்கண்ணதாசன்


தலைவர் காமராஜர் இறந்து இருபத்தி இரண்டு நாட்களுக்குப் பிறகு மலேஷியாவிலிருந்து திரும்பி, தலைவர் காமராஜர் சமாதிக்கு வந்து விட்டு இங்கே வந்தபோது, இங்கே நிலைமைகள் தலைகீழாக இருந்தன.

இந்திராவோடு சேரவேண்டும்என்று சிலரும், ‘சேரக் கூடாதுஎன்று சிலரும் காமராஜரின் பழைய காங்கிரஸில் வாதாடிக் கொண்டிருந்தார்கள். சேர வேண்டும்என்ற கூட்டத்திற்கு ஆதரவாக நான் பல இடங்களுக்கும் போவதென்று முடிவு கட்டினேன்.

சேரக் கூடாதுஎன்ற கூட்டத்திற்கு ஆதரவாக கருணாநிதி போலீஸ், ஆட்கள், லாரி இவ்வளவையும் சப்ளைசெய்து கொண்டிருந்தார்.

ஆகவே என்னுடைய எதிர்ப்பு சேரக் கூடாதுஎன்கின்ற காங்கிரஸ்காரர்களோடு அல்ல; சேரவிடாமல் தடுக்கின்ற கருணாநிதியோடு என்று ஆயிற்று.

நான் அவரைக் கடுமையாக எதிர்த்தேன். சில கூட்டங்களில் கூட, "Your, days are counted, Our
steps are measured - உனது நாட்கள் எண்ணப்படுகின்றன; எங்கள் நடவடிக்கைகள் அளந்து செய்யப்படுகின்றனஎன்று நான் பேசியிருக்கிறேன். அப்படிப் பேசி அவரைப் பயமுறுத்தியும் பார்த்திருக்கிறேன்.

பிறகு டெல்லியோடு நான் தொடர்பு கொண்டு, “திராவிட முன்னேற்றக் கழக அரசைடிஸ்மிஸ்செய்யாமல் காரியம் நடக்காதுஎன்று சொன்னபோது, ‘அதை எப்படிச் செய்வதுஎன்றுதான் அங்கிருப்பவர்கள் கேட்டார்கள்.

ஆனால் எவ்வளவு கெட்டிக்காரத்தனமாக அவர்கள் நடந்து கொண்டார்கள் என்பதை எண்ணும் பொழுது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

அந்தக் கெட்டிக்காரத்தனம்தான், இன்றைக்கு வரைக்கும் இந்திராகாந்தியைக் காப்பாற்றி வருகிறது.

டிஸ்மிஸ் செய்யவே முடியாதுஎன்று காங்கிரஸ் காரர்கள் எல்லாரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். சரியான நேரம் பார்த்து டிஸ்மிஸ்செய்தார்கள்.

இரு காங்கிரஸ் இணைப்பை எதிர்த்த பா. ராமச்சந்திரன் போன்ற காங்கிரஸ்காரர்களுக்கு கருணாநிதியின் ஆதரவு உச்சத்திற்குப் போய்விட்ட நேரம்.
எந்தக் கூட்டத்திற்குப் போனாலும் ஏராளமான திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கல் காங்கிரஸ் காரர்கள் வேஷத்தில் கலவரம் செய்து கொண்டிருந்த நேரம். என்ன செய்வது என்று புரியாமல் நம்முடைய நண்பர்களே திகைத்துக் கொண்டிருந்த நேரம்.

ஸ்வாகத்ஹோட்டலில் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் சிலரும், பழைய காங்கிரஸ்காரர்கள் சிலரும் சேர்ந்து, உள்ளே நுழைந்து காங்கிரஸ்காரர்களைத் தாக்குகின்ற அளவிற்கு அது முற்றிவிட்ட நிலை.

இந்த நிலையில் திடீரென்று ஒரு நாள் நான் வீட்டில் இரவில் உட்கார்ந்திருக்கும் போது, எனக்கு டில்லியிலிருந்து ஒரு டெலிபோன் வந்தது.

விஷயம் தெரியுமா?’ என்று கேட்டார்கள். என்ன?’ என்று நான் கேட்டேன். "D.M.K. Ministry dismiss ஆகப் போகிறதுஎன்றார்கள்.

எப்பொழுது?’ என்று கேட்டேன்.

நாளைக்கே இருக்கலாம்என்று அவர்கள் சொன்னார்கள்.

உறுதியாகச் சொல்லுங்கள்என்றேன்.

உறுதியாக நாளைக்கே; யாரிடமும் சொல்லி விடாதீர்கள்என்றார்கள்.

சொன்னவர் அப்போது மிகப் பெரிய பொறுப்பில் இருந்தவர். என் பேரைச் சொல்லிவிடாதீர்கள்என்றார்.

நான் அதிகாலையில் நவசக்திபத்திரிகை காரியாலயத்திற்கு எழுந்து சென்று அங்கே உட்கார்ந்து நாளையப் பொழுது நன்றாக விடியும்என்று தலைப்புப் போட்டு இன்று திராவிட முன்னேற்றக் கழகம் அமைச்சரவை டிஸ்மிஸ்ஆகப் போகிறது என்று சொல்லாமல், ‘இன்று அந்தப் பொழுது முடியப் போகிறதுஎன்பது போல அதை எழுதினேன்.

நாளையப் பொழுது நன்றாக விடியும்என்ற தலைப்பு அதற்குப் பொருத்தமாக அமைந்தது. அந்தத் தலைப்பை நான் அதில் போட்ட பிற்பாடு அந்தப் பத்திரிகையைப் பார்த்துதான் கருணாநிதியே சந்தேகப்பட்டார்.

அப்போது அவர் கோபாலபுரத்தில் ஒரு பள்ளிக் கூடத்தில் பேசிவிட்டு வீட்டுக்குத் திரும்பினார். வீட்டுக்குத் திரும்பியவர் அந்தப் பத்திரிகையைப் பார்த்துஎன்ன இந்தத் தலைப்புப் போட்டிருக்கிறானேஎன்று டெலிபோன் செய்தார், சுமார் ஒன்றரை மணிக்கு.

அப்போதும்கூட டெல்லியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகக்காரர்கள் - பெயரைச் சொல்வதானால் ராஜாராம், முரசொலி மாறன், மாரிசாமி போன்ற நண்பர்கள் -அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. நீங்கள் ஒன்றும் பயப்படத் தேவையில்லைஎன்று தான் அவருக்குச் சொன்னார்களாம்.

ஆனால் சரியாக 3 மணிக்கு டெலிபிரிண்டரில்செய்தி வந்தது. D.M.K. Ministry dismissed - ‘தி.மு.க. மந்திரி சபை கலைப்புஎன்று. இந்தச் செய்திடெலிபிரிண்டரில் அடிக்கப் பட்டவுடனேயே நண்பர் கருணாநிதி முதல் டெலிபோன் செய்தது என்னுடைய அண்ணன் ஏ.எல்.எஸ். அவர்களுக்கு. டெலிபோன் செய்து அவரை வரவழைத்தார்.

ஏ.எல்.எஸ்., கருணாநிதினுடைய வீட்டுக்குள் நுழைந்தவுடனேயே அடுத்த டெலிபோன் செய்வதற்கு அவர் டெலிபோனை எடுத்தார். ஆனால் டெலிபோன் கட்டாகி விட்டது.

மிக முன் ஜாக்கிரதையாகவே எல்லாக் காரியங்களையும் டெல்லி செய்து வைத்திருந்தது.

திராவிட முன்னேற்றக் கழக அமைச்சரவை டிஸ்மிஸ்ஆகப் போகிறது என்ற செய்தி எனக்கு எப்படித் தெரிந்தது என்று எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.

Apr 23, 2012

“நம்ப முடியாத மனிதர் கருப்பையா மூப்பனார்” கவிஞர் கண்ணதாசன்.


திராவிட முன்னேற்றக் கழக அமைச்சரவை நீக்கப் பட்டதை தொடர்ந்து காங்கிரஸ் இணைப்பு பிப்ரவரி மாதம் பூர்த்தி அடைந்தது.

பிப்ரவரி 15-ஆம் தேதியன்று கடற்கரையிலே பிரதம மந்திரி இந்திரா காந்தி, டி.கே.பருவா, பிரம்மானந்த ரெட்டி போன்றவர்கள் கலந்து கொண்டு திரு.கருப்பையா மூப்பனார் காங்கிரஸின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள்.

அப்படித் தேர்ந்து எடுக்கும்போது கீழே உட்கார்ந்திருந்த நான் சொன்னேன்: "Wrong Choice- தவறான தேர்வுஎன்று.

பக்கத்திலே உட்கார்ந்திருந்த ஏ.கே. சண்முக சுந்தரமும், பா.சிதம்பரமும் கேட்டார்கள்: எப்படிச் சொல்கிறீர்கள்என்று.

நம்ப முடியாத மனிதர் இந்தக் கருப்பையா மூப்பனார்என்றேன்.

"Anyhow he is undisputed - எப்படியானாலும் அவர் பிரச்னைக்கு அப்பாற்பட்ட ஒருவர்என்று அவர்கள் சொன்னார்கள்.

"Every tree and stone is undisputed - ஒட்டொரு மரமும் கல்லும் கூடத்தான் பிரச்னைக்குஅப்பாற்பட்டதாக அமைதியாக இருக்கிறது.

ஒரு மனிதன் செயலாற்றக்கூடிய சக்தி உடையவனாக இருந்தால், அவன் disputed ஆகத்தான் - பிரச்னைக்கு உரியவனாகத்தான் - இருக்க முடியுமே தவிர, undisputed ஆக,பிரச்னைக்கு அப்பாற்பட்டவனாக இருக்க முடியாது. காந்திக்கே விரோதி இருந்தான். கடவுளுக்கே இருக்கிறார்கள். கடவுளே disputed. Disputed என்று வரும்பொழுதுதான் ஒரு மனிதன் செயலாற்றிக் கொண்டிருக்கிறான் என்று புரிந்து கொள்ள முடியும். செயலாற்றாமல் தூங்கி வழிகின்ற ஒருவனைத்தான் undisputed என்று சொல்ல முடியும். இந்த மனிதர் செயலற்றவர். அதே நேரத்தில் இந்த மனிதர் நம்ப முடியாதவர்என்று நான் கூறினேன்.

எப்படிஎன்று பழையபடியும் என்னிடம் கேட்டார்கள்.

பொய் நிறையச் சொல்கிறார்என்று நான் சொன்னேன்.

விளக்கம் சொல்லவில்லை.

கருப்பையா மூப்பனாரைப் பற்றி எனக்கு எப்படி இந்த அபிப்பிராயம் விழுந்தது என்பதை நான் இதில் சொல்லி விடுவது முறையாகும் என்று கருதுகிறேன்.

இணைப்புக்கான பூர்வாங்க வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போது, ஸ்வாகத் ஹோட்டலிலே ஏராளமான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போது, ஸ்வாகத் ஹோட்டலிலே ஏராளமான காங்கிரஸ்காரர்கள் தங்கியிருந்தார்கள். அது, யார் தலைவர் என்பது தெரியாமல் இருந்த காலம்.

திருமதி மரகதம் சந்திரசேகர் அவர்கள் ஒரு நாள் வந்து, மேலே கருப்பையா மூப்பனாரைப் பார்த்துவிட்டுக் கீழே இறங்கிப் போய்க் கொண்டிருக்கிறார். அவர்கள் பார்த்ததையும், கீழே போய்க் கொண்டிருப்பதையும் நான் பார்த்துவிட்டு நான் மேலே போகிறேன்.

மேலே போய் மூப்பனாரைப் பார்த்து, ‘என்ன, மரகதம் உங்களைப் பார்த்தார்களா?’ என்று கேட்கிறேன்.

அவர் உடனே, “மரகதமா? அவர்கள் டெல்லியிலல்லவா இருக்கிறார்கள்! இங்கே வந்திருக்கிறார்களா?” என்று என்னிடம் கேட்டார்.

அப்பொழுதே நான் முடிவு கட்டினேன், “இந்த மனிதனைவிட ஒரு அண்டப்புளுகன் உலகத்திலேயே இருக்க முடியாதுஎன்று.

பொய் சொல்வது என்றால் அது உடனேயே பொய் என்று தெரிகிற மாதிரி சொல்லக் கூடாது என்பது கூடத் தெரியாத ஒரு மடத்தனமாக பொய்யை, அவர், அன்று சொன்னார்.

