Jul 21, 2010

ஜெயலலிதா அறிக்கை


            அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிக்கை
                                சென்னை, ஜூலை 21, 2010
விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் நலனை முன் நிறுத்தி, திருச்சியில் தனது தலைமையில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.


அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், "நீரின்றி, மின்சாரமின்றி வேளாண் தொழிலை செய்ய முடியாமல் விவசாயிகள் விழி பிதுங்கி நிற்கின்றார்கள். இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தலால் கடலுக்குள் சென்று மீன்பிடி தொழிலை செய்ய முடியாமல் மீனவர்கள் மிரண்டு போய் இருக்கின்றார்கள். தொழில்கள் நொடிந்து போய்விட்டன. விலைவாசி உயர்வு என்னும் கொடிய அரக்கனின் பிடியில் அனைத்துத்தரப்பு மக்களும் சிக்கித் தவிக்கின்றார்கள். மொத்தத்தில் தமிழ்நாடு வளர்ச்சி அடையாமல் வீழ்ச்சி அடைந்து வருகிறது. இது தான் இன்றைய தமிழகத்தின் அவல நிலைமை.

தமிழக அரசின் புள்ளி விவரப்படிகுறுவை சாகுபடியை மட்டும் எடுத்துக்கொண்டால், 2005-06 ஆம் ஆண்டு 3,21,865 ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டு 10,61,401 டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டது நடப்பு ஆண்டில் வெறும் 53,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் மட்டுமே குறுவை சாகுபடி செய்யப்பட்டு இருக்கிறது அதுவும் டெல்டா பகுதிகளில் வெறும் 14,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு இருக்கிறது சென்ற ஆண்டு 56,500 ஹெக்டேர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்டது என்று பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்திருக்கின்றன. இதற்குக் காரணம் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படாதது தான்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பின்படி, ஜூன் மாதத்தில் 10 டி.எம்.சி. தண்ணீரையும், ஜூலை மாதத்தில் 34 டி.எம்.சி. தண்ணீரையும் கர்நாடக மாநிலம் தமிழகத்திற்குத்தர வேண்டும். ஆனால் ஒரு சொட்டு நீரைக்கூட கர்நாடக அரசு நமக்கு இது வரை தரவில்லை.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பு வெளியிடப்பட்டு கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அந்தத் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடவும், இந்தத்தீர்ப்பை செயல்படுத்துவதற்கு ஏதுவாக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்கவும் தி.மு.க. அரசு எந்த விதமான நடவடிக்கை எடுக்க வில்லை.

இதனால் காவிரி ஆற்றுத்தண்ணீரை நம்பி நடவு செய்யப்பட்ட பயிர்கள் வாடிப்போகின்ற நிலையில் உள்ளன. தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த விவசாயமும் பாதிக்கப்பட்டு, உணவு பஞ்சம் ஏற்படும் நிலைமை உருவாகி இருக்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

நிலத்தடி நீரை நம்பி சாகுபடி செய்த விவசாயிகளின் நிலைமையும் இதே போல் தான் இருக்கிறது. தி.மு.க-வினரால் வரம்பு மீறி மணல் கொள்ளை அடிக்கப்படுவதன் காரணமாக, தமிழகமே வறண்ட பாலை வனமாக ஆகும் நிலை உருவாகியுள்ளது. இதன் விளைவாக நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து போயுள்ளது.

மேலும், மணல் கொள்ளை காரணமாக ஆறுகளின் தரைமட்டம் கீழே இறங்கியுள்ளதால், தண்ணீர் வரும் போதும், பாசன வாய்க்கால்களில் தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் என்றால், மறு பக்கம் கடுமையான மின்வெட்டு நிலவுகிறது. கடுமையான மின்வெட்டு காரணமாக மோட்டார் பம்புகளை பயன்படுத்தி நிலத்தடி நீரின் மூலமும் விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால், மின் மோட்டார்கள் பழுதடைந்து விடுகின்றன. விவசாயிகள் இரட்டிப்பு துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இது மட்டுமல்லாமல், விவசாயத்திற்குத் தேவையான பயிர்க் கடன்கள் பெரும்பாலான விவசாயிகளுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதில்லை. இதன் காரணமாக அதிக விலை கொடுத்து வெளிச்சந்தைகளில் வாங்கக்கூடிய துர்ப்பாக்கிய நிலைமை விவசாயிகளுக்கு ஏற்பட்டு இருக்கிறது.

உர மானியத்தை மத்திய அரசு குறைத்த போது, அதைத்தட்டிக் கேட்கவில்லை விவசாய உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்ற எண்ணம் தி.மு.க. அரசுக்கு அறவே இல்லை.

விவசாயிகளின் நிலைமை இப்படியென்றால், மீனவர்களின் நிலைமை இதைவிட கொடுமை. கச்சத்தீவு இலங்கை அரசுக்கு தாரை வார்க்கப்பட்டதிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட துன்புறுத்தல் இன்னமும் தீரவில்லை.

கடந்த நான்கு ஆண்டு காலமாக தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. மீன்பிடி தொழிலையே விட்டுவிடக் கூடிய அவல நிலைக்கு தமிழக மீனவர்கள் ஆளாக்கப்பட்டு உள்ளார்கள்.

இது போதாது என்று, கடலில் 12 கடல் மைல் தாண்டி தமிழக மீனவர்கள் மீன் பிடித்தல் கூடாது; அப்படி பிடித்தால் 9 லட்சம் ரூபாய் அபராதம், மூன்று மாத சிறைத்தண்டனை போன்ற பல்வேறு ஷரத்துகளைக் கொண்ட கடல் மீன் தொழில் ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை சட்ட முன்வடிவு வேறு தமிழக மீனவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

இதுவும் போதாது என்று, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளும் கடுமையாக உயர்த்தப்பட்டுவிட்டன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்து இருக்கிறது.


விலைவாசி விஷம் போல் உயர்ந்து கொண்டே போகிறது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில், விவசாயிகளின் வாழ்வோடு விளையாடிக்கொண்டிருக்கின்ற, மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீரழித்துக் கொண்டிருக்கின்ற, மணல் கொள்ளையை ஊக்குவித்துக்கொண்டிருக்கின்ற, விலை வாசி உயர்வு என்னும் கொடிய அரக்கனிடம் மக்களை சிக்க வைத்துள்ள தி.மு.க. அரசைக்கண்டித்து, அ.தி.மு.க. சார்பில் 24.8.2010 செவ்வாய்க்கிழமை அன்று, நண்பகல் 12 மணி அளவில், திருச்சி மாநகரில் எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

No comments: