Jul 1, 2010

பாலம் கட்டுவதும் பூங்கா அமைப்பதும் தமிழ் தொண்டா

                                                 

                                  பேசும் மொழிக்காக இத்தனை லட்சம் பேர் கூடுவார்கள் என்ற ஒன்றே கோவை மாநாட்டுக்குக் கிடைத்த வரலாற்றுப் பெருமை. ஐந்து நாட்களும் சேர்த்து 10 லட்சம் பேர் வந்து போயிருக்கலாம் என்கிறது காவல் துறையின் கணக்கு. முதல் நாள் மட்டும் 90 ஆயிரம் சாப்பாட்டுப் பொட்டலங்கள் விற்பனையாகின. மறுநாளும் அது தொடர்ந்தது. மாநாட்டுப் பந்தல் எப்போதுமே நிறைந்திருந்தது. கண்காட்சியைப் பார்க்க இரண்டு கி.மீ. தூரத்துக்கு ஆட்கள் நின்றார்கள். தமிழுக்கு ஈர்க்கும் சக்தி இன்னமும் இருக்கிறது!

முழு உரிமையும் குடும்பத்துக்கே!
                                   
தி.மு.க. மாநாட்டு மேடைகளில், அவர்களது விழாக்களில் முதல்வர் கருணாநிதியின் குடும்பம் முன்வரிசையை மொத்தமாக ஆக்கிரமித்துக்கொள்ளும். தமிழுக்காக ஒரு மாநாடு நடத்தப்படும்போதும் அந்த நிலைதான் தொடர வேண்டுமா? ஊர்வலத்தைப் பார்ப்பதற்கு வெளிநாட்டுத் தமிழ் அறிஞர்கள், உள்ளூர்ப் புலவர்கள் எல்லாம் ஒழுங்கான இடம் இல்லாமல் திணறித் தவிக்க, கருணாநிதி குடும்பத்தின் நான்கு தலைமுறை மக்களும் ஒரு முழு மேடையைக் கபளீகரம் செய்து உட்கார்கிறார்கள். மாநாட்டுப் பொது மேடையின் முன் வரிசையில் மொத்த நாற்காலிகளும் அவர்களுக்குத்தான். அவர்கள் திடீரென்று அரங்குக்குள் நுழையும்போது 15 வரிசை ஆட்கள் எழுந்து நிற்கிறார்கள். அமெரிக்கப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் பேசிக்கொண்டு இருக்கும்போது, செல்வி, துர்கா ஸ்டாலின், காந்தி அழகிரி வருகிறார்கள். முன் வரிசை ஆட்கள் எழுந்து நிற்கிறார்கள். ஹார்ட்டுக்கு இதன் அர்த்தம் புரியவில்லை.
தொடக்க விழாவில் ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் தரப்பட்டதால், ஊர்வலம் பார்க்கும் மேடையை அழகிரியும் தயாநிதி மாறனும் பிடித்தார்கள். ஆய்வரங்கத் தொடக்க விழா மேடையில் கனிமொழி வலம் வந்தார். அழகிரி மகள் கயல்விழி, கவியரங்கில் இருந்தார். செல்வி மகள் எழிலரசி வீணை வாசித்தார். கண்காட்சியை அழகிரி திறக்கிறார். இணையதளக் கண்காட்சியைத் திறப்பது தயாநிதி மாறன். இறுதி நாள் மேடையில் ஸ்டாலினுக்கு நாற்காலி இருப்பதை உணர்ந்த அழகிரியும், தானே மேடை ஏறி ஓர் இடத்தைப் பிடித்தார். இந்த ஒன்றை மட்டும் தவிர்த்திருந்தால், தன் மீதான 50 சதவிகித விமர்சனங்களை கருணாநிதி தடுத்துஇருக்கலாம்!

தூங்கும் அரங்குகள்!
                                   
மொழியியல் சார்ந்த உலக மேதைகளும் உள்ளூர் அறிஞர்களும் ஒன்றாகச் சேர்ந்து தங்களது ஆய்வு முடிவுகளை, இது வரை இருக்கும் ஆதாரங்களை நினைவுபடுத்துவதும், அடுத்த கட்டமாகத் தங்களது ஆய்வை எதை நோக்கிச் செலுத்துவது என்று முடிவு எடுக்கவுமே ஆய்வரங்குகள் நடத்தப்படுகின்றன. ஆனால், கோவையில் நடந்த ஆய்வரங்குகள் இதில் எந்த நோக்கத்தையும் நிறைவு செய்ததாகத் தெரியவில்லை. 21 அரங்குகள், 55 பொதுத் தலைப்பு கள், 800-க்கும் மேற்பட்ட கட்டுரையாளர்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், எல்லா அரங்குகளும் தூங்கி வழிந்தன. கட்டுரை வாசிக்கும் நான்கு பேருடன் சேர்த்து 20 பேர் இருந்தால், அது கூட்டமுள்ள அரங்கம். இரண்டே இரண்டு பேர் உட்கார்ந்திருக்க, ஒருவர் கட்டுரை வாசித்ததைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அதிலும் நேரத்துக்கு முடிக்காமல், தலைவருக்கும் கட்டுரையாளருக்கும் தகராறு நடந்தன. கேள்விகள் கேட்க ஆட்கள் இல்லை. கேள்விகள் கேட்டாலும், பதில் சொல்லப் பலருக்குத் தெரியவில்லை என்று அத்தனை குறைகள்!
என்ன பாவம் செய்தான் ஈழத் தமிழன்?
                                         
'கடல் கடந்த தமிழும் தமிழரும்' என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம். தமிழகத்துக்கு வெளியே தமிழும் தமிழரும் எப்படி இருக்கிறார்கள் என்ற நிலையைச் சொல்லும் நிகழ்வு. சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, ஃபிரான்ஸ், ஆஸ்தி ரேலியா ஆகிய நாடுகளில் இருந்து வந்திருந்த தமிழ் அமைப்பைச் சேர்ந்தவர்கள், தங்கள் நாட்டில் தமிழர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதைச் சொன்னார்கள். ஆனால், இதில் நிச்சயம் இருந்திருக்க வேண்டிய நாடு இலங்கை. அதைத் தந்திர மாகத் தவிர்த்துவிட்டனர். ஈழத்தில் மொத்தமாக ஓர் இனம் கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் கொன்று குவிக்கப்பட்டது. மீதம் உள்ளவர்களும் அன்றாடச் சோற்றுக்குக்கூட சிரமப்பட்டு வருகிறார்கள். ஈழத்தின் தமிழ்க் கொடையும் இன்றைய தமிழர் கொலையும் அங்கு பேசப்படவில்லை!

கிளம்பிற்றுகாண் ஜால்ரா கூட்டம்!
                                                
அதே கவிஞர்கள், அதே கூட்டம் சூழ்ந்திருக்க, நடுநாயகமாக வீற்றிருக்கிறார் முதல்வர். 'யாரங்கே... தொடங்கட்டும்' என ஆரம்பமாகிறது கவியரங்கம்...
                                                "கிளம்பிற்றுகாண் தமிழ்ச் சிங்கக் கூட்டம்" என்று வைரமுத்துவும், "தமிழுக்கும் அமுதென்று பேர்" என்று வாலியும் ஆளுக்கு ஒரு சோப்பு கம்பெனியுடன் வந்தார்கள். "செம்மொழித் தங்கமே! எங்கள் செல்லச் சிங்கமே! உன்னைக் கும்பிட்டால் ஊரையே கும்பிட்ட மாதிரி" என்று ஆரம்பித்து, பாப்பநாயக்கன் பாளையம் டீக்கடை ஒன்றில் செம்மொழி மாநாடு நோக்கி நிற்கும் ஒரு மூதாட்டியிடம் தான் பேசும் பாவனையில் முதல்வர் மேல் மும்மாரி பொழிந்தார் வைரமுத்து. "கலைஞரின் கபாலக் களஞ்சியத்தில் ஆண் எண்ணங்களைவிட, ஈரப் பெண் எண்ணங்களே அதிகம். இல்லாவிட்டால், கோபாலபுரம் வீட்டை கொடையாகத் தர முடியுமா?, அந்த ஒளவையார் காலத்தில் இவர் இருந்திருந்தால், அதியமான் ஏமாந்திருப்பான்!" என்றெல்லாம் கவிதை மழை பொழிந்தது ஈரோடு தமிழன்பன்
                                                               பாடலாசிரியர் விவேகா, "தலைவா... நீ சாகா விளக்கு, விதி விலக்கு, அகல் விளக்கு, அகலா விளக்கு, சென்னைக்குத் தெற்கே உள்ள திருக்குவளையில்தான் தமிழுக்குக் கிழக்கு பிறந்தது" என்று கண்டுபிடித்துச் சொன்னார். விடுவாரா நா.முத்துக்குமார். "சோற்றை விட்டுவிட்டு சூரியனைச் சாப்பிட்டாய், திரை உலகில் பலர் ஜெயித்திருக்கிறார்கள். ஆனால், கலைஞர் திரை உலகையே ஜெயித்திருக்கிறார், கலைஞர் ஒரு மலைக்கோட்டை" என்று வாசித்தார். கயல்விழிக்கான அறிமுகமே அபாரம். "தாத்தா தலையாட்ட, பாட்டி தாலாட்ட, அப்பா பாராட்ட, சித்தப்பா சீராட்ட... பாடவா பெண்ணே, உன் தாத்தாவிடம் நீ கேட்ட தமிழ்ப் பாட்டை" என்று அழைத்தார் வைரமுத்து. பாட்டு என்று அழைத்ததால் உண்மையில் பாடியேவிட்டார் கவிதாயினி. "பள்ளம் மேடாக வேண்டும், புரையோடிப்போன லஞ்சம் போக வேண்டும்" என்று சொன்னதுதான் யாருக்கு என்று புரியவில்லை.
                                                       