நான் தொடர்ந்து விளைவுகளைப் பார்த்தப்போது அந்த ஓராண்டுக் காலத்திற்குள்ளாகவே இந்த மனிதர் பொய்யர் மட்டுமல்ல, யோக்கியமானவரும் அல்ல, என்று முடிவு கட்ட வேண்டிய நிலைக்கு நான் வந்தேன்.

ஆனால் காங்கிரஸினுடைய வளர்ச்சி என்பது தமிழகத்தில் இல்லை என்பதை ஒப்புக் கொண்டாக வேண்டும். காரணம், நல்ல தலைமை அமையவில்லை என்பது மட்டுமல்ல, ஒழுங்கான வேலையும் நடக்க முடியாமல் போயிற்று.
நன்றி
கவிஞர் கண்ணதாசன் எழுதிய  நான் பார்த்த அரசியல் 

Apr 20, 2012

இந்திய நாடாளுமன்ற குழுவும் ஈழத் தமிழர்களின் அவல நிலையும்


போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் நேரிடையாகக் கலந்துரையாடவும், அவர்களது உள்ளக் குமுறலைக் கேட்டு அறியவும் வாய்ப்பு இல்லாமல் பயணத் திட்டம் அமைந்துள்ளது. 

விருந்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
இலங்கை அரசுக்குச் சாதகமான கருத்து இந்தியாவில் ஏற்படத் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் போன்று உள்ளது'' என்று இலங்கை செல்லும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் அதிமுக சார்பில் யாரும் இடம் பெறமாட்டார்கள் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஏப்ரல் 11-ஆம் தேதி அறிவித்ததன் காரணத்தை முதல்வர் ஜெயலலிதா கூறி இருந்தார்.

அதிமுக இத்தகைய கருத்து மாறுபாடு தெரிவித்தவுடனேயே இந்தப் பயணத் திட்டத்தை மாற்றி அமைத்து, பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் அதிக நேரம் செலவிடுவதற்கும், அதிபர் ராஜபக்‌ஷேவை நேருக்கு நேராக, பத்திரிகையாளர்கள் பார்வையாளர்கள் முன்னிலையில் கேள்வி கேட்பதற்கும் இந்திய அரசு வகை செய்திருக்க வேண்டும். 

அதிமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூடக் கோரவில்லை. அதிமுக வராவிட்டால் நல்லது என்கின்ற ரீதியில்தான் மத்திய அரசு செயல்பட்டது.

திமுகவும், அதிமுகவும்தான்  இலங்கைத் தமிழர் பிரச்னையில் முக்கிய முடிவுகளை மேற்கொள்ள வேண்டிய கட்சிகள். 

இவர்கள்தான் உண்மை நிலையை நேரில் கண்டுவந்து ஈழத் தமிழர்களின் சார்பில் மத்திய அரசின் முன் குரல் கொடுக்க வேண்டியவர்கள்.

மத்திய அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்திருக்குமேயானால், இந்தப் பயணக் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு முக்கிய கட்சிகளான அதிமுகவும், திமுகவும் இடம்பெறுவதை உறுதி செய்திருக்க வேண்டும். அதை அவர்களும் செய்யவில்லை.

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை இலங்கை அரசு வரவேற்றதன் காரணமே, ஐ.நா. சபையின் குழு எதுவும் இலங்கையைப் பார்வையிட வந்துவிடாமல் தடுப்பதற்காகத்தான். 

மனித உரிமைக் கழகத்தில் எங்களுக்கு எதிராக வாக்களித்த இந்தியாவே தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அனுப்பி எங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிவிட்டது என்று சொல்லிக் கொள்வதற்காகத்தான்.

அதிபர் ராஜபக்‌ஷே விரித்த ராஜதந்திர வலையில் மறுபடியும் விழுந்திருக்கிறது இந்திய அரசு என்பதுதான் உண்மை. 

திமுகவும், அதிமுகவும் இல்லாத குழு, பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் அவலத்தை பற்றிக் கேட்கப்போவதில்லை.

அப்படியானால் அவர்தம் துயரங்களை எப்படித்தான் அறிந்துகொள்வது?

பாரதி காட்டிய வழிதான்.

அவர் விம்மி விம்மி விம்மி அழும் குரல் கேட்டிருப்பாய் காற்றே.
துன்பக் கேணியிலே எங்கள் பெண்கள் அழுதசொல் மீட்டும் உரைப்பாயோ.

Apr 14, 2012

பல்பட்ட இடத்தில் பால்மட்டும் சுரக்கும் அன்னை இதயம் M.G.R.


1984 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 15-ம் நாள், நான் அரசவைக் கவிஞராக பதவி ஏற்கும் விழா திருச்சியில் நிகழ்ந்தது.

எத்தனை எத்தனையோ கசப்புக்களையும் வெறுப்புகளையும் அவருக்கு நான் ஏற்படுத்தியிருந்தாலும்... அதையெல்லாம் அந்த வள்ளல் மனம் எண்ணிப்பார்க்கவில்லை. எனக்கு அரசவைக் கவிஞர் பதவி கொடுத்துப் பாராட்டு விழாவை... என் உயிரோடு கலந்த அண்ணாவின் பிறந்தநாள் விழாவோடு சேர்த்து நடத்தினார்.

நான் அந்தப் பதவியை ஏற்றுக்கொண்டபோது என் மனம் என்னை உறுத்தியது; என்னை மிகவும் வருத்தியது! இந்த மனிதனுக்கு நாம் எத்தனை தொல்லைகளை செய்திருக்கிறோம்! ஆனால் இந்த மனிதன் எனக்குப் பெரும் பதவியை ல்லவா கொடுக்கிறார்! ஒரு கவிஞனுக்கு அரசவைக் கவிஞர் பதவி என்பதைக் காட்டிலும் அதிகபட்சப் பெருமை என்ன இருக்கிறது!

இவரை நாம் வேதனைப்படுத்தியதற்காக நம்மை வெட்கப்படச் செய்கிறாரா என்று கூட நான் நினைத்துக் கொண்டேன். அதனால் நான் அந்தப் பதவி ஏற்பு விழாவில், என் ஏற்புரையில் ஒரு நீண்ட கவிதை படித்தேன். அதில் ஒரு சில வரிகளை மட்டும் நான் இங்கு குறிப்பிடுகிறேன்!

கரைதனை மீறிய காட்டாற்று வெள்ளமாய்
ஒருசில நாட்கள் ஓடியும் இருக்கிறேன்...
கட்டி அணைத்த இவனது கையைச்
சுட்ட தீயாய் நானிருந்திருக்கிறேன்...
காயம் செய்ததைக் கருதாமல் எனக்கு
நியாயம் செய்யவே நினைக்கிறான்...
பல்பட்ட இடத்தில் பால்மட்டும் சுரக்கும்
அன்னை இதயம் அவனது இதயம்...

இந்தக் கவிதை வரிகளை நான் படித்தபோது, இலட்சக் கணக்கில் கூடியிருந்த கூட்டம் கைதட்டிஆரவாரம் செய்து இன்னொரு முறை படியுங்கள் என்று ஆணையிட்டது. நான் மீண்டும் படித்தேன்.

கண்ணிமைக்காது அவர் என்னையே கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது நெஞ்சம் கரைந்துவிட்டது என்பதை நான் கண்டுகொண்டேன். அவரது நெஞ்சம் கரைந்துபோனது; அவர் என் மீது வைத்த நேசம் நிறைந்துபோனது. கசப்பும் வெறுப்பும் காணாமல் போயின.

அந்த மன்னவர் என் கழுத்தில் டாலரோடு கூடிய தங்கச் சங்கிலி அணிவித்தார், தகுதியுரை படித்தளித்தார்.

தலைவருக்கு நான் பாட்டாடை போர்த்தியதற்குப் பதிலாக எனக்கு அவர் பட்டாடை போர்த்தினார், பாராட்டிப் பேசினார். அன்று நடந்த அந்த விழாக் கோலம், இன்றும் என் கண்ணையும் நெஞ்சையும் விட்டு விழாக் கோலமாக நிற்கிறது!

ஆனால் விழா நடத்தியவரோ கடற்கரை மண்ணில் விழுந்துபோனார்.

ஆற்றுவாரும் இல்லாமல், தேற்றுவாரும் இல்லாமல் இன்று நான் அழுகின்றேன். அந்த அண்ணன் இருக்கும் இடம் நோக்கி கைகூப்பித் தொழுகிறேன்.
தலைவர்- தம்பி -நான் தொடரில் புலமைப்பித்தன்

தொடர்புடைய இடுகைகள்