அரசியல்

ராமதாஸ்....ராஜ தந்திரம் //நரித் தந்திரம்

சில இயக்குநர்களின் படம் பார்த்தால் க்ளைமாக்ஸ் இப்படித்தான் இருக்கும் என்று முதல் ரீலில் முடிவெடுத்துவிடலாம். அதை அரசியலில் அமல்படுத்துபவர் டாக்டர் ராமதாஸ். ஒரு தேர்தல் மேடையில் கருணாநிதியுடன் கைகோத்தால், அடுத்த தேர்தலில் ஜெ-வுக்கு ஜே போடுவார். இந்த அணி மாற்றம் உடனே நடக்கும் என்பது அனைவரும் அறிவார்கள். 'பா.ம.க. இருப்பதுதான் வெற்றிக் கூட்டணி' என்பது ராமதாஸ் சொல்வது. ஆனால், வெற்றி கிடைக்கப்போகும் இடத்தில் அவர் இருப்பார் என்பதே நிஜத்தில் நடப்பது. இப்படி ஒரு காட்சி மாற்றம் இந்த வாரத்திலும் நடந்திருக்கிறது. இதை ராஜ தந்திரம் என்று ஆதாயம் பெறுபவர்கள் வேண்டு மானால் சொல்லலாம். ஆனால் நரித் தந்திரம் என்றே அப்பாவிகள் சொல்வார்கள்.
பென்னாகரம் தேர்தல் முடிந்து முழுமையாக மூன்று மாதங்கள் முடியவில்லை. 'தி.மு.க-தான் எங்களது முதல் எதிரி' என்று ராமதாஸ் அறிவித்தார். அந்தக் கட்சியின் மந்திரிகளை எழுத முடியாத அளவுக்கு ஏசினார். 'படி படி என்பவன் நான். ஆனால், உங்களைக் குடி குடி என்று கெடுத்தது கருணாநிதிதான்' என்று பாய்ந்தார். 'தி.மு.க-வின் பணம் முக்கியமா? அல்லது இனம் முக்கியமா?' என்று முடிவெடுக்கச் சொன்னார். மக்கள் என்ன முடிவெடுத்தார் கள் என்பது இருக்கட்டும். ராமதாஸே தி.மு.க-தான் முக்கியம் என்று திரும்பினார். மேலவை கொண்டுவரும் தீர்மானத்தை பா.ம.க. உறுப்பினர்கள் அத்தனை பேரும்
ஆதரித்து வாக்களித்தார் கள். அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ-க் கள் முதல்வரே நனையும் அளவுக்குப் புகழ்ந்தார்கள். மாமல்லபுரம் இளைஞர் விழாவில் கருணாநிதி மீதான காரம் அவ்வளவாக இல்லை. கர்ஜிக்கும் ராமதாஸ்கூட, 'முதல்வரைச் சந்திப்பேன்' என்று மூன்று முறை திறந்தவெளி அப்பாயின்மென்ட் கேட்டார். 'சரணடையும் ஆளைத் தழுவத் தேடும்போது, அவன் தரையில் உருண்டோடி வந்ததைப்போல' கோபாலபுரத்தை நோக்கி நகர்ந்து வந்தது தைலாபுரம்.
இதற்காகத்தானே காத்திருந்தார் கருணாநிதி. துண்டுச் சீட்டு கொடுத்தாலே, அதை 'அளப்பரிய' ஆதாரமாகக் காட்டும் அவர், ராமதாஸ் அனுப்பிய கடிதங்களையா விட்டுவைப்பார். 'தி.மு.க. கூட்டணியில் பா.ம.க-வை மீண்டும் சேர்த்துக்கொள்கிறோம்' என்று உயர்மட்டச் செயல்திட்டக் குழுத் தீர்மானத்தைவிட, அதில் இணைக்கப்பட்ட ராமதாஸின் கடித வரிகள்தான் அதிகமாக இருந்தன. 'இடையில் நடைபெற்ற சில விரும்பத்தகாத சம்பவங்களை நாங்கள் மறந்துவிட்டோம். நீங்களும் மறந்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம்' என்று ஆரம்பிக்கும் ராமதாஸின் கடிதம், 'இப்போது நடைபெற இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் பா.ம.க-வுக்கு வாய்ப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்' என்ற வேண்டுகோளுடன் முடிகிறது. கடந்த காலச் சம்பவங்களை கருணாநிதி மறக்கவில்லை, மறக்க விரும்பவும் இல்லை என்பதை அவர் எடுத்துள்ள முடிவு காட்டுகிறது. 'கூட்டணிக்குள் பா.ம.க. இணைய லாம். ஆனால், 2011 சட்டமன்றத் தேர்தல், மேலவைத் தேர்தல் ஆகியவற்றுக்குப் பிறகு நடக்கப்போகும் மாநிலங்களவைத் தேர்தலில் ஓர் இடத்தை வழங்கத் தயார்' என்று கருணாநிதி அறிவித்தார். இதைக் கொஞ்ச மும் ராமதாஸ் எதிர்பார்க்கவில்லை. 'நம்பவெச்சுக் கழுத்தை அறுத்துவிட்டார்' என்று பா.ம.க-வின் மேல்மட்ட அளவில் கோபம்தான் வெடித்தது.
ராமதாஸக்குக் கோபம் வந்ததில் நியாயம் இருக்கிறது. அவர் இரண்டு கடிதங்களைத் தனக்கு அனுப்பியதாக கருணாநிதி சொல்கிறார். ஒரு கடிதம்தான் முதலில் அனுப்பினார் ராமதாஸ். அதில், எல்லாவற்றையும்சொல்லி விட்டு, 'தி.மு.க-வுடன் இணக்கமாகச் செயல்படத் தயாராக இருக்கிறோம்' என்று ராமதாஸ் அதில் எழுதிஇருந்தார். இதைப் பார்த்த கருணாநிதி, 'இணக்கமான என்ற வார்த்தை தெளிவாக இல்லை, கூட்டணியில்இணை கிறோம்' என்பது மாதிரி இருந்தால் நல்லது என்று சொன்னதாகவும் அதன் அடிப்படையில் இரண்டாவது கடிதத்தை ராமதாஸ் எழுதியதாகவும் தி.மு.க. வட்டாரம் சொல்கிறது. அதில் கூட்டணியில் சேர்ந்து செயலாற்று வோம் என்று உள்ளதாம். 'இப்படிக் கடிதத்தை மாற்றிக் கேட்டதே தி.மு.க-வுக்கு எங்கள் மீதான நல்லெண்ணத்தைக் காட்டியது. நாங்கள் கேட்ட எம்.பி. பதவியைத் தருவதற்கு ஒப்புக்கொண்டதால்தான் அவர் வார்த்தைகளைமாற்றித் தரச் சொன்னார்' என்று பா.ம.க. தரப்பு நம்பியது.
அன்புமணிக்கு எம்.பி. பதவி தருவதில் கருணாநிதிக்கு ஆட்சேபனை இல்லை. அவர்தான் முந்தைய தேர்தலில் தி.மு.க-வுடன் இருக்க வேண்டும் என்று சொன்னவர் என்பது கருணாநிதிக்குத் தெரியாததல்ல. ஆனால், ஸ்டாலின், அழகிரி, வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, எ.வ.வேலு, ஆ.ராசா என நித்தமும் கருணாநிதியை வலம் வருபவர்கள் பா.ம.க-வை எதிர்த்தார்கள். ஒவ்வொருவர் எதிர்ப்புக்கும் ஒவ்வொரு காரணம். ஆனால், அனைவரும் சேர்ந்து, 'உங்களிடம் எம்.பி. வாங்கிவிட்டு சட்டசபைத் தேர்தலில் அந்த அம்மாவிடம் சேர மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?' என்று கேட்ட கேள்விக்கு கருணாநிதியால் பதிலளிக்க முடியவில்லை. எனவேதான், 'சட்டசபைத் தேர்தல் முடிந்த பிறகு பார்க்கலாம்' என்று கருணாநிதி கை விரித்தார்.
'இது ராமதாஸின் லாயல்டியைச் சோதனை செய்வதற்கான முடிவா?' என்று நிருபர்கள் கேட்டபோது, 'உங்கள் கற்பனைக்கு நான் ஆள் அல்ல' என்று மறுத்தாரே தவிர, 'ராமதாஸ் மீது நான் சந்தேகப்படவில்லை' என்று அவரால் சொல்ல முடியவில்லை. 'கருணாநிதியை எங்கள் எம்.எல்.ஏ-க்கள் சந்தித்துப் பேசுவார்கள்' என்று ராமதாஸம் இறங்கியே போக வேண்டி இருந்தது...
ராமதாஸை எதிர்பார்த்துக் காத்திருந்த காலம் போய், நிபந்தனை விதிக்கும் நிலைக்கு மாறக் காரணம் இந்த 'லாயல்ட்டி'தான்! அரசியலில் மிக மோசமானவர்கள்கூட உயரத்துக்குப் போயிருக்கிறார்கள், ஆனால், நம்பத்தகாதவர்கள் எவ்வளவு உயரம் போனாலும் வீழ்ந்திருக்கிறார்கள்.
கொடுத்த வாக்கைக் காப்பாற்றினால்தான் வாக்கு கிடைக்கும். இது ராமதாஸக்கு மட்டும்அல்ல, அத்தனை அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்!


நன்றி விகடன்
*********************************************************************************
************************************************************************************
தீவிரவாதத்தை ஒடுக்க எம்.ஜி.ஆர். ஃபார்முலா!..........சுதாங்கன்



இந்திய அரசுக்கு எதிராகக் கிளம்பியிருக்கும் ஆயுதப் போராளிகளை அடக்க முடியவில்லை. மாவோயிஸ்ட்கள் மாதிரி யான அமைப்புகளைச் சேர்ந்த வர்களில் ஐந்து சதவிகிதப் போராளிகளைக்கூட மத்திய அரசால் வளைத்துப் பிடிக்க முடிய வில்லை!'' - இப்படி ஓர் அதிர்ச்சித் தகவலை அளித்திருப்பது
மாவோயிஸ்ட்களை அடக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் மத்திய உள்துறையின் செயலாளர் கோபால் கே.பிள்ளை!
கடந்த மார்ச் மாதம் ஐந்தாம் தேதி 'இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிஃபன்ஸ் ஸ்டடீஸ்
அண்ட் அனாலிஸிஸ்' அமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில்தான் ஜி.கே.பிள்ளை பேசினார். இனி அவர் பேச்சு...

''நக்ஸல் இயக்கத்தின் தொடக்கத்தை நாம் 1960-ல் இருந்து பார்க்க வேண்டும். இருப்பினும் அவர்கள் நமக்கு பெரும் சவாலாக வளரத் தொடங்கியது 2004-ம் வருடம்தான். இந்த ஆண்டில்தான் மக்கள் யுத்தக் குழுவும், மாவோயிஸ்ட் கம்யூனல் மையமும் இந்தியாவுக்கு எதிராக உள்நாட்டுப் போர் தொடுக்க முடிவெடுத்தன. நக்ஸல்களுக்கு நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. அவர்கள் இந்திய நாடாளுமன்றத்தை 'பன்றிகளின் கொட்டடி'யாக வர்ணிக்கிறார்கள். அரசும் அதன் ஆயுதப் படைகளும்தான் அவர்களின் எதிரிகள். 'அரசு என்பது பணக்காரர்களின் ஏஜென்ட். சமூகத்தின் கீழ் மட்ட மக்களைப் பற்றி அதற்கு அக்கறை இல்லை' என இந்த இயக்கம் உறுதியாக நம்புகிறது.
வளர்ச்சியடையாத, நிர்வாகத் துறை செயல்படாத பகுதிகளில் முதலில் இவர்கள் ஊடுருவி, தங்கள் தளத்தை உறுதியாக அமைத்துக்கொள்கிறார்கள். அங்கே இருந்து தங்கள் ஆளுமையைச் சுற்றிலும் உள்ள பகுதிகளுக்கு விரிவுபடுத்து கிறார்கள். புறக்கணிக்கப்பட்ட மக்களைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். இந்திய அரசு அந்த மக்களைப் பலவகையிலும் ஏமாற்றுவதாகப் பிரசாரம் செய்து, உதாரணங் களோடு பாடமே நடத்துகிறார்கள்.


                           மாவோயிஸ்ட்களுக்கு முதுகெலும்பே ஆயுதப் போராளிகள்தான். அவர்களிடம் மிக அதி நவீன ஆயுதங்களும் இருக்கின்றன. ஆனாலும், தேவை ஏற்படும்போது மட்டுமே பயன்படுத்தக்கூடிய ரிசர்வ் படையாகத்தான் அவர்கள் பாவிக்கிறார்கள். இந்திய அரசால் இந்த ஆயுதப் படையின் ஐந்து சதவிகிதத்தைக்கூட ஒடுக்கவோ, பிடிக்கவோ முடியவில்லை. இந்தப் படையினர் மிகவும் அதிகமாக நவீனத்துவமும், பயிற்சியும் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.


ஒரு தாக்குதல் முடிந்ததும், ஒரு ராணுவப் படையைப்போல தங்கள் செயல்பாடுகளின் குறைகளைத் தீவிரமாக ஆலோசிக்கிறார்கள். இந்தச் சுயவிமர்சனம் அவர்களின் எதிர்காலத் தாக்குதல்களை வலுப்படுத்திக்கொள்ளப் பயன்படுகிறது. அவர்களை ஒடுக்க இதுவரை மத்திய அரசாங்கம் நடத்திய தாக்குதல்களுக்கு எந்தப் பயனும் இல்லை. காரணம், நேரடியாகக் களத்தில் இருந்து அவர் களுடன் சண்டை போட வேண்டிய போலீஸ் படைக்கு உரிய சுதந்திரம் இல்லை. குறிப்பாக, ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் மாவோயிஸ்ட் மாதிரியான இயக்கங் களுடன் உள்ளூர் போலீஸார்தான் சண்டையிட வேண்டும். ஆனால், எங்கிருந்தோ அங்கு செல்லும் மத்தியப் படையினர் தாங்கள் போரிடப்போகும் குழுக்களின் பலத்தைத் தெரிந்துகொள்ளாமலே மோதத் துவங்குகிறார்கள்.


                  அவர் குறிப்பிட்டிருக்கும் ஒரு விஷயத்தை நாம் உன்னிப்பாகக் கவனித்தாக வேண்டும். அதாவது, மாநிலங்களில் இருக்கும் தீவிர வாதக் குழுக்களை அந்தந்த மாநில போலீ ஸாரே களம் இறங்கிக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற வாதம் மிகச் சரியானதே! இதற்கு மிகச் சிறப்பான உதாரணம் - நம் தமிழகத்தில் பல ஆண்டுகள் முன்பு அரங்கேறிய நிகழ்வுகள்!'' என்று கூறும் ஓய்வு பெற்ற உயர் போலீஸ் அதிகாரி ஒருவர்... விரிவாகவே சற்று பின்னோக்கிச் சென்றார்!


                   ''1980-களில் தமிழகத்தில் குறிப்பாக, தர்மபுரியில் நக்ஸல் இயக்கம் தலைதூக்க ஆரம்பித்தது. ''நக்ஸல்களுக்கு எதிரான மக்கள் ஆதரவைப் பெறுகிற வேலையைச் சந்தடியில்லாமல் செய்ய வேண்டும். அப்போது தான், அவர்களுடைய நடமாட்டங்களை மக்களிடம் இருந்தே கேட்டறிய முடியும் என்று அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரிடம் போலீஸ் அதிகாரிகள் கூறினார்கள். அதற்கான எல்லா முயற்சிகளையும் செய்யும்படி முதல் வரும் உத்தரவிட்டார். பணியில் இருந்த காவலர்கள் சிலரை நக்ஸல் இயக்கத்தினர் கொன்றபோது எம்.ஜி.ஆர். அரசுக்கு எதிர்க் கட்சிகளால் தலைவலி வந்தது. 'மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை. மத்திய அரசு தலையிட்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும். தேவைப்பட்டால், ஆட்சியையே கலைக்கலாம்' என்று களம் இறங்க முற்பட் டனர் சிலர். காவல் துறையின் சரியான வழி காட்டுதலோடு எம்.ஜி.ஆர். இதை எளிதாகச் சமாளித்தார்.


                         இறந்துபோன இன்ஸ்பெக்டர் ஒருவரின் இறுதி ஊர்வலத்துக்கு எம்.ஜி.ஆரே தலைமை தாங்கினார். அவரது சடலத்தை நக்ஸல்கள் ஆதிக்கம் இருந்த திருப்பத்தூர் நகர வீதிகளில் எல்லா ஜனங்களும் காணும்படி உருக்கமான ஊர்வலமாகக் கொண்டு சென்றது போலீஸ். எம்.ஜி.ஆரும் அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டு தீவிரவாதத்துக்கு எதிராக மக்களின் உணர்வை உசுப்பினார்.

             
                  அவரது இந்த தந்திரத்துக்குப் பதிலடி கொடுக்க எதிர்க் கட்சிகள் அடுத்த வழி தேடின. இறந்துபோன இன்ஸ்பெக்டரின் குடும்பத்துக்கு குறிப்பிட்ட ஒரு தொகையை நிவாரணமாகக் கொடுப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்திருந்தது. அதுகுறித்து எதிர்க் கட்சிகளுக்குத் தகவல் போனது. அந்தத் தொகை அறிவிக்கப்பட்டால், 'முதல்வரே தலைமை தாங்கி இறுதி ஊர்வலம் நடத்திய அந்த அதிகாரியின் குடும்பத்துக்கு இந்தச் சிறு தொகைதான் கைம்மாறா?' என்று பிரசாரம் செய்து, காவல் துறையினர் மத்தியில் கோபத்தைக் கிளறிவிடத் திட்டம் தீட்டினர். இது தொடர்பாக, எதிர்க் கட்சித் தலைவர்கள் சிலர் அந்தச் சமயத்தில் தொலைபேசியில் பேசிக்கொண்டார்கள். இதை மோப்பம் பிடித்த உளவுத் துறை, அப்படியே அதை எம்.ஜி.ஆரிடம் சொன்னது.

          அடுத்த நாள், யாரும் எதிர்பார்க்காத ஒரு மிகப் பெரிய தொகையை எம்.ஜி.ஆர், இறந்துபோன அந்த போலீஸ் அதிகாரியின் குடும்பத்துக்கு வழங்கி எதிர்க் கட்சிகளின் வாயை அடைத்தார். காவல் துறையின் நம்பிக்கையையும் அதிகம் பெற்றார்.


                எம்.ஜி.ஆரின் செயல்பாடுகளையும் தாண்டி தர்மபுரி நக்ஸல் விவகாரம் டெல்லி வரை பற்றி எரியத்தான் செய்தது. அப்போது திருப்பத்தூரில் சோதனையில் ஈடுபட்டு இருந்த போலீஸார் ஒரு டைரியைக் கைப்பற்றினர். அதில் ஒரு அந்நிய நாட்டுத் தீவிரவாத இயக்கத்தின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் இருந்ததாக, பத்திரிகையாளர்களுக்குச் செய்தி அளித்தார் அப்போது தமிழக டி.ஜி.பி-யாக இருந்த மோகன்தாஸ் . தமிழக நக்ஸல்களுக்கு அந்நிய நாட்டு இயக்கங்களுடன் தொடர்புள்ளது என்றும் கூறினார்.
உடனே, மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் சென்னைக்கு வந்தனர். 'அந்நியத் தொடர்பு'க்கான ஆதாரத்தைக் கேட்டார்கள். 'இதோ அந்த அந்நிய இயக்கத்தின் லெட்டர் பேடில் இருந்து ஒரு கடிதம்' என்று அவர்கள் முன்தூக்கிப்போட்டார் மோகன்தாஸ்.
அப்படி ஒரு லெட்டர் பேடைத் தயாரித்ததே நம் காவல் துறையின் மூளைதான் என்று ஒரு பேச்சு உண்டு. அந்நிய நாட்டு டைப்ரைட்டரில் அந்த லெட்டர் பேடு கடிதம் அடிக்கப்பட்டு இருந்தால், மத்திய உளவுப் பிரிவு கூடுதலாக நம்பும் என்று கணக்குப் போட்டு சென்னையில் இருந்த ஒரு வெளிநாட்டுத் தூதரகத்தின் தட்டச்சு எந்திரத்தில் அதை நம் காவல் அதிகாரிகள் ஆள்வைத்துத் தயாரித் தார்கள் என்றும்கூட சொல்லப்படுவது உண்டு. விளைவு, அப்போதைக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற கோஷத்தை மத்திய அரசு கண்டு கொள்ளாமல்விட்டது.


                        1992-ல் தர்மபுரியில் மீண்டும் தீவிரவாத இயக்கம் எட்டிப் பார்த்தது. அதை கவனிக்க வேண்டிய பொறுப்பு அப்போது மூத்த அதிகாரியான அலெக்ஸாண்டர் மீது விழுந்தது. அந்தப் பகுதியில் பல இளைஞர்கள் நக்ஸல் கொள்கை முழக்கங்களால் ஈர்க்கப்பட்டுக்கொண்டு இருந்தார்கள். காரணம், அவர்களுக்கு வேலை இல்லை. மாலை வேளைகளில் ஆட்டோக்கள் மூலமாக பாடப்படும் புரட்சிப் பாடல்களால் இவர்கள் ஈர்க்கப்பட்டார்கள்.


                                                        முதலில், அந்த ஆட்டோக்களை முடக்கியது காவல் துறை. செய்யவோ, சிந்திக்கவோ எதுவும் இல்லாத அந்த இளைஞர்களை ஆக்கபூர்வமாக உற்சாகப்படுத்த, உடனடியாக 10 வாலிபால் விளையாட்டுத் தளங்கள் உருவாக்கப்பட்டன. ஒவ்வோர் அணிக்கும் அந்தப் பகுதி சப்-இன்ஸ்பெக்டரே பொறுப்பாக இருப்பார். தினந்தோறும் விளையாட்டுக்கு விளையாட்டு... கண்காணிப்புக்கு கண்காணிப்பு! இப்போதைய மகளிர் சுய உதவிக் குழுக்கள்போன்று, அப்போது தர்மபுரியில் ஆண்களுக்கு சில உதவிகளையும் செய்தது அன்றைய அரசு. இதெல்லாமே, அந்தப் பகுதியில் நக்ஸல்கள் முழுமூச்சாகத் தலைதூக்கத் தடையாக அமைந்தன.


                                                                    உள்ளூர்க் காவல் துறைதான் அந்தந்த மாநிலப் பிரச்னைகளை சமாளிக்கத் தகுதியானது என்பதற்கு, சந்தனக் கடத்தல் வீரப்பன் விவகாரமும் ஓர் உதாரணம். வீரப்பனைத் தேட மத்தியப் படை வந்து எதுவும் நடக்காமல் திரும்பிப் போனது. அதே வீரப்பனைப் பிடிக்கும் சிறப்புக் காவல் படைக்கு தற்போதைய டி.ஜி.பி-யான ஆர்.நட்ராஜ் தலைவரானார். அவர் போனபோது முதலில் தன் படைக்குக் கொடுத்த உத்தரவே, 'வீரப்பனை முதலில் மறந்துவிடுங்கள். நாம் இப்போது இங்கு இருப்பது இந்தப் பகுதி மக்களுக்கு நன்மை செய்ய மட்டுமே' என்றார். அந்தக் காலகட்டத்தில் அந்தப் பகுதிகளில் பல பள்ளிகள், சாலைகள், மொபைல் ரேஷன் கடைகள், மருத்துவ முகாம்கள் என்று அமர்க்களப்பட்டது. மக்களின் நம்பிக்கைக்கு உரியவர்களானது நம் அதிரடிப் படை. அந்த அஸ்திவாரம்தான் பிறகு வீரப்பனைப்பற்றி ஒரு வழியாகத் துப்பு வாங்கி, அடியோடு ஒடுக்க உதவியது.


                                                           தீவிரவாத எதிர்ப்பைப் பொறுத்தவரை உள்ளூர் மக்களின் மனப்பூர்வமான உதவி இல்லாமல் எதையும் செய்ய முடியாது. மாநில அரசுகளின் பொறுப்பில் இந்த விவகாரத்தைக் கொடுத்துவிட்டு, வேறு 'அரசியல்' எதுவும் செய்யாமல்... மாநில அரசுகளுக்கு வேண்டிய உதவிகளை மத்திய அரசு செய்தாலே, நமக்கு எதிரான ஆயுதச் சவால்களை முறியடிக்கலாம்!'' என்று சொன்ன அந்த முன்னாள் உயர் போலீஸ் அதிகாரி,




''அந்த வகையில் மத்திய உள்துறைச் செயலாளர் பேசியதாகச் சொல்லப்படும் பாயின்ட்கள் மிகமிக அர்த்தமுள்ளவை!''