  இதையெல்லாம் கேள்விப்பட்ட வாலி தலைமையிலான அணி 16 அடி பாய்ந்தது. "ஒரு குவளை தமிழ்த் தாய்க்கே பால் ஊட்டியது. அக்குவளை திருக்குவளை," என்று சொன்னவர் மேத்தா. "காற்றே கலைஞரின் புகழைப் பாடித் திரி" என்று இயற்கைக்கு உத்தரவிட்டார் வாலி. "கலைஞரை முத்தமிழ் என்று சொன்னால் நான் முரண்படுவேன். அவர் மொத்தத் தமிழ், வீடு வரை உறவு. வீதி வரை மனைவி. காடு வரை பிள்ளை. கடைசிவரை கலைஞர்" என்றெல்லாம் புகழ் பாடிப் பொழிந்தவர் இறுதியில் "முத்துக்குமார் தீக்குளித்து வளர்த்த தமிழ்" என்று முடித்தார் பழநிபாரதி. "82 வயது உடல் மறைத்த இளைஞனே, கலைஞரில் இருக்கிறார் கடவுள். 108 வடிவில் காப்பது கலைஞர்தானே" என்று தன் பணியைச் செவ்வெனே முடித்தார் பா.விஜய்!

திருமாவின் தீ... அனல் கிளப்பிய அருள்மொழி!
 
"இது தமிழைப் பாராட்டும் மாநாடு என்பதைவிட தமிழனைத் தட்டி எழுப்ப வேண்டிய மாநாடு. காலம் அறிந்து இதை கலைஞர் செய்திருக்கிறார். நிலத்தை, களத்தை, இனத்தை இழந்த தமிழா... நீ கவலைப்படாதே என்று சொல்வதற்காகத்தான் இந்த மாநாடு நடக்கிறது. நம்முடைய தமிழன் இலங்கையை ஆண்டவன். ஆனால், இன்று தமிழ் நிலத்தை சிங்களவன் ஆக்கிரமித்துள்ளான். அநாதையாக அந்த இனம் அலைகிறது. கலைஞர் அவர்களே, நீங்கள்தான் தமிழீழத் தனித் தாயகம் அமைத்துத் தர வேண்டும்" என்று திருமா சொன்னபோது மாநாட்டுப் பந்தல் அதிர்ந்தது. அடுத்து வந்த இந்தியக் கம்யூனிஸ்ட் டி.ராஜா, பாரதிய ஜனதா இல.கணேசன், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி ஆகியோர் இது தொடர்பாகப் பேச தூண்டுதலாக அமைந்தது திருமாவின் பேச்சு.
                                   
மறு நாள் கருத்தரங்கில் திராவிடர் கழகப் பேச்சாளர் அருள்மொழி வெளிப்படையாகவே அனல் கிளப்பினார். 'போரைப் புறந்தள்ளி பொருளைப் பொதுவாக்கு' என்பது அவருக்கான தலைப்பு. "இன மரத்தின் மிகப் பெரிய கிளை முறிந்திருக்கிற இந்த நேரத்தில் மாநாடு நடக்கிறது. நாம் இழந்த வர்கள். இழந்தவர்களால் போரைப் புறந்தள்ள முடியாது. திலீபனும் மில்லரும், ஏராளமான பெண் போராளிகளும் போராடி உலகத்துக்கு வழிகாட்டிய இனம் இந்த இனம்" என்று கொந்தளித்தார். யாரும் எதைப் பேசிவிடக் கூடாது என்று நினைத்தார்களோ, அதற்குத்தான் மாநாட்டில் அதிகமான வரவேற்பு!


முழுப் புகழும் கண்காட்சிக்கே!
                                            அந்த அரங்கத்துக்குள் நுழைந்தால், சிந்துச் சமவெளிக்குள் பயணிப்பதுபோலவே இருந்தது. மொகஞ்சதாரோ - ஹரப்பா நாகரிங்களாகக் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களில் இருந்த எழுத்துக்கள் திராவிட எழுத்துக்களே என்று நிரூபிக்கப்பட்டதால், அந்த எழுத்துக்களில் தொடங்கி, அங்கே இருந்த வீடுகள், கிணறுகள், அம்மக்கள் பயன்படுத்திய பொருட்களின் சிதைவுகளை மாதிரியாகச் செய்துவைத்து இருந்தார்கள். ஓலைச் சுவடிகளை ஊர் ஊராக அலைந்து திரிந்து கைப்பற்றி புத்தகங்களாகப் பதிப்பித்தவர் உ.வே.சாமிநாதய்யர். அவர் வைத்துஇருந்த திருக்குறள், புறநானூறு, சீவகசிந்தாமணி ஆகிய இலக்கியங்களின் ஓலைச் சுவடிகள், அதை எழுதப் பயன்படுத்திய எழுத்தாணிகள் வைக்கப்பட்டு இருந்தன. புராதனச் சிலைகள், தமிழர் வாழ்க்கையைக் காட்டும் ஓவியங்கள், பழைய காலத்துத் தமிழ் எழுத்துக்கள் என எல்லாமே பழமையை நினைவுபடுத்துவதாக இருந்தன. இலக்கியக் காட்சிகளை வைத்துத் தயாரிக்கப்பட்ட 3டி அனிமேஷன் காட்சிகள்கொண்ட ஒலி - ஒளி கண்காட்சி அரங்கம் அருமை!

அருந்தமிழ் அல்வா!
                                    
   ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தத் திட்டமிட்டார் முதல்வர் கருணாநிதி. அதை நடத்த வேண்டிய நிறுவனம் 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தலாம் என்றது. அதற்குச் சம்மதிக்காத முதல்வர், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்று பெயர்த் திருத்தம் செய்து, தானே நடத்திவிட்டார். இது இன்னொரு தி.மு.க. மாநாடாகத்தான் இருக்கப்போகிறது என்று விமர்சனங்கள் வந்தன. கட்சிக் கொடி பறக்கக் கூடாது என்ற கட்டளையை ஏற்று கறுப்பு சிவப்புக் கொடியைப் பார்க்கவே முடியவில்லை. ஆனால், அக்கறை இல்லாமல் நடத்தப்பட்ட ஆய்வரங்குகள், வெறும் அரட்டைக் கச்சேரிகளாக அமைந்த பொது அரங்குகளைத் தாண்டி, மாநாட்டில் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக அனைவராலும் சில செய்திகள் எதிர்பார்க்கப்பட்டன. அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும், "உலகமெங்கும் வாழும் தமிழனைக் காக்க ஒரு பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்த வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்கள். அதைவிட முக்கியமாக, புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் மனம் குளிர்வது மாதிரியான அறிவிப்பை எதிர்பார்த்தார்கள். 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து சொல்லிவரும் 'மத்திய அரசிடம் வலியுறுத்துவேன்' என்பதையே மீண்டும் ஒரு முறை கருணாநிதி வாசித்தார். இன நலன்கொண்டோருக்கு இது ஏமாற்றம் ஆனது.
                                      தமிழ் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்பதே இனிக்கும் அறிவிப்பாக இருக்கிறது. கட்டாயத் தமிழ்க் கல்வி, உயர் கல்வியைத் தமிழில் படிக்க வசதி, அனைத்து விளம்பரப் பலகைகளிலும் தமிழ் கட்டாயம், ஆட்சி மொழி தொடர்பான அனைத்து உத்தரவுகளும் கடுமையாகக் கண்காணிக்கப்படும், காலியாக உள்ள தமிழாசிரியர் பணியிடங்கள் நிரப்புதல், கவனிப்பாரற்றுக்கிடக்கும் தமிழ் நிறுவனங்கள் மறுசீரமைப்பு போன்ற கருத்துக்களை எதிர்பார்த்த மொழி ஆர்வலர்கள் முகங்களிலும் மகிழ்ச்சி இல்லை. சாலமன் பாப்பையா பட்டிமன்றம் பண்டிகை நாட்களில் பார்ப்பதுதான்

  பாலம் கட்டுவதும் பூங்கா அமைப்பதும் பொதுப் பணித் துறையின் வேலைகள்.
                            இதைத் தமிழ்த் தொண்டு என்று எப்படிச் சொல்ல முடியும்?

No comments